Rebuild the art business for our customer
என்னைப்பொறுத்தவரை இந்தியர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சம் அதிகம் தான். எப்படியென்றால், ஒரு ஓவியருக்கே தெரியாத, அறியாத, கற்றுத்தேறாத ஓவிய அறிவு நம் இந்தியமக்களுக்கு உண்டு. அவ்வறிவை அந்த ஓவியருக்கே கற்றுத்தரவும் தயங்காத ஆற்றல் கொண்டவர்கள்.
இதனால்தான், ஒரு ஓவியராக இந்தியாவில் பிழைப்பை நடத்துவது பஞ்சப்பாடு தரும். இது என் அனுபவத்திலிருந்து தருகிறேன். ஒருவேளை இவர்களோடு எப்படி ஓவிய வியாபாரம் செய்வது என்று அறியாத ஓவியனாகக்கூட நான் இருந்திருக்கலாம். அதனால் இந்த, என்னுடைய கணிப்பில் தவறிருந்தால் சக ஓவியர்கள் என்னை மன்னிக்கவும்.
கிட்டதட்ட பதிமூன்று ஆண்டுகளாக, ஓவியத்தை மட்டுமே தொழிலாக வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டியிருக்கிறேன். கொஞ்சம் அங்கங்கே பஞ்சர் ஆன இடங்களில் எனக்கு தெரிந்த பிற, Graphics design, web design and developing, sound and video editing என்றெல்லாம் அவதாரம் எடுத்து சரி செய்திருக்கிறேன்.
ஒரு விரலை சுட்டினால், மூன்றுவிரல் நம்மைத்தான் காட்டுமாமே?! அப்படி ஏதேனும் இந்த சமூகத்தை குறை சொன்னால் “நீ” சரி இல்லை என்பதுதான் இந்த சமூகத்தின் பதிலடி. இருக்கலாம். அதன் பாடத்தை அல்லது விளக்கத்தை கடந்த ஒரு வருடத்தில் படித்து தெளிந்தேன். என்னா அடி?! தவிலுக்கு இரண்டுபக்கமும் அடி என்பதுபோல.
வாங்கிய ஓவிய வேலைகளில் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல், இதை திருத்து, அதை திருத்து, இது என் மூஞ்சி இல்லை, தாடையை குறை, கன்னத்தை குறை, முடியை இப்படி திருத்து?! என்றெல்லாம் எனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்தார்கள்
முக்கிய நிகழ்வாக ஒரு கஷ்டமர், அவர் கேட்ட மாதிரிபடம் போல வரைந்து கொடுத்த பிறகு, இது நான் இல்லை, ஏற்கனவே கொடுத்த என் போட்டொ பார்த்து வரைந்து தாருங்கள் என்றார். மறுபடி முதலிருந்து வரைந்து கொடுக்க, இந்த பெண் முகம் குண்டாக இருக்கிறது சரி செய்க என்றார். சரி செய்து கொடுக்க இரண்டாவது முறை ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய வேலை முடிந்தது. அடுத்து எழுத்துக்கள் பதிக்கும் வேலை. ஒரு கொடிபோல போட்டு அதில் எழுத்து கேட்க அப்படியே வரைந்து கொடுத்தேன். எனக்கு இந்த கொடி வேணாம், வேறு வேண்டும் வேறு வண்ணத்திலும் வேண்டும் என்றார்.
நான் எதற்கடா வம்பு என்று ஒரு பத்து கொடி மாதிரிகளையும், பத்து வண்ணங்களையும் கொடுத்து எதுவேண்டும் என்று சொல்லுக என்றேன். அதற்கு அந்த கஷ்டமர், இப்படி கேட்ட எப்படி? அந்த படத்தில் வைத்து காமிக்கவும் என்றார்.
யப்பா சாமி, இதுக்காக, உங்க சாய்ஸ்க்காக 10 மாதிரி அனுப்பிவைக்கிற பழக்கம் என்கிட்ட இல்லை. எதுவேண்டுமென்று சொன்னால் அதை வைத்து முடித்து அனுப்புகிறேன் என்றேன். அதற்கு அவரிடம் பதிலில்லை. சரி என்று நானே ஒரு மாதிரிவடித்து அனுப்ப, எனக்கு பிடிக்கலை, வேறே வேண்டும் இத்தனை ஓவியம் செய்யறீங்க, எது பெட்டர்னு நீங்கதானே தரனும்?! என்று அந்த கஷ்டமர் பதில்தர,
என் அனுபவத்தில் எது சரியாக இருக்கும் என்று கொடுத்தால்தான் நீங்க மாற்ற சொல்லுகிறீர்களே? இதெல்லாம் சரிபட்டுவராது, உங்களுகாக என் முழு நேரத்தையும், முழு வேலைலையும் செய்துகொண்டிருக்க முடியாது, என்ன வேணும் என்று சொன்னால்தான் கேட்பதை தரமுடியும். எல்லாமே புதிதாக வரைவது தான் எங்கள் வேலை. பழசை புதிதாக தரும் மாயம் எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியாவிட்டால், இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உங்களுக்கு பிடித்தவகையில் வேறு யாரிடமாவது ஓவியம் வாங்கிக்கொள்க என்று சொன்னேன். நான் சொன்னதை புரிந்துகொள்ளும் நிலையில் அந்த கஷ்டமர் இல்லை. அவர் கொடுத்து சிறு அட்வான்சோடு நிறுத்திவிட்டேன். எனக்குத்தான் 5 நாள் ஓவியவேலை கெட்டது. அந்த ஓவியம் அந்த கஷ்டமரின் விருப்பம் என்பதால் வேறு யாருக்கும் மாற்றித்தரவும் முடியாது.
காசை வாங்கி ஓவியம் தருவதாலும், கஷ்டமர் நமக்கு கடவுள் (மகாத்மா காந்தி சொன்னது) என்பதாலும், கொஞ்சம் கூட கோபமே என்வார்த்தைகளில் வராத வகையில் மிக மிக அமைதியாகவேதான் பதில் கொடுப்பேன். ஆனாலும் அந்த வார்த்தைகளுக்கு அவர்களின் பதிலடி பலமாகவே இருக்கும். தரையோடு படுத்து காலை ஏதாவது செய்வதற்கு, கைகொடுத்து நட்பாக விலகிவிடலாமே?! ஆனாலும் சிலரை திருப்தி படுத்த இறையாலும் முடியாது.
இப்படியான கொடுமையான நிகழ்வில், கரோனா தொற்று நோயும் கலந்துகொள்ள, என் ஓவியவேலைகளும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டன. சரி, இந்த இடைவெளியும் நல்லதுதான், என்னை ஆற்றுப்படுத்தும் என்றெண்ணி, சிலர் அப்படியும் கேட்ட ஓவியங்களை, வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டேன். என் வாட்ஸப்பில், இந்த ஓவியர் புது ஓவிய வேலைகளை வாங்குவதில்லை என்றும் ஸ்டேடஸ் போட்டுவிட்டிருந்தேன்.
வழக்கமாக எனக்கு பிடித்த வேலைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நேரம் கழிந்தன. இதற்கிடையில் நான், இனிமேலும் இப்படி ஓவியம் வரைந்துதான் பிழைக்கனுமா? என்று அகத்தாய்வு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
மேலும் இந்த எல்லாம் தெரிந்த, ஓவியரைவிடவும், ஓவிய அறிவுகொண்ட இந்திய மக்களை சும்மா விடலாமா? வேலை தருகிறார்களோ இல்லையோ ஒரு ஓவியரையும், ஓவியத்தையும் மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டாமா? சிந்தித்தேன்.
அதன் விளைவுதான் என் புதிய “caricaturelives website" அவதாரம். இனி உங்க போக்குக்கு நான் இல்லை.
1) இதுதான் ஓவியம், நீயே தேர்ந்தெடுத்து தரும் உன் போட்டோ கொண்டு அதன் மாதிரியாக - கவனிக்கவும், அதன் மாதிரியாக ஓவியம் கிடைக்கும்
2) திருத்தங்களுக்கு இடமில்லை
3) தலைப்புக்கு, வாக்கியத்துக்கு இடமுண்டு
4) எழுத்துப்பிழை திருத்தம் உண்டு, எழுத்து மாற்றமில்லை (போட்டது போட்டதுதான்)
5) இதைச்சேர், அதைச்சேர் என்று சேர்க்கும் பொருளுக்கெல்லாம் இடமில்லை
6) இந்த குதிரை சவாரி, மாட்டுவண்டி சவாரி, பைக், கார், பிளேன் சவாரி எல்லாம் கிடையாது
7) விலை திருத்தம் கிடையாது
8) ஒரு ஓவியத்திற்கு 14 நாள் ( இருவாரம்) ஆகும்
9)பின்புலம் வெள்ளை வண்ணம்தான்.
10) இந்த சும்மா Soft copies கிடையாது, ஒரே விலை ஒரே High resolution soft copies any format (without layers)
என்று மாற்றங்களை, கடந்த அக்டோபர் 10 முதல் கொண்டுவந்துவிட்டேன். இனி தொடங்கும் வேலைகளுக்கு காத்திருக்கிறேன். Coustmer ஆ கஷ்டமாரா என்று பார்த்துவிடவேண்டியதுதான்.
இவண்
சுகுமார்ஜி