The path and ride on opposite directions | CJ

The path and ride on opposite directions

The path and ride on opposite directions




எதிரெதிர் திசைகளில் பாதையும் பயணமும்.

ஒரு படைப்பாளி தான் கற்றுத்தேர்ந்த திறமைய வெளிக்காட்டவும், அதன் மூலமாக தன்னை முன்னிறுத்தி, தன் பெயர் நிலைக்கவும், கலையின் தரம் உயர்த்தி, வகைப்படுத்தவும், பிறரையும் அதில் ஆர்வம் வரச்செய்யவும் நினைத்துத்தான் செயல்படுகிறான்.

கூடவே இந்தக்காலங்களின் பொருளாதார தேவைகளை முன்னிட்டு, தனக்காக என்றில்லாமல், பிறர் கேட்டுக்கொண்டபடி, அவர்களுக்கு தேவையான கலைப்பொருளை வடித்துக்கொடுத்து, தன் வயிற்றுப்பாட்டையும் சமப்படுத்திக்கொள்கிறான்.

ஆனாலும், இந்த படைப்பாளிகளில் ஓவியனுக்கு இருக்கிற மரியாதையும், மதிப்பும்; மக்களைச்சார்ந்து, அவர்களின் தேவை கேட்டு வழங்கும் ஓவியங்களில் இல்லை என்றே சொல்லலாம். சில விதிவிலக்காக, இவர்களில் நல்ல மக்களையும், அவர்கள் ஓவியத்தின் மேலும், ஓவியரின் மேலும் மதிப்பும், மரியாதையும் தருவதை எண்ணி வியந்திருக்கிறேன்.

தான் நினைத்ததை மட்டுமே தரும் படைப்பாளியாக, எழுத்தாளனும், சிற்பியும், மரபு ஓவியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்காகவும் தன்னை, தன் படைப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை. இதுதான் என் படைப்பு, உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் எனக்கு குறையில்லை என்ற ரீதியில் இயங்குவார்கள். இவர்களில் சிலர், சமூகத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பெரும்பாடு. சிலர் வறிய நிலையிலும் இருக்க காணலாம். 

இந்த பொருளாதார சமூகத்தில், படைப்புக்கான மதிப்பும், கிடைக்ககூடிய பணமும் ஒரு படைப்பாளி சமரசம் செய்துகொள்ளும் பொழுதுதான் கிடைக்கிறது என்பது சோகம். இந்நிலை மாறவேண்டும். 

படைப்பாளி, இந்த உலகை வழிநடத்தும் திறமைகொண்டவன். அவன் இந்த உலகை, சமூகத்தை, உங்களை, என்னை பதிவுசெய்கிறான். அடுத்த பரம்பரைக்கும், வருங்கால சமூகத்திற்கு செய்தியை எடுத்துச்செல்கிறான். புதிய சமுகமே, உங்களுக்கு முன் இருந்த சமூகம் இப்படி இருந்தது என்று வெளிக்காட்டுகிறான். அது பாடமாகவும், அறிவுரையாகவும், பெருமையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கமுடியும்.

ஒரு படைப்பாளி, இறந்தபிறகும், காலம் கடந்தபிறகும் போற்றப்படுவதுதான் அவனுக்கு கிடைத்த விதியாக இருக்கலாம். ஆனால் மன்னர்களும், புரவலர்களும், அரசுகளும் படைப்பாளிகளை போற்றிய காலங்கள் கடந்து, அவன் இந்த சமூகத்தை நோக்கி நகர்ந்துவந்துவிட்டான். இதனால், மக்களில் தேவையறிந்து, கேட்பதை தரும் நிலைக்கு சமரசம் செய்துகொண்டிருக்கிறான். 

அந்த படைப்பாளியையும், படைப்பையும், பணத்துக்கு நிகராக மதிப்பளிக்கும் வரை சரியானதுதான். ஆனால், அந்த பணத்திற்காக தன் இசைவுக்கு ஏற்ப வாலாட்டு என்று நினைப்பது தவறான நிலை. இதற்கு அந்த படைப்பாளியே ஒருகாரணமாகவும் அமைந்துவிடுவது சோகம்.

படைப்பாளி கிழக்கே போனால் இந்த சமூகம் மேற்கே போகிறது.  இரண்டுபேரும் சந்திக்கும் காலம்வரும். காத்திருப்போம்.

--------------------

Thanks to image: Kelli McClintock @kelli_mcclintock