What is my journey in Vethathiriyam like?! | CJ

What is my journey in Vethathiriyam like?!

What is my journey in Vethathiriyam like?!


வேதாத்திரியத்தில் என்னுடைய பயணம் எப்படிப்பட்டது?!


நானும் வேதாத்திரியமும்

அருள்நிதி பயிற்சிக்காக, ஆழியாறில் 1991ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் தேதி மாலையில் அங்கே சென்றடடைந்தோம், அங்கே, முதலில் நாங்கள் கண்ட காட்சி இன்னும் அதே மலர்ச்சியோடு, ஆம், குருமகான் வேதாத்திரி மகரிசி, மாலை நடைப்பயணத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். சிறிது நேரம் எங்கள் குழுவோடு பேசிவிட்டு வாழ்த்தினார். மறுநாள்  28 முதல் 29, 30 ம் தேதிவரை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிகழ்த்திய ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டோம். அவ்வப்பொழுது எனக்கு கிடைத்த உணவு இடைவேளை நேரத்திலும், அன்றைய நாள் பயிற்சி முடிவிலும், அருள்நிதி சான்று பெற்று, நான் வாழ்த்துகளை பெற்ற நேரத்திலும் ‘நான் தகுதியுள்ளவன் தானா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்துவந்தது உண்மையே.

ஆனால், ஒரு தகுதி, ஏற்கனவே தகுதியுள்ள ஒருவரால் வழங்கப்படுகிறது என்றால், ‘நிற்க அதற்குத்தக’ என்பது தான் அதன் அர்த்தம். உண்மையாக, இந்த இயற்கையும், நம்மை அப்படித்தான் அரவணைத்து நடத்திச் செல்கிறது. தவறிவிட்டால், தண்டிக்கவும் செய்கிறது அல்லவா?

யார் வேண்டுமானாலும், வேதாத்திரிய தீட்சை பெறலாம் என்றாலும், நம்மில் சிலருக்கே அது கிடைத்தது. ஏன்? நாம் தகுதி பெற்றதினால் தானே? 

சராசரி நபர்களுக்கும மட்டுமின்றி தேடுவோருக்கும் கூட இன்னும் கிடைத்தபாடில்லையே?! அதுதான் இயற்கையின் நிகழ்வாகிறது. எனவே நீங்கள், வேதாத்திரியத்தில் இணைந்ததையும், தீட்சை பெற்றதையும், மகிழ்ந்து, வாழ்த்துங்கள். பிறவியில் கிடைத்த பெரும் பேறு என போற்றுங்கள். அதற்கு உங்களுக்கு விளக்கம் தந்த ஆசிரியர்கள் அல்லது துணை செய்த நண்பரை நினைத்தும் வாழ்த்துங்கள்.

தடுப்பும் ஏற்பும்

ஒரு சராசரி நடுத்தரவர்க்க மனிதருக்கு நடக்கும் நிகழ்வான, படிப்பு, வேலை, வளர்ச்சி, உயர்வு என்று எல்லாவற்றிக்கும் போராட்டமும், தடுமாற்றமும், நமக்கு யார் உதவுவார்கள்? என்ற எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் எல்லோருக்கும் பொதுவானதே ஆகும். எனக்கும் அப்படித்தான். ஆனால், அப்படி நிகழும் பொழுது, ஏதோ ஒருவகையில் நீங்கள் செலுத்தப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுதான் யோகத்தில் சிறப்பாகும்!

நீங்கள், ஏதேனும் ஒரு நாள், துணைக்கு யாருமற்று, தனித்து நின்று பழகும் பொழுதுதான்,
உலகியலில் பிறமனிதர்கள் எப்படி?
நம்மோடு ஏன் இப்படி பழகுகிறார்கள்?
இப்பொது இருக்கும் சூழ்நிலையை எப்படி ஏற்பது?
நாம் எப்படி நம்மை மாற்றிக்கொள்வது?
அதை எப்படி அதை அணுகுவது?

என்ற அனுபவம் கிடைக்கும். அதன்வழியாகவே, ஒரு தனியனாக உங்களை நீங்கள் உணர்ந்தால்தான், நிஜமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதுகூட உங்களுக்கே தெரியவரும். அதுவரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். 

ஆனால் இவை எல்லாம், இயல்பாக, இயற்கையாக நிகழும் ஒன்றுதானே? அதை விழிப்பாக, ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டால், நம்மை திருத்தும் ஒரு தடுப்பும், அதன்வழியாக ஏற்பும்   இயற்கையே நிகழ்த்துகிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே நமக்கு நிகழ்கின்ற எதுவுமே காரணமின்றி நிகழ்வதில்லை. நாம் செல்லும் பாதையில், போக்குவரத்தை சரிசெய்வதைப் போல காலம் செயல்படுகிறது. விபத்து ஏற்படுகிறது என்றால் அது நம் கவனக்கோளாறே ஆகும்.

உண்மை விளக்கம்பெற உதவுவீர்

தனி மனிதன், நான் யார்? என்று தன்னை அறியவும், தன் மூலம் அறிந்து பிறவிக்கடன் தீர்க்கவும் ‘பிரம்மஞானம்’ போதும். ஆனால், அருள்நிதி பயிற்சி ஏன் பெறுகிறோம்? கற்றுக்கொண்ட விளக்கத்தில் ஆழ்ந்து, தேர்ந்து, உண்மையறிந்த பிறகு, நம்மைப்போலவே, துன்பத்தில் சிக்கித்தவிக்கும், சகமனிதரை நாம் உயர்த்துவதற்கு உதவலாம் அல்லவா? அதற்காகவே

ஆனால் வேதாத்திரியத்தில், இது கட்டாயமல்ல. உங்களுக்கு அப்படியான விருப்பம் இருந்தால் பிறருக்கு சொல்லித்தரலாம். மேலும் வேதாத்திரியத்தை, உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் வகையில் மனவளக்கலை  வழியாக. அருள்நிதி நிலையும், கூடுதலாக, துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளும் கொண்டுவரப்பட்டது. 

ஒரு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்வது மட்டுமல்ல, சக மனிதருக்கும், காலம் காலமாக மறைந்திருக்கும் உண்மை விளக்கத்தை அறியத் தரவேண்டும் என்பது, நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் திட்டம். அதன்படியே இன்று, வேதாத்திரியம் பரந்து விரிந்து இருப்பதை நாம் காணமுடியும்.

கர்மா எனும் வினைப்பதிவு தாக்கமும் கழிவும்!

எப்படியோ நாம் பிரம்மஞானம், பெற்று அருள்நிதி ஆகிவிட்டோம், இன்னும், துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்றும் ஆகிவிட்டோம். ஆனால் நாம், தன்னை அறிதலிலும், இறையுண்மை உணர்தலிலும் எப்படி இருக்கிறோம்? என்பது அவரவருக்கே தெரியும் உண்மையாகும்.

இதற்கு நம் கர்மா என்ற வினைப்பதிவின் பங்கு அளப்பறியது. என்னதான் வேதாத்திரிய சேவையில் இருக்கிறோம் என்றாலும் அதன் தாக்கம் ஒவ்வொருவரும் அறிவார். தனியாக இங்கே நான் விளக்கத் தேவையில்லை. நம் ஓவ்வொரு நொடி வெளிப்பாடிலும் கர்மா வரவும், பற்றும் இருப்பதை உணர்ந்தால் போதுமானது.  வரவில் கவனமாக இருப்பது முக்கியம். 

புலிவால் பிடித்த கதை

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் 50 வயது நிறைவில், உலக வாழ்வு போதும் என்ற முடிவோடு, முழுமையாக, எல்லாவற்றிலிருந்தும் விலகி, வேதாத்திரிய சேவையை ஏற்றுக்கொண்டார். 

1988 முதல், இத்தனை ஆண்டுகளாக, ஆர்வம், பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, முடிவு என எனக்கு வேதாத்திரியம் வழியாக, உண்மை வரவர, என் சூழல் மிகுந்த மாற்றம் நிகழ்ந்தது. தானாகவே 2017ம் ஆண்டில் அந்த உண்மைக்குள் நான் விழ ஆரம்பித்தேன். 2018 ல் நிறைப்பேறு நிலை என்பது புரிய ஆரம்பித்தது. எப்போதுமே எனக்குத் தெரிந்ததை, பிறருக்கு சொல்லும் பழக்கமும், சொல்லித்தரும் பழக்கமும் உண்டு.

அந்த வழியாக, வழக்கமான பணிகளோடு, வேதாத்திரியமும் பிறருக்குத் தரலாம் என்றெண்ணி ஆண்டு 2018 ல் ஆரம்பித்ததே ‘வேதாத்திரிய சானல்’ ஆகும். ஆண்டு 2019 ல் டிசம்பரில், பெரும் தொற்றான கோவிட் பரவ, என்னுடைய வழக்கமான பணிகள் பாதிக்கபட, முழுதான பணியாக வேதாத்திரிய சேனலில் பதிவேற்றம் செய்வது என வந்துவிட்டது. இன்று இந்த ஆண்டு 2023-லும், ‘நீ முழுமையாக இதில் இரு’ என்பதாகவே சூழல் அமைந்துவிட்டது.

ஆம் புலிவாலை சும்மா பிடிக்கப்போக அதில் சிக்கிவிட்டேன் என்ற பழமொழி போலத்தான் சொல்லவேண்டும். வேதாத்திரியத்தை நான் விட்டால்கூட, வேதாத்திரியம் என்னை விடாது. இப்பொழுது எனக்கு வேதாத்திரியம் தவிர வேறெதும் தெரியாது என்ற நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால் தான், வேதாத்திரியத்தில் வழக்கமான பதிவுகளோடு கூடுதலாக தனிப்பட்ட சேவையும் தரலாம் என்று முடிவெடுத்தேன். அதை நன்கொடை பெற்று நடத்தக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன்.

ஏனென்றால், முழுதாக வேதாத்திரியத்தில் இயங்கினால், உலகியல் பணிகளில் தொய்வு வருவது இயல்பானதே ஆகும். இதை நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அனுபவித்தும் இருந்தார். அவர் ‘அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா? என்று காலம் தள்ளிய நாட்கள் அவை’ என்கிறார். ஆனால், இறையுண்மையை, நான் யார்? என்ற தன்னையறிதலை, பிறவிக்கடன் தீர்க்கும் உன்னதத்தை, ஏளனமாக பார்ப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள்தான்  இந்த சேவையில் ஈடுபடுபவர்களையும் ஏளனம் செய்வார்கள். அதுகுறித்து, தன்னை அர்ப்பணித்து சேவையில் இறங்கியவர்கள் வருத்தம் கொள்வதில்லை!

எதிர்பார்ப்பில்லை

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன், எல்லாம் வல்ல இறைநிலை, என்னை பார்த்துக்கொள்ளும்’ என்பது நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய சேவையில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும் சங்கல்பம். நானும் இந்த சங்கல்பத்தின் வழியேதான் வேதாத்திரிய சேவையில் இறங்கியுள்ளேன். நான் இறங்கினேன் என்பது தவறு, இறைநிலையே என்னை தன்னில் நகர்த்திக் கொண்டது என்று சொல்லலாம். ஆனாலும், யாருக்கு எப்பொழுது எது எங்கே கிடைக்கவேண்டும் என்பதை, காலமும், அதனோடு இருக்கும் பேராற்றலும், பேரறறிவும் தானே தீர்மானிக்கிறது.  எனவே காத்திருக்கிறேன்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!