Sereveyo: Center for Self-realization by Vethathiriya Yoga 01 | CJ for You

Sereveyo: Center for Self-realization by Vethathiriya Yoga 01

Sereveyo: Center for Self-realization by Vethathiriya Yoga 01



நான் யார்? என்ற தன்னையறியும் சேவை வழங்க தயாராகிறேன் 01

பிறப்பின் நோக்கம்?!

இந்த உலகில் நான் பிறக்கும் பொழுது எனக்கு என்ன நோக்கம் இருந்தது என்று எனக்குத்தெரியாது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், 

என்னையறிவே நான் உலகில் வந்தேன்,
வந்தபின் எனைமறந்தேன் எந்தன்வினை மறந்தேன்’ 

என்று சொன்னது போல எனக்கு விளக்கமெல்லாம் கிடைக்கவில்லை. எனினும், ஏதோ என் முன்னோர்களின் விருப்பமும் ஆசியும் என்னை இயக்கியது எனலாம். பள்ளிக்காலங்களிலேயே வீட்டில் இருந்த, என் தாத்தாவின் நூல்களான, பழைய யோக நூல்கள், ஜாதக நூல்கள், பகவத்கீதை விளக்கம் இப்படி கொஞ்சமாக் புரட்டிப்பார்திருக்கிறேன். அகத்தியர், திருமூலர், இன்னும் பல சித்தர்கள், பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரும், சாரதாதேவி அம்மையாரும், விவேகாநந்தரும், காஞ்சி பெரியவரும் அப்போதே அறிமுகமாகிவிட்டார்கள். ரமண மகரிசியும் அவ்வாறே. உயர்நிலை பள்ளி படிக்கும்பொழுது ஓஷோ, சிவானந்தா, சின்மயானந்தா, பாபா, இன்னும் பலரும் கூடவே ஜக்கி வாசுதேவ் போன்ற சிலரும் பத்திரிக்கைகள் வாயிலாக அறிமுகமானார்கள். ஆனால் வேதாத்திரி மகரிஷி, எங்கள் பகுதியில் இருந்த நூலகம் வழியாக அறிமுகமானார்

தீட்சையும் பயணமும்

எனினும், உடனடியாக இவர்தான் பொருந்தமானவர் என்ற முடிவெல்லம் இல்லை. அவரின் சங்கற்பம் என்ற Autosuggestion என்னை கவர்ந்தது. என்றாலும் சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? என்ற கேள்வியும், நேரில் பார்த்தால் ஏதேனும் விளக்கம் கிடைக்குமா என்ற எண்ணமும் வந்தது. சென்னையில் இருக்கும் சங்கத்தில், எப்படி நான் போய் எப்படி இணைவது? என்வயதில் அங்கே ஏற்றுக்கொள்வார்களா? வீடும் விடாதே? என்ற குழப்பம் எழுந்தது. ஆனால், சில நாட்களுக்குள்ளாக என் பள்ளித்தோழன் வழியாக, இங்கேயே தவ மையம் இருக்கிறது என்று அறிந்து, இதை ஏன் முன்னமே என்னிடம் சொல்லவில்லை என்ற சிறிய கோபத்தோடு, என் பதினெட்டு வயதில் (ஆண்டு 1988), என் வீட்டில் பெற்றோர், உடன்பிறந்தோர், பிறரிடமோ கலந்து ஆலோசிக்காமல், கருத்து கேட்காமல், நானே சுயமாக முடிவெடுத்து, வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆக்கினை தீட்சையும் பெற்றுக் கொண்டேன்.

தொடர்ந்த மனவளக்கலை பயணத்தில், தவம், உடற்பயிற்சி, காயகல்பம், அகத்தாய்வு முடித்து ஆண்டு 1991ல் ஆழியாரில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் நடத்திய முன்று நாள் ஆசிரியர்/ அருள்நிதி கலந்து கொண்டு பட்டயம் பெற்றேன். நான் ஓவியன் என்பதால், அங்கேயே மகரிஷி அவர்களை வரைந்து, நிகழ்வின் இறுதியில் அவரிடம் ஆசீ வாங்கும் பொழுது, ஓவியத்தைக் காட்டி பாராட்டு பெற்றேன். எனது மன்றத்தில் துரியம் வரை தீட்சை வழங்கும் ஆசிரியராக சேவையில் இருந்தேன் எனினும், தன்னிலை விளக்கத்தை, உண்மையை உணராமல் பிறருக்கு அதைச் சொல்லித்தர எனக்கு விருப்பம் எழவில்லை. அது ஒரு குறையாக இருந்துகொண்டே இருந்தது. 1993ம் ஆண்டில், மகரிஷி அவர்களை மறுபடி சந்திக்கும் வாய்ப்பு வந்தது. இந்த முறை, நீர்வண்ண ஓவியம் வரைந்து, அவரிடமே காட்டி, பாராட்டையும் பெற்று, அவருடைய கையெழுத்தையும் அதில் பெற்றுக் கொண்டேன். இந்த விபரங்களை நானே பேசி குரல் பதிவாக, வேதாத்திரிய சானலில் தந்துள்ளேன்.

உண்மை விளக்கம்!

அதற்குப்பிறகு மன்றத்தில் இணைந்து சேவை தருவதில் எனக்கு பின்னடைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த நிலைகளான, மன்ற பொறுப்பாசிரியர், பேராசியர் என்ற நிலையில் எனக்கு ஆர்வமும் இல்லை. எதற்கு வந்தேனோ, அதை பெற்றுக்கொண்டேன். போதுமே? இனி நாம் தேடிக்கண்டடைய வேண்டியதுதான் என்ற முடிவில், மன்றத்திற்கு போகவில்லையே தவிர, என்னுடைய ஆர்வமும், முயற்சியும் விட்டுவிடவில்லை. பெரும்பாலும் துரியத்தில் நிலைத்திருப்பது தானாகவே நிகழும் அளவிற்கு, தவத்தில் நான் ஆர்வமானேன். 2001 ம் ஆண்டு எனக்கு திருமணம் நிகழ்ந்தது. அதன்பிறகே, திருச்சிராப்பள்ளியில் வேலை நிமித்தமாக குடிபுகுந்தேன். இங்கும் கூட நான் எந்த மன்றத்திலும் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் முழுதாக என்னை வேதாத்திரியத்தில் ஈடுபடும்படிச் செய்ய எனக்கு ஒர் விபத்து நடந்தது.

2016ல் எனது இருசக்கர வாகனத்தின் பயணிக்கையில், ஒரு டிப்பர் லாரியில் இடித்து கீழே விழுந்து மூர்ச்சையானேன். வலதுகை மேல் எலும்பு உடைந்து, கட்டுபோட்டு 45 நாள் வீட்டில் இருந்திட, எனக்கு வேதாத்திரி மகரிஷியே துணை என்றாகி விட்டது. அடிக்கடி அவர் வழங்கிய தத்துவ விளக்கத்தை கேட்பதும், ஞானமும் வாழ்வும் நூல் படிப்பதும், ஞானக்களஞ்சிய கவிகள் படிப்பதும் ஆராய்வதும் என் நேரத்தை எடுத்துக் கொண்டன. உடலும் நானும் நல்ல நிலைக்கு வந்தபிறகும் அதை இன்னும் அதிகமாக தொடர்ந்தேன். ஆராய்ந்தேன். 2017ம் ஆண்டு இறுதியில் வெட்டவெளி தத்துவம் புரிந்தது. மேலும் தொடர, 2018ல் இறையுணர்வு பெற்றேன். நிலைப்பேற்று நிலையிலிருந்து நிறைப்பேறு நிலை அடைந்தேன் எனலாம். நான் அடைந்தேன் என்பதை விடவும், அது என்னை ஏற்றுக்கொண்டது என்பதே சரியாகும்.

கிடைத்த மாற்றம்!

அந்த விளக்கம் நிலை தந்த ஊக்கத்தில், கவிதைகள் எனக்குள் எழுந்தன. எழுதிய கவிகள், வேதாத்திரி மகரிஷியின் கவிதைப்போலவே அமைந்ததைக் கண்டேன். இதை படித்த என் நண்பர்களும், பிறரும் கூட உறுதி செய்தார்கள். எனக்கு என்மேல் நம்பிக்கை வர, வேதாத்திரிய சானல் என்ற, YouTube காணொளி தளத்தை ஆரம்பித்து, பதிவுகள் செய்யலானேன். என் பள்ளித்தோழர், சக வேதாத்திரி பயணியும் என்னோடு இணைந்து கொண்டார். இன்றுவரை பதிவுகளை தொடர்கிறோம். மேலும் தினமும் வேதாத்திரி கவிதைகள் எழுதி அதை 7 தலைப்பிலான நூலாகவும் வெளியிட்டுவிட்டேன். இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவைகளும் நூலாக வெளி வரும்.

சேவையில்!

தினமும் YouTubeல் Shorts வழியாகவும் வேதாத்திரிய கருத்துக்களை தந்துகொண்டு, நிறைய அன்பர்களை, வேதாத்திரிய சானல் தொடர்பாளர்களாக பெற்றிருக்கிறேன். பெற்றுக்கொண்டும் வருகிறேன். பெரும்பாலும் வேதாத்திரி மகரிஷி சொன்னதை, வார்த்தை மாறாமல் அப்படியே சொல்லாமல், எனக்கு என்ன புரிந்ததோ, நான் என்ன அனுபவத்தை பெற்றேனோ அதைத்தான் என்னுடைய பதிவாக தருகிறேன். இதனால் நான் வேதாத்திரியத்தில் தனிப்பட்டு தெரிவதாக சிலர் சொல்லியுள்ளார்கள். உண்மையும் அதுவே. மேலும் நான் என்னுடைய விருப்பத்தின் பெயரில்தான், வேதாத்திரியத்தை பிறருக்கு கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளேன். ஆம் தனிமனிதனாகவும், சில நண்பர்களின் துணையோடும். விரைவில் தனியான அமைப்பு ஒன்றை உருவாக்கி உறுப்பினர்களை இணைக்கும் திட்டமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

விபத்தில் கிடைத்த முழுமை அனுபவம்!

இதற்கிடையில் முழுமையாக என்னை அறிந்துகொள்ளும் வாய்ப்பும், என்னில் இறை என்று வேதாத்திரி மகரிஷி எடுத்துக்காட்டிய நிகழ்வும், இன்னொரு விபத்து வழியாக, ஆம், 2023ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, மீண்டும் இருசக்கர வாகன பயணத்தில், பச்சை விளக்கு எரிந்த சிக்னலில் இருந்து கிளம்பும்பொழுது, யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனர் இடித்து என்னை தள்ளிவிட்டு விரைதோடி விட்டார் என்று அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள் என்று என் மைத்துனர் 2 நாள் கழித்து என்னிடம் சொன்னார்.

என்ன நடந்தது?. அந்த விபத்தில்,

மறுபடியும் நான் மூர்ச்சையானேன். அங்கிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து, என்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் அங்கே காத்திருக்கும் பொறுமை தாளாது, CSI மிஷன் மருத்துவமனைக்கு என் வீட்டார் அழைத்துவந்து விட்டார்கள். இங்கே என்னுடைய இடது காலர் எலும்பு உடைந்து சேரவேண்டிய கட்டாயமாகிவிட்டது. சுவாரஸ்யமாக, விபத்துக்குப் பிறகு, மயக்கம் தெளிந்த பிறகு  மருத்துவமனையில், 15 மணி நேரம் நான் எப்போதும் போல இருந்திருக்கிறேன், என் வீட்டாரை கைபேசி வழியாக மருத்துவமனைக்கு வரவழைத்ததும் நானே. ஆனால், இன்றுவரை அந்த 15 மணி நேரம் என்ன நிகழ்ந்தது என்பதும், எப்படி அந்த விபத்து நடந்தது என்றும் என் ஞாபக அடுக்குகளில் பதிவாகவில்லை, யோசித்தாலும் கிடைக்கவில்லை. அதுகுறித்து எனக்கு கவலையில்லை, இது எனக்கு மிக நல்ல ஒரு அனுபவம், என் அறிவுக்குக் கிடைத்த பாடமும் கூட, யாருக்கு கிடைக்கும் இப்படியான ஒரு சந்தர்ப்பம்? அந்த பாடமும் என் விளக்கமும், பின்னாளில் தனி கட்டுரையாக தர விரும்புகிறேன்

இது, இந்த விபத்து மார்ச் 4ம் தேதி நிகழ்ந்தது அல்லவா, 8ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீட்டிக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டில் அன்று நான் முடிவெடுத்தேன். வேதாத்திரியத்தை கொண்டுசெல்வதில் நேரடியான முறையும் வேண்டும் என்றும், அதற்கு இணையவழி வகுப்பும் தேவை என்றும் திட்டமிட்டேன். அதன்படியே நானே அதை வடிவமைத்து முழுமையும் செய்தேன்.

அந்த அறிவுப்பு இதுவே!

🔎 click the image and see it on big view



இந்த
1) இணைய வழி நேரடி கருத்தரங்கு, கேள்வி பதில் சேவையோடு,
2) வேதாத்திரிய சானலிலும், தன்னிலை விளக்கத்திற்கு உதவும் ஆய்வுகள் காணொளி சேவையும் உண்டு.

இந்த இரண்டு சேவைகளிலும் உங்களால் பெறப்படும் நன்கொடைகள், உங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வேதாத்திரிய ஆய்வுகளுக்கே பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நீண்ட நாட்களுக்கு உதவும் வகையில் தொடர்ச்சியான சேவை கிடைக்கும்! 

இதன்படி நான் தீட்சையும்,  மற்ற பயிற்சிகளும் வழங்குவதில்லை. ஆனால் கற்றுக்கொண்டு வந்தவர்களுக்கு, எப்படி தன்னை அறிவதில் உயரலாம்? எவ்வகையில் விழிப்புணர்வு பெறலாம்? இறையுணர்வை எப்படி உணரலாம்? பேரறறிவோடு எப்படி எப்போதும் கலந்திருக்கலாம்? என்ற விளக்கங்களை, சந்தேகங்களை தீர்க்கும் பதில்களை என் அனுபவ அறிவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘உணர்ந்து விட்டீர்கள் என்றால் அது உங்களை சும்மா இருக்க விடாது’ என்பதை நான் உண்மை என்றே கருதுகிறேன்.

இதன் தொடர்ச்சியாக, சில கேள்வி பதில்கள் பகுதி உண்டு. அதையும் படிக்க உங்கள் வரவேற்கிறேன். நன்றி. 

வாழ்க வளமுடன்.

-

Link for 2nd part: Sereveyo Part 2