I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise? | CJ for You

I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise?

I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise?


தன்முனைப்பு என்பதுதான் நம்மை வளர்க்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்முனைப்பு கூடாது என்றுதானே சொல்லுகிறார்கள். நான் நன்றாக இருக்கவேண்டும், வளரவேண்டும், உயரவேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்? விளக்கம் தருக.

தமிழில் தன்முனைப்பு என்ற வார்த்தை, ஏதோ குறிப்பிட்ட காலங்களில் உட்புகுந்தது போல தோன்றுகிறது. சில வார்த்தைகளை, ஆங்கிலத்தில் இருந்து மொழி (முழி) பெயர்க்கும் பொழுது இப்படியான தமிழ் வார்த்தைகள் வந்துவிடுவதுண்டு. இந்த தன்முனைப்பை, motivation என்று கூட சொல்லுகிறார்கள். ஆனால் பொதுவான சமமான வார்த்தை Ego என்பதாகும்.

எனக்குத்தெரிந்தவரை, தன்முனைப்பு என்ற வார்த்தை, பழந்தமிழில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நல்ல தமிழறிஞர் யாரேனும் இருந்தால், என் சந்தேகம் தீர்க்கலாம். ஆனால், தன்முனைப்பு என்பதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்களோ, அதற்குச் சமமான வார்த்தைகள் இப்படியாக இருக்கிறது. அவை, அகங்காரம்,. தான் என்ற எண்ணம்; செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம். செருக்கு, இறுமாப்பு, முனைப்பு ஆகும்.

தான், தனது என்று வாழும் பொழுது, தான் என்ற அதிகார பற்றிலும், தனது என்ற பொருள்பற்றிலும் மனிதன் சிக்கிவிடுகிறான். இதைத்தான் தன்முனைப்பு என்று சொல்லுகிறார்கள்.  தான் என்றும், தனது என்றும் வாழ்வதில் சிக்கலில்லை, ஆனால் தான் மட்டுமே, தனது மட்டுமே என்று குறுகிக் கொள்வதுதான் சிக்கலாகிறது. அதனால்தான், தன்முனைப்பு கூடாது என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த குறுகிய மனப்பான்மை அறியமுடிவதில்லை. அதனால்தான், மனிதனுக்கு மனிதனே துன்பம் செய்விக்கிறான். தன்னைப்போலவே இன்னொருவரும் மனிதரே என்று அவன் நினைப்பதில்லை.

மிருகங்களிலும், பறவைகளிலும் இந்த தொல்லை இல்லை. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை பழிவாங்குமா? கீழாக நினைக்குமா? அதன் வாழ்நிலையை சிதைக்குமா? இதைப்போல, ஒரு புலி இன்னொரு புலியை, ஒரு யானை இன்னொரு யானையை என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவேளை இவைகளுக்கு ஐந்தறிவு என்பதால், இப்படி இருக்கின்றதோ? நமக்கெல்லாம் ஆறறிவு ஆகிற்றே?

தன்முனைப்பு பெரும்பாலும் சுயநலம் கொண்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு தேவையானது வேண்டும், நான் விரும்பியது வேண்டும். எனக்கானது வேண்டும் என்ற வகையில், தன்னளவில் வாழும்பொழுது, அவன் மனித தன்மையையே இழந்தவனாகிறான். இயற்கையின் இயல்பை கெடுக்கவும் செய்கிறான். ஆனால் அதை அவன் அறிவதும் இல்லை. எனவே நீங்கள் தன்முனைப்பு என்ற வார்த்தைக்கான உண்மையை அறிதல் அவசியமாகும்.

இந்த காணொளி கூடுதலாக சில விளக்கங்களை தரலாம்.

தன்முனைப்பு, சுயமரியாதை புரிந்துகொள்வது எப்படி? தவிர்க்க என்ன செய்யலாம்?

வாழ்க வளமுடன்