CJ for You: feel

feel

Showing posts with label feel. Show all posts
Showing posts with label feel. Show all posts

What is the human mind? What does modern science explain?


மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?


பதில்:

அறிவியல் என்றால், அறிவைப்பற்றி நுணுகி ஆராய்ந்து அறிந்து சொல்லுவதான் என்று பொருள்படும். ஆனால் Science என்றால் அறிவியல் என்று சொல்லி பழகிவிட்டோம். அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில்தான் வளர்ந்தது. எங்குமே அறிவைப்பற்றி ஆராயவில்லை. ஆனால், அணுக்கள் ஆராய்ச்சிக்கு, மனிதனின் அறிவு துணை செய்தது. இதுதானே உண்மை? அணுக்கள் என்பதை, ஆகாஷ், விண் என்ற பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலை என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே விண் ஞானம், விஞ்ஞானம் என்பதுதான் மிகச்சரி என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மனம் என்பது என்ன? அது நவீன மனித வாழ்விலில் கலந்துள்ள, விஞ்ஞான யுகத்தில் எப்படியாக அறியப்படுகிறது? என்று ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் இதுவே. AI எனப்படும், செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு இந்த தகவல்களை நான் பெற்றேன். அதை, அப்படியே உங்களுக்காக பகிர்கின்றேன்.

மனம் என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நினைவுகள், மற்றும் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒரு தொகுப்பு என்று கூறலாம், ஆனால் இது நம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையது.

மனம் என்பது மிகவும் சிக்கலான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு கருத்தாகும். இதைப் பற்றி மேலும் விளக்குவதற்கு, மனத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி பேசலாம்:

சிந்தனை: மனம் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

உணர்வுகள்: மனம் நம் உணர்வுகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.

நினைவுகள்: மனம் நம் கடந்த கால அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது நம் அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாகும்.

விழிப்புணர்வு: மனம் நம் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் சுற்றுப்புறத்தை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது.

அவதானம்: மனம் நம் கவனத்தை ஒருங்கிணைக்கிறது. இது நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மையமாக்க உதவுகிறது.

கூடுதலாக, நவீன இயற்பியல் மற்றும் அறிவியலில், மனதின் கருத்து முதன்மையாக அறிவாற்றல் அறிவியல் மற்றும் நரம்பியல் அறிவியலின் கருத்தியல்பு மூலம் ஆராயப்படுகிறது. இங்கே சில முக்கிய புள்ளிகள் உள்ளன, அவைகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

அறிவாற்றல் அறிவியல்: இந்த இடைநிலைத் துறையானது மனதையும் அதன் செயல்முறைகளையும், கருத்து, சிந்தனை, நினைவகம் மற்றும் முடிவெடுத்தல் உட்பட ஆய்வு செய்கிறது1. இது உளவியல், செயற்கை நுண்ணறிவு, தத்துவம், நரம்பியல், மொழியியல், மானுடவியல் மற்றும் கல்வி ஆகியவற்றின் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நரம்பியல்: அறிவியலின் இந்த பிரிவு நரம்பு மண்டலத்தில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக மூளை, மன நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது. நனவின் நரம்பியல் தொடர்புகளை (NCCs) ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர், இவை நனவான அனுபவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மூளை செயல்பாடுகள்.

நனவின் கோட்பாடுகள்: மூளை எவ்வாறு நனவை உருவாக்குகிறது என்பது பற்றி பல போட்டி கோட்பாடுகள் உள்ளன:

ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு (IIT): ஒரு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்களின் அளவிற்கு நனவு ஒத்துள்ளது என்று பரிந்துரைக்கிறது3.

குளோபல் நியூரானல் பணியிட கோட்பாடு (GNWT): ஒரு சிறப்பு நெட்வொர்க் மூலம் மூளை முழுவதும் தகவல் ஒளிபரப்பப்படும் போது உணர்வு எழுகிறது என்று முன்மொழிகிறது.

மனம் மற்றும் நனவு: மனம் நனவான செயல்முறைகள் (வெளிப்புற மற்றும் உள் சூழ்நிலைகளின் விழிப்புணர்வு) மற்றும் மயக்கமான செயல்முறைகள் (விழிப்புணர்வு இல்லாமல் நடத்தை செல்வாக்கு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த ஆய்வுகளின்படி, நாம் வாழும் உலகின், நவீன உடலியல், மனோவியல், சமூகவியல், வாழ்வியல் அடங்கிய விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடும் மனம், நல்ல புரிதலை கொடுக்கிறது. இதை படித்தால், நாம் அதை அனுபவமாகவும் பெற்றிருப்பதால், ‘எனக்கு என் மனதைப்பற்றி தெரியும்’ என்று சொல்லிவிடலாம். எனினும், மெய்ஞானிகள் சொன்ன மனம், என்பது இதுதானா? இவ்வளவு மட்டும் தானா? என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

‘இதுக்கு மேலே வேறே என்னய்யா தெரியனும், மனசைப்பத்தி? ஒரு வார்த்தை கூடுதலாக சொன்னாலும், அது ஒரு கட்டுக்கதைதான்யா!’ என்று பலர், மல்லுக்கு நிற்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த அளவில், மனம் என்பது குறித்த கருத்து, உங்களுக்கு போதுமானது, அதுவும் என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று சொன்னால், அது அவரவர் விருப்பமே. ஆனால், இதையெல்லாம் கடந்து, மனதின் உண்மை என்ன? என்ற சிந்தனை எழுந்தால், யோகம் மட்டுமே அதற்கு உதவுகிறது.

வாழ்க வளமுடன்.

-

Why felt tired on the yoga journey? How long need to move and what is the solution?


வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? தீர்வு என்ன?


பதில்:

நீங்கள் இப்படி கேட்பது நியாயமானதுதான். இன்றைய வாழ்வுக்கான சூழல் மட்டுமல்ல, பொதுவாகவே மனிதர்களின் வாழ்வில், குண்டலினி யோகம் என்பது தனித்துத்தான் நிற்கிறது. அது ஒரு வாழ்வியல் மாற்றாக, நம்முடைய வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியமான மனவளக்கலையின் வழியாகவே வந்திருக்கிறது எனலாம். யோகம் என்பது, குடும்பஸ்தனுக்கு ஆகவே ஆகாது என்ற நிலையில், அப்படி இல்லவே இல்லை என விளக்கமளித்து, இல்லறத்திலே யோகம் என்ற மாற்றத்தை கொண்டுவந்து, தகுந்த விளக்கமும், பயிற்சியும் அளித்தது ‘வேதாத்திரியம்’ மட்டுமே என்றால் அது மிகையில்லை.

யோகத்தின் வழியாக, தனிமனித விடுதலை பெற்று, நான் யார்? எந்த சிந்தனையின் ஊடாக, உண்மை அறிந்து, இறையுணர்ந்த தெளிவோடு, தன்னுடைய எண்ணம், சொல், செயல் வழியே, மிகத்தெளிவான வாழ்வியலில், இன்பம் மட்டுமே அனுபவித்து, தனக்கும் பிறருக்கும் துன்பமில்லாது வாழ்வதற்கு வழி சொல்வதுதான் ‘வேதாத்திரியம்’. அதுதான் இங்கே பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. படித்து பட்டயம் பெற்று, தகுதிச்சான்று அடைந்த உடனே, அந்த நிலையை நாம் அடைந்துவிட முடியாது என்பதை, நாம் மறந்துவிடுகிறோம்.

கற்றுக்கொண்ட பயிற்சிகளான, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவம், தற்சோதனை, அகத்தாய்வு, மௌனம் ஆகிய எல்லாவற்றையும் தொடர்ந்து செய்துவருவது முக்கியம். இது எவ்வளவு காலம் செய்யவேண்டும்? தொடரவேண்டும்? என்பது, நம்முடைய / நமக்கு கிடைக்கும் விளக்கத்தை மட்டுமே பொறுத்தது. பிறர் சொல்லக்கேட்டு விளங்கிக்கொள்வது என்பதை விட, அந்த விளக்கத்தை, உளப்பூர்வமாக தானாக உணர்வதுதான் ‘உண்மை விளக்கமாகும்’ ஒரு பலா பழத்தின் சுவையை என்னதான் மற்றவர் சொன்னாலும், அந்த பலா பழத்தின் சுவையை நீங்கள் அறிந்ததாகுமா? அந்த பலா பழத்தை, நீங்கள் பெற்று, சாப்பிட்டால் அல்லவா? அந்த சுவையும் ருசியும் நீங்கள் அறிந்ததாக கொள்ளமுடியும். அதுதானே உங்களுக்கு திருப்தியும், மன நிறைவும், இன்பமும் அளிப்பது இல்லையா? இதை எப்படி நீங்கள், பிறர் சொல்லும் வார்த்தைகளால் அறிந்துவிட முடியும்?

வேதாத்திரிய யோகத்தில் நீண்டகாலம் இருந்தும், எத்தனையோ தவங்கள் செய்தும், எதோ ஓர் சோர்வு எழுகின்றதே? அது ஏன்? இன்னும் எவ்வளவு காலம் இப்படி? என்று யோசனை வருகிறதே? என்று கேட்பதற்கு, முக்கியமான காரணம் ‘உங்களிடமிருக்கும் ஓர் எதிர்பார்ப்பு’ ஆகும். சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஒர் பாத்திரத்தை, ஒரே நாளில் புதிதாக, விளக்கி வைக்க முடியுமா? ஆனால் தினமும் செய்தால், ஒர் நாளில் அது, புத்தம் புதிதாக காட்சியளிக்கும் தானே? அதுபோல, எதிர்பார்ப்பு இல்லாமல் தொடர்ந்து, வேதாத்திரியத்தில் பயணியுங்கள். ஒருபோதும் ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.

உங்கள் வாழ்வில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை இந்த யோகத்தோடு முடிச்சு போடாதீர்கள். யோகம் பொருளாதாரத்தை கெடுப்பதில்லை என்பதை நினைவில் கொள்க. நீங்கள், இன்னமும் பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்றல், நிறைவு பெறவேண்டும் என்றால் அதில் ஈடுபடுங்கள். அதற்காக யோகத்தில் ஏமாற்றம் கொண்டு, கைவிட்டுவிட முயற்சிக்காதீர்கள். ஒரு ஓட்டப்பந்தய விளையாட்டில், பாதியில் நின்றுவிடுவதும், விலகிப்போவதும் ஒருபோதுமே பலனளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இறையருளும், குருவருளும் உதவட்டும். நானும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-

If you are a child, you can always be happy? Is that correct?


குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?


பதில்: 

பொதுவாக அப்படிச் சொல்லிக்கொள்வது உலகவழக்கமே ஆகும். உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது சந்தோஷமாக இருந்தீர்களா? அப்படியாக உணர்ந்தீர்களா? என்று  கேட்டுக்கொள்ளுங்கள். என்ன பதில் சொல்லுவீர்கள்? அந்த வயதில் அப்படியாக எதும் தோன்றாது. ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இன்ப நுகர்வு மட்டுமே தலைதூக்கி இருக்கும். அதுவே உங்களுக்கென்று விபரம் வரும்வரையிலும் தொடர்ந்திருக்கும். பெற்றோரின் நிலை அறியாமல், அது எனக்கு வேண்டும். அப்போதான் நான் நன்றாக இருப்பேன் என்று கருத்தில் அடம்பிடித்த காலம் இருந்திருக்கும்.  பெற்றோரும், தன் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக, தாங்கள் வருந்தினாலும் கூட, பிள்ளை நன்றாக, சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள்.

குழந்தைத்தனத்தில் இருந்த ஒரு உணர்வு, சந்தோஷமாக ‘இப்பொழுது’ உங்களுக்குத் தெரிகிறது என்பதுதான் உண்மை. வளர்ந்த வயதிலும், உலகில், உங்கள் வாழ்க்கை சூழலில், தொழிலில், வேலைகளில், வியாபாரங்களில் பலவிதமான தொல்லைகளை பெற்று, கவலைகொண்டு, துன்பப்பட்டு வருந்தும் இந்த வேளையில்தான், அந்தக்கால குழந்தை சந்தோஷம் ஞாபகம் வருகிறது அல்லவா? அதுதான் உண்மை. 

ஒரு பரிசோதனை செய்யுங்கள். உங்கள் குழந்தையிடம், நன்கு பேசத்தெரிந்த  3 வயது முதல் 12 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் (சிறுவர், சிறுமியர்) கேளுங்கள்.

‘இப்போது நீ சந்தோசமாக இருக்கிறாயா?’

‘அப்படின்னு யார் சொன்னா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அதற்குப்பிற்கு என்ன சொல்லுவார்கள் என்பதை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன். இப்போதைய, எல்லா குழந்தைகளும் கையில், கைபேசியோடு திரியும் இந்தக்காலத்தில், அவர்களும் பெரியமனிதர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா?

அப்படியானால், அக்குழந்தைகளுக்கு சந்தோஷம் இல்லையா? இருக்கிறது, ஆனால் அதை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. சரி, வளர்ந்து பெரியவர்களான நமக்கு சந்தோஷம் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது. ஆனால் நாம் அதை தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையாகவா என்கிறீர்களா? ஆம், சந்தோஷம் எங்குமே போய்விடவில்லை. நாம்தான் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் எங்குமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்.

ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மனதோடு, அன்றாட வாழ்க்கைச்சூழலில் அந்த மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் பெறக்கூடிய நிலையில், நாம் இல்லை. பரபரப்பான நிலையில் ஓவ்வொரு நொடியையும் கடந்துவிடுகிறோம்.

இதை எப்படி சரிசெய்யலாம்? இதற்கு துரியதவம் போதுமானது. நாள்தோறும் தவறாமல், அதிகாலையில் துரியதவம் இயற்றி அன்றைய நாளை துவக்குங்கள். மனமும் எண்ணங்களும் பூரிப்பான அந்த நிலையை, உங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷத்தை தேடவேண்டாம், அது அங்கேயே இருப்பதை உணரலாம். குழந்தைப் பருவத்திற்கு போகமுடியாததற்கு வருந்தப்படவும் தேவையில்லை.

‘இந்தக்காலத்திலே அப்படி இருந்திடவும் முடியாதுங்க, ஏன்னா, பொழைப்பு கெட்டுறும்ங்க’ என்கிறீர்களா? சரி அது உங்கள் நிலைதானே, தொடர்க!

வாழ்க வளமுடன்.

-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

Can we understand the someone's mind after experienced in Meditation?


தியானத்தில் ஆழ்ந்து நின்று உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், மற்றவர்களுடைய மனதை நாம் அறிந்துகொள்ள முடியுமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானத்தில் ஆழ்ந்து நின்று உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், மற்றவர்களுடைய மனதை நாம் அறிந்துகொள்ள முடியுமா?

பதில்:

மிகுந்த ஆராய்ச்சி மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாம் இந்த உலகில் பிறந்தபொழுது நமக்கு மனம் இல்லை. ஏன் இல்லை? என்றால், மனம் என்பது அப்பொழுதுமுதல் கட்டப்பட்டு வருகிறது என்று அர்த்தமாகிறது. ஏனென்றால் மனம் என்பது பொருள் வடிவம் கொண்டதல்ல. அது அலைவடிவானது. அந்த அலைகள் மனமாக ஒரு மாற்றத்தை அமைத்துக்கொள்வதற்கு, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் தெளிவுபடுத்துகிறார்.
ஒரு மனிதருடைய, குழந்தைப்பருவமான அந்த மூன்று வயது முதல், அவனுடைய / அவளுடைய வாழும் காலம்வரை மனம் என்பது இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒருபோதும் அது இல்லாமல் போவதில்லை. தூக்கத்தில் கொஞ்சம் அமைதி அடைகிறது. கண்விழித்த உடனே மறுபடி எப்போதும்போலவே இயங்கவும் ஆரம்பிக்கிறது. இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. மனம் என்பது தனியாக இல்லை. மனம்தான் மனிதன், மனிதன் தான் மனம் என்றும் சொல்லலாம். மனம்+இதன்=மனிதன் என்றுதான் நாம் அறிகிறோம்.

அப்படியான அந்த மனம், மூன்று வயதில் வளர்ச்சி அடைந்தபிறகு, புத்தம் புதிதாக இருக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுமானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  வளர்ச்சி அடைந்த மனம், நமக்குள்ளாக கருமையத்தில் இருக்கிற பதிவுகளை எடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவுகள் நம்முடைய, பரம்பரை வழியாக, வித்து மூலமாக, எங்கும் தடையில்லாமல் வந்துகொண்டே இருக்கிறது. உங்கள் மூலமாக, உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துக்கொண்டு போகும் என்பது உறுதியானது. இவ்வளவு ரகசியங்கள், உங்களுக்குள்ளாகவே, உங்கள் மனதிற்குள்ளாகவே இருக்கும் பொழுது, அதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், அடுத்தவருடைய மனதை அறிந்து கொள்ள விரும்புவது நியாயமா? சிந்தித்துப்பாருங்கள்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்’ (குறள் 706)

என்ற ஆசான் திருவள்ளுவரின் திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா?

இந்தக்குறள் சொல்லும் வழியாக, அடுத்தவருடைய முகத்தைப்பார்த்தாலே, அவருடைய மனம் எப்படிப்பட்டது? அவருடைய மனதிற்குள்ளாக என்ன இருக்கிறது? என்பதை நாம் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியும். அப்படியிருக்கும்பொழுது, தியானத்தில் ஆழ்ந்து, பலகாலம் முயன்று அதன் வழியாக பிறருடைய மனதை அறிய முயற்சிப்பது வேண்டாத வேலைதானே?!

தன்னையறிந்த, மெய்ப்பொருள் உணர்ந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், யோகிகளும் கூட பிறருடைய மனதை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டதில்லை. அது மிகப்பெரிய சுமையாகிவிடும். உங்களுடைய கர்மா என்ற வினைப்பதிவே கட்டுக்கடங்காமல் இருக்கும் பொழுது, மற்றவர்களுடை கர்மா என்ற வினைப்பதிவையும் நீங்களே பகிர்ந்துகொள்ள நினைக்கிறீர்களா? அது அவசியம்தானா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்
-

How we can understand the Vettaveli and Suthaveli, what mentioned by Tamil Siddhars?


நம்முடைய தமிழ்நாட்டு சித்தர்கள் சொல்லுகின்ற வெட்டவெளி மற்றும் சுத்தவெளி என்பதை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கம் கிடைக்குமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய தமிழ்நாட்டு சித்தர்கள் சொல்லுகின்ற வெட்டவெளி மற்றும் சுத்தவெளி என்பதை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கம் கிடைக்குமா?

பதில்:

இயற்கையையும், அதனோடு கலந்து காத்து நிற்கும் ஓர் உயர்ந்த ஆற்றலை அறிந்துகொள்ள ஆராய்ந்த, தமிழ்நாட்டு சித்தர்கள், யோகத்தின் வழியாக பல்லாண்டுகாலம் முயன்று, உண்மையை உணர்ந்து கொண்டார்கள். அந்த வழியில் தான், ‘நான் யார்?’ என்ற உண்மையையும் கண்டுகொண்டார்கள். பஞ்சபூத தத்துவத்தையும், அதில் முதன்மையான ‘ஆகாஷ் என்ற விண்’ என்பதுதான், சித்து என்ற உயிராகவும் ஜீவன்களிடத்தில் இருப்பதையும் அறிந்துகொண்டார்கள். சித்து என்ற உயிரை அறிந்ததால்தான் அவர்கள் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். ‘நான் யார்?’ என்ற தத்துவத்தின் முடிவாகவே, பேராற்றலும், பேரறிவுமான தெய்வீகம் என்ற இறையை வெட்டவெளியாக கண்டார்கள். அதுவே சுத்தவெளி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வெட்டவெளி மற்றும் சுத்தவெளி இரண்டையுமே, வெற்று வார்த்தைகளாலும், பேச்சாலும், எழுத்தாலும் புரியவைத்திட முடியாது. அதில் தோல்வியே கிடைக்கும். உணர்வுப்பூர்வமாக இருக்கும் ஒன்றை எடுத்துச்சொல்லுவது என்பது மிக கடினம்.

அப்படி சொல்லமுடியாத என்றால் அது பொய்தானே? என்று பகுத்தறிவுவாதிகள் கேட்பார்கள். பகுத்தறிவும் தகுதியுள்ளவர்கள், உண்மையிலேயே என்ன என்று பகுத்துத்தானே அறியவேண்டும்? அதைவிட்டுவிட்டு, இருப்பதையே இல்லை என்று மறுத்துவிட்டால் அது ‘பகுத்தறிவு நிலை’ ஆகுமா? அத்தகைய பகுத்தறிவு நிலைதான் யோகத்தில் நாம் கற்கிறோம். ஆனால் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம்.

ஏன் சொல்லவோ, எழுதவோ முடியாது? என்பதை பார்க்கலாமா? ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள், இப்போது அதன் சுவை என்ன? என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுங்கள். அதன் சுவையையும் இரண்டாவதாக காகிதத்தில் எழுதிவிடுங்கள். அடுத்து, கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். அதன் சுவையையும் மூன்றாவதாக காகித்தில் எழுதிக்கொள்ளுங்கள். இறுதியாக ஒரு அன்னாசிப்பழத்தையும் சாப்பிட்டு விடுங்கள். அதனுடைய சுவையையும் முடிவாக காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள். என்ன எழுதியிருப்பீர்கள்? என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

இப்பொழுது, அந்த காகிதத்தில் எழுதிய சுவையை வாசித்துப் பாருங்கள். இந்த நான்கு சுவைகளும் ஒன்றா? பலவா? அதை அப்படியே உங்களுக்கு எதிரில் இருக்கும் நபருக்கு, புரியவைத்திட முடியுமா? முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் உணர்ந்த அந்த சுவையை அப்படியே, அதேபோலவே, அந்த நபருக்கு விளக்கம் தந்து உணரவைக்க முடியும் என்று நம்புகிறீர்களா? அது உங்களால் முடியுமா? ஒருவேளை உங்களால் மட்டுமே முடியுமா?

பகுத்தறிவுவாதிகள் எப்போதுமே அடையாளம் காட்டும், சயின்ஸ் என்ற விஞ்ஞானிகள், சுத்தவெளி மற்றும் வெட்டவெளியை மட்டுமல்ல, பூமியின் உயரே, குறைந்தபட்சமாக 80 கிலோ மீட்டருக்கு மேலே, ஏதுமில்லை. ஒன்றுமற்ற இருட்டுத்தான் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரை, அது ஒன்றுமில்லை, ஏதுமில்லை என்பதுதான். அதனால் நாமும் அப்படியே நினைத்து ஏற்றுக்கொள்ளலாமா?
இத்தகைய விஞ்ஞானிகள்தான் ‘அணுவை பிளக்கவே முடியாது’ என்றார்கள். பிறகு நடந்தது என்ன? என்றாலும் இன்னமும் அது, அடுத்து நகரமுடியாமல், மூன்று தன்மைகள் கொண்ட குவார்க்குகளோடு நிற்கிறது. 

சரி, வேதாத்திரி மகரிஷி ஒரு கேள்வி கேட்கிறார். ‘இந்த பூமியும், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கோள்களும் எப்படி மிதக்கின்றன? யார் தாங்கி நிற்கிறார்கள்? மிதக்கும் பொருள் வலு உடையதா? தாங்கும் பொருள் வலு உடையதா?’
இந்த கேள்விக்கு, நீங்களும் பதில் தர முயற்சியுங்கள்.
வாழ்க வளமுடன்
-

How we get extreme feel in life bond and why called is as eroticism


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடலுறவின் பொழுது அதிக இன்பம் எழுவது ஏன்? ஆனாலும் அதை சிற்றின்பம் என்று சொல்லுவது ஏன்?


பதில்:

இந்தக்கேள்வி, எல்லோருக்கும் பயன்பெறும் பதிலை பெற்றுத்தரக்கூடிய கேள்வி, மனிதவாழ்வின் தொடக்கமே, பாலுறவில்தானே ஆரம்பிக்கிறது. ஆணும்  பெண்ணும் இணைந்துதான் ஒரு புதிய உயிரை உருவாக்ககூடிய தேவையை, இந்த இயற்கையும், தெய்வீகமும் ஏற்படுத்தி, பாதுகாத்து முழுமையாக்கியும் உள்ளது. இந்த பாலுறவு, அதன்வழியான புதிய உயிரனம் என்ற பண்பு, ஈர் அறிவு பரிணாமத்தில் தொடங்கிவிடுவதாக, விஞ்ஞான அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

மேலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும், தன்னுடைய பருவ வயதில் ஏற்படும் பாலுறவு ஆர்வம் இயல்பானதே, இயற்கையானதே அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாம் வாழும் உலகில், சமூக அமைப்பில், ஒரு கட்டுப்பாடு உள்ளது. இது ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு அளவுமுறை, வயது, வழிகள், சட்டம், விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் இந்தியநாட்டில் பருவ வயது என்பது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 என்றும் அமைந்திருக்கிறது. ஆனால் இயற்கையில் ஆணுக்கு 14 வயதிலும், பெண்ணுக்கு 10 முதல் 14 வரையிலான காலத்தில் பருவ தூண்டலும், அதன் உயர்வும் கிடைத்துவிடுகிறது.

உண்மையாகவே இந்த 10 முதல் 14 வயதில், பாலுறவு குறித்த விளக்கமும், அதன் விளைவும், அதை சமாளிக்கக் கூடிய தகுதியும் இருக்குமா என்றால் இல்லை. அதனால், இக்கால கட்டத்தில் பெரியவர்கள் / பெறோர்களின் / அறிஞர்களின் உதவியும், அக்கறையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது. இல்லையேல், பருவ வயது ஆணும் பெண்ணும் பாலுறவு இன்பத்தில் ஆழ்ந்து, அதன் தாக்கத்தில் தங்கள் வாழ்வையும், எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்வார்கள்.

மேலும் பெண்ணுக்கு அந்த வயதில், குழந்தை உருவாகிவிடுமானால், அது மிகப்பெரும் சமுதாய கேடாக மாறிவிடும். அந்த வயதில் அவள் குழந்தையை பெற்றெடுக்கவும் வலிமையற்று இருப்பாள், வளர்க்கவும் முடியாது. இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, திருமணம் என்ற பந்தம் அமைத்து, இவளுக்கு இவன், இவனுக்கு இவள் என்று ஒப்புதலையும், சமூகம் ஏற்கும் நிலையையும், இவனின், இவளின் குழந்தை இது என்ற நிலைபாட்டையும் உருவாக்கிக் தருகின்றனர். இதனால்தான், பாலுறவை, தகுந்த வயதுவரை காத்திருந்து பெறவேண்டும் என்ற நிலையில்தான் அதை ‘சிற்றின்பம்’ என்று வாழ்வோர், அறிஞர்கள் சொல்லிவருகின்றனர், 

மேலும் யோகத்தில் இருப்பவர்களும் ‘சிற்றின்பம்’ என்று சொல்லுவது வழக்கம். அதற்கான காரணம், யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுணர்வு பெற்றால், அதுதான் பேரின்பம் என்ற கருத்தில், மற்றது எல்லாம் சிற்றின்பம், குறையுடைய, முழுமையடையாத, நிறைவைத்தராத இன்பம் என்று சொன்னார்கள்.

சரி, உடலுறவின் பொழுது ஏன் அதிக இன்பம் எழுகிறது? அல்லது அப்படித்தோன்றுகிறது? இதற்கான காரணம், நாம் உணர்கின்ற, பெறுகின்ற, அதீத இன்பத்தை, நம்முடைய உயிராற்றலின் மூலமாகவும், அதன் வழியாக வருகின்ற ஜீவகாந்தம் என்ற இயக்கத்தாலும் பெறுகின்றோம். பாலுறவில் இந்த ஜீவகாந்தம் தன் இழப்பில் கூடுதலாக செலவாகிறது என்பதும் உண்மை. அதனால் அந்த இழப்பை ஈடு செய்ய, உயிரில் ஏற்படும் மாற்றம், ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், அது நமக்கு அதீத இன்பமாகவும் தோன்றுகிறது. ஆனால் அது தொடருமானால், உயிரிழப்பும் நேரலாம். கவனம்.

வாழ்க வளமுடன்.


Vethathiriya Kayakalpa Practice Makes body heat or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முறையாக காயகல்பம் கற்றேன். ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தேன். உடல் சூடு ஆனதாலும் அதனால் உடல் நலமும் கெட்டுவிட்டது. எனவே நிறுத்திவிட்டேன். இன்னும் சூடு குறையவில்லை. என்ன செய்யலாம்?


பதில்:

முறையாக காயகல்பம் கற்றேன் என்று சொல்லுகிறீர்கள். அதன்படியே செய்தீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், கற்கும்பொழுது இருக்கும் கவனம், அதை நாம் தொடர்ந்து செய்யும் பொழுதும் வரவேண்டியது அவசியம்.

குரு மகான் வேதாத்திரி மகரிசி, பல ஆண்டுக்காலம் ஆராய்ச்சியாகவே, காயகல்ப பயிற்சியை செய்து பார்த்து, அதன் விளைவு, மாற்றங்கள், ஏற்பு இவற்றை கணித்து, தவறுகளையும், குழப்பங்களையும் மாற்றி அமைத்துத்தான், மனவளக்கலை வழியாக பாடமாக நமக்கு தந்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே மேம்போக்காக, காயகல்பத்தில் தவறு என்று நாம் சொல்லிவிட முடியாது. அதற்கு வழியும் இல்லை!

காயகல்ப பயிற்சியில், கால்களின் நிலை, கைகள் வைக்கும் நிலை, அங்கே தரப்படும் லேசான அழுத்தம், முறையான அஸ்வினி முத்திரை அளவுகள், அதற்கான கால அளவு, ஓஜஸ் மூச்சு வெளிவிடும் நிலையில் நாக்கின் நிலைபாடு, ஓஜஸ் மூச்சின் அழுத்தம் மற்றும் வெளியிடும் முறை என்பதாக பலவற்றில் நாம் செய்யும் தவறுகளை, அப்படியே விட்டுவிடுகிறோம். அங்கேதான் நீங்கள் குறிப்பிட்ட உடல் உஷ்ணம் அல்லது உடல் சூடு ஏற்பட்டுவிடுகிறது என்பதை கவனத்தில் கொள்க.

அதனால்தான், காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ளும் பொழுதே, தனியாகவும் செய்து காண்பித்து, குறைகளை திருத்திக் கொள்வது நல்லது. கற்றுக்கொண்டேன், இனி வீட்டில் செய்து கொள்ளலாம் என்று உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. அதுபோல குழப்பம் என்றால், ஆசிரியரிடமே நேரடியாக சந்தித்துக் கேட்பதே நல்லது.

சரி, இனி தீர்வு என்ன என்றால், தற்பொழுது நிறுத்திவிட்டீர்கள் என்பதால், உடனடியாக, கற்றுக்கொண்ட மன்றத்தின் வழியாகவோ, வேறு மன்றத்திலும் கூட, உங்கள் நிலையை சொல்லி, திருத்தங்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவரையுல் தவறாக செய்ததால்தான் உடல் உஷ்ணம் / உடல் சூடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்க. நிச்சயமாக உங்களின் இந்த பிரச்சனை தீரும், கவலை வேண்டாம்.

வாழ்க வளமுடன்.