Smallest bones in the human body
அன்பர்களே, மனிதன், பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் முழுமையாக வந்து நிறைந்த உயிரினம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அந்த உண்மையை, அம்மனிதனே உணர்ந்தறியாமல் வாழ்வது வருத்தத்திற்கு உரியதே. எனினும் அவ்வபொழுது மாற்றங்களும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. மனிதனும் தன்னை ‘நான் யார்?’ என்கேட்க ஆர்வம் கொண்டுதான் வருகிறான் என்பதை நாம் காணவும் முடிகிறது.
மனிதனாகிய நாம் சிறப்பு என்றால், நமக்குள் இருக்கக்கூடியதும் சிறப்பாக இருக்கும் அல்லவா? அப்படியாக, நம்முடைய உடலில் மிகச்சிறிய எலும்புகள் எவை என்று கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? நடுப்புற காது பகுதியில் அமைந்துள்ள மூன்று எலும்புகளே ஆகும்!
அவை என்னென்ன?
தமிழில் அந்த எலும்புகளை சம்மட்டியுரு, பட்டையுரு மற்றும் ஏந்தியுரு என்று அதன் வடிவத்தைக் கொண்டு அழைக்கிறார்கள். இந்த மூன்று எலும்புகளும், ஒலி உணர்வு கடத்தியாக இணைந்தே செயல்படுகின்றன. இந்த எலும்புகள் நடுக்காது பகுதியில், உள்ளே மேல்புறமாக அமைந்துள்ளதால், சாதாரணமாக பார்த்துவிடமும் முடியாது. மேலும் நடுப்புற காதின் முன்புறம், அதாவது வெளிக்காதின் முடிவுப்பாதையில், ஒலியை வாங்கி அதிரவைக்கும் சவ்வுபடலம் மறைத்தும் இருக்கும். எனவே பார்ப்பது கடினமே!
இதோ பாருங்கள்
இரண்டாவது தோற்றமும் உணர்வும்
இந்த பிரபஞ்ச தோற்றத்திற்கு முன்னதாக, ஐந்து பௌதீக தோற்றத்தில், இரண்டாவது தோற்றம் ‘காற்று’ஆகும். அந்த காற்று தன்மாற்றத்தில்தான் ஒலியாக மலர்கின்றது. உயிரினங்களாக வந்த பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் ஒலியை உணரும் கருவியாகவே ‘காது’ என்ற உறுப்பு உருவானது. ஊர்வனவற்றில் பாம்புக்கு காது இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
‘ஏங்க, அதுதான் மகுடி ஊதினா எங்கிருந்தாலும் வந்திருதே!?’
மகுடி ஊதி. அதிலிருந்து வரும் ஒலி அலையை, பாம்பு அதிர்வாக மட்டுமே பெறுகிறது, மேலும் தன் பார்வையின் மூலமாகவும் அவ்வதிர்வை பெறுகிறது என்பதே உண்மை.
செவித்திறன் குறைவு
பெரும்பாலும் இயற்கையாக செவித்திறன் குறைவு வந்தால், அக்குழந்தை பேசுவதில், கற்றுக்கொள்வதில் தடுமாற்றத்தை பெறும். காரணம் சில காண்போம். 1) நடுக்காதில் உள்ள சவ்வு பாதிப்பு, துளை, சரியான வளர்ச்சி இன்மை 2) சவ்வோடு இணைந்த எலும்புகள் பலவீனம் 3) அதிர்வை பெற்று கடத்த முடிவதில்லை 4) உட்காதுக்கு எந்த அதிர்வும் கிடைக்காத தன்மை Etc,.
நாம் காதுகளை கவனமின்றி, பாதுகாப்பின்றி பயன்படுத்துவதாலும் செவித்திறன் பாதிக்கப்படலாம். 1) காது குடைதல் 2) அதிக ஒலி எழுவதை அடிக்கடி கேட்பது, அந்த இடங்களில் வாழ்வது, அப்படியான இடங்களில் வேலை செய்வது 3) காதுகளை முழுதாக மூடியபடி அதிரும் இசை கேட்பது 4) தண்ணீர், எண்ணைய், பிறவற்றை காதுக்குள் விட்டுக்கொள்வது 5) தூங்கும் பொழுது ஏதேனும் பூச்சிகள் காதுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவது 6) குழந்தையாக இருக்கும் பொழுது கன்னத்தில் அடிவாங்கியது 7) காது பாதிக்கப்படும் அளவில் எதிர்பாராத வாகன விபத்து, தடுமாற்றம், நோய் ஆகியன Etc,.
முக்கியமாக குழந்தையை, கன்னத்தில் அறைவதை பெற்றோர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கையின் உன்னதம்
அற்புதமான இந்த இயற்கையின் வடிவமைப்பை கண்டீர்களா? வேறு யார் செய்தார் இதை? யாரேனும் நமக்காக செய்தார்களா? நமக்குள் பொருத்தினார்களா? இப்போது நாம் வாங்குகிற ஆப்பிள் ஏர்போட் போல யார் தயாரித்தார்கள்? யார் அதற்கு சக்தி அளிக்கிறார்கள்? என்றைக்காவது நாம் யோசித்ததுண்டா? அப்படியானால் அதை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்? மனிதனில் எல்லாம் அடங்கியுள்ளது என்று பெருமை பேசுகிறோமே தவிட உண்மையை ஆராய்ந்து அறிந்தோர் மிகச்சிலர் அல்லவா? நீங்கள் ஆராய விரும்பினால், இயற்கை தன்னை உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்க தயாராகவே இருக்கிறது என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா?
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!
-
Thanks to: Wikipedia, @microscopicture and twitter. Photos and video used here for education purpose only and copyright to owners