Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 02
கேள்வி: இதெல்லாம் எங்களுக்கு அவசியமில்லை!
என் பதில்: சரி எனக்கும் உங்களுக்கு சொல்லித்தர வேண்டுமென்ற கட்டாயமில்லையே!
-
கேள்வி: இப்படியெல்லாம் வேதாத்திரியத்தை வித்து காசு பாக்கனுமா?
என் பதில்: என் அனுபவ அறிவை பகிர்கிறேன். நீங்கள் என்னிடம் பெற்றுக்கொள்ளும் வகையில் மதிப்பளிப்பதற்காகவே சிறிய அளவிலான நன்கொடை பெறுகிறேன். அந்தப்பணம் இணைய பயன்பாட்டுக்கும், மின்சாரத்திற்கும், வேதாத்திரிய ஆராய்ச்சியை உங்களுக்கே திருப்பி பகிரவும் உதவுமல்லவா?. சரி உங்களுக்கு எங்கே சும்மா கிடைக்கிறதோ அங்கே உயர்வுபெற வாழ்த்துகிறேன்.
-
கேள்வி: இதெல்லாம் ஒரு இறை அனுபவமா?
என் பதில்: இல்லையா? அப்படியானால் என்னை விட்டுவிடுங்கள்
-
கேள்வி: எதோ புலம்பல் போல இருக்கிறது. யோகத்திற்குரிய ஒன்றுமே இல்லை. வேதாத்திரியத்தில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது தெரியுமா?
என் பதில்: இருக்கிறது என்றால் அதையே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எனக்கு வேண்டாமே!
-
கேள்வி: நீங்கள் நன்றாக, துரியாதீத தவமும், அகத்தாய்வும் செய்து பயன்பெற வேண்டுகிறேன். வேதாத்திரியத்தின் உண்மை அறிய வாழ்த்துக்கள்.
என் பதில்: நல்லது, என் மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி!
-
கேள்வி: உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேதாத்திரியத்தை நீங்கள் பிறருக்கு தருவதற்கு?
என் பதில்: என் 34 (2023ல்) ஆண்டுகால வேதாத்திரிய அனுபவம் இருக்கிறது. நீங்கள் என்னை வாதத்திற்கு அழைக்க விரும்புகிறீர்களோ? வேதாத்திரி மகரிஷியிடமே சிலர் அவரை வாதத்திற்கு அழைத்தப்போது, அதில் அவர் சிக்கியதில்லை. எனக்கு தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால், என்னை விட்டுவிடுங்கள். நானும் வாதத்திற்கு தயாரில்லை. என்னிடம் யாரெனும் வந்தால் கூட நீங்கள் தடுத்துவிடலாம், சரியா? உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்.
-
கேள்வி: ஊருல இப்படித்தான் நிறைய பேரு கிளம்பிட்டாங்க!
என் பதில்: ஆமாம், வேதாத்திரியத்தை பிறருக்கு சொல்லித்தருவதை கடமையாகவே சிலர் வைத்திருக்கிறார்கள். நானெல்லாம் சும்மா!
-
கேள்வி: இதை நம்பி உங்க கிட்ட விளக்கம் பெற்றால் விளங்கின மாதிரிதான்!
என் பதில்: உங்களுக்குத் தனியாக தேடிவந்து சொல்லிதர வேண்டுமென்று எனக்கொன்றும் அக்கறை இல்லை. என்னை தேடி வருபவர்களுக்கு மட்டும் தரவிருக்கிறேன். என்னிடம் வருவது யார் என்று அருட்பேராற்றல் பார்த்துக்கொள்ளும்! நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை!
-
கேள்வி: ஹூம் நல்லா ஏமாத்த ஆரம்பிச்சுட்டாங்கய்யா!
என் பதில்: உங்கள் அனுபவத்தில் அப்படியான நபர்களிடம் சிக்கி சீரழிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்யமுடியும்? என்னிடம் யாரும் ஏமாற மாட்டார்கள். ஒருவேளை ஏமாற்றப்பட்டால் உங்களிடம் வந்துதான் முறையிடுவார்கள்!
-
கேள்வி: இப்படி பணம் செலுத்தி உங்க கிட்ட தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்லை!
என் பதில்: நான் ஓவியன், அதை தொழிலாக கொண்டவன். என்னுடை 60 நிமிடங்களின் மதிப்பு ரூபாய் 2000 (INR) ஆகும். ஆனால், இங்கே வேதாத்திரியத்தை தருவதை என் விருப்பமாக மட்டுமே கொண்டுள்ளேன். சும்மா கொடுத்தால், அதை உடனே தூரப்போட்டு விடுவீர்கள், உங்களுக்கு ஒரு அக்கறையும் எழாது. இது சும்மா வந்ததுதானே என்ற எண்ணம் தான் உங்களுக்கு இருக்கும். எனவே உங்களுக்கு அவசிமில்லை என்றால், எதற்கு என்னிடம் வந்து இப்படி சொல்லுகிறீர்கள்?
-
கேள்வி: இப்படியெல்லாம் பணத்திற்கு வேதாத்திரியத்தை பரப்பச் சொல்லி வேதாத்திரி மகரிஷி சொன்னாரோ?
என் பதில்: மனிதனுக்கு ஐந்து கடமைகள் இருப்பதாக, வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளார். அதில் உழைப்பதும் பொருளீட்டுவதும், சும்மா இருந்து யாருக்கும் பாரமில்லாமல் வாழவேண்டுமென்பதும் உண்டு. நான் என் வேதாத்திரிய அனுபவத்தை, நான் கற்ற தொழில்நுட்ப அறிவால், உழைத்து உங்களுக்கு தருகிறேன். மேலும் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொள்ள பல்லாயிரம் அன்பர்கள் இருந்தனர். எனக்கு அப்படி யாருமே இல்லையே? நீங்கள் என்னை, என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறீர்களா? நான் சும்மா தருகிறேன். சம்மதமா?!
-
கேள்வி: உங்கள் வாழ்க்கையை நீங்கள் தானே பார்க்கனும், நாங்க எதுக்கு உங்களை தாங்கனும்?!
என் பதில்: சும்மா தந்தா என்ன என்ற கேள்விக்கு பதிலாகத்தான் சொன்னேனே தவிர, என்னை தாங்குங்கள் என்று வேண்டவில்லை. யாரையும் எதிர்பார்த்தும் வேதாத்திரியர் வாழ்வதில்லை. என் உழைப்பிற்கு சிறிய கூலியே இது!
-
கேள்வி: எங்க யோகசாதனை முன்னேற்றத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!
என் பதில்: அருமை, அதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் விரும்பினார். உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்தி மகிழ்கிறேன்.
-
கேள்வி: உங்களுக்கு பணம் கிடைத்துவிடும். இதுனால எங்களுக்கு என்ன லாபம்?
என் பதில்: லாபம் உத்திரவாதம் எல்லாம் தீட்சை பெற்றுக்கொள்ளும் பொழுது கேட்டீர்களா? இது அப்படியல்ல. உங்கள் வாழ்நாளுக்குள் உண்மை அறிய, நான் அறிந்த வேதாத்திரியத்தின் வழியாக, என்னுடைய பணி ஒரு தூண்டுகோல். வேறொன்றுமில்லை. பணத்தை மட்டுமே பார்க்கும் உங்கள் வேதாத்திரிய பயணம் தொடரட்டும்!
-
கேள்வி: எப்படியோ உங்க பொழைப்பும் கொஞ்ச நாள் நல்லா ஓடும். அனுபவிங்க!
என் பதில்: எனக்கு இது அவசியமே இல்லைதான். ஆனால் தெளிந்த அறிவை தருவது, தானாக எழும் ஆர்வம். வேதாத்திரி மகரிஷி, அறிந்த உண்மை உங்களை, விடாது இயக்கும் என்று சொல்லுகிறார். அதுபோலவே, இயற்கை என்னை செலுத்துகிறது. அவனும், அவளும் நான் தானே? அவர்களுக்கு இதை பகிர மாட்டாயா? அவர்கள் துன்பப்படுவதை வேடிக்கை பார்க்கிறாயா? என்று என்னை கேள்வி கேட்கிறது. நான் என்ன செய்யட்டும்? உண்மையிலேயே, உண்மை விளக்கத்தில் சிக்கித்தவிப்பவருக்கு மட்டுமே உதவ விரும்புகிறேன்.
-
கேள்வி: இந்த பணத்தை நாங்கள் ஆழியாறுக்கே அனுப்பி விடுகிறோமே? உங்களுக்கு ஏன் தரவேண்டும்?
என் பதில்: மிகச்சரி, நானும் என் அனுபவத்தை ஆழியாறுக்கே அனுப்பி விடுகிறேனே! எனக்கும் நிம்மதிதான்.
-
கேள்வி: நீங்க சொல்லிக்குடுக்காம போய்ட்டா எங்களுக்கு கிடைக்காம போய்டுமா? நல்ல கதைங்க!
என் பதில்: இறை அப்படியாரையும் கைவிட்டு விடுவதில்லைதான். எப்படியாவது உங்களுக்கு அந்த அனுபவத்தை தரும். வேதாத்திரி மகரிஷி எனக்கு காட்டிய பாதையை, உங்களுக்கு காட்டி, இந்த வழியில் சென்றால் உங்களுக்கு உதவும் என்கிறேன். அடபோய்யா, நானே போய்க்கிறேன் என்கிறீர்கள். சரி பயணியுங்கள், தன்னம்பிக்கையோடு!
-
கேள்வி: ஆஹா உடனே இது உங்க கர்மா, குருமான்னு ஆரம்பிச்சுருவீங்களே?
என் பதில்: உங்கள் கிண்டலுக்கு இங்கே இடமில்லை. அது எப்படிவேண்டுமானலும் இருக்கட்டும். உண்மை குறித்து உங்களுக்கே கவலை இல்லை என்கிறபோது எனக்கேன் கவலை.
-
கேள்வி: பாமர மக்களின் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி தத்துவத்திற்கு காசு கேட்பது தவறு என தெரியவில்லையா?
என் பதில்: என் உழைப்பை, அனுபவ அறிவை, பகிர்வுகளை சும்மா பெற உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?! அப்படி தருபவர்களை ஊக்கப்படுத்தவும் மாட்டீர்களா? என்னிடம் கேட்ட இதே கேள்வியை எல்லாபக்கமும் நீங்கள் கேட்க தயாரா?
-
கேள்வி: கடைசியா என்ன சொல்ல வர்றீங்க?
என் பதில்: யாருக்கு விருப்பமோ அவர்களுக்கு நான் உதவுவேன். அந்த உதவிக்கு ஒரு குரு சீடன் என்ற உறவை காப்பது போலத்தான் இந்த நன்கொடை. மற்றவர்களை நான் சிரமப்படுத்த விரும்பவில்லை.
-
கேள்வி: ஒருவேளை யாருமே வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
என் பதில்: எனக்கொன்றும் உடனடியாக யாரையும் தன்னையறிதலுக்கு உயர்த்த வேண்டும் என்ற நிலை இல்லை. அந்த இயற்கை அமைப்பை, நீங்களோ, நானோ வேகப்படுத்தவும் முடியாது. ஆனால், பிறவிக்கடன் தீர்க்காமல், தன்னை அறியாமல், எது இந்த இயற்கை என்பதை அறியாமல், இந்த உலகைவிட்டு போகும் நீங்கள்தான் கவலைப்படவேண்டும். தன்னிலையறிந்த ஒருவருக்கு ஒரு இழப்பும் இல்லை. உங்களுக்கு இறையாற்றல் இன்னொரு வாய்ப்பு உங்கள், மகன், மகள் வழியாக தரக்கூடும். எனவே உங்களுக்கும் கவலையில்லை!
-
கேள்வி: கடைசியா ஒரு கேள்வி. சும்மா கிடைக்குமா?
என் பதில்: இல்லை!
-
அன்பர்களே, இத்தனை கேள்விகளில் ஏதேனும் ஒன்றாவது உங்கள் கேள்வியாக இருக்கக்கூடும். இத்தனை பதில்கள் சொல்லியும், உங்களுக்கு மீண்டும் ஏதேனும் கேள்விகள் எழுமானால், அதை பின்னூட்டத்தில் கேட்கலாம். அதற்கும் பதில் தர தயாராக உள்ளேன்.
அடுத்தும் ஒரு கேள்வியும் பதிலும் பதிவு உண்டு, அதையும் படித்துப்பார்க்க உங்களை வரவேற்கிறேன்.
வாழ்க வளமுடன்.
Link for 3rd part: Sereveyo Part3