CJ for You: temple

temple

Showing posts with label temple. Show all posts
Showing posts with label temple. Show all posts

What is the purpose of building a temple of consciousness?


அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா! ஆங்காங்கே ஊர்களில் அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்: 

        உருவ வழிபாட்டிற்கான கோயில்கள் ஆயிரமாயிரம் கட்டியிருக்கிறோம். நாம் அதிலெல்லாம் பயன் கண்டு வருகிறோம். ஆனால் அறிவுத்திருக்கோயில் உலகத் தொடர்பாக வந்த ஆன்மீகப் பயணத்திலேயே ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. பல கோயில்கள் விக்ரக ஆராதனைக்காக   கட்டப்பட்டிருந்தாலும் “கோயில்” என்பதன் அர்த்தத்தை அளிக்கக் கூடிய வகையில் அறிவுத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. 

இதனால் பக்தி மார்க்கத்திலுள்ள விக்ரக ஆராதனைகளெல்லாம் பயனற்றது என்று கொள்ள வேண்டாம், அப்படிச் சொல்லவும் முடியாது. ஏனென்றால் மனிதன் எந்த உருவத்தை வணங்கினாலும் சரி, தன் அறிவைக் கொண்டு வடிவெடுத்துத்தான் வணங்குகின்றான்.

இல்லங்களிலே ஒரு புரோகிதர் மூலமாக ஏதேனும் ஒரு சடங்கு செய்தாலும்  ஒரு விநாயகர் உருவையோ அல்லது வேறு உருவையோ வைத்து முதலில் “ஆவாகயாமி” என்று சொல்வார்கள். எனது அறிவை அதில் வைக்கின்றேன் என்பது அதன் பொருள். முடிவில் “யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யாமி” என்று கூறுவார்கள். எங்கே இருந்து கொண்டு வந்தேனோ அறிவை அந்த இடத்திலேயே கொண்டு போய்ச் சேர்த்து விட்டேன் என்பது பொருள். இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த முறையில் இறைவணக்கத்தை நடத்தினாலும் நம் அறிவைத்தான் விரித்து அவ்வுருவாக்கி, அக்குணமாக்கி வணங்குகிறோம் என்பது விளங்குகிறதல்லவா?

“கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் நீ

கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே”

என்று ஒரு கவியில் கொடுத்துள்ளேன்.

நீங்கள் அறிவுத்திருக்கோயிலுக்கு வந்து எளியமுறை உடற்பயிற்சி கற்று உடல்நலம் பெற்றும்; எளியமுறைக் குண்டலினி தவம் பயின்று மனவளம் பெற்றும்; சித்தர்களின் கலையான காயகல்பம் பயின்று கருமையத் தூய்மையும் பெறலாம். மேலும் மௌனம், அகத்தாய்வில் கலந்து குணநலப்பேறு பெற்றும் சிறப்பாக வாழ்வதோடு வீடுபேறும் அடையலாம்.

வாழ்க வளமுடன்!!

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

Why some of Vethathiriyans continues their temple worships?


வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?

பதில்:
இந்த கேள்வியில், உங்கள் ஆதங்கம் தெரிகிறது. நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும், உங்களுக்கு உண்மை தெரியுமா? இந்த கோவில், ஆலய வழிபாடுகளின் உண்மையை அறியவதற்குத்தான், வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றார்கள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், கோவிலும், ஆலயமும், அவர்களின் அந்த் வழிபாடும்தான் இந்த அளவுக்கு உயர்த்தியது அல்லவா? உங்களை உயர்த்திய ஏணியை உடனே எட்டி உதைத்து தள்ளிவிடுவீர்களா? அது நியாயம் ஆகுமா? அந்த ஏணியையும், அதன் படிகளையும் நினைத்துப்பார்ப்பது தவறாகுமா?

வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றவர்கள், உடனடியாக அந்த வழக்கத்தையும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டுமா? ஏன்? மற்றவர்களின் பார்வைக்காக ‘சும்மா’ வந்து போவதாகவும் இருக்கலாம் அல்லவா? அது மற்றவர்களுக்கு உண்மையான ஊக்கம் தருவதாக அமையலாமே? அங்கே வருபவர்களிடம் அந்த உண்மையை சொல்லுவதற்காகவும் இருக்கலாம்தானே? 

வேதாத்திரியமோ, குரு மகான் வேதாத்திரி மகரிஷியோ, பிரம்மஞானம் கற்ற பிறகு, மற்ற எல்லா வழக்க பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும் என்று, எப்போதாவது சொல்லப்படுகிறதா? சொல்லி இருக்கிறாரா? உண்மையாகவே, அவர் ‘யோகத்தில் உண்மை அறிந்தவர்கள் கோவிலுக்கு போகலாமா என்ற ஒர் கேள்வி எழுகிறது, என்னைக்கேட்டால், அவர்கள் கோவிலுக்கு போவதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் போகலாம் என்றுதான் சொல்லுவேன்’ என்றும் பதில் அளித்திருக்கிறார். ஏன்? கோவில் வழிபாட்டின் உண்மை அறிந்த பிறகு, அந்த பழைய வழிபாடு அவரிடம் இல்லை, மேலும் அங்கே வரும் மற்றவர்களுக்கு அவர், உண்மை விளக்கமும், ஊக்கமும் தரமுடியுமே!

ஞானிகளும், மகான்களும் கூட கோவில் கும்பாபிஷேகம் நாளிலும், யாகம் வளர்க்கும் நாளிலும் அங்கே தங்கி இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதன் காரணம் என்ன? தாங்கள் உணர்ந்த உண்மையை அங்கே வெளிப்படுத்துகிறார்கள். அங்கே இருக்கும் ஆற்றலில் தன்பங்கையும் அளிக்கிறார்கள். ஆனால் இது மறைமுகமாகவே நிகழும், எவரும் அறியமாட்டார்.

உண்மையில் கோவில், ஆலய வழிபாட்டின் உள்ளார்ந்த கருத்தை அறியாமல்தான் இந்த கேள்வியே பிறந்திருக்கிறது என்று தோன்றவும் இடமுள்ளது, கோவில் ஆலயத்தில், கடவுளை கருத்தாக பார்ப்பவர்தான் பக்தர். பிரம்மஞானம் உணர்ந்தவர் பார்க்கும் பார்வை வேறு என்பது நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, இனிவரும் காலங்களில், நீங்கள் மற்றவர்கள்மேல் அக்கறை கொண்டு, வருந்துவதை, கவலைப்படுவதை, பதட்டப்படுவதை, திருத்தவேண்டும் என்பதை விட்டுவிடுங்கள். அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் உங்களுக்காக, உங்கள் வழியில் ஆராய்ந்து உயருங்கள், மற்றவர்களை குறித்த எண்ணமெல்லாம் உங்களுக்கு, உங்கள் முன்னேற்றத்தில் தடை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

        மேலும், பிரம்மஞானம் என்ற உண்மையில் எல்லாமே இறை என்ற முழுமை உணர்வு வந்துவிடுவதால் அங்கே விழிப்பு நிலையும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் கேள்விக்கு பதில் மட்டுமல்ல, கேள்வியின் குறைகளை வெளிப்படுத்தி உங்களுக்கான விளக்கம் தருவதுமே இந்தப்பதிவாகும். 

வாழ்க வளமுடன்
-

Why no mind peace when we worship in temple too? What can be done?


மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


பதில்:

இந்தக்கேள்வியின் உள்நிலை அறியும் பொழுது, நீங்கள் வீட்டிலேயே தவம் செய்துவருகிறீர்களா? அதைவிட்டு விட்டீர்களா? என்று தெரியவில்லை.  என்றாலும், யோகத்தில் இணைந்து தவம் கற்றுக்கொண்ட ஒருவர், முற்றிலுமாக கோவிலுக்கு போவதை, அங்கே வழிபாடு செய்வது விட்டுவிட வேண்டியதில்லை. அதில் எந்த வித மாற்றுக்கருத்தும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னதுமில்லை. என்றாலும், அந்த வழிபாடுகளில் இருக்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்துகிறார். அதனால், யோகத்திற்கு வந்த பிறகு கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பமே. ஆனால் அதற்காக, கற்றுக்கொண்ட யோகத்தை விட்டுவிடவும் கூடாது. அதுதான் பிறப்பை மறுபடியும் சிக்கலாக்கிவிடும்.

உங்கள் கேள்வியின் வழியாக, இரண்டு விசயங்களை புரிந்து கொள்ளமுடிகிறது. உங்களுக்கு வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை. இப்பொழுது இதற்கு காரணம், ஏற்கனவே உங்கள் மனம் அமைதியின்று தவிக்கிறது என்றுதான் கருதவேண்டும். உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கலாம். அது தினமும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது குடும்பத்தில் இருக்கலாம், குடும்ப நபர்களில் இருக்கலாம், உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கலாம், உங்களின் தொழில், வியாபாரம், வேலை இவற்றிலும் கூட சிக்கல் இருக்கலாம்.

எனவே முதலில், இந்த சிக்கல், மன குழப்பம் தருவது எது என்று ஆராயுங்கள். ஒருநாளை இதற்கென்று ஒதுக்கி, ஏதேனும் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள், சிந்தனை செய்யுங்கள், முதலில் உங்கள் கைபேசி, மற்ற இதர உபயோகங்களை ஒருநாள் தவிர்த்துவிடுங்கள். வெறும் ஆளாக அமர்ந்து, யாரையும் அருகில் விடாமல் தனியாக, உங்கள் வீட்டிலே கூட அமைதியாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான், வேதாத்திரியத்தில் ‘அகத்தாய்வு எனும் தற்சோதனை’ என்றும் சொல்லுகிறோம். உங்களுக்கு தவம் செய்ய வாய்ப்பிருந்தால், முதலில் துரிய தவம் செய்துவிட்டு பிறகு இந்த சிந்தனையை தொடருங்கள். நிச்சயமாக விடை கிடைக்கும்.

அந்த சிக்கல், அதன் தன்மை, யாரால் வந்தது?, எதனால் வந்தது? எப்படி தீர்க்கலாம்? யார் உதவுவார்கள்? எவ்வளவு காலம் ஆகும்? நீடித்தால் என்னாகும்? விலக்கிவைக்க முடியுமா? ஏற்று வாழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அந்த பதிலை எழுதியும் வையுங்கள். மறுபடி ஆராயுங்கள்.

மற்றபடி பிரச்சனையும், சிக்கலும், குறையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிற நிலையில், நீங்கள் வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்காது. கோவிலுக்கு சென்று வணங்கி, வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்காது. பிரச்சனை உங்கள் தவத்தில் இல்லை, கோவிலிலும் இல்லை. அது அந்த பிரச்சனை உங்களுடைய மனதில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மை அறிந்தால் அந்த அமைதியை நீங்கள் அறிந்து அதை அனுபவிக்கலாம்.

வாழ்க வளமுடன்.

-

Why I can't give up the Bhakti worship?


பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


பதில்:

பக்தி வழிபாடுகளில் இருந்து விடுபடுங்கள் என்றும், அதை விட்டுவிட்டு மீண்டுவாருங்கள் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? யார் அப்படியான அறிவுரையை கொடுத்தார்கள்? யார் அதுதான் சிறந்தது என்று வழிகாட்டினார்கள்? 

உண்மையாக பக்தி வழிபாடுகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ள வேண்டியது குறித்து கவலைப்படாதீர்கள். பக்தியும் வழிபாடும் இருக்கட்டும். அதில் இருக்கின்ற உண்மை, சொல்லப்பட்ட உண்மை என்ன என்பதை தேடுங்கள். ஏன்? எதனால்? எதற்காக? என்ன பலன்? என்ன நன்மை? என்ற கேள்விகள் வழியாக ஆராய்ச்சி செய்யுங்கள். அதற்கான விடை என்ன? என்பதை அந்த ஆராய்ச்சியின் முடிவாக கண்டுபிடியுங்கள். உங்கள் முடிவு என்ன? என்பதை வேறு யாருக்கும் சொல்லவும் வேண்டியதில்லை. சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதோடு, அது எனக்கு தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள். உங்களைபோல அவர்களும் ஏதோ ஒருநாள், நீங்கள் கண்டுபிடித்த அதே உண்மையை, தானாக ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டுமே!

பக்தி என்பது நிச்சயம் வேண்டும். அது இல்லாது ஒரு மனிதனுக்கு தனித்தன்மைகள், மனிதனுக்கே உரித்தான உயர்ந்த தன்மைகள் மலர்ச்சி பெறுவதில்லை. அறிவின் முழுமையை அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னை முழுதாக அறிந்துகொள்வதற்கு, அந்த வழியே செல்வதற்கு, தன்னை தகுதியாக மாற்றிக்கொள்ள சிறந்த வழிதான் பக்தி, ஆனால், அதில் நின்றுவிடாது, உண்மையையும் அறிய முயற்சிக்க வேண்டும். அப்படியாக முயற்சித்தால், யோகத்திற்கு நுழையமுடியும்.

யோகத்திற்கு நேரடியாக வரமுடியாத பாமர மக்களுக்காகவே, அவர்களுக்கு துணை செய்யவே, யோகத்தில் உயர்ந்த சித்தர்களால், ஞானிகளால், மகான்களால், குருமார்களால்தான் பக்தி கொண்டுவரப்பட்டது.

அதில் ஏற்பட்ட குழப்பங்கள்தான் அதை வேறுவழிகளில் திசை திருப்பிவிட்டது. இன்னும் அந்த திசையில்தான் போய்க்கொண்டும் இருக்கிறது. அதுகுறித்து நமக்கு கவலை ஏதுமில்லை. நாம் இங்கே விழிப்பாக, உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் போதுமானது. எனவே பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே என்று வருந்தாமல், உண்மையை ஆராய்ந்து அறிய தயாராகுங்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்.

What is truth and benefit of the Thiruvannamalai Girivalam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கார்த்திகை நாளில், திருவண்ணாமலை சிறப்புப் பெறுவது ஏன்? யோகத்தில் உள்ளவர்களுக்கு உதவுமா?


பதில்:

நாம் யோகத்தில் வந்துவிட்டதினால், இப்படியான விசயங்களை தவிர்த்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அதில் இருக்கின்ற நன்மைகளை மட்டும் ஆராய்ந்து, வேண்டுவோருக்கு நீங்களே உதவலாமே?! திருவண்ணாமலை, நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு பஞ்சபூத வழிபாடு தலங்களில், நெருப்புக்கானது. மேலும் சித்தர்களின் போற்றுதலுக்கும் உரியது. அங்கே சித்தர்கள் ஜீவசமாதியாக அடக்கமும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அவர்களுடை நோக்கம், எந்த ஒரு மனிதரும், இங்கே வந்து திருவண்ணாமலையை வணங்கும் பொழுது, கருத்தாக, உள்முகமாக உள்ள மெய்ப்பொருளையே வணங்குகிறார். 

மேலும், மலையை கிரிவலமாக, பௌர்ணமி தினத்திலும், கார்த்திகை நாளிலும் சுற்று வரும் பொழுது, அங்கே இருக்கக்கூடிய காந்த அலைகளை, உடலும், மனமும், உயிரும் ஏற்றுக்கொள்கிறது.

திருவண்ணாமலை என்ற மலையே குறிப்பிட்ட தன்னதிர்வினால் அலைகளை பரப்ப, பௌர்ணமி நிலவும் தன்னுடைய காந்த அலைகளை பரப்பி பக்தர்களுக்கு உதவுகிறது. இதில் பெரும்பான்மையாக யோகம் கற்காத நபர்கள், இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வர். யோகத்தில் இருக்கிற நாம், அதன் உண்மை அறிந்து ஏற்றுக்கொள்வோம். 

உண்மையாக இந்த பௌர்ணமி கிரிவலம் என்பதில், பக்தி யோகமும், கர்ம யோகம் இணைந்தே இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி, கிரிவலமாக சுற்றி வருகையில், காந்த அலைகளின் செறிவை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அந்த அலைகள், எந்த மனிதருடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது.

மெய்ப்பொருள் உணர்ந்த சித்தர்கள், சில உண்மைகளை உணர்வுபூர்வமாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அந்த அன்பர்களை சிரமமப்படுத்தாமல், இப்படி இப்படி செய்துவா, இந்த பக்தி முறை உனக்கு போதுமானது என்று எளிமைப்படுத்திவிட்டார்கள். அதுதான் இன்றும் தொடர்கிறது.

மனம் ஒன்றி மௌனமாக, கிரிவலம் சுற்றுவந்த பிறகு, ஒரு ஆழமான அமைதிய அன்பர்கள் உணரமுடியும் என்பதே உண்மையாகும். யோகத்தில் ஆரம்ப சாதகரும், அதில் ஆழ்ந்து பயணிக்கும் சாதகரும் கூட பயன்பெறலாம். இங்கே மனம் ஒன்றி, லயித்து இருத்தல்தான் பலன் தரும். சில மந்திரங்கள் சொல்லிக்கொண்டும் கிரிவலம் வரலாம். மற்றவர்களோடு பேசாத தனிமையில் சுற்றிவருதல் சிறப்பு.

வாழ்க வளமுடன்.

யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னதான் யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!


பதில்:

பக்தி என்பது நிச்சயமாக வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு சிலருக்கு, பக்தியும், கடவுளும், வழிபாடும் அவசியம் இல்லை என்று முடிவுக்கு வரலாம். அவ்வாறே வாழ்ந்தும் வரலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் ஒரு சராசரி மனிதருக்கு பக்தி அவசியமே! முக்கியமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் பொழுது, இந்த உலகுக்கான நல்ல பழக்க வழக்கங்களை, அக்குடும்பத்தின் பக்தி வழியில்தான் பெற்று வளர்ந்து வருகிறது. மிகச்சில குடும்பங்களில் அந்த பக்தியும் இல்லாது போவதும் உண்டு. அதாவது, பெற்றோருக்கு பக்தி இல்லை என்றால் அது குழந்தைக்கும் இல்லை என்றே வளர்ந்து வரும். இப்படியான குழந்தைகள் தான் பக்தியும் இல்லை, கடவுளும் இல்லை, வழிபாடும் தேவையில்லை என்ற நிலையில் வளர்ந்து நம்மோடும் வாழ்ந்து வருகிறார்கள்.

யோகத்திற்கு அடைப்படையே பக்தி தான். அந்த நோக்கத்தில்தான், அந்நாளில் முன்னோர்கள், பக்தியில் மக்கள் தங்களை உயர்த்திக்கொண்டால், யோகமும் எளிதாகும் என்று வழிபாடு முறைகளை அமைத்தார்கள். ஆனால் அது இந்நாளில் உண்மை சிதைந்துவிட்டது.

யோகத்தில் இணைகின்ற யாருமே, பக்தியை விட்டு விலகவேண்டியதில்லை. மாறாக அந்த பக்தியில் இருக்கிற உண்மை என்ன? என்பதை புரிந்துகொண்டால் போதும். இதுவரை எதை வணங்கினோம்? எதற்காக வணங்கினோம்? அது அந்த இறை என்பதும், கடவுள் என்பதும் என்ன? என்ற உண்மைகளை விளங்கிக் கொண்டால் போதுமானது. விளங்கிக் கொண்ட உண்மையின் வழியாக நீங்கள் பயணித்தால் போதுமேதவிர, பக்தியை தவிர்க்கவோ, விட்டு விலகிடவோ தேவையில்லை.

எனவே, பக்தியையும் யோகத்தையும் குழப்பிக்கொள்ளாமல். பக்தியில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள இன்றே முயற்சி செய்யுங்கள். அதுவே உங்களுக்கு தானாக மாற்றத்தை உருவாக்கித் தந்திடும்! 

வாழ்க வளமுடன்.

Shall I join on the temple Homa, is it useful to me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கோவிலில் யாகம் வளர்க்கும் பொழுது நாம் கலந்து கொண்டால் நல்லதா?


பதில்:

இறை உண்மை அறிந்த முன்னோர்கள், அந்த தெய்வீகத்தை, யோகத்தில் வரமுடியாத மக்களுக்கு தெரியப்படுத்தவும், அதன் சக்தியை பெற்று வாழ்வில் உயரவுமே பக்தி உருவாக்கப்பட்டது. அந்த பக்தி, கோவில் என்ற வழிபாட்டு தளத்தில், உருவ வழிபாடாகவும் அமைக்கப்பட்டது. அப்படியான தளத்தில், தெய்வீக ஆற்றல் நிறைபெறவும்,  ஆற்றலை சேமிக்கவும், தக்கவைக்கவும் அந்தந்த வழிபாட்டு தளங்களில் யாகம் நடத்தி முறைப்படுத்துகிறார்கள். யாகம், ஹோமம் என்பது தமிழில் வேள்வி என்று அர்த்தமாகிறது.

கோவில் என்ற வழிபாட்டு தளங்களுக்குச் செல்லும் மனிதர்கள், தெய்வீகத் தன்மையை எளிதில் புரிந்து அந்த பெற்று தங்களையும் உயர்த்திக் கொண்டு, அதன் வழியாக நல்வாழ்க்கை வாழவும் இந்த ஆற்றல் உதவிடும் என்பது உறுதி. ஆனாலும், இக்காலத்திய யாகம், ஹோமம் இவற்றில் இருக்கிற உண்மை சில இடங்களில் தடுமாறுவதும் உண்டு. உண்மை உணர்ந்து செய்வதற்கும், வெறுமனே சடங்காக செய்வதற்கும் வித்தியாசம் உண்டுதானே?!

யோகத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு இருந்தால், அந்த அமைப்பில் ஒருவராகவோ, ஏதேனும் ஒரு உதவியிலோ கலந்து கொள்வதில் தவறில்லை.  மேலும் யோகத்தில் இல்லாத மக்களுக்கு, பக்தியில் திளைக்கும் மக்களுக்கு நிச்சயமாக உதவிடும். ஆனால் குண்டலினி யோகத்தின் வழியாக, தொடர்ந்து தவம் செய்பவர்கள் யாகம், ஹோமம் என்ற வேள்வி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. ஏன்? என்று கேட்டால், யாகத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது, நீங்கள் இயற்றும் தவத்தில் கிடைத்துவிடும் என்பதே உண்மையாகும்!

என்றாலும் கூட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம், இதுபோல, வேதாத்திரிய தவம் கற்றோர், கோவிலுக்கு போகலாமா? என்று கேட்டவருக்கு, ‘போகலாம் அதில் தவறொன்றும் இல்லை. தவிர்க்கவேண்டிய அவசியமும் இல்லை’ என்று சொல்லுகிறார். அதில் உள்ளர்த்தமாக நிறை உண்மைகள் மறைந்து இருக்கின்றன. என்றாவது ஓர் நாள் என்னிடம் நேரிலே கேளுங்கள். அந்த உண்மையை சொல்லுகிறேன். 

வாழ்க வளமுடன்.


Why all are advice to worship the Ancestors Worship Temple?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்!



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். நன்மை பிறக்கும் என்று அடிக்கடி சொல்லுகிறார்களே? அதில் உண்மை உள்ளதா?


பதில்:

பக்தி வழியில், மக்களை மேன்மை அடையச் செய்வதற்காக சொல்லப்படும் வழிமுறைதான் இது. தனியாக குறிப்பிடும் வகையில் சில உள் அர்த்தம் இதில் உண்டு எனினும், அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டும் நன்மை பிறந்துவிடுவதில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

குலதெய்வம் என்பது என்ன? ஆதிகாலம் முதல், நம் குடும்பத்தின் முன்னோர்கள் பக்தி வழியில் வழிபட்டு, வழிபாடு செய்து வந்த நிலையில் இருக்கும், தெய்வம் எனலாம். நாமும் சிறுவயதில் இருந்து அச்சடங்குகளை பார்த்து, வணங்கி வந்ததால் நமக்கும் இதில் ஏற்பு உண்டாகிவிடும். முன்னோர்கள் வணங்கிய தெய்வத்தையே நானும் வணங்குகிறேன் என்ற சிறப்பும் அங்கே இருக்கிறது தானே?!

ஆனால் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக, எத்தனையோ தலைமுறையாக வந்த பக்தி, கனிந்து யோகமாக மாறவில்லையே?! பக்தி என்பது குறிப்பிட்ட விளக்கமுடியாத எல்லைகளைக் கொண்டது. ஆனால் யோகம் என்பது முழுமையானது, விரிவானது, உண்மையானது ஆகும். பக்தியில் இருப்பவர்களுக்கு, யோகம் தேவையில்லை என்ற கருத்துத்தான், பொதுவாக இங்கே பரவியிருக்கிறது. 

வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்வது நல்லதுதான் எனினும், அவ்வழியில் நாம் பெற்ற, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்ப்பதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகள் என்ன? என்று கேட்டால் ஒன்றுமில்லையே! இத்தனை காலமாக, நாம் பிறந்ததின் பிறவிக்கடனை மறந்துவிட்டு அல்லவா, பக்தியில் திளைக்கிறோம். உண்மையிலேயே, நம் முன்னோர்களுக்காக, அவர்களின் ஆன்ம சாந்திக்காக, கர்மா என்ற வினைப்பதிவை தீர்ப்பதற்காக நாம் ஏதேனும் முயற்சி செய்தோமா?

அவர்களைப்போலவே, இன்னமும் பக்தியில் தானே நின்றிருக்கிறோம்? இந்த இடத்தில்தான் யோகத்தின் உண்மை உணர்ந்து, யோகத்தில் இணைத்துக்கொண்டு, இதுவரை முன்னோர்களின் வழியாக பெற்ற கர்மா என்ற வினைப்பதிவை தீர்த்து, தன்னுடைய களங்கத்தையும் போக்கிக்கொண்டால், நாம் வாழும் வாழ்க்கை இனிதாகும். இனி நமக்கு வரக்கூடிய சந்ததியினரின் வாழ்க்கையும் இனிதாகும் அல்லவா?

அதற்கு நாம் முயற்சிக்க வேண்டாமா? இன்னமும் பக்தியோடு நின்றிருப்பது நல்லதுதானா என்று யோசித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.


Compansation and Athma Shanti


பரிகாரமும், ஆத்மா சாந்தியும்

Arulmigu Magudeshwarar Temple - Kudumudi - Erode Distric, Tamilnadu, India.


நேற்று கொடுமுடி (Kodumudi) , மகுடேஷ்வரர் திருக்கோவில் (Magudeshwarar Sivan Temple) காவிரி (River Cauvery) ஆற்றங்கரைக்கு செல்லும் பயணம் நேர்ந்தது.  அந்த கோவிலுக்கு செல்லும் எல்லா வீதிகளிலும், பரிகார் (ஹிந்தி) கடை இருக்கிறது. அங்கே இறந்தவர்களுக்கு கருமாதி எனப்படும் ஆத்மா சாந்தி, வாழ்க்கை வசதி தடை விலக்கல். திருமண வாய்ப்பு உருவாக்குதல் என்ற  வகையில் பரிகாரம் செய்வதற்கான எல்லா பொருட்களும், செட் செட்டாக (ஒரே தொகுப்பாக) விற்கப்படுகிறது. பூக்கடைகளும், வண்ணப் பூமாலை கடைகளும் நிறைய இருக்கின்றன.

வீதியின் வழியே செல்லும் எல்லோரையும்,

“வாங்க பரிகாரமா? நான் செய்து தருகிறேன்” என்று கை பிடித்து அழைக்காத குறையில் பரிகாரம் நடத்தும் விற்பனர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்றல்லாது எல்லோரும் இதில் இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடுமுடியின் இந்த ஸ்தலம், பரிகாரத்திற்கு மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். மனித ஆத்மாவின் வாழ்க்கை முடிவுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் தொடக்கமான திருமணமும் இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. 

Ritual athma santhi parikar at Cauvery river - Kodumudi


திருச்சி மாவட்டத்திற்கும் நுழையும் காவிரி, அகண்ட காவிரி என்று அழைக்கப்படும். ஆனாலும், இங்கே கொடுமுடியிலும் அகண்ட காவிரியாகத்தான் ஓடிவருகிறாள். இப்போதும், முழங்கால் நீரில் மூழ்கும் அளவில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்துவரும் காவிரி ஆறு, கொடுமுடியில்தான் கிழக்கு நோக்கி பாய்ந்து, கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக, தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களை அடைந்து கடலில் தஞ்சமாகிறது. கொடுமுடி காவிரியில் குட்டியாக நிறைய மீன்களும் வலம் வருகின்றன. இதுவரை இப்பெரும் ஆற்றை கண்டிராத குழந்தைகள், மீண்டும் மீண்டும் நீரில் இறங்கி எழுவதை காணமுடிந்தது. இப்படியெல்லாம் குழந்தை குழந்தையாகவே இருப்பதை இங்கேதான் கண்டேன்.

படித்துரை முழுதும், யாரோ அவிழ்த்துப்போட்ட துணிகளும், உள்ளாடைகளும் கவனிப்பாரற்று கிடந்தன. உன் வாழ்க்கை சோகத்தோடு, இதையும் அங்கே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு என்று யார் பரிகாரம் சொன்னது என்று தெரியவில்லை. 

பரிகார ஸ்தலம் என்றால், புண்ணியத்தை வேண்டிப்பெரும் இடம்தானே?! அதை எப்படி தூய்மையாக, சுகாதாரமாக, மற்றவர்களும் வந்துபோகவேண்டும் என்ற கவனத்தோடு, பெரும் நோக்கத்தோடு உபயோகப்படுத்தும் நிலை, நம்மிடம் அறவே இல்லை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், நாற்றங்களும், ஆற்றின் கரையில் மிதக்கும் வேண்டாத பொருட்களும், பரிகாரத்திற்குப்போய் வந்து நமக்கே பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது.

பரிகார விற்பனர்கள் அங்கங்கே குடில்கள், வீடுகள் அமைத்திருக்கிறார்கள். அதன் வாசலில் தற்காலிக பந்தல் அமைத்து, வேண்டுவோருக்கு பரிகார சடங்குகள் செய்துதருகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் மட்டுமே உட்காரும், பிளாஸ்டிக் இருக்கைகள் உள்ளன. நாம் உட்கார்ந்தால் அடுத்த நொடி “அங்கே போய் உட்காருங்க” என்று கிளப்பிவிடுகிறார்கள். செருப்பைக்கூட அங்கே தனிப்பட்ட ஓரிடத்தில்தான் கழற்றி வைக்கவேண்டியுள்ளது. 

Tree around the snake stones and deities


பெரிய ஆலமரமும், நாக சிலைகள் அடுக்கப்பட்ட கல் மேடையும், ஆற்றின் கரையெங்கும் இருக்கிறது. அதைச்சுற்றியுள்ள தரைப்பகுதியில்தான், பரிகார சடங்குகள் நிகழ்த்தித் தரப்படுகின்றன. சிலர் வேண்டுதலாகவே நாக சிலைகள் வாங்கி வணங்கி, அந்த ஆலமர மேடையில் வைத்துவிடுகிறார்கள். பரிகாரத்திற்கு நாங்கள் அங்கே விசாரித்தவகையில், பரிகார சடங்கு செய்ய தொகை, குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். அதுபோக அங்கே விரித்துவைத்திருக்கும் சடங்கு பொருட்களும், நவதானியங்களும், மளிகை சாமான்களும், காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் கூட, பரிகார விற்பனர்களுக்கே சென்றுவிடும். கூடுதலாக ஒரு பித்தளை சொம்பு, ஒரு பட்டுக்கரை வேட்டியும் தானம் உண்டு. வசதி இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக செய்யலாம். அந்தக்காலத்தில் பசுமாடும், கன்றுக்குட்டியும் தானம் தருவார்கள். கொடுமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் என்று சொல்லுகிறார்கள். ஆகவே இத்தகைய பரிகாரமும் அக்காலம் முதற்கொண்டே நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான உண்மை என்ன தெரியுமா? பரிகாரத்தால் ஒரு பயனுமில்லை. பரிகாரம் செய்வதால், இறைவனும் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆத்மாவும் சாந்தியடைவதில்லை. 

இறை மனிதர்கள் செய்யும் எந்த தந்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதல்ல. நமக்கென்று நம் கருமையத்தில் ஏற்கனவே இருக்கிய வினைப்பதிவுகளையும், நாமே வரவழைத்துக்கொண்ட வினைப்பதிவுகளை அவ்வப்போது ஆராய்ச்சி செய்து, மனதையும், உடலையும், தூய்மை செய்து கொள்வதுதான் சரியான வழி. இதற்கு யோகமும், தவமும் முக்கிய தேவை. உடற்குறைகளை போக்கிக்கொள்ள அதற்கான உடற்பயிற்சியும் தேவை. அதன்றி,  உனக்கு, இது செய்கிறேன், அது செய்கிறேன் என்மீது கருணைமழை பொழி என்று வேண்டுவது அபத்தம். இறைக்கு படைக்கும் பொருளனைத்தும் இறை படைத்ததே தவிர, உனதானது எது?!

ஒரு ஆத்மா சாந்தி பெற, இறந்தவரின் நினைவில் நின்று, வாழ்த்தி வணங்கி, அவர் விட்டுச்சென்ற நற்செயல்களை செய்வதும், அல்லது  உறவினர்கள், உதாரணமாக, வாழ்க்கை துணைவர், மகன், மகள், பேரக்குழந்தைகள் ஆகியோர், அவரின் பெயரில் நன்மைகளை மக்களுக்கு செய்வதுமே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வழி செய்யும். குலதெய்வம் என்று சொல்லப்படுகிற முறையும் இதுவே. காலம் காலமாக, ஒருகுடும்பத்தில் குலதெய்வம் வழிபாடு, வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைந்து வழிபடும் முறையாகவே இருந்துவருவது உண்மை. 

இந்த பரிகார சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களில் இருக்கும் பொது அர்த்தம் என்ன தெரியுமா? 

“சிவம், சக்தி, விநாயகன், கந்தனுக்கான இறைத்துதிகளும், வணக்கங்களும், பிறகு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, இராகு, கேது ஆகிய கிரங்களுக்கான வணக்கங்களும், நான்கு தலைமுறை பாட்டனார், கொள்ளுதாத்தா, தாத்தா, தந்தை, இறந்து போன நபர் ஆகியோரின் பெயர் சொல்லி அவர்களை நினைத்து வணங்கி, உங்கள் பெயரில் இதை நடத்தி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டியும், உங்களுக்காக இதை தானமாக வழங்கவும் செய்கிறோம். எங்களோடு கலந்திருந்து நீங்கள் உன்னதம் அடைவீர்களாக. உங்கள் பெயரில் பிண்டம் வைத்து ஆற்றில் விடுகிறோம். (மீன், காகம் போன்ற) உயிரினங்களாக வந்து பசி தீர்த்துக்கொள்வீர்களாக. இனியும் நாங்கள் தானம், தருமம் செய்து எங்களை திருத்திக்கொள்கிறோம்” என்பதாக அமைந்திருக்கிறது.  

பிண்டம் வைத்து வணங்கி, சமைக்காத அவ்வுணவை ஆற்றில் விடும்பொழுது, மீனுக்கும், காகத்திற்கும் இரை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆத்மாவுக்கு என்ன? என்று விடைதருவார் யாருமில்லை. ஒரு நபர் செய்யும் பரிகார சடங்கு, நான்கு தலைமுறை ஆத்மாவுக்கு சாந்தி தரும் என்பது வியப்புக்குரிய செய்தி. இது குறித்த தெளிவு யாரிடமும் இல்லை. கேள்வி கேட்கவும் தயங்கி, எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன் என்றே பதில் கிடைக்கும். இதை செய்யாவிட்டாலும் குற்றம் என்று புலம்பவும் செய்வார்கள். பிறர் ஏதேனும் கேள்வி கேட்டு ஏளனம் செய்வார்கள் என்ற பயமும், இதைக்கூட செய்யமுடியாத என்ன என்ற கிண்டலும், ஒருவேளை “சாந்திபெறாத ஆத்மாவால்” தங்கள் குடும்பத்தில் ஏதேனும் தீங்கு நேருமோ என்ற குழப்பமுமே காரணம். ஆனால் உண்மை என்னவெனில், வாழ்ந்த மனிதரின் இறப்பு பற்றிய விளக்கம் தெரியவில்லை. வாழும் மனிதருக்கு தன் வாழ்வு குறித்தும் அக்கறை இல்லை. தானும் இறப்போமே அப்போது என்ன ஆகிவிடுவோம் என்ற உள் தேடல் கேள்வியும் இல்லை. அக்கேள்விக்கான பதிலைத்தேடவும் ஆர்வமில்லை.

“இறந்தவனை சுமந்தவனும், இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்”

பின்குறிப்பு: இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. யோகம், தவம், உடற்பயிற்சி என்ற சிந்தனை தூண்டுதலுக்காகவே எழுதப்பட்டது. இறை, ஒருகுறிப்பிட்ட இன மறுப்பாளர்கள் இக்கட்டுரையை மேற்கோள் காட்டக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. 

photos thanks to: tripadvisor, Tamilnadu Tourism and June3 studio