Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 03
இறுதிக்கேள்வியும் அதற்கான பதிலும்
-
கேள்வி: சரி, ஏன் பணம் வாங்கித்தான் ஆகவேண்டுமா?
என் பதில்: இப்பொழுதான் நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கும் நிலைக்கு வந்திருக்கிறீர்கள். நன்றி.
ஆம், நன்கொடை வழங்கிய பிறகு என்று அமைத்தால்தான், ஆர்வக்கோளாறு மிக்க சிலரை கட்டுப்படுத்த முடியும். முட்டிமோதும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியும். சும்மா தானே கிடைக்கிறது, சும்மாதானே தருகிறார், நாம் கேட்டால் என்ன? என்று, தானாக சிந்தித்து அறிந்துகொள்ளக்கூடிய விசயத்திற்குக்கூட என்னுடைய நேரத்தை வீணடிப்பார்கள். தீடீரெனெ எல்லாமே எனக்கு சொல் என்று மல்லுக்கு நிற்பார்கள். சொன்னாலும், மறுத்து மறுத்து மறுபடி அடுத்தடுத்த கேள்விக்குச் செல்வார்கள். முழுநாள் எடுத்துக்கொண்டு, நன்றாக விளக்கமளித்தாலும் கூட, கொஞ்சமும் புரிந்து கொள்ள மறுப்பார்கள். பிறகு என்னையே குறை சொல்லுவார்கள். ஏதோ நான் அவர்களிடம் பாடம் படிப்பதுபோல நிலைமை மாறிவிடும்.
மேலும் தினமும் வந்து நிற்பார்கள், என் சுதந்திரத்தை அது கெடுக்கும். நீதானே சேவை செய்கிறேன் என்றாய்? இதோ இதற்கு விளக்கம் சொல் என்று, கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு கேள்வியை என்னிடம் கேட்பார்கள். பிறகு சொல்லுகிறேன் என்று தவிர்த்தாலும், என்னை குறை சொல்லுவார்கள். இதற்கு நீங்கள் சொன்னபதில் சரியில்லை. உண்மையிலேயே இது இப்படி இருக்கிறது என்று, ஏற்கனவே ஒரு பதிலை வைத்துக்கொண்டு, அதுபோல நான் சொல்லுகிறேனா என்று என்னையே பரிசோதனை செய்வார்கள்.
உங்களுக்கே இந்த புரிதல் இல்லை, இதுலே நீங்க எனக்கு வழி சொல்றீங்களோ? என்று என்னையே கிண்டலடித்துவிட்டு கிளம்புவார்கள். அதை ஊர்முழுக்க பேசுவதுப்போல, சமூக வலைத்தளங்களில் எழுதி போட்டுவிட்டு, லைக்குகளை அள்ளுவார்கள். உண்மையாக இப்படியான ஆர்வக்கோளறு ஆசாமிகளை, அடிப்படை பயிற்சியில் கூட முழுமைபெறாத அன்பர்களை, ஏதோ நானும் வேதாத்திரிய அன்பர் என்று சொல்லிக்கொள்பவர்களை இதன் மூலமாக தவிர்க்கலாமே! ஆனாலும் அவர்கள் வருவார்கள் அதை நான்மட்டும் தடுக்கவும் முடியாதுதான்!
தன்னையறிதலில் யாருக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ளதோ அவர்கள் வரட்டும். இறையுணர்வு பெறுவதில் யாருக்கு அக்கறை உள்ளதோ அவர்கள் வரட்டும். வேதாத்திரிய விளக்கத்தில் யாருக்கு உண்மையான விளக்கம் தேவைப்படுகிறதோ அவர்கள் வரட்டும். யாருடைய மனதில், இவரிடம் கேட்டால் சில உண்மைகள் புரியும் என்று நம்புகிறார்களோ அவர்கள் வரட்டும். அவர்களுக்கு நான் உதவவே காத்திருக்கிறேன். என்னுடைய நோக்கமும் அதுவே!
இப்பொழுது நாம் போற்றி வணங்கிக் கொண்டிருக்கும் நம் குருமகான் வேதாத்திரி மகரிஷியும், தன் ஆரம்ப காலத்தில் இப்படியான, கசப்பான அனுபவங்களை பெற்றார். ஆனால் அது நிலைக்கவில்லை. பொதுவாகவே உலகில் மக்களை உயர்த்திட விரும்பும் ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவம் இது. நான் அந்தளவுக்கெல்லாம் இல்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால், வேதாத்திரிய அன்பர்களின் திண்டாட்டம் எனக்கு உறுத்துகிறது! அதனால்தான் இந்தசேவையை நான் தர விரும்பினேன்.
வேதாத்திரிய பாடங்கள் மிக அருமையாக எல்லோருக்கும் கிடைத்துவிடுகின்றன. சான்றிதழும், பட்டயமும் இன்னும் பலப்பலவும் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதற்குப்பிறகு அவர்கள் கற்ற வேதாத்திரியம் அவ்வளவுதான். பெரும்பாலோர், ஆசிரியராக, பேராசியராக இன்னும் வருகின்ற ஆரம்ப சாதகருக்கு சொல்லித்தர ஆர்வமாகிவிடுகிறார்கள். ஆனால், ஏற்கனவே கற்றுக்கொண்ட, வேதாத்திரியர்களுக்கு, வேதாத்திரியத்தில் முன்னேற துடிப்பவர்களுக்கு வழி என்ன? இந்தக் கேள்விதான் என் முன் நின்றது. அதுவே என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எனலாம். இதற்கு மேலும் என்ன சொல்ல வேண்டும்?!
இன்னமும் உலகியல் ரீதியாக, விளக்கமாக சொல்லுவதென்றால், நீங்கள் ஏதேனும் ஒரு வேலைக்கு செல்லுவதாக இருந்தால், உடனே உங்களை தேர்ந்தெடுத்து விட மாட்டார்கள். உங்களை சோதிப்பார்கள். சரியான நபரா? தகுதி உள்ளவரா? சொன்னால் கேட்பாரா? கருத்தை ஏற்றுக்கொள்வாரா? வாக்குவாதம் செய்யக்கூடியவரா? உண்மையிலேயே இந்த வேலையில் ஆர்வம் உள்ளவரா? எவ்வளவு காலம் நீடிப்பார்? அக்கறை உள்ளவரா? வழக்க பழக்கங்கள் எப்படி இருக்கிறது? மற்றவர்களோடு எப்படி பழகுவார்? மரியாதை அறிந்தவரா? அசட்டை செய்பவரா? முட்டாள்தனங்களை கொண்டவரா? தன்னை நம்புபவரா? அடுத்தவர்களை மதிப்பவரா? அவர்களுடைய கருத்தை ஏற்பவரா? முடிவுக்காக சிந்திப்பாரா? ஆலோசனைகளை கேட்டு ஏற்பவரா? தன்முடிவில் நிற்பவரா? இன்னும் பலப்பல. இந்த கேள்விக்கெல்லாம் விடை அறிந்த பிறகுதான், உங்களை அந்த நிறுவனத்தில் அமர்த்திக் கொள்வார்கள். இதெல்லாம் ஒரு வடிகட்டல்தான். அப்படியாகவே ஒரு வடிகட்டலை நான் இங்கே அமைக்கிறேன். இதிலும் கூட சிலர் வருவார்கள்தான். அவர்களின் நோக்கமறிந்து, விளக்கமளிக்கவும் என்னை தயார் செய்துள்ளேன் என்பதே உண்மை. இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த நன்கொடை என்னை ஊக்கப்படுத்தும், இன்னும்பல வேதாத்திரிய ஆய்வுகளை செய்யவும், அதை உங்களுக்கே பகிரவும் துணையாக நிற்கும்!
-
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!
Link for 4th part: Sereveyo Part4