Let us remember our Guru Vethathiri Maharshi | CJ

Let us remember our Guru Vethathiri Maharshi

Let us remember our Guru Vethathiri Maharshi



வேதாத்திரி மகரிஷியை நினைவு கூர்வோம்.

கட்டுரையின் நோக்கம்

தனிமனித வாழ்வு என்ற குறுகிய வட்டத்திலேயே வாழ்ந்து அதிலேயே சுகம்கண்டு மடிந்தும் போகும் சராசரி மனிதனாக, இந்த உலகவாழ்வை முடிக்காமல், தான் தன்னையறிந்து, இறையுண்மையை உணர்ந்து, தன்னிலே இறை என்ற நிலை வழியாக வாழ்ந்து, அதை பிறருக்கும் கற்றுக்கொடுத்து, வருங்கால சந்ததியினருக்கும் சேரும்வகையில் பாடங்களாகவும் மாற்றி, இந்த உலகமெல்லாம் சிறப்புற்று, இன்புற்று வாழவே, தன் எண்ணம், சொல், செயல் இவற்றால் நிரப்பிக்கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின், இயல்பு என்னை பூரிப்படைய வைக்கிறது. ‘இப்படியான ஒரு ஞானி, எனக்கு ஆசானாக அமைந்தாரே’ என்ற உன்னதமான வியப்பில் எழுதப்பட்டதாகும்!

நான் கிளம்புகிறேன்

வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய 96ம் வயது நிறைந்து, ஆண்டு 2006ல் மார்ச் 28ம் நாள் அன்று தன்னை வான் காந்தத்தில் நிறைத்துக்கொண்டார். அதற்கு முன்னதாக அவர், ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நிகழ்ந்த, பேராசியர்களுக்கான கூட்டங்களில், நிர்வாகிகள், உறுப்பினர்களைப் பார்த்து 'நான் வந்த வேலை முடிந்தது, நான் கிளம்புகிறேன், என்று சொன்னால் இவங்கெல்லாம் பதறுகிறார்கள். அதான் எல்லாம் பார்த்துக்கொள்ள நீங்கள் வந்துவிட்டீர்களே? போதும் நிறைவாக இருக்கிறேன். பொதுவாக ஒரு மனிதன், நீண்ட நாள் வாழ்வது அவசியமில்லை, அப்படி வாழந்தால், இன்னொருவருக்கு பாரமாக இருக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின் அன்பால் ஈர்ப்பான, அன்பர்களின் அழுத்தமான கோரிக்கையாலும் விருப்பத்தாலும்தான், அவர், கோவையில் உள்ள KG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் தன் உடல்வழி வந்த பயணத்தை, போதும் என்றே நிறைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜீவ சமாதி எதற்காக?

சிலர், நேரடியாகவே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். 

‘உங்க சுவாமிஜி எங்கேயா ஜீவ சமாதியானார்? மருத்துவமனையில் தானே இறந்தார்?’

சித்தர்கள் கால பழமையிலேயே சிக்கித்தவிக்கும், இந்த அரைகுறை ஆசாமிகளுக்கு எப்படி புரியவைப்பது என்றே நான் கவலைப்படுவேன். அந்தக்காலத்தில், மக்களின் வாழ்க்கை முறை வேறு. வாழ்வுக்காக எண்ணும் எழுத்தும், தொழிலும் தங்களுக்குள்ளாகவே, இல்லம்வழி கல்வியாக கற்ற நிலையில், அவர்களுக்கு எப்படி சொன்னாலும் விளங்கவில்லை, அதில் ஆர்வம் கொள்ளவில்லை. மேலும் அம்மக்கள் யோகத்தில் இறங்காமல் இருப்பதால், இறைவிளக்க தத்துவங்கள் ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் அந்தக்காலத்தில்தான் அப்படியான மக்கள் என்றாலும்கூட, இப்போது இந்த அணு, வானியல், விஞ்ஞான காலத்தில் மட்டும் இவர்களுக்கு, இப்போதுள்ள மக்களுக்கு புரிந்துவிட்டதா என்ன? என்றுதானே தோன்றுகிறது. 

சித்தர்கள், இந்த பாமர மக்களுக்காக, நேரடியாக தன்னையறிதலையும், இறையுணர்வையும் தருவதற்கு பதிலாக, குறிப்பால் உணர்த்திட எண்ணியே, சிலை வணக்கம் என்ற பக்தி முறையை கொண்டு வந்தனர். பின்னாளில் குறுக்கு புத்தியுடையோர் அதில் வழிபாடு, சடங்கு என்று புகுத்தி, அதையும் நீங்கள் செய்யக்கூடாது என்று மக்களையே தள்ளிவைத்து குழப்பமாகிவிட்டது. கொஞ்சமாக கிடைத்த உண்மையும் தூரத்தில் தள்ளிப்போய் விட்டது.

பஞ்ச பௌதீக தோற்றத்தில் முதன் நிலையான ஆகாஷத்துகள் அல்லது விண், மனிதனுக்குள்ளாக உயிர் என்ற சிறப்போடு அழைக்கப்படுகிறது. மனிதனின் வாழ்நாளுக்குப் பிறகு , இயல்பாக அது வெளியேறி மீண்டும் வெளியே உள்ள ஆகாஷ துகளோடு இணைந்துவிடும். அதுவே இயற்கை. ஆனால் சித்தர்கள், அந்த சிலை வணக்கம் என்ற முறையில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய, அவர்களின் மனதை, அறிவை உயர்த்திட எண்ணியே தங்கள் வாழ்நாள் தானாக முடிவுக்கு வரும்முன்னரே தடுத்து, பலவித பயிற்சிகளால், தங்கள் உயிரை, உடலிலேயே அடக்கி, நிறுத்தி வைக்கும் முறைதான் ‘ஜீவ சமாதி நிலை’ ஆகும். சில சித்தர்களின் ஜீவசமாதிகளின் மேல், கோவில்களும் கட்டப்பட்டன. இந்த பயிற்சி முறை மிக கடினமானதும், இயற்கையை மீறியதாகவும் இருந்திருக்கிறது. எனவேதான் சில ஞானியர்கள், மகான்கள் ‘ஜீவ சமாதி’ வேண்டாம் என்கிறார்கள். ஒருவகையில் இது தற்கொலைக்கு சமமானது என்றும் சொல்லுகிறார்கள்.

சில பதிவுகளில், நான் ஏற்கனவே நம் வேதாத்திரி மகரிஷி ‘ஜீவ சமாதி’ குறித்து சொன்னதை குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் இங்கே அதை நினைவுறுத்துகிறேன். 

‘அந்தக்காலம் போல மக்களின் அறிவு நிலை, வாழ்க்கை முறை இப்போது இல்லை. யாரும் எதையும் அறிந்து கொள்ளுவதிலும், தெரிந்து கொள்ளுவதிலும், உணர்ந்து கொள்வதிலும் திரை மறைவு இல்லை. ஒருவர் ஒருவரை நேரடியாக சந்தித்தும் உண்மையை சொல்லலாம், உணர்த்தலாம். தினம்தினம் வளர்ந்து வரும் விஞ்ஞானமும் அதற்கு உதவுகிறது. மக்களோடு மக்களாக, அவர்களை நல்வழிப்படுத்தும் ஞானிகளும் வாழும் காலம் இது. எனவே ‘ஜீவ சமாதி’யாக மாறித்தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி மாறுவதற்காக இயற்கைக்கு மாறாக தன்னை துன்புறுத்திக்கொள்ளவும் தேவையில்லை’

எல்லாவற்றிற்கும் விதை

ஆதிகாலம் முதல் இக்காலம் வரை, உலகில் இதுவரை எத்தனையோ போர் நிகழ்ந்துள்ளது. ஏன் இன்றும் கூட நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம் என்ன? தன்னை ஒரு மனிதனாக எண்ணிக்கொள்ளும் மனிதன், இன்னொருவரையும் மனிதனாக, தன் இனமாக எண்ணிக்கொள்வது இல்லை. அவன் வேறு, நான் வேறு என்ற பாகுபாட்டில், தன் இனத்தின் மேலேயே போர் தொடுக்கிறான். அவன் வாழும் உரிமையை பறிக்கிறான். துன்புறுத்துகிறான். கொன்று உயிரை பறிக்கிறான். ஒரு விலங்கு செய்வது போலவே!

ஆனாலும், ஐந்தறிவான ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தோடு சண்டையிட்டு, கொன்று, உணவாக்கிக் கொள்வதில்லையே. தன் இனம் என்ற உணர்வு அதற்கு இருக்கிறது. மேலும் முக்கியமாக அதனிடம், அணு ஆயுதங்கள் மட்டுமல்ல, எந்த ஆயுதமும் இல்லை! இப்படியாக மான்கள், குரங்குகள் என்று தனித்தனி இனம் சார்ந்துதான் இருக்கின்றன. தான் உணவை சமைக்கத்தெரியாத, இயற்கை அறிவில்தான் சிங்கம் மானை வேட்டையாடுகிறதே தவிர வேறொன்றும் பகை, வெறுப்பு, பழி உணர்ச்சி ஏதுமில்லையே! மனிதன் அப்படி ஐந்தறிவா? அவன் ஆறறிவு ஆகிற்றே?!

ஆம், அப்படியானால் மனிதனில் எல்லோரும் மனிதர்கள்தானே? பிறகு ஏன் இந்த ஏற்றத்தாழ்வு அவனுக்குள்? காரணம் அவனுக்குள் இருக்கின்ற பிறவித்தொடரான கருமைய பதிவுகளும், கர்மா என்ற வினைப்பதிவுகளுமே காரணமாகிறது. மனிதன் தீடீரென்று உருவானவன் அல்லவே?! வழிவழியாக வந்த பரிணாமத்தின் உன்னத நிலை அல்லவா?!

எனவே, இந்த மனிதனின் அறியாமை நிலையை, தனி மனித விடுதலையாக்கினால் மட்டுமே, அதை தீர்த்திட முடியும் என்ற பெரு நோக்கில்தான் ‘மனவளக்கலை’ யை உருவாக்கினார், வேதாத்திரி மகரிஷி அவர்கள். அந்த தனிமனித விடுதலை வழியாகவே, ஒருவரை ஒருவர் மதித்து, எல்லையில்லா நாடுகளாகி, ஓர் உலக கூட்டு ஆட்சியாக, ஓர் உன்னத உலகமாக மக்கள் வாழ முடியும் என்ற வகையில்தான், உலக சமாதானம் என்ற திட்டத்தையும் முன்மொழிந்து அதை, எல்லோருக்கும் சென்றடைய வழி செய்தார். தன் பிற்கால 10 ஆண்டுக்கால வாழ்நாள் முழுதும், முன்பை விடவும் அதிகமாக, அதற்காகவே செலவழித்தார் எனலாம். விதையாக, உலகமெங்கும், எல்லோரின் மனம் எங்குமே விதைத்துவிட்டார்.

உலக சமாதானம்

‘மலர வேண்டும் உலகசமாதானம்’ என்ற வார்த்தையையே, சங்கல்பமாக வேதாத்திரி மகரிஷி தன் இறுதிக்காலங்களில் சொன்னதாக குறிப்பிடுகிறார்கள். உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி, பெருங்குடல் அடைப்பு நீக்கிய அறுவைசிகிச்சை ஆன நிலையிலும், தன்னுணர்வுக்கு வராத நிலையிலும் கூட ‘மலர வேண்டும் உலகசமாதானம்’ என்று வேதாத்திரி மகரிஷியின் உதடுகள் முணுமுணுத்ததாம்! என்னுடைய சக வேதாத்திரிய நண்பர் இந்த நிகழ்வை சொன்னார்.


உலக சமாதனம் உலகில் மலர்வதற்கு, மொத்தமாக 150 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லியிருக்கிறார். கிட்டதட்ட 7.5 தலைமுறைக் காலம் எனலாம். முன்னதாகவே ‘தன் காலத்திற்குப்பிறகு, கொஞ்சம் தொய்வு வரலாம் எனினும் பிறகு இன்னும் மிக திடமாக பரவும்’ என்று சொன்னதாக சக அன்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் தொய்வின்றி, உலகெங்கிலும் வேதாத்திரிய அன்பர்கள், இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

வேதாத்திரியத்தின் வழியாக, தனிமனித விடுதலைக்கு நாம் இன்னும் துடிப்பாக செயல்படுவோம் என்றே சங்கல்பம் கொள்வோம். நம் உயிரோடும் கலந்து, வான்காந்தத்திலும் கலந்திருக்கும், நம் குருமகான் வேதாத்திரி மகரிசி நமக்கு துணையாக இருப்பார் என்பது உண்மையே! குருவை நினைந்து போற்றி மகிழ்வோம்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-