Why advised to avoid the meditation practice at night times?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இரவில் தவம் செய்வதை ஏதற்காக தவிர்க்கச் சொல்லுகிறார்கள்?!
பதில்:
இரவில் தவம் செய்யக்கூடாது என்பதல்ல. செய்யலாம். ஆனால் அதற்கு நன்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தது 12 மாதங்களாவது தொடர்ந்து, நாள் தோறும் தவம் செய்து பழகியிருந்தால், இரவில் தவம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், தவம் கற்ற ஆரம்ப நிலை சாதகர்கள், இரவில் தவம் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக எல்லோருமே, அதாவது எந்த நிலையில் தவம் கற்றோரும் கூட, உச்ச தவமான துரியாதீத தவத்தை இரவில் செய்யக்கூடாது என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை விளக்கமாக சொல்லி உங்கள் மனதை குழப்பமடையச் செய்ய எனக்கு ஆர்வமில்லை. தவிர்த்துவிடலாம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதுதான். இல்லை நான் முயற்சிப்பேன் என்றால், அது உங்கள் சமர்த்துதான்.
சரி, ஏன் இரவில் தவம் தவிர்க்கப்பட வேண்டும்? என்று கேட்பீர்களானால், முதலில் தவம் என்பது என்ன? என்ற கேள்விக்கான விடையை பெற வேண்டும். நீங்கள் உங்களுடைய மனதை ஒரு நிலையில் குவித்து தவம் செய்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்கள் கவனம் அதில் மட்டுமேதான் இருக்கும். உங்கள் சூழல் குறித்த எந்த ஒரு கவனமும் அங்கே இருக்காது. ஆரம்பத்தில் இருக்கும் என்றாலும் போகப்போக கவனம் தவத்தில் மட்டுமே இருக்கும்.
இரவு என்பது இருட்டானதுதானே ஓய்வானதுதானே என்பீர்கள்! அது யாருக்கு? இரவு சில உயிரிங்களுக்கு இயக்கமும் கொடுக்கும். பூச்சிகள், வண்டுகள், எலிகள், பல்லிகள், பாம்புகள் இப்படி பல உண்டு. அந்தநேரத்தில், தீடீரென்று எற்படும் வெளிச்சம் கூட உங்களை பாதிக்கும், யாராவது கதவை தட்டினால் கூட பாதிக்கும். இப்படி பல பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டுதானே?!
என்னதான் பாதுகாப்பு என்றாலும் கூட, ஒரு கொசு போதுமே உங்கள் தவத்தை கெடுக்க?! இதனால் மனமொன்றிய நிலையில் ஏற்படும் பிரச்சனைகளால், மனதின் இயல்பு பாதிப்படையும், அதனால் உடலும் கெடும், செய்கிற தவமும் கெடும். அதன்வழியாக உங்கள் தூக்கமும் கெடும். மறுநாள் அலுவல்களும் கெடும் அல்லவா?! எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இரவில் தவம் செய்வது குறித்து சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால், சாந்திதவம் மட்டும் செய்யலாம். ஏனென்றால் அதில் மனமும், உடலும் அமைதியை நோக்கித்தான் செல்கிறது!
வாழ்க வளமுடன்.