What is the purpose of worship the Deepa Aradhana?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நெருப்பை தீபமாக வணங்குவதால் என்ன நன்மை வந்துவிடப்போகிறது என்று விளக்குவீர்களா?
பதில்:
உலகில் உள்ள பெரும்பாலான மக்களிடம் நெருப்பை வணங்கும் பழக்கம், உளப்பூர்வமாக இருக்கிறது. காரணம் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் அப்படி வணங்கிவந்த பழக்கம்தான். தற்கால நவீன விஞ்ஞான காலத்தில், ‘இதையெல்லாம் வணங்குவதா? என்ன ஒரு மூட நம்பிக்கை’ என்று விலகி இருக்கிறார்கள் எனலாம். ஒன்றை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பம்தானே தவிர குறை சொல்லுவதற்கு ஏதுமில்லை.
ஆனாலும் நெருப்பு என்றால் கொஞ்சமாவது பயம் இருக்கத்தானே செய்கிறது? இல்லை என்று மறுப்பீர்களா? பெரும் நெருப்பு உண்டாக சிறு பொறி போதுமே, உலகில் பெரும் காடுகள் பற்றி எரிந்து சாம்பலாகின்றன. காரணம் அறியமுடியாமல் திணறுகிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும் அந்த நெருப்பை வெறுமனே கண்டு ஒதுக்கிடாமல், அதை ஒரு முறை அனுபவமாக பெற்றிருக்கிறீர்களா? அந்த அனுபவம் இன்னும் பலவிதமான உண்மைகளை உங்களுக்குச்சொல்லும்.
ஆதிகால மனிதன், நெருப்பைக்கண்டு அஞ்சினான். நெருப்பின் தன்மை, தாக்கம், வளர்ச்சி, படருதல், அழித்தல், சாம்பலாக்கிடுதல் என்று எல்லாம் கண்டு திகைத்தான். அதனால் அதில் ஏதோ தெய்வத்தன்மை உள்ளது என்று உணர்ந்து அதை வணங்கினான். என்றாலும் கூட அந்த நெருப்பை, பக்குவமாக கையாண்டு, உணவை சமைக்கவும் கற்றுக்கொண்டான் என்பது மகத்தான உண்மைதானே?!
இப்போது உங்களுக்குத்தோன்றும் ‘அடுப்பில், சமையலுக்கு எரியும் நெருப்பை ஏன் தீபமாக வணங்க வேண்டும்? முட்டாள்தனம் இல்லையா?’ என்று கேட்ப்பீர்கள். இப்படி நீங்கள் கேட்பதாக இருந்தால், உங்களுக்கும் நெருப்பிற்கும் உள்ள தொடர்பில் விலகி இருக்கிறீர்கள். அந்த நெருப்பை அனுபவமாக பெறவில்லை என்று உறுதியாக சொல்லலாம்! முக்கியமாக, வெப்பம் தான் நெருப்பாக மாறுகிறது. நம் உடலில் சராசரி வெப்ப நிலையாக 98.6 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பம் இருக்கிறது. அது அந்த அளவில் இருந்தாகவேண்டும். குறைந்தாலும், கூடினாலும் உயிர்வாழ்தலில் சிக்கல்தான்.
பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் பௌதீக தோற்றத்தில் மூன்றாவது நிலையே, வெப்பம் ஆகும், இந்த வெப்பம் தன்மாற்றம் பெற்றால் நெருப்பாக மாறிவிடும். நெருப்பு நிலையானதல்ல, உடனே அது எரிந்து / எரித்து மறைந்துவிடும். அந்த நிலையில் அங்கே ஒரு தெய்வீக மாற்றமும் நிகழ்கிறது. இந்த உண்மை அறிந்த அறிவார்ந்த முன்னோர்கள், ஆதிகாலத்தில் பயந்துபோய் வணங்கிய தன்மையை விலக்கி, உண்மையோடு தெய்வீகமாக, தீபாராதனை வழியில் வணங்கலாம் என்று வழியமைத்தார்கள். தீபராதனையை கண்களால் பார்ப்பதும், தீபத்தை கைகளால் ஏற்று கண்களில் ஒற்றிக்கொள்வதும் அந்த ஆற்றலை, சக்தியை நமக்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். இதுதான் நெருப்பை தீபமாக வணங்குவதால் கிடைக்கும் நன்மையாகும்.
வாழ்க வளமுடன்.