January 2021 | CJ

January 2021

Compansation and Athma Shanti


பரிகாரமும், ஆத்மா சாந்தியும்

Arulmigu Magudeshwarar Temple - Kudumudi - Erode Distric, Tamilnadu, India.


நேற்று கொடுமுடி (Kodumudi) , மகுடேஷ்வரர் திருக்கோவில் (Magudeshwarar Sivan Temple) காவிரி (River Cauvery) ஆற்றங்கரைக்கு செல்லும் பயணம் நேர்ந்தது.  அந்த கோவிலுக்கு செல்லும் எல்லா வீதிகளிலும், பரிகார் (ஹிந்தி) கடை இருக்கிறது. அங்கே இறந்தவர்களுக்கு கருமாதி எனப்படும் ஆத்மா சாந்தி, வாழ்க்கை வசதி தடை விலக்கல். திருமண வாய்ப்பு உருவாக்குதல் என்ற  வகையில் பரிகாரம் செய்வதற்கான எல்லா பொருட்களும், செட் செட்டாக (ஒரே தொகுப்பாக) விற்கப்படுகிறது. பூக்கடைகளும், வண்ணப் பூமாலை கடைகளும் நிறைய இருக்கின்றன.

வீதியின் வழியே செல்லும் எல்லோரையும்,

“வாங்க பரிகாரமா? நான் செய்து தருகிறேன்” என்று கை பிடித்து அழைக்காத குறையில் பரிகாரம் நடத்தும் விற்பனர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்றல்லாது எல்லோரும் இதில் இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடுமுடியின் இந்த ஸ்தலம், பரிகாரத்திற்கு மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். மனித ஆத்மாவின் வாழ்க்கை முடிவுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் தொடக்கமான திருமணமும் இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. 

Ritual athma santhi parikar at Cauvery river - Kodumudi


திருச்சி மாவட்டத்திற்கும் நுழையும் காவிரி, அகண்ட காவிரி என்று அழைக்கப்படும். ஆனாலும், இங்கே கொடுமுடியிலும் அகண்ட காவிரியாகத்தான் ஓடிவருகிறாள். இப்போதும், முழங்கால் நீரில் மூழ்கும் அளவில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்துவரும் காவிரி ஆறு, கொடுமுடியில்தான் கிழக்கு நோக்கி பாய்ந்து, கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக, தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களை அடைந்து கடலில் தஞ்சமாகிறது. கொடுமுடி காவிரியில் குட்டியாக நிறைய மீன்களும் வலம் வருகின்றன. இதுவரை இப்பெரும் ஆற்றை கண்டிராத குழந்தைகள், மீண்டும் மீண்டும் நீரில் இறங்கி எழுவதை காணமுடிந்தது. இப்படியெல்லாம் குழந்தை குழந்தையாகவே இருப்பதை இங்கேதான் கண்டேன்.

படித்துரை முழுதும், யாரோ அவிழ்த்துப்போட்ட துணிகளும், உள்ளாடைகளும் கவனிப்பாரற்று கிடந்தன. உன் வாழ்க்கை சோகத்தோடு, இதையும் அங்கே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு என்று யார் பரிகாரம் சொன்னது என்று தெரியவில்லை. 

பரிகார ஸ்தலம் என்றால், புண்ணியத்தை வேண்டிப்பெரும் இடம்தானே?! அதை எப்படி தூய்மையாக, சுகாதாரமாக, மற்றவர்களும் வந்துபோகவேண்டும் என்ற கவனத்தோடு, பெரும் நோக்கத்தோடு உபயோகப்படுத்தும் நிலை, நம்மிடம் அறவே இல்லை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், நாற்றங்களும், ஆற்றின் கரையில் மிதக்கும் வேண்டாத பொருட்களும், பரிகாரத்திற்குப்போய் வந்து நமக்கே பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது.

பரிகார விற்பனர்கள் அங்கங்கே குடில்கள், வீடுகள் அமைத்திருக்கிறார்கள். அதன் வாசலில் தற்காலிக பந்தல் அமைத்து, வேண்டுவோருக்கு பரிகார சடங்குகள் செய்துதருகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் மட்டுமே உட்காரும், பிளாஸ்டிக் இருக்கைகள் உள்ளன. நாம் உட்கார்ந்தால் அடுத்த நொடி “அங்கே போய் உட்காருங்க” என்று கிளப்பிவிடுகிறார்கள். செருப்பைக்கூட அங்கே தனிப்பட்ட ஓரிடத்தில்தான் கழற்றி வைக்கவேண்டியுள்ளது. 

Tree around the snake stones and deities


பெரிய ஆலமரமும், நாக சிலைகள் அடுக்கப்பட்ட கல் மேடையும், ஆற்றின் கரையெங்கும் இருக்கிறது. அதைச்சுற்றியுள்ள தரைப்பகுதியில்தான், பரிகார சடங்குகள் நிகழ்த்தித் தரப்படுகின்றன. சிலர் வேண்டுதலாகவே நாக சிலைகள் வாங்கி வணங்கி, அந்த ஆலமர மேடையில் வைத்துவிடுகிறார்கள். பரிகாரத்திற்கு நாங்கள் அங்கே விசாரித்தவகையில், பரிகார சடங்கு செய்ய தொகை, குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். அதுபோக அங்கே விரித்துவைத்திருக்கும் சடங்கு பொருட்களும், நவதானியங்களும், மளிகை சாமான்களும், காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் கூட, பரிகார விற்பனர்களுக்கே சென்றுவிடும். கூடுதலாக ஒரு பித்தளை சொம்பு, ஒரு பட்டுக்கரை வேட்டியும் தானம் உண்டு. வசதி இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக செய்யலாம். அந்தக்காலத்தில் பசுமாடும், கன்றுக்குட்டியும் தானம் தருவார்கள். கொடுமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் என்று சொல்லுகிறார்கள். ஆகவே இத்தகைய பரிகாரமும் அக்காலம் முதற்கொண்டே நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான உண்மை என்ன தெரியுமா? பரிகாரத்தால் ஒரு பயனுமில்லை. பரிகாரம் செய்வதால், இறைவனும் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆத்மாவும் சாந்தியடைவதில்லை. 

இறை மனிதர்கள் செய்யும் எந்த தந்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதல்ல. நமக்கென்று நம் கருமையத்தில் ஏற்கனவே இருக்கிய வினைப்பதிவுகளையும், நாமே வரவழைத்துக்கொண்ட வினைப்பதிவுகளை அவ்வப்போது ஆராய்ச்சி செய்து, மனதையும், உடலையும், தூய்மை செய்து கொள்வதுதான் சரியான வழி. இதற்கு யோகமும், தவமும் முக்கிய தேவை. உடற்குறைகளை போக்கிக்கொள்ள அதற்கான உடற்பயிற்சியும் தேவை. அதன்றி,  உனக்கு, இது செய்கிறேன், அது செய்கிறேன் என்மீது கருணைமழை பொழி என்று வேண்டுவது அபத்தம். இறைக்கு படைக்கும் பொருளனைத்தும் இறை படைத்ததே தவிர, உனதானது எது?!

ஒரு ஆத்மா சாந்தி பெற, இறந்தவரின் நினைவில் நின்று, வாழ்த்தி வணங்கி, அவர் விட்டுச்சென்ற நற்செயல்களை செய்வதும், அல்லது  உறவினர்கள், உதாரணமாக, வாழ்க்கை துணைவர், மகன், மகள், பேரக்குழந்தைகள் ஆகியோர், அவரின் பெயரில் நன்மைகளை மக்களுக்கு செய்வதுமே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வழி செய்யும். குலதெய்வம் என்று சொல்லப்படுகிற முறையும் இதுவே. காலம் காலமாக, ஒருகுடும்பத்தில் குலதெய்வம் வழிபாடு, வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைந்து வழிபடும் முறையாகவே இருந்துவருவது உண்மை. 

இந்த பரிகார சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களில் இருக்கும் பொது அர்த்தம் என்ன தெரியுமா? 

“சிவம், சக்தி, விநாயகன், கந்தனுக்கான இறைத்துதிகளும், வணக்கங்களும், பிறகு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, இராகு, கேது ஆகிய கிரங்களுக்கான வணக்கங்களும், நான்கு தலைமுறை பாட்டனார், கொள்ளுதாத்தா, தாத்தா, தந்தை, இறந்து போன நபர் ஆகியோரின் பெயர் சொல்லி அவர்களை நினைத்து வணங்கி, உங்கள் பெயரில் இதை நடத்தி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டியும், உங்களுக்காக இதை தானமாக வழங்கவும் செய்கிறோம். எங்களோடு கலந்திருந்து நீங்கள் உன்னதம் அடைவீர்களாக. உங்கள் பெயரில் பிண்டம் வைத்து ஆற்றில் விடுகிறோம். (மீன், காகம் போன்ற) உயிரினங்களாக வந்து பசி தீர்த்துக்கொள்வீர்களாக. இனியும் நாங்கள் தானம், தருமம் செய்து எங்களை திருத்திக்கொள்கிறோம்” என்பதாக அமைந்திருக்கிறது.  

பிண்டம் வைத்து வணங்கி, சமைக்காத அவ்வுணவை ஆற்றில் விடும்பொழுது, மீனுக்கும், காகத்திற்கும் இரை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆத்மாவுக்கு என்ன? என்று விடைதருவார் யாருமில்லை. ஒரு நபர் செய்யும் பரிகார சடங்கு, நான்கு தலைமுறை ஆத்மாவுக்கு சாந்தி தரும் என்பது வியப்புக்குரிய செய்தி. இது குறித்த தெளிவு யாரிடமும் இல்லை. கேள்வி கேட்கவும் தயங்கி, எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன் என்றே பதில் கிடைக்கும். இதை செய்யாவிட்டாலும் குற்றம் என்று புலம்பவும் செய்வார்கள். பிறர் ஏதேனும் கேள்வி கேட்டு ஏளனம் செய்வார்கள் என்ற பயமும், இதைக்கூட செய்யமுடியாத என்ன என்ற கிண்டலும், ஒருவேளை “சாந்திபெறாத ஆத்மாவால்” தங்கள் குடும்பத்தில் ஏதேனும் தீங்கு நேருமோ என்ற குழப்பமுமே காரணம். ஆனால் உண்மை என்னவெனில், வாழ்ந்த மனிதரின் இறப்பு பற்றிய விளக்கம் தெரியவில்லை. வாழும் மனிதருக்கு தன் வாழ்வு குறித்தும் அக்கறை இல்லை. தானும் இறப்போமே அப்போது என்ன ஆகிவிடுவோம் என்ற உள் தேடல் கேள்வியும் இல்லை. அக்கேள்விக்கான பதிலைத்தேடவும் ஆர்வமில்லை.

“இறந்தவனை சுமந்தவனும், இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்”

பின்குறிப்பு: இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. யோகம், தவம், உடற்பயிற்சி என்ற சிந்தனை தூண்டுதலுக்காகவே எழுதப்பட்டது. இறை, ஒருகுறிப்பிட்ட இன மறுப்பாளர்கள் இக்கட்டுரையை மேற்கோள் காட்டக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. 

photos thanks to: tripadvisor, Tamilnadu Tourism and June3 studio


Long live INDIA


 இந்தியாவை உயர்த்துவோம்

Indian National Flag

குடியரசு தினமான, இந்த ஜனவரி 26ம் நாளில் (Republic day, January 26th) இந்தியர்களான நாம் ஒருமித்த மன உணர்வுக்கு வந்து, மக்களாட்சியை நினைந்து பெருமைப்பட்டு கொண்டாடும் நாளாகும். 

துண்டு துண்டாக இருந்த, பகுதிகளை இணைத்து, அங்கங்கே ஆட்சி, அதிகாரங்களில் மூழ்கி, ஒருசிலர் மக்களை துன்புறுத்தியும், குடி, போதை கொண்டாட்டங்களிலும், மத இன மாற்ற நடவடிக்கைகளிலும் கடுமையாக நடந்துகொண்டு கொடுமைபடுத்திய அரசுகள் இருந்தன. மக்களை மேம்படுத்தியும் கொண்டிருந்த அரசுகளும் இருந்தன, ஆனால் அவ்வரசுகள் பிறரால் பயமுறுத்தப்பட்டுக் கொண்டு இருந்தன. அரசின் சொத்துக்கள், மக்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன.  இத்தகைய சிற்றரசுகளை ஒட்டுமொத்தமாக கலைத்து, ஒருமித்த இந்திய நாடு எனும் அமைப்புக்குள் கொண்டுவந்தனர், நம் தேசீய தலைவர்கள். குறிப்பாக சர்தார் வல்லபபாய் பட்டேல் (Sardar Vallabhbhai Patel) அவர்கள். சிற்றரசர்களின், மத இன அமைப்புக்களின் அரசு அதிகாரங்களை பறித்து, எல்லோடும் ஒன்றே எனும் “இந்தியா” எனும் அமைப்புக்குள் கொண்டுவந்தனர். 

Sardar Vallabhbhai Patel


இந்திய அரசின் அமைப்பில், ஓவ்வொரு மக்களும் ஓர் அங்கம் எனும் அமைப்பில், இந்திய அரசு ஆட்சியாளர்களை மக்களே, ஓட்டு மூலமாக தேர்ந்தெடுக்கும் அமைப்பையும் ஏற்படுத்தினார்கள். ஆங்கிலேயர்களின் ஒருமித்த இந்திய விரோத, அதிகார சட்டங்கள், சுதந்திர இந்திய மக்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்கும், வருங்கால இந்தியர்களின் வாழ்வு நலம் கருதியும், அண்ணல் அம்பேத்ட்கார் (Babasaheb Ambedkar) அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. 

Babasaheb Ambedkar


இந்தியா, அதன் மக்கள் அனைவரும் ஒரே அளவில், ஒற்றுமையாக வாழ வழி பிறந்த நாளின் சிறப்பே இந்த “குடியரசு தின நாள்” ஆகும். இந்தநாளில், இந்தியர்களாகிய நாம் ஒருமித்த கருத்தில், இந்தியாவை புகழ்வதும், இந்தியாவை உயர்வாக நினைப்பதும், இந்தியர் நாம் என்ற கருத்தில் பெருமிதம் அடைவதும் முக்கியமாகும். அப்படி நினைப்பது, இந்தியமக்கள் அனைவரும் ஓர் புள்ளியில் இணைக்கும். அதன் வழியா, இந்தியா சுதந்திர அடைவதற்காக, தெரிந்தும், தெரியாமலும் தன் இன்னுயிரை இந்திய மண்ணிற்காக விட்ட தலைவர்களின், மனிதர்களின் ஆன்மாக்கள் சிறப்படையும். அத்தகைய மேன்மையான ஆன்மாக்கள் சாந்திபெற்று மகிழும். 

ஒரு நொடி நேரமாவது, நான் இந்தியன், நான் வாழும் இந்தியா சிறப்படையட்டும், என வாழ்த்தி, இவ்வுயர்வுக்கு தன்னைக் கொடுத்த ஆன்மாக்களை நினைத்து மகிழ்ந்து, வாழ்த்துவோம். அது நம் கடமை. 

உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்த்துவோம். இந்தியா வாழ்க! இந்தியர்கள் வாழ்க!!.  

Keep it safe, will become history


 பாதுகாப்பாக வைத்திருங்கள், வரலாறாக மாறும்!



ன்று, எனது அத்தையை நினைவு கூறவேண்டியதாக இருந்தது. தன் கணவரின் மறைவிற்குப்பிறகு, குடும்ப பொறுப்புக்களிலிருந்து விலகி,  தான் உண்டு, தன் காரியும் உண்டு என்று, அமைதியாக தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்தவர். தன் எதிர்ப்பைக்கூட புன்சிரிப்பாக தரும் பண்புக்கு தன் வாழ்வின் கடைசிக்காலங்களில் வந்திருந்தார். எனக்கு சில நுணுக்கங்களையும், திறமைகளையும், சிந்தனைகளையும், ஆன்மீக சிந்தனைகளையும் அவ்வப்போது எனக்கே தெரியாமல் ஊக்குவித்தவர் என்பதை என் 14 வயதிற்கு பிறகுதான் அறிந்துகொண்டேன்.

நூல் பின்னல் வேலைகளும் (Embroidery), கோலங்களும் (Mandala), சிறிய பூ, இலை ஓவியங்களும் (Flower and Leaft Arts), காகிதத்தில், கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி புதிது புதிதாக வடிவங்களை உருவாக்குவதும் (Paper cutting design works) அவரின் திறமைகள், அவற்றை எனக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் இக்கால குழந்தைகளுக்கு ஆர்வமில்லை, அப்படி கற்றுக்கொள்ளும் பொறுமையும் இல்லை. 

நாளிதழ்களிலும், வாரபத்திரிக்கைகளிலும், திருமண அழைப்பிதழ்களிலும் காணப்படும் சிறுசிறு அச்சுவடிவங்களை தனியே பிரித்தெடுத்து, அழகாக வேறொரு அமைப்பில் ஓட்டி அழகுபடுத்துவார். உதாரணமாக, ஒரு அட்டையில் ஒட்டப்பட்ட போட்டோவில் (Photo Mounded) இந்த “வெட்டி எடுக்கப்பட்ட” வடிவங்களை அமைத்து, முப்பரிமான காட்சியை (3D Vision) ஏற்படுத்துவார். அதற்குப்பிறகு அதை, வெளியே ஒளிப்பட கடைகளில் கொடுத்து, மரச்சட்டங்களில் அமைத்து, சுவரில் தொங்கவிடக்கூடிய வகையில் மாற்றிக்கொள்வார். அப்படியான படங்கள்தான் எங்கள் வீட்டை அழகுபடுத்திக்கொண்டிருந்தன. 


முக்கியமாக அவருக்கு, இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி ஒன்று உண்டு. அதற்கு பூட்டு எதுமில்லை. ஆனால் என் அத்தையை தவிர வேறு யாரும் திறப்பதற்கு அனுமதி இல்லை. அந்தக்காலத்தில் மர அலமாரியும், ஒரு தனியாக தூக்கமுடியாத அளவில் பெரிய இரும்பு பெட்டியும்தான், மணமக்கள் சீதனமாக வழங்கப்படுவது வழக்கம். அத்தகைய இரும்புபெட்டியோடும், அலமாரியோடும், ஒரு பெரிய ஜமுக்காளம், அதில் மணமக்கள் பெயரும் பின்னப்படிருக்கும், இரண்டு பட்டு உறை போர்த்திய தலையணையும் உண்டு. (Trunk Box, Woodden Wardrobe, Bedsheet, Silk cloth covered pillows)

என் அத்தை வைத்திருந்த பெட்டியில், எனக்கு விபரம் தெரிந்து பார்த்தவரையில், அங்கே இருந்தவை காகிதங்கள், அட்டைகள், பைகள், வண்ண வேலைப்பாடு கொண்ட வாழ்த்து அட்டைகள், பட்டு துணிகள், திருமண அழைப்பிதழ்கள், முழுவடிவ வருட நாட்காட்டி அட்டைகள், ஓவியங்கள், இறைவன் ஓவிய படங்கள் (Printed papers, Multicolor printed papers, Greeting cards, Silk cloths, Wedding invitations, Yearly, days calendar, Art and Drawings, God pictures) எடுத்தால் கையோடு ஒடிந்து வருமளவு மக்கிப்போன பக்கங்கள் கொண்ட நூல்கள் (Old Printed Books). (உதாரணமாக, குமரேச சதகம் நூல்) இப்படி கலவையாக இருக்கும். தனக்கு கிடைக்கும் எல்லா பொருட்களிலும், கலை மிகுந்திருக்கும் காகிதங்களை சேர்த்து வைத்துக்கொள்வதை தன் வாழ்நாளின் கடைசி வரையிலும் விட்டுவிடவில்லை. தன்னுடைய சொத்துபோல இவற்றை பாதுகாத்து வந்தார்.


நாங்கள் கூட்டுக்குடும்பமாக (Joint Family) வாழ்ந்திருந்தோம். அவ்வகையில் ஏதேனும், உறவினர்கள், சொந்தபந்தங்கள் வகையில் திருமணம், சடங்கு, காதுகுத்து, கிரகபிரவேஷம் என்று எவ்வகையில் அழைப்பு பத்திரிக்கை  (Invitations) வைத்தாலும், ஒன்றுக்கு மூன்று கிடைக்கும். அதில் ஒன்று, அப்படியே என் அத்தையின் இரும்பு பெட்டிக்குள் போய்விடும். வேறு யாரேனும் ரத்த உறவினர்கள், வேண்டாம் என்று தூக்கி எறிந்த சில ஒளிப்படங்களைக்கூட (Family Photograph) என்னிடம் இருக்கட்டும் என்று வாங்கி வைத்துக் கொள்வார். 

சிறுவயதில், நாங்கள் கிண்டலடிப்போம்...

‘இதெல்லாம் குப்பைக்கு போகிற சமாச்சாரம், இதனாலே என்ன பயன்?”

“இதற்கு பதிலாக பணத்தை சேர்த்துவைத்திருந்தால் நல்லா இருக்குமே?”

“ஏன் இந்த கிறுக்குத்தனம்?”

“இந்த முட்டாள் தனத்தை வேறுயாரேனும் செய்வார்களா என்ன?”

இப்படியாக பல வகையில் கேள்விகளை கேட்டு திணறடிப்போம். எல்லாவற்றிற்கும் புன்னகையே பதிலாக இருக்கும். ஆனால் அத்தையின் மனதிற்குள் ஒரு சோகம் இருந்திருக்கலாம் என்று இப்போது புரிகிறது. பொழுதுபோக்காக, தன் இரும்புப்பெட்டிக்குள் சேர்த்து வைத்த அந்த பொருட்களின் மதிப்பு அல்லது நோக்கம், எனக்கு அப்போது அறிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. ஆனால் சில காலத்திற்குப்பிறகு, ஓவியர், நடிகர். சிவக்குமார் (Artist, Actor Sivakumar) அவர்களின் தேசப்பிதா காந்தி (Mahatma Gandhiji) ஓவியத்தை (Ink stroke Art) பிரதி எடுத்து வரைந்ததை பத்திரப்படுத்தும் பொழுதுதான் என் அத்தையில் நோக்கமும் புரிந்தது. மேலும் என் வாழ்வில் நானே மிகவும் விரும்பி சில பொருட்களையும், தகவல்களையும், கடிதங்களையும், (உதாரணமாக, என் கவிதை, ஓவியம் இவற்றை பாராட்டி நம் இந்திய ஜனாதிபதி, அப்துல்கலாம் அவர்களின் (Indian President A.P.J. Abdul Kalam) நன்றிக் கடிதம்,  அமெரிக்க ஜனாதிபதி க்ளிண்டன் (American President Bill Clinton) சார்பாக அவரின் அலுவலர்,  என்னை பாராட்டி எழுதிய கடிதம்) அவ்வப்போது நான் வரையும் ஓவியங்கள் இப்படியெல்லாம் பாதுக்காக்க நினைத்த தருணங்களில், என் அத்தையின் தகவல் சேமிப்பில் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தேன். 

என்றாவது ஒருநாளோ அல்லது பொங்கலுக்கு முதல்வாரத்தில், வீடு வெள்ளையடிக்கும் பொழுது, இருப்பதை கழித்துப்போடும் சாக்கில், வெறுமனே தூசி தட்டி மீண்டும் அடிக்கி வைக்கும் நேரத்தில், அத்தையோடு நானும் அந்த இரும்புபெட்டியில் இருந்த பழைய சேமிப்பினை பார்த்து ரசித்து, காலத்தை பின்னோக்கி நினைப்பதுண்டு. ஆனாலும் இத்தகைய “குப்பையான” கால சேமிப்பு யாராலும் மதிக்கப்படவில்லை என்பது உண்மைதான். மிக முக்கியமான காரணம், குடும்பத்தின் பொருளாதார தேடல். ஓவ்வொருவரும் எப்படி தன்னிறைவு அடைவது என்ற நிலையிலேயே இருந்ததால், அத்தையையே யாரும் கண்டுகொள்ளாத நிலைதான். நானே கூட வேலைக்கு சென்ற நாட்களில் பழைய குறிப்புக்கள் குறித்தோ, இரும்பு பெட்டி குறித்தோ அத்தையிடம் பேசுவதில்லை. அத்தைக்கும்  தன் பேரக்குழந்தைகளோடு கலந்து பேசி, கவனித்து, கூடவே இருந்ததில், இரும்புபெட்டி பக்கம் செல்ல நேரமில்லை. மேலும் அத்தையின் இரும்புபெட்டி, வீட்டில் இடத்தை அடைக்கிறது என்று பரண்மேலும் போட்டாகிவிட்டது சோகம். 

காலத்தாலும், வயோதிகத்தாலும் அத்தைக்கு இரு கண்ணிலும், அறுவைசிகிச்சை செய்தும்,  ஒரு கண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையும் குறைந்துவிட்டது. ஆனாலும் கிடைப்பதை தனியே ஒரு பிளாஸ்டிக் பையில் சேமிக்கும் பழக்கம் குறையவில்லை.

திருமணத்திற்குப்பின், நான், எனக்கு கிடைத்த வேலையின் காரணமாக திருச்சியில் வாழத்துவங்கி விட்டேன். அத்தை, மதுரைக்கு சென்றுவிட்டார். அந்த இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி அவரோடு கூடவே, எங்கள் வீட்டிலிருந்து அவரின் பெரிய மகன் வீட்டில் இருந்து. ஆனால் அங்கேயும் பரணில் தான் அதற்கு இடம் கிடைத்தது. வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறை, என் அத்தையை பார்த்து பேசி வருவதாக அமைந்தது. கடந்த 2002ம் ஆண்டில் தன் உடல் நலக்குறைவால் இயற்கையோடு கலந்தார். அத்தையே போனபிறகு, இரும்புபெட்டி குறித்த கவனமும் போய்விட்டது. ஆனாலும் யாரும் அதில் கைவைக்கவும், தூக்கி எறியவும் யோசனை எழவில்லை. 

கடந்தவாரம், மதுரையில் வீடு பெயிண்ட் அடித்து, பொருட்களை கலைத்து அடுக்கும்பொழுது, அத்தையின் அந்த இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி திறக்கப்பட்டது. எங்களின், எங்கள் குடும்பத்தை சார்ந்தோரின் தொடர்பான, ஒளிப்படங்களும், திருமண அழைப்பிதழ்களும், ஓவியங்களும், குறிப்பு மற்றும் தகவல்களும் வெளியே எடுக்கப்பட்டன. எடுத்துப்பார்த்து மகிழ்ந்து, அதை மின்னணு பிரதி எடுத்து, (Digitalized copy) அந்தந்த குடும்ப உறவினர்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், வாரிசுகளுக்கும் அனுப்பப்பட்டது.

“ஆஹா, எங்க அப்பா கல்யாண பத்திரிக்கை, சூப்பர்”

“ஹே, எங்க தாத்தா, பாட்டி போட்டோ”

“சூப்பர், எங்களோட காதுகுத்து பத்திரிக்கை”

“அட என்னோட சின்ன வயது போட்டோ”

“ஹா எங்கம்மா சின்ன வயசிலே”

“ஹாஹா, எங்க அப்பா என்னா ஸ்டைலா போட்டாலே இருக்கார் பாரு”

இப்படியாக பலவகையிலான குதூகலம் பரவியது எல்லோரிடமும். அத்தை காலமாகி 19 வருடங்களுக்குப்பிறகு, கிட்டதட்ட 70 ஆண்டுக்கால தகவல் குறிப்புக்களும், பதிவுகளும் இன்னமும் அப்படியே தன்னை வெளிப்படுத்துகின்றன. 

இன்றைக்கு குப்பையாக தோன்றலாம், காலத்தால் வரலாறு ஆகலாம்.

Thanks and Photos Source from: rashminotes.com and photocase.com

Corona Effect at Madurai


 மதுரையில் கரோனா பாதிப்பு

West tower gateway - image source to age Fotostock

கடந்த செவ்வாய்கிழமை, குடும்ப நிகழ்ச்சி காரணமாக மதுரை (Madurai City, Tamilandu, India) நகரில் இருந்தேன். என் சகோதரியின் மகனோடு, சில பொருட்கள் வாங்குவதற்காக, மதுரை நகரின் மையப்பகுதிக்கு செல்லவேண்டியதாக இருந்தது. கிட்டதட்ட மதுரை சொக்கநாதர், மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுர வாசலின் அருகே. (Sokkanathar, Meenakshi Amman Temple, South Tower Gateway)

பெருகிப்போன வாகனங்களின் நடுவே, நாங்களும் இருசக்கர வாகனத்தில் நீந்தி, தங்க ரீகல் திரையரங்கு (Regal Cinema Theater) எதிரே இருக்கும், டவுன்ஹால் (TownHall Road) சாலையில் நுழைந்து, மக்களின் நெருக்கடி காரணமாக, அங்கே இருந்த நடைபாதை நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பாதையில் உள்நோக்கி நடந்தோம்.

மதுரை முன்னைவிடவும் மிக நெரிசலில் சிக்கித்தவிப்பதை அறியமுடிகிறது. இதோடு, ஸ்மார்ட் சிட்டி (Smart City Project) எனும் திட்டத்தில், மதுரை சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. மாமிசம் வெட்டித்தரும் இடத்திலிருக்கும், அடிமரத்தின் மேல்பகுதி போல நல்ல அடி வாங்கியிருக்கிறது நகரின் எல்லா சாலைகளும். எனக்குத்தெரிந்து மதுரை மக்கள் பொறுமைசாலிகள், சீண்டாமல் தன்னை வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால், இப்படி குண்டும் குழியும் பல தசம ஆண்டுகளாக இருந்தும், ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மாநகராட்சி (City Corporation) நிர்வாகமும் குழப்பமடைந்திருக்கிறதோ என்னவோ?

மதுரை நகரம் முழுதும், பனி படர்ந்து தவழ்ந்துவந்து நம் கண்ணை மறைப்பதுபோலவே எங்கும் மணல், தூசி படலம் பறந்துகொண்டே இருக்கிறது. ஒருநாள் முழுதும் மதுரை நகரை சுற்றிவந்தால் “மோட்சம்” நிச்சயம்.

வீட்டிலிருந்து கிளம்பும்பொழுதே, 

“எனக்கும் தலைக்கவசம் (Helmet) வேண்டுமா? கேட்பார்களா?”

“இல்லை, ஆனா மாஸ்க் (corona mask) நிச்சயம் வேண்டும், ஃபைன் (Fine) கேட்பார்கள்”

ஏற்கனவே என்னிடமிருந்த மாஸ்க், வியர்வையில் நனைந்து, நசிந்து போனதால், இந்தமுறை 20 ரூபாய் மாஸ்க் இரண்டு வாங்கி, ஒன்றை அணிந்துகொண்டேன். இந்த மாஸ்க், நம்மை மூச்சுமூட்டவைக்கிறது உண்மைதான். ஆனால் இன்னமும், கரோனா தொற்று புரியாத மனிதர்கள் 1) ஒருஅடிக்குள்ளும் நெருங்கி பேசுவதும் 2) கைமூடாமல், மறைக்காமல் தும்முவதும் 3) பேச்சினிடையே இருமுவதும் நடக்கிறது. இவர்களுக்காகவே, நாம் மாஸ்க் அணிவது முக்கியமாகிறது.

உங்கள் கவனத்திற்காக


உங்கள் கவனத்திற்காக


ஆனால் மிகச்சிலரே, இங்கே மாஸ்க் அணிந்திருப்பதை காணமுடிந்தது. பிறரைப்பற்றி நமக்கென்ன? நான் அணிந்திருக்கிறேன் நல்லதே என்றெண்ணி கடந்தோம்.

பள்ளம், மேடு, சமதளம், வெளியே பாய்ந்து நிற்கும் இரும்பு கம்பிகள், செங்கல், சிமெண்ட் தடுப்பு, தற்காலிக மரப்பாலம், இரும்பு வலைப்பாலம் இவற்றில் எல்லாம் கவனம் வைத்து நடந்து, அங்கங்கே இருந்த தடுப்பு வளையங்களையும் கடந்து, மேற்கு கோபுரவாசல் வந்துவிட்டோம். அந்த வீதியின் முனையில் இருந்த தடுப்பு வளையத்தின் அருகே, ஒரு காவல் துணை ஆய்வாளர் (Sub-Inspecter) தன் இருசக்கரவாகனத்தில் உட்கார்ந்திருந்தார், ஒரு காவலர் (Police) கையில் நோட்டும், பேனாவோடும், விறைப்பாக நின்றிருந்தார். இருவருமே மாஸ்க் அணிந்திருந்தனர்.

நான் இவர்களை பார்த்துக்கொண்டேதான் அந்த வீதியில் நுழைந்தேன். உண்மையிலேயே இப்படியான காவலர்களின் பாடுதான் மிகுந்த அவஸ்தை. மழையும், வெயிலும், வேலையின் கடுமையும், சமூகத்தின் அக்கறையும் கூட இவர்களை சினம் கொள்ளவைக்கும். அமைதியான காவலரை, பணி ஓய்வு பெற்ற நிலையிலும் காண் இயலாது என்பதுதான் உண்மை. நம் ஆறுதல் வார்த்தைகள் கூட இவர்களின் மன நிலையை வெறி ஏற்றும்.

கால் இடறும்படி, கொத்திப்போட்ட வீதியின் உள்ளே உள்ள, கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு நடந்துவருகையில், நான் மாஸ்கை கழற்றி ஒரு கையில் பிடித்துக்கொண்டு, கைத்துணியால் முகத்தை துடைத்துக்கொண்டு, மீண்டும் மாஸ்க் அணிய தாயாரானேன், அதற்குள் நாங்கள் உள் நுழைந்த, காவலர்கள் நின்றிருந்த தடுப்பு வளையம் வந்துவிட்டது. 

“இங்கவாங்க, 200 ரூபாய் ஃபைன் கட்டுங்க”

என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். அடப்பாவிகளா? அதுகுள்ளேயுமா? என்று மனதில் நினைத்தபடி அருகில் சென்றேன். ஒரு நோட்டில், ஓவ்வொரு நிலைக்கும் இந்த இந்த தண்டனை தொகை என்று அச்சிடப்பட்டிருந்தது. என் சகோதரியின் மகன் திகைத்து நின்றான். என்னையும் பார்த்தான். அதில் “நான் அப்பவே சொன்னேன்ல” என்ற அர்த்தம் இருந்தது. 

“இங்கே பாருங்க, எனக்கு அடிக்கடி வியர்க்கும். அதுனாலே அப்பப்போ துடைத்துக்கொள்வேன். கையிலேதான் கழற்றிய மாஸ்க் வைத்திருக்கிறேன். மறுபடி அணிந்துகொள்வதற்குள் இப்படி கேட்டா என்ன செய்வது?” என்றேன். இருபக்கமும் கொஞ்சம் அமைதி நிலவியது.

“சிட்டி எப்படி மோசமான நிலையிலிருக்கு?! கவனமா இருங்க” என்று சொல்லிவிட்டு என்னமோ முணங்கிக்கொண்டார் அந்த காவலர்.

“சரி, இனி கவனமாக இருக்கிறேன். நன்றி” சொல்லிவிட்டு, அங்கேயே மாஸ்க் சரியாக அணிந்திருக்கிறேனா என்பதை கவனித்துவிட்டு நகர்ந்தேன்.

செவ்வாய் கிரக (Mars Planet) ஆளுமைக்கும், செவ்வாய் கிழமைக்கும் (Friday) எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று என் நண்பர் சொல்லுவார். ரொம்ப உதார் விடாதீங்க, மாட்டிக்குவீங்க என்று பயமுறுத்தியிருக்கிறார். அதனாலே “அடக்கி வாசிப்பது” பழக்கம். இதை என் இன்னொரு நண்பரிடம் சொன்னபொழுது, அடக்கி வாசிச்சா எப்படி கிதார் (Guitar) பழக முடியும் என்று கிண்டலடித்தார். நான் கிதார் வைத்திருக்கிறேன். கொஞ்சம் கிதார் வாசிப்பேன்.

குறிப்பாக என்னை நிறுத்தியது எப்படி என்பது எனக்கு புரியவில்லை. அந்த காவலர்களை கடந்து, எங்கும் தலைதிருப்பி பார்த்ததில், கொஞ்சமும் பயமின்றி, மாஸ்க் இல்லாத பல முகங்களை காணமுடிந்தது. நல்லவேலையாக அவர்களிடம் தண்டனைத் தொகை இல்லைபோலும். ஆனாலும் இது எனக்கொரு பாடமே. மனதிற்கு அக் காவலரை வாழ்த்திக்கொண்டே வீடு நோக்கி நகர்ந்தேன். 

“நல்லவேளையே தப்பிச்சீங்க” என்றான் என சகோதரியின் மகன்.

The Other Side of Man - Part 2


 


சைஞானி இளையராஜா அவர்கள் எப்போது பேட்டி கொடுத்தாலும், (பெரும்பாலும் தருவதில்லை) எதாவது “இவரை சிக்கவைக்க ஏதேனும் சொல்லுவாரா?!” என்று பெரும்பாலும் எண்ணுவார்கள்.  உள்ளதை உள்ளபடியும், சுற்றி வளைக்காமலும், எளிய வார்த்தைகளாக பேசக்கூடியவர்களில் இவரும் ஒருவர். அதனால்  இசைஞானி இளையராஜா எது சொன்னாலும் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று கிளம்புவார்கள். உண்மையிலேயே பிரச்சனை, நம் மக்களின் “மறு மனிதன் சிந்தனையில்தான்” இருக்கிறது.

இசைஞானி இளையராஜா, தானாக மேடைகளில் பேசினாலும், அப்படியான வில்லங்க பிரச்சனையாக மாறிவிடும் அல்லது மாற்றிவிடுவார்கள். உண்மையில் இசைஞானி இளையராஜா உள்முக தேடலில் ஆழ்ந்துபோனவர் என்றே நான் கருதுகிறேன். எனக்கு கிடைத்த சில குறிப்புக்களின் வழியாக, அவர் “தீட்சை” பெற்று தவம் பயின்றவராகவே இருக்கிறார். இதனால், குறிப்பாக, எளிமையாக, தனக்கு தோன்றுவதை சொல்லிவிடும் தன்மை வந்துவிடுவது இயல்பு.

இப்படியான மனிதர்களிடம் நாம் கலந்துரையாடுவதற்கு எளியவழி உண்டு. அது, நாம் இயல்பாக இருப்பதுதான். எதிராளைப்பற்றிய எந்த பிம்பத்திற்கும் நாம் வந்துவிடக்கூடாது. முக்கியமாக  “மறு மனிதன் சிந்தனை” வேண்டவே வேண்டாம்.

திருட்டுத்தனம் உள்ளவர்தான், உலக இயல்பில், இதை பேசினால் தப்பாகிவிடும், இதைச்செய்தால் தப்பாகிவிடும், இவர் என்னை தப்பாக நினைப்பார், பிரச்சனை உருவாகிவிடும் என்று பயந்தும், தயங்கியும், தான் நினைத்ததிற்கு மாறாக ஒன்றைச்சொல்லி தப்பித்துவிடுவார். அல்லது தன்மேல் எந்த தவறும் வராதவாறு அந்த விசயத்தை கடந்துவிடுவார். 

திரை ஒளிப்பதிவாளர், இயக்குனர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள். திரைக்கு பின்னே இருந்த ஒளிப்பதிவாளார்களை, மக்களின் மனதில் நிலைக்கச்செய்தவர்களில் முன்னோடி. இவரைபார்க்கும் ஓவ்வொருவரும் “மகா கலைஞன்” என்பதோடு தனக்குள் “இன்னொரு பிம்பத்தையும், மறு மனிதன் சிந்தனையும்” கொண்டுவிடுவார்கள். ஆனால் பி.சி. ஸ்ரீராம்  மிக எளியவராகவே இருக்கிறார். ஆரம்பநாட்களில், எனக்கே அப்படியான பிம்பமும், சிந்தனையும் இருந்தது உண்மைதான். காரணம், அமைதியாக தோற்றமளிப்பார், பேச ஆரம்பித்தால் கீச்சுக்குரலில் வேகமாக, சுருக்கமாக பேசுவார். அவரின் இயல்பே இதுதான் என்றதும், நான் என் இயல்புக்கு உடனே வந்துவிட்டேன். 

சமீபத்தில் ஒரு காணொளி செவ்வியில், (Video interview) தன்னை பேட்டி கண்டவரிடம் சொல்கிறார். “ எனக்கும் இது ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு நல்ல பேட்டியாக இருந்தது. நான் சொல்வதை புரிந்துகொண்டு அடுத்த அடுத்த நல்ல கேள்விகளுக்கு வந்தீர்கள். அதற்காக நன்றி. நிறையபேர் நான் சொல்றதை, நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியலை என்று என்னிடம் சொல்லுவார்கள்” என்று பேட்டியை முடித்துக்கொண்டார்.  இதன் காரணம் உங்களுக்கும் புரிந்திருக்குமே!

ஒரு ஓவியர் சொன்னார் “அழகாக இருக்கும் பெண்களெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்து பேசவே பயந்திருக்கிறேன்”. 

எனக்கும் அத்தகைய பயம் இருந்திருக்கிறது. என் கேரிகேச்சர் வேலைகளில், தமிழே பேசத்தெரியாத, தமிழ் பேசினாலும் புரிந்துகொள்ள முடியாத, தமிழ்நாடு, சென்னையில் வாழும்  “ஒரு அழகான பெண்” பைசா செலவு செய்யாமல் என்னிடம் வேலைகளை வாங்கிவிட்டு, மூன்று முறை அலைக்கழித்துவிட்டு, கைவிரித்துவிட்டார். அந்த வேலையில் நான் ஈடுபட காரணம், அவள் பெண் என்பதும், அழகும், பணக்காரத்தனமும், அவள் வேலைபார்த்த நிறுவனமும், அவளின் வேலை தகுதியும், அது தந்த “பிம்பமும், மறு மனித சிந்தனையும்” தான். அதோடு நானும் இது “விதியின் சதி” என்று நினைத்து விட்டுவிட்டேன். இன்றுவரை எந்தப்பதிலும் இல்லை. 

ஆகவே, ஒரு மனிதர் (ஆண், பெண் இருபாலரும்) இயல்பாக இருப்பதுதான் நியதி. யாருக்காகவும் அவர்கள் தன்னை மாற்றிக்கொள்வதில்லை, மாற்றிக்கொள்ள வேண்டியதும் இல்லை. அதைப்போலவே அவரை, நாமும் எந்த “பிம்பத்திற்கும், மறு மனித சிந்தனைக்குள்ளும்” அடக்கிவைக்க வேண்டியதில்லை. அவர்களைப்போலவே நாமும் இயல்பாக இருக்கப்பழவேண்டியது அவசியமானதாகும்.

முக்கியமாக, உங்கள் மனைவியே, கணவனோ, குழந்தைகளோ, நண்பர்களோ கூட இயல்பாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் அப்படியே இயல்பாக அவர்களிடம் பழகிப்பாருங்கள். வாழ்வில் இனிமை இருப்பதை உங்களுக்குள்ளும், தக்கவைப்பீர்கள்.

வாழ்க வளமுடன்.



New Year Artwork from Paintstorm Studio


 புத்தாண்டிற்காக ஏதேனும் எழுதியே தீருவது என்று நினைத்த நொடி, அந்த புதிய நாளின் இறுதி நேரத்திற்கு (23.06 மணி) எழுதிய பதிவு. :D

புத்தாண்டு சபதம் என்றெ கொள்கையெல்லாம் பள்ளிக்காலத்திலேயே கைகழுவியாயிற்று. எந்த தவறும் என்னிடமில்லை என்ற ஓர் உயர்ந்த நோக்கம் என்னிடம் உண்டு. யாரேனும் சுட்டிக்காட்டும் தவறுகளை அவ்வப்பொழுதே திருத்திக் கொள்ளும் பக்குவமும் எனக்குண்டு. 

முக்கியமாக, இணையதளம் என்ற பொதுவெளிக்கும், பரந்த உலகளாவிய வேலைகள் என்ற நிலையிலும் என்னை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இந்த “சுகுமார்ஜி யார்?” என்று தேடினால் கொட்டிக்கிடக்கும் விபரங்களே போதுமானது.

சமீபத்தில் கூட, ஒரு நண்பர் ஓவிய வேலைகள் மூலமாக அழைத்திருந்தார். தேர்தல் நெருங்குவதைப் பொருட்டு, சில பல கேலிச்சித்திரங்கள் “கேரிகேச்சராக” வரும், வளரும் அரசியக் கட்சி தலைவர்கள் குறித்த ஓவியம் தேவைப்படுகிறது. நீங்கள் வரைந்து தாருங்கள் என்றார். அவர் விவரித்து சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே... 

“இல்லை, இதற்கு நான் தயாரில்லை. இதுவரை எந்த அரசியல் தலைவரையும், ஏதேனும் கருத்துக்களோடு கேலிச்சித்திரங்கள் வரைந்ததில்லை. (என்னுடைய வளர்ச்சியில் பழகிய நிலைக்காக சில ஓவியங்கள் மட்டுமே உண்டு.) எனவே என்னால் இயலாது” என்று உடனேயே தெரிவித்து விலகிக்கொண்டேன்.

கூடவே இன்னொன்றையும் சொன்னேன். “ஒருவேளை எனக்கு “அந்தபத்திரிக்கையில்” எனக்கு ஒரு வேலை வாங்கி, நிறுவன கேலிச்சித்திரக்காரர் ஆகிவிட்டால் வரைந்து தர சம்மதம்” என்றேன்.  அதற்கு பிறகு அழைப்பு இருபக்கமும் முடித்துக் கொள்ளப்பட்டது. 

ஒரு ஓவியன் ஏற்கனவே மனதிருப்தியில் இருப்பவன். அவன் வெறுமனே புகழுக்காக வரைவதில்லை. பெரும்பாலும் “ஓவியர்கள்” போய்ச்சேர்ந்த பிறகுதான் மதிக்கப்படுவார்கள். இது உலக இயல்பு. ஆனால் இதற்கெல்லாம் ஓவியன் கவலைப்படுவதில்லை. அடுத்தவர் பாராட்டவேண்டும் என்பதற்கு முன்னேலேயே தான் தன்னால் புகழ்ந்து நிறைவைப் பெற்றுவிடுகிறான் அந்த ஓவியன்.

இந்த நாளில் சும்மாவேணும் ஒரு கிறுக்கலை வரைந்து கொண்டிருந்தபொழுது, அது நன்றாக வெளிவந்திருப்பதாக தோன்றியது, சரி, நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக நேர்த்தி செய்து, வண்ணக்கலவை கொடுக்க, அழகான பெண் ஓவியம் மலர்ந்தது. எனக்கும் திருப்தியாக இருந்தது. என் நண்பர் சு. கிருஷ்ணமூர்த்தியிடம் பகிர்ந்துகொண்டேன்.  இந்த பதிவுக்காக உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.






Final Result


Software: Paintstorm Studio

Tool: Wacom Digital Tab

Time: 2 hours

Model: Nil


இந்த புதிய ஓவிய மென்பொருள், போட்டோஷாப் க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கிறது. (ஓவிய வேலைகளுக்கு மட்டும்). 


எழுதிய பதிவை 23.56 மணிக்கு ஏற்றியாகிவிட்டது. :D