Name changes, self-description post by Sugumarje | CJ

Name changes, self-description post by Sugumarje

Name changes, self-description post by Sugumarje


sugumarje


ஒத்துபோகிற தன்மை!

ஒரு கேரிகேச்சர் என்ற கேலிச்சித்திரம் எழுதுபவனாக இருந்தவன், தன்னையறியும் பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் உந்துதலில் இதை பிறருக்கும் சொல்லலாம் என்ற கருத்தில் 2018 உருவானதுதான், வேதாத்திரிய சானல். தொடங்கும் பொழுது அதற்கு சூட்டப்பட்ட பெயர், Coincide Channel, இதன் நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு ‘ஒத்துப்போகிற தன்மை’ என்பதாகும், இந்த பெயரிலேயே, என்னுடைய உண்மை விளக்கத்தை சொல்ல நினைத்தேன். அதாவது மனிதனின் மனமும், இறைநிலையும் ஒத்துப்போகிற தன்மையில் இருக்கிறது என்பதே ஆகும். இதன் மூலக்கருத்து ‘அலையலையாய் இயங்கும் மனதின் அடித்தளமே நிலைபொருள், அது தெய்வம்’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதாகும்.


வேதாத்திரிய சானல்

என் பள்ளித்தோழர், சக வேதாத்திரிய பயணி, இந்த YouTube பெயரை கேட்டுவிட்டு, இப்படியெல்லாம் பெயர்வைத்தால், வேதாத்திரிய அன்பர்களுக்கு பயன்படுவதில் சிரமம் இருக்கும், பெயரை மாற்றுக  என்றார். உடனடியாக ‘வேதாத்திரிய சானல்’என்று பெயர் மாற்றம் செயப்பட்டது. அதுதான் இன்னமும் தொடர்கிறது, பதிவுகளையும் வழங்கி வருகிறோம்.

நீண்ட பயணம்

நான் யார்? என்று தன்னையறிதல் என்பது நீண்டபயணம் தான். அதற்கு முயற்சி, ஆர்வம், சூழ்நிலை, செயல்பாடு என்று எல்லாமே கூடி வர வேண்டும். முக்கியமாக நம் கர்மா என்ற வினைப்பதிவுகளின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ‘என்ன வாழ்வதை விட்டுவிட்டு தன்னை அறிகிறயா, விடுவேனா உன்னை!’ என்று பல குழப்பத்தை ஏற்படுத்தும். அடிக்கிற காற்றில் பறக்கிற சருகு போல நாம் இருந்துவிட வேண்டியது அவசியம். இதை தாங்கிக்கொள்ள முடியாமலும், இதெல்லம் நமக்கு அவசியமா? குறுக்கு கேள்வியாலும்தான், நான் யார்? தன்னையறிதலை கைவிட்டு விடுகிறார்கள். எனக்கு என் முன்னோர்களின் ஆசி இருந்ததாக கருதுகிறேன்.

தன்னிலை விளக்கம்

என்னுடைய வாழ்வில் என்னை / என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆண்டு 2016 என்று சொல்லலாம். 2017 கிட்டதட்ட தன்னையறிதலுக்கு தகுதியாகிவிட்டேன். 2018 ம் ஆண்டு, எனக்குள் இறையாற்றல், அறிவாகவும் இருந்து செயல்படுகிறது என்பதையும், வெளியாக இருக்கிற இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் தான் நான் இயங்கிக்கொண்டும் இருக்கிறேன், அதே இறையாற்றலினால்தான் நான் உலகியல் வாழ்வில் உணர்வைப் பெறும், இறையாற்றலையே உணரக்கூடிய  மனமாகவும் இருக்கிறேன் என்பதை உணர்வாக பெற்றேன். இதோ, என்னுடய வேதாத்திரிய பயணம் விபரம்...

18 வயதில் தீட்சை (1988 ம் ஆண்டு) 

21 வயதில் அருள்நிதி (1991 ம் ஆண்டு)

47 வயதில் தன்னையறிதல் (2017 ம் ஆண்டு)

53 வயதில் நிறைபேற்று நிலை (2023 ம் ஆண்டு)

மொத்தமாக 34 ஆண்டுகள் ஆகும்.

நான் யார்?

இந்த விளக்கங்களை, அதாவது, நான் இந்த வேதாத்திரியத்தில் பெற்ற அனுபவங்களை, என்னுடைய எழுத்திலும், குரலிலும் பதிந்து வெளியிட்டுள்ளேன். ஏன் அப்படி ஒரு திட்டமும் ஆர்வமும் எழுந்தது என்றால்? வேதாத்திரி மகரிஷி சொன்னது போல, ‘அறிந்த உண்மை நம்மை சும்மா விடாது, அதை எப்படியாவது பிறரிடம் சொல்லி, அவர்களும் அந்நிலை பெற துணையாக நிற்கும்’ என்பதே உண்மை. ஆனால், இந்த நவீன காலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்குப்பிறகு, தகவல் தொடர்பாகவும், கருத்து பரிமாற்றமாகவும், யுடுயூப் (YouTube) மாறிவிட்ட பிறகு, எனக்கும் அதுவே சரியாக தோன்றியது. 2009 ம் ஆண்டில் இருந்து YouTube உறுப்பினராக இருந்தாலும் கூட, நம் வேதாத்திரியம் 2018ம் ஆண்டுதான் பகிர ஆரம்பித்தேன்.அதுவும் சந்தேகமற, உண்மை அறிந்த பிறகே!. ஆனால், கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக, இன்றுவரை 729 காணொளிகள் பதிவேற்றிய நிலையிலும், என்னைவிட என்பகிர்வுகளை புரிந்து கொண்டு, வேதாத்திரிய சானலை பகிர்ந்துள்ள 18200 அன்பர்களைக் கடந்தும் கூட, சிலர்  என்னை நீ யார்? என்றுதான் கேட்கத்தான் செய்கிறார்கள்.

 1) ஒரு செய்தியை, விளக்கத்தை, பதிவை, கட்டுரையை, காணொளியை, குரல்பதிவை தருவது யார்?

2) அவருடைய அனுபவம் என்ன?

3) எப்போது இருந்து இந்த சேவையை பகிர்ந்தளிக்கிறார்?

4) அவருடைய சிறப்பு ஏதேனும் உள்ளதா?

5) இதற்குமுன் என்ன செய்தார்?

6) அவர் பின்புலம் என்ன? என்றெல்லாம் ஆராய்வதே இல்லை. பதிவாக செய்திருந்தாலும் அதை பார்ப்பதில்லை, படிப்பதில்லை.

வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை காட்டி,
அவரிடமே கையெழுத்து வாங்கிய பொழுது (1993 ம் ஆண்டு)


நேற்று முளைத்த காளான்

கடந்த முப்பத்திநான்கு ஆண்டுகளாக வேதாத்திரிய பயணத்தில், என் அனுபத்தில், தன்னிலை விளக்கம் பெற்றபிறகு, என்னை அவர்கள் பார்க்கும் பார்வையும், பதிலுரைக்கும் முறையும், நேற்று முளைத்த காளான் என்றுதான் இருக்கிறது. ஒரு உண்மை சொல்லட்டுமா? ஓவ்வொரு மனிதனும் முகம்பார்க்கும் கண்ணாடி மாதிரி. ஒருவர் தன் அனுபத்தை வைத்துத்தான், அடுத்தவர் எப்படிப்பட்டவர் என்று பார்ப்பார். அதில் தன் முகம்தான் அதில் தெரியும். பழகிப்பார்க்கும் பொழுதுதான், ‘அடடா இவர் நம்மளை மாதிரி இல்லையே, நாம நினைச்ச மாதிரியும் இல்லையே’ என்று தோன்றும். 

சேவையில் எழுந்த தயக்கம்

வேதாத்திரி மகரிஷி அவர்களின் நேரடியான வகுப்பில் கலந்து அருள்நிதி ஆகிவிட்ட பிறகு, மன்றத்தில் சேவையில் இருந்தாலும் கூட, நான் யார்? என்று தன்னையறியாமல், இறையுணர்வு பெறாமல், சுத்தவெளி தத்துவம் உணர்வாக பெறாமல் எனக்கு சேவையில் ஈடுபட முடியவில்லை. லட்டை சுவைத்தால் தானே லட்டு எப்படி இருக்கும் என்று பிறருக்கு சொல்லமுடியும்? லட்டு குறித்து பிறர் சொன்னதையும், படித்ததையும் அடுத்தவருக்கு எப்படி சொல்வது என்று எனக்குள் தயக்கம். அதனால் நானாகவே மன்ற செயல்பாடுகளில் விடுவித்துக்கொண்டேன்.

அதன்பிறகு எந்த ஒரு மன்றத்தில் நான் சேவையில் இல்லை. ஆனாலும் வேதாத்திரியத்தை நானும் விடவில்லை, அதுவும் என்னை விடவில்லை. இதனால் எனக்கு மன்றம் சார்ந்த சேவையில் எந்த நிலைபாடும் பெறவில்லை.அதாவது, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும், பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும் எனக்கு அக்கறையில்லை.

by Sugumarje for Caricaturelives

by Sugumarje for personal collection


சுகுமார்ஜெ (Sugumarje)

கடந்த 1996 ம் ஆண்டு முதல் என்னோடு கணிணி இணைந்து கொண்டது, அந்த கணிணி ஆர்வத்தின் வழியாகவே, வேலைகளிலும் ஆர்வம் வர, 2003 ம் ஆண்டு மல்டிமீடியா எனும் வேலையில் தொடர்ந்து வருகிறேன். 2007 ம் ஆண்டு நிறுவனம் சாராத, தனி நபர் சேவையாக, CARICATURELIVES என்ற கேரிகேச்சர் ஓவிய நிறுவனம் நடத்தி வருகிறேன். இப்போதும் சில ஓவிய வேலைகள் உண்டு. இந்த வேலை நிறுவனத்தின் வழியாக என்பெயர் சுகுமார்ஜெ (Sugumarje). இன்றும் கூட இணையத்தில் தேடினால் என்னைபற்றி தெரிந்து கொள்ளமுடியும். ஆனால், வேதாத்திரிய சானலை பொறுத்தவரை, அதற்கு தகுதியுள்ள பெயராக வைப்போம் என்றுதான், அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்று வைத்துக்கொண்டேன். ஏதோ கொஞ்சம் தெரிந்தவர், அறிந்தவர் சொல்லுகிறாரே என்று நம்புவார்கள் அல்லவா? அதனால்தான்!

அருள்நிதி என்பது முழுமையை குறிக்கும் சொல். தகுதி இல்லாவிட்டாலும், நமக்கு அது கிடைத்துவிடுகிறது. ஒரு பிச்சைக்காரர் தன் குழந்தையை ‘ராஜா’ என்று கொஞ்சுவது போல. யார் கண்டார்கள், அக்குழந்தை நிஜமாகவே ராஜா ஆகலாம் அல்லவா? அதுபோல ‘நீ உன் தகுதியில் நின்றிரு’ என்பதற்காகத்தான் ‘அருள்நிதி’ என்ற பட்டம் கிடைக்கிறது. ‘நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்க.

பெயரில் குழப்பம்?

ஆனால் என்ன நிகழ்ந்தது என்றால், அருள்நிதி என்றுதானே இருக்கிறது, எனவே பதிவுகளை பார்ப்போர், என்னடா இது அருள்நிதி என்று பெயருக்கு முன்னால் போட்டிருக்கு? இவ்வளவு பேசுகிறானே? எல்லாம் தெரிந்த்து போலவேறு பேசுகிறான்? இந்த ஆண்டுதான் அருள்நிதி ஆனாலும் ஆகிருப்பான். இப்பவே இவ்வளோ திமிறா? என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் அடிக்கடி நம் வேதாத்திரிய சேனலில், என்மீது வன்ம கருத்துக்கள் பதியப்பட்டன சிலரால். நான், என்கருத்தை, உண்மையை, அதை விளக்கமாக சொல்லியும், பெரிய இவனா நீ?  நீ என்ன மகரிஷியா? அவரை வைத்து பிழைக்கிறாயே? என்ற அளவில் கேட்டுவிட்டனர். அருள்நிதிக்கு பதிலாக, துணை பேராசிரியர், பேராசிரியர், முதுநிலை பேராசிரியர் என்று போட்டிருந்தால், பேசாமல் போயிருப்பார்களோ என்னவோ?! வாட்சாப் குழுவிலும் ‘உனக்கு ரொம்ப தெரியுமோ?’ என்று யாரேனும் கேட்பதுண்டு.

ஆனால் நான் எதையுமே பிரச்சனையாக கருதாமல், எது உண்மையோ, எது விளக்கமோ, எதை புரியவைக்க வேண்டுமோ அதில் நான் தவறுவதில்லை, பூசிமொழுகி பேசும் கலை எனக்கு வரவில்லை. ஆனாலும் நம் வேதாத்திரிய இரண்டொழுக்க பண்பாட்டின் படி, மனதுக்கு துன்பம் தருவதில்லை (அவர்கள் எனக்கு கொடுத்தாலும் கூட) அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே அடுத்தடுத்த கேள்விவை வாக்குவாதமாக மாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. எனவேதான் வேதாத்திரிய சானலில், பின்னூட்டமிடுவது முடக்கப்பட்டது.  இங்கேயும் ஒரு உண்மை சொல்லட்டுமா? பின்னூட்டம் வழியாக, பெரும்பாலோர் தான் என்ற அகங்காரத்தைத்தான் பதிவு செய்கிறார்கள்.

இனி என் பெயர்...

அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்ற பெயருக்குப் பதிலாக, சுகுமார்ஜெ (Sugumarje) என்றே செயல்பட முடிவு செய்துள்ளேன். பெயரில் மதிப்பை தூக்கி அலைவது எனக்கு தேவையில்லை என்று கருதுகிறேன். அந்த விளக்கத்திற்காகவே, இந்த மிக நீண்ட கட்டுரை.

ஒரு பூ மலர்கிறது, வாசனை பரப்புகிறது. நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும், பயன்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், இழப்பு அந்த பூவுக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே?! 

'ஐயா, இதென்ன கதை? நாளைக்கும் பூ பூக்கும் தானே?!’

’ஆமாம், நாளைக்கும் பூக்கும், மறுநாளும் பூக்கும், அடுத்த மாதமும், ஆண்டும் பூக்கும். ஆனால் அதே பூ பூப்பதில்லையே; 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!