Pattaiya Bharati Mani | CJ

Pattaiya Bharati Mani

Pattaiya Bharati Mani


 பாரதி மணி...



மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில் அந்த தகவலை மேலும் சுவாரசியமாக்குவார். அப்படியாகவே பாரதி மணி அவர்களின், அதற்கு பதிலடியையும், பிறகு அவரின் மண்வாசம் மிகுந்த மனவெளிப்பாடுகளையும் நான் படித்துக்கொண்டு வந்தேன்.


பொதுவாகவே தன்னை, தன் அறிவை, வளர்ச்சியை, அனுபவத்தை, ஆற்றலை, பலமின்மையை, தாழ்ச்சியை, மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த உலகில் தன் வாழ்நாளில் அலை இல்லாத குளமாக (கடலாக) இருக்கமுடியும். பாரதி மணி அப்படி ஒருவாராக இருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.

பாரதி மணி என்பவர்தான் பாபாவில் முதலமைச்சராக வருவார் என்பது அப்பொழுதான் தெரியும். இல்லையென்றார் “யார்ரா இவரு?” என்பதாகவே இருந்திருக்கும். பிறகு விசயமறிந்தால் கப்பல் வியாபாரியாக இருந்திருக்கிறார், நீதிபதியாக இருந்திருக்கிறார்... இன்னும் பலபல...

பாரதி மணி அய்யா, சார் என்று சொன்னால் ஒரு அன்னிய பாவம் வரும் :) ஆனால் பாட்டையா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்... எனக்கோ பாட்டையா என்றால் ரொம்ப வயாதானவரோ என்ற எண்ணம் உருவாவதினால் அய்யா போதுமானது. நிலைத்தகவல் மூலமாக அவரைப்பற்றிய ஒரு முழு வடிவம் அவரின் சினேகிதத்தை உருவாக்கியது. நான் அவரின் நண்பரானேன். என்னுடைய சில நிலைத்தவகலுக்கும் அவர் அவருடைய பாணியிலேயே பதில் தந்திருக்கிறார். ஒரு புதியவரோடு குரலால் பேசினால் அதில் தொணிக்கும் குரல் உச்ச, கீழ் ஸ்தாயி எதிராளியையும், நம்மையும் புடம்போட்டு காட்டிவிடும்...பின்னர் விவகாரத்தையும் ஏற்படுத்தும்... நேரில் பார்ப்பதோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி தள்ளிவைக்கும்... ஆனால் முகம் காணாது எழுத்துக்களால் பேசிக்கொள்ளும்பொழுது நம் மனம்தான் பேசிக்கொள்ளும். நம் அனுபவமே எதிராளுக்காக வடிவம் எடுத்து தானே உருமாறிக்கொள்ளும். அப்படி பாரதி மணி எனக்குள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தியிருந்தார்...

நிஜமாகவே பாரதி மணி எழுத்தாளரா, நாடக நடிகரா, கட்டுரையாளரா எனபதாக அவரைப்பற்றி எனக்கு வேறெந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் வார்த்தைகள் அந்த நுணுக்கங்களை கொண்டிருந்தன... தமிழோடு வார்த்தைகளால் விளையாடுவது எனக்கு வரும் என்பதால்... அதை யார் செய்தாலும்,அது எனக்கு பிடிக்கும்... பாரதி மணி அய்யாவையும் அப்படி பிடித்திருந்தது... வழக்கமாக என் நண்பர் குழாமுக்கு அவர்களின் பிறந்தாநாளின் அன்று என் பாணியில் ஒரு கேலி சித்திரம் தருவது உண்டு. பாரதி மணி அய்யாவுக்கு தனியாக ஒரு பரிசாக தருவது என்று முடிவெடுத்து அவரின் ஒளிப்படம் ஒன்றை சேகரித்து, அவருக்கே தெரியாமல் அதை வரைந்துமுடித்து என் பக்கத்தில் வெளியிட்டேன்...

கடவுளின், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் யாரை வரைந்தாலும் அதில் அவர்களின் முகபாவனையை அப்படியே கொண்டுவரும் தகைமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்... அந்தவகையாகவே பாரதி மணி அவர்களின் ஓவியம் அவராலேயே மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டது... அந்த ஓவியத்தின் பக்கத்திலேயே மிக அருமையான கலந்துரையாடலும் நடைபெற்றது...

அந்த ஓவியத்தை அவரின் பிறந்தநாளுக்கே பயன்படுத்திக்கொண்டேன்... ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு நன்றியுரை எனக்கு கிடைத்தது.

---
அன்புள்ள சுகுமார்ஜி: என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பிறந்தநாளுக்கு யாரும் தரமுடியாத ஒரு பரிசை தந்திருக்கிறீர்கள். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் மனமார்ந்த நன்றி....God bless you!

பாரதி மணி
---
அதற்கு பிறகு என்னையும் அவர் புரிந்துகொண்டிருப்பார் (!?) என்ற நம்பிக்கையில் அவரின் தவலுக்கு நானும் என்பாணியில் கேலியோடு கூடிய பதில்கள் தர ஆரம்பித்தேன். கொஞ்சம் ஒட்டி வந்துட்டோம் அல்லவா... அதான் :)

சென்னை பலநாட்கள் போய்வரும் வேலை எனக்கிருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன் அய்யா என்றுதான் சொல்லியிருந்தேன். நான் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மேல் சென்னையில் தங்குவதுமில்லை. சென்றமாதத்தில் ஓவியர் ஜீவாநந்தன் அவரை சந்திந்த வேளை நானும் சென்னையில் வேறு ஒரு அலுவலில் இருந்ததால் பார்க்க இயவில்லை. நான் இருப்பது தெரிந்து “நீங்களும் வந்திருக்கலாமே சுகுமார்” என்றார்...

என்பெயரில் சுகுமார்ஜி என்பதில் சுகுமார்தான் என்பெயர் ஜி என் தந்தையின் ஆங்கிலமுதல் எழுத்து... ஆனால் ஜி ஹிந்தி ஜியை தோற்றுவிக்கும்... பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர் சாமிநாதன் (சாம் விசய்)
“நான் சுகுமார்னுதான் கூப்பிடுவேன்... ஜிலாம் சொல்லமாட்டேன்” என்றார்...
“அய்யா அந்த விளக்கமே வேண்டாம்... உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டேன்...

அதேபோல நண்பர் வட்டாரத்தில் “சுகு”  மட்டும்தான்... நிலைத்தகவலில் இதை தெரிவித்தவுடன் பாரதி மணி அய்யாவும் சுகு என்றே அழைக்க ஆரம்பித்தார்.

நேற்று (07-01-2013) காலை தாம்பரத்திலிருந்து பாரதி மணி அய்யாவை கைபேசியில் அழைத்தேன்...
என்னை நான் அறிமுகபடுத்திக்கொண்டதும் மகிழ்ந்தார்... ஆனால் “கடவுள் வந்திருந்தார்” சுஜாதாவின் நாடக பயிலரங்குக்கு செல்லவிருப்பதால் நீங்கள் நாளை காலை வாருங்களேன் என்றார். எனக்கும் (!?) நாளை நேரமிருப்பதால் சரி அய்யா என்றேன்.
“நீங்க இருந்து கண்டிப்பா நாளைக்கு பார்த்துட்டுத்தான் போவனும்” என்றார்.

செவ்வாய்கிழமை காலை எழு மணிக்கு மீண்டும் அழைத்தேன். வணக்கத்திற்குப்பின் உங்கள் இல்ல முகவரியை எனக்கு அனுப்பிவையுங்கள் என்றேன். குறுஞ்செய்தி வந்த சில நிமிடங்களில் வடபழனி பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கேயிருந்து சாலிகிராமம் கடைசி நிறுத்தம் என்பதை அறியாமல், வேறு ஒரு பேருந்தில் சாயி நகர் இறங்கி மூன்றாவது பிரதான சாலை சென்று ஒரு முட்டுச்சந்தில் (!? - அவரே சொன்னது) இருந்த தங்க (முட்டையிடும்)குடிலை அடைந்து வாசலில் நிற்க...
கைபேசியில் அழைத்தார்... எங்கிருக்கீங்க சுகுமார்?
உங்க வாசலில்...
ஓ... வந்தாச்சா... இந்தாவாரேன்...

கதவு திறந்த அந்த மனிதரை பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமான ஒருவராகவே அவரைக்கண்டாலும், வணக்கம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்... என் தோளில் கைபோட்டு தன் அன்பை வெளிக்காட்டி தன் அறைக்கு அழைத்துச்சென்றார்...

அமர்ந்ததும் நான் ஆரம்பித்தேன்...
ரொம்பநாளைக்குப்பிறகு என்னை “டேய் சுகுமாரா”ன்னு சொன்னது நீங்கதான் அய்யா என்றேன்.
“ஹே” என்பதாக பாவனை காட்டி சிரித்தார்...
“என்னை அப்படி என் தந்தைமட்டுமே அழைப்பார், நீங்க அப்படி அழைத்தது எனக்கும் சந்தோசமாக் இருந்தது” என்றேன்...

இந்த “டேய் சுகுமாரா” ஒரு பிளாஷ் பேக்...
பாரதிமணி அய்யா தகவல் தந்திருந்தார்...

---

Bharati Mani ஐயோ.....ஹரன்! நானா?.......எனக்கு கோணல் இல்லாமல் ஒரு நேர்கோடு போடத்தெரியாது! இது ஓவியர் ரஷ்மி வரைந்தது! எனக்கு பார்த்து ரசிக்க மட்டும் தான் தெரியும்!

Caricaturist Sugumarje Bharati Mani Sir... ஒரு படம் வரைந்துதான் பாருங்களேன்!

Bharati Mani சுகு! சில விஷயங்கள் எனக்கு வராதென்ற பிடிவாதமான நம்பிக்கை எனக்குண்டு. காதல் வயப்பட்டபோதே ஒரு கவிதை நான் எழுதியதில்லை. பள்ளிக்கூடத்தில் ட்ராயிங் கிளாசுக்கு மட்டம்.......காரணம் எனக்கு வரையத்தெரியாது! சமீபகாலம் வரையிலும் எழுத்து எனக்கு வராதென்பதை பிடிவாதமாக நம்பினேன்.......இப்போதும் நம்புகிறேன்!

Caricaturist Sugumarje இருக்கலாம்... ஆனால் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் அருமையான புத்தகமாக உருவெடுக்கும்... (பிச்சி, பிச்சி எழுதுவதால் அதன் முழுவடிவம் கிடைக்காதிருக்கிறது என்று நினைக்கிறேன்)

Bharati Mani அடேய்......சுகுமாரா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? நான் One Book wonder! என்பது உனக்குத்தெரியாதா? இரண்டாம் புத்தகம் எழுதி வாசகர்களை துன்புறுத்தமாட்டேனென்று சபதம் வேறு செய்திருக்கிறேன்! தண்டனையாக என் ஒரே புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தொகுப்பை ஒரே மூச்சில் படிக்கக்கடவது!

Caricaturist Sugumarje ஏற்கனவே ஒரு சபதம் போனமாதம் சொன்னீர்கள்... (முதல்வராக மாட்டேன் என்று) இப்பொழுது இன்னொன்று... நீங்கள் புத்தகம் போடவேண்டாம்... நாங்கள் தொகுத்துக்கொண்டாலே ஆயிற்று

Caricaturist Sugumarje புத்தகம் படிப்பது தண்டனையல்ல... அது ஒரு ஆத்மாவோடு வாழ்வது

Bharati Mani அடாடா! மெச்சினோம்! எம் வீட்டுக்கு வந்தால், எனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ ஒரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை இந்த நல்ல நேரத்தில் அறிவித்துகொல்கிறோம்!

Caricaturist Sugumarje கொடைக்கு நன்றி அய்யா!

---
ஆக நேற்று காலை ஒருமணிநேரத்திற்கும் மேலாக அவரோடு முடிவே இல்லாது கலந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மதிய ஊர்திரும்பும் எண்ணம் அப்போதைக்கு முடித்துவைத்தது... இன்னும் நிறைய அவரோடு பேச விசயங்களும், நேரமும் காத்திருக்கின்றன...

வரும்பொழுது அவரின் வார்த்தைபடியே தண்டனையாக (பரிசாக) புத்தகமும் வாங்கியாயிற்று... இனி ஒரே மூச்சில் படிக்கனும்... தண்டனையின் அடுத்த சாராம்சம் அதானே :)

இதற்கு துணை நின்ற முகநூலுக்கு நன்றி!

பாட்டையா பாரதி மணி அவர்களின் Facebook ID