What is the answer to those who say that the practice of yoga is a deception, a survival for a yogi?
யோக பயிற்சி என்பது ஏமாற்றுவேலை, யோகிக்கான பிழைப்பு என்று கூறுபவர்களுக்கு பதில் என்ன?
இந்த கேள்விக்கான பதிலை, வேதாத்திரி மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சொல்லாம். ஒரு உண்மை விளக்க தத்துவ நிகழ்ச்சிக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் ஒரு இளைஞன், வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கிறான்.
‘சுவாமிஜி, உங்கள் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டேன். மகிழ்ந்தேன். உண்மைகளும் தெரிந்தன. இந்நிலையில், நான் உங்களைப்போல ஆகவேண்டும். அதற்கு என்னவழி?’
‘நல்லது, அது கடினமில்லை. இங்கே வழங்கப்படும் பயிற்சிகளில் இணைந்து, கற்றுக்கொள்க. அப்பயிற்சிகளே உன்னை, என்னளவிற்கு உயர்த்தித்தரும்.’
‘ஓ, அதற்கெல்லாம் விருப்பமில்லை. எளிமையாக உங்களைப்போல ஆகவேண்டும், அதுதான் என் நோக்கம்’
இளைஞனின் கருத்தை புரிந்துகொண்ட பின் ‘சரி, அப்படியானால், உடனடியாக ஒரு துணிக்கடைக்குச் சென்று, இதுபோல வெள்ளை குர்தா, வேஷ்டி, மஞ்சள் துண்டு வாங்கிக்கொள். அணிந்து தயாராகலாம். ஆனால் இதுபோல தாடி வளர, குறைந்தது மூன்று மாதம் ஆகுமே?’
‘ஆமா, ஆனாலும்...’
‘உனக்கு என்ன விருப்பமோ அதை நீயே செய்துகொள், ஒத்துவரவில்லை விட்டுவிடு’ என்று வேதாத்திரி பதிலளிக்கிறார்.
இப்படியாக, உண்மையை அறிந்து உணராமல், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், வெளி தோற்றத்தில் தன்னை, யோகியாக காட்டும் நபர் எப்போதுமே உண்டுதான். உண்மையான யோகிக்கு கிடைக்கும் மரியாதையை, தானும் பெற விரும்பி, இப்படி வேடமிட்டுக் கொள்கிறார்கள். தன்னை நாடி வரும் மக்களிடம், பணமும் பொருளும் பெற்று, தன்னை மட்டும் உயர்த்திக் கொள்கிறார்கள். இது ஒருபுறம் நிகழ, இப்படியான போலியான யோகிகளைதான் மக்களும் நம்புகிறார்கள் என்பதும் உண்மை. ஒரு யோகி, தன்னுடைய தோற்றத்தில், இப்படி இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது ஒரு நடைமுறை பழக்கமே அன்றி, கட்டாயமில்லை.
பெரும்பாலான யோகிகள், காவியும், பச்சையும், ஆரஞ்சு, மஞ்சள் துண்டு, தாடி, மீசை, ஜடாமுடி என்று இருப்பார்கள். கையில் நுகத்தடியும், கமண்டலமும் கூட உண்டு. புலித்தோல், நம் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால், அது இல்லை. ஆனால், வேதாத்திரி மகரிஷி இதற்கு மாறாக, வெள்ளை குர்தா, பஞ்சகட்சம் வேஷ்டி, காவி துண்டு என்றுதான் அமைத்துக் கொண்டார். தாடி மீசை இயல்பாக அமைத்து கொண்டார். தான் உணர்ந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் வழியாகவும் தெளிவு செய்தார். விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டினார்.
ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின், வான் காந்த தன்னிறைவுக்குப் பிறகு, சில யோகிகள் வேடத்தை ஏற்றுக்கொண்டுதான் வலம் வருகிறார்கள். அவர்களையும், சுவாமிஜி என்றுதான் வேதாத்திரிய அன்பர்களும், மக்களும் அழைக்கிறார்கள். இவர்கள் உண்மையா? போலியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
வேதாத்திரி மகரிஷி, சுவாமிஜி என்பதை விட, ஐயா என்று அழைப்பதை விரும்பினார் என்பதும் உண்மை. தன்னை அருட்தந்தை என்று சொல்லப்படுவதையும் ஏற்றுக்கொண்டார். விருப்பு வெறுப்பு ஏதுமில்லாத அரவணைப்பும், திருத்துதலும், கண்டிப்பும், பாதுகாப்பும், உயர்வு தருவதும் தந்தையின் பண்புகள் தானே!
இந்த போலியான யோகிகளை மக்கள் ஏற்பது, பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இன்றும், இப்போதும் உண்டுதான். எனினும், தன் காலத்திலேயே, மக்களின் அறிவு வளர்ச்சி மாறிவருகிறது. யோகிகளை அடையாளம் காண்பதில், மக்கள் நிலை இப்படி மாறியுள்ளது என்று அவரே விளக்க்குகிறார். ‘அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.'
‘யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.’
‘தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது. இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.’என்பதாக, அருட்தந்தை வேதாத்திரி மகரிசி தெளிவு செய்கிறார்.
ஆனால், மக்களின் சுய சிந்தனையும், ஆராய்ச்சியும் அற்ற நிலையில், தோற்றத்திற்கு மதிப்புதந்து ஏமாறும் போக்கு மாறவில்லை என்பது உண்மையே. ஒரு பைத்தியக்காரரைக்கூட சித்தர் என்று சொல்லும் கூட்டமும், மதிக்கும் கூட்டமும் நம்மிடையே உண்டு. அதுபோல, காவியும், தாடியும், ஜாடாமுடியும் இருந்தாலே, இவர் யோகி என்று மதித்து, கைகட்டி, காலில் விழும் கூட்டமும் நம்மிடையே உண்டு. இதற்கு வழி, காலமும், அதுதரும் அனுபவமும் மட்டுமே.
வாழ்க வளமுடன்.
-