Do you know how to treat a lifelong partner, lover and better half?
உங்களின் மனதை கவர்ந்தவரிடம், வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவருடன், வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா?
உலகில் மனிதனின் பிறப்பு, என்றுமே தனியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஆண், பெண் என்றான அன்பு, காதல், அதன் வழியான திருமண பந்தம், குடும்பம் என்ற அமைப்பு ‘பெரும்பான்மையாக’ அமைந்திருக்கிறது. அதுதான் சமூகத்தின், உலகின் நடைமுறையாகவும் இருக்கிறது. பிறக்கும் ஆணும், பெண்ணும் தனக்கு பருவம் வந்த காலத்தில், அடுத்த நிலையான வாழ்வைத் தொடங்க, ஆண் ஒரு பெண்ணையும், பெண் ஒரு ஆணையும் துணையாகக் கொண்டு, திருமணம் வழியாக, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் பெற்றோரும், உற்றோரும், நண்பர்களும் துணையாக இருந்து, இதை வழிநடத்தியும் தருகிறார்கள். இந்த குடும்பம் என்ற அமைப்பு எனக்கு, அமையவில்லையே? என்று கேட்கிறீர்களா? இதோ அதற்கான விளக்கமும் காண்போம்.
தனி நபரான வாழ்க்கை, ஓர் முழுமையை தருவதில்லை. எனினும், அது கடமையை தீர்த்தல் என்பதாக நிகழ்ந்துவரும். இந்த தனி நபர் என்ற நிலை, தன் விருப்பத்தாலும், சூழ்நிலையாலும், சந்தர்ப்பங்களாலும் அமைந்துவிடும். ஆனால், எந்த நொடியிலும், இதை அவரே விரும்பி, தன் முயற்சியாலும், மற்றவர்களின் துணை மற்றும் உதவியாலும், நிச்சயமாக மாற்றம் கொள்ள முடியும். அப்படி இருக்கும்பொழுது, யார்மீதோ பழி சொல்லுவதில் அர்த்தமில்லை. உலகின் நடைமுறைக்கு ஏற்றபடி, கல்வி, வழக்க பழக்கம், வேலை, பொருளாதாரம் என்ற வகையிலும், உங்களை தகுதியாக்கிக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். முக்கியமாக காத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இயற்கை எந்தவகையிலும், பழி கொள்வதாக கருத இடமில்லை. எனவே தனி நபருக்கும் இயல்பாக, இல்லறம் அமையும்.
எந்த வகையில், ஆண், பெண் என்று இருந்தவர்கள், கணவனும் மனைவியாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக, சடங்குகள், சம்பிரதாயம், வழக்கம் வழியாகவோ, ஒப்பந்த பதிவு வழியாகவோ, திருமணமாகி, இல்லறத்தை தொடங்குகின்றனர். அந்த இல்லறம் சிறப்பாகவே தொடர்கிறதா? என்று கேள்வியை முன்வைத்தால்,
‘சிறப்பாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறது’ என்போருக்கு, என்னுடைய நல்வாழ்த்தை பகிர்கின்றேன். ‘அது, சிறப்பாக தொடங்கியது உண்மைதான். ஆனால் இன்றோ தடுமாறுகிறது’ என்பது பெரும்பாலோரின் பதிலாகும்.
சிறப்பாக தொடங்கியது ஏன் தடுமாறுகிறது? என்று அதில் சிக்கிக் கொண்ட கணவனும், மனைவியும் சிந்திக்கின்றனர். அதை விலக்கிட, தீர்த்திட முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களே அறியாமல், மேலும் மேலும் சிக்கிக் கொள்கின்றனர். இதற்குப் பிறகு, அந்த தடுமாற்றம், அவர்களை பாதை மாற்றி, திசைக்கு ஒருவராக பிரித்தும் வைக்கிறது. இந்த தடுமாற்றம், சிக்கல், பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? என்று வேதாத்திரி மகரிஷியிடம், அன்பர்கள் கேட்கிறார்கள். அவர் ஓர் துறவி ஆயிற்றே? என்று கேள்வி எழுந்தாலும், அதற்கு அவரே பதிலும் சொல்லுகிறார். ‘நான் துறவியாகவே ஆன்மீகத்தில் நுழையவில்லை. உங்களைப்போல, நானும் இல்லறத்தில் வாழ்ந்து, அந்த நிறைவில்தான், யோகத்தில் நின்றேன். அதனால், அந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டிடவும் முடியும்’ என்கிறார்.
இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி? இதோ, வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டுதலை காண்போம். சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு, மூன்று பண்புகள், 1. விட்டுக் கொடுப்பது, 2. அனுசரித்துப் போவது, 3. பொறுத்துப் போவது ஆகிய குணங்கள் அவசியம். இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.
விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!’ எல்லோரும் ஆவலோடு, மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா? மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.
‘யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.’ என்கிறார்.
அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார். ‘அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம். அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!’
இல்லறத்தை விட்டு விலகிடாமல், அதில் ஓர் நிறைவைகண்டு, முழுமை செய்துவிட்டு, தன் வாழ்நாள் முழுவதும், யோகத்தின் வழியாக, பருவம் வந்த அனைவருமே, மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், நான் யார்? என்ற தன்னையறிதலும், பிரம்மஞானமும் வழங்கி, தனிமனித விடுதலையும், அமைதியும் தந்து, அதன் வழியாக, உலக சமாதானமும் தந்து வழிநடத்தும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறதுதானே?
விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது. அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்றும் குறிப்பிடுகிறார் மகரிஷி. அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம்.
பத்து வழிகள்:
1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம்.
அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும்.
மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது. பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.
7. குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.
9. தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி
யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!