Keep it safe, will become history | CJ

Keep it safe, will become history

Keep it safe, will become history


 பாதுகாப்பாக வைத்திருங்கள், வரலாறாக மாறும்!



ன்று, எனது அத்தையை நினைவு கூறவேண்டியதாக இருந்தது. தன் கணவரின் மறைவிற்குப்பிறகு, குடும்ப பொறுப்புக்களிலிருந்து விலகி,  தான் உண்டு, தன் காரியும் உண்டு என்று, அமைதியாக தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்தவர். தன் எதிர்ப்பைக்கூட புன்சிரிப்பாக தரும் பண்புக்கு தன் வாழ்வின் கடைசிக்காலங்களில் வந்திருந்தார். எனக்கு சில நுணுக்கங்களையும், திறமைகளையும், சிந்தனைகளையும், ஆன்மீக சிந்தனைகளையும் அவ்வப்போது எனக்கே தெரியாமல் ஊக்குவித்தவர் என்பதை என் 14 வயதிற்கு பிறகுதான் அறிந்துகொண்டேன்.

நூல் பின்னல் வேலைகளும் (Embroidery), கோலங்களும் (Mandala), சிறிய பூ, இலை ஓவியங்களும் (Flower and Leaft Arts), காகிதத்தில், கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி புதிது புதிதாக வடிவங்களை உருவாக்குவதும் (Paper cutting design works) அவரின் திறமைகள், அவற்றை எனக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் இக்கால குழந்தைகளுக்கு ஆர்வமில்லை, அப்படி கற்றுக்கொள்ளும் பொறுமையும் இல்லை. 

நாளிதழ்களிலும், வாரபத்திரிக்கைகளிலும், திருமண அழைப்பிதழ்களிலும் காணப்படும் சிறுசிறு அச்சுவடிவங்களை தனியே பிரித்தெடுத்து, அழகாக வேறொரு அமைப்பில் ஓட்டி அழகுபடுத்துவார். உதாரணமாக, ஒரு அட்டையில் ஒட்டப்பட்ட போட்டோவில் (Photo Mounded) இந்த “வெட்டி எடுக்கப்பட்ட” வடிவங்களை அமைத்து, முப்பரிமான காட்சியை (3D Vision) ஏற்படுத்துவார். அதற்குப்பிறகு அதை, வெளியே ஒளிப்பட கடைகளில் கொடுத்து, மரச்சட்டங்களில் அமைத்து, சுவரில் தொங்கவிடக்கூடிய வகையில் மாற்றிக்கொள்வார். அப்படியான படங்கள்தான் எங்கள் வீட்டை அழகுபடுத்திக்கொண்டிருந்தன. 


முக்கியமாக அவருக்கு, இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி ஒன்று உண்டு. அதற்கு பூட்டு எதுமில்லை. ஆனால் என் அத்தையை தவிர வேறு யாரும் திறப்பதற்கு அனுமதி இல்லை. அந்தக்காலத்தில் மர அலமாரியும், ஒரு தனியாக தூக்கமுடியாத அளவில் பெரிய இரும்பு பெட்டியும்தான், மணமக்கள் சீதனமாக வழங்கப்படுவது வழக்கம். அத்தகைய இரும்புபெட்டியோடும், அலமாரியோடும், ஒரு பெரிய ஜமுக்காளம், அதில் மணமக்கள் பெயரும் பின்னப்படிருக்கும், இரண்டு பட்டு உறை போர்த்திய தலையணையும் உண்டு. (Trunk Box, Woodden Wardrobe, Bedsheet, Silk cloth covered pillows)

என் அத்தை வைத்திருந்த பெட்டியில், எனக்கு விபரம் தெரிந்து பார்த்தவரையில், அங்கே இருந்தவை காகிதங்கள், அட்டைகள், பைகள், வண்ண வேலைப்பாடு கொண்ட வாழ்த்து அட்டைகள், பட்டு துணிகள், திருமண அழைப்பிதழ்கள், முழுவடிவ வருட நாட்காட்டி அட்டைகள், ஓவியங்கள், இறைவன் ஓவிய படங்கள் (Printed papers, Multicolor printed papers, Greeting cards, Silk cloths, Wedding invitations, Yearly, days calendar, Art and Drawings, God pictures) எடுத்தால் கையோடு ஒடிந்து வருமளவு மக்கிப்போன பக்கங்கள் கொண்ட நூல்கள் (Old Printed Books). (உதாரணமாக, குமரேச சதகம் நூல்) இப்படி கலவையாக இருக்கும். தனக்கு கிடைக்கும் எல்லா பொருட்களிலும், கலை மிகுந்திருக்கும் காகிதங்களை சேர்த்து வைத்துக்கொள்வதை தன் வாழ்நாளின் கடைசி வரையிலும் விட்டுவிடவில்லை. தன்னுடைய சொத்துபோல இவற்றை பாதுகாத்து வந்தார்.


நாங்கள் கூட்டுக்குடும்பமாக (Joint Family) வாழ்ந்திருந்தோம். அவ்வகையில் ஏதேனும், உறவினர்கள், சொந்தபந்தங்கள் வகையில் திருமணம், சடங்கு, காதுகுத்து, கிரகபிரவேஷம் என்று எவ்வகையில் அழைப்பு பத்திரிக்கை  (Invitations) வைத்தாலும், ஒன்றுக்கு மூன்று கிடைக்கும். அதில் ஒன்று, அப்படியே என் அத்தையின் இரும்பு பெட்டிக்குள் போய்விடும். வேறு யாரேனும் ரத்த உறவினர்கள், வேண்டாம் என்று தூக்கி எறிந்த சில ஒளிப்படங்களைக்கூட (Family Photograph) என்னிடம் இருக்கட்டும் என்று வாங்கி வைத்துக் கொள்வார். 

சிறுவயதில், நாங்கள் கிண்டலடிப்போம்...

‘இதெல்லாம் குப்பைக்கு போகிற சமாச்சாரம், இதனாலே என்ன பயன்?”

“இதற்கு பதிலாக பணத்தை சேர்த்துவைத்திருந்தால் நல்லா இருக்குமே?”

“ஏன் இந்த கிறுக்குத்தனம்?”

“இந்த முட்டாள் தனத்தை வேறுயாரேனும் செய்வார்களா என்ன?”

இப்படியாக பல வகையில் கேள்விகளை கேட்டு திணறடிப்போம். எல்லாவற்றிற்கும் புன்னகையே பதிலாக இருக்கும். ஆனால் அத்தையின் மனதிற்குள் ஒரு சோகம் இருந்திருக்கலாம் என்று இப்போது புரிகிறது. பொழுதுபோக்காக, தன் இரும்புப்பெட்டிக்குள் சேர்த்து வைத்த அந்த பொருட்களின் மதிப்பு அல்லது நோக்கம், எனக்கு அப்போது அறிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. ஆனால் சில காலத்திற்குப்பிறகு, ஓவியர், நடிகர். சிவக்குமார் (Artist, Actor Sivakumar) அவர்களின் தேசப்பிதா காந்தி (Mahatma Gandhiji) ஓவியத்தை (Ink stroke Art) பிரதி எடுத்து வரைந்ததை பத்திரப்படுத்தும் பொழுதுதான் என் அத்தையில் நோக்கமும் புரிந்தது. மேலும் என் வாழ்வில் நானே மிகவும் விரும்பி சில பொருட்களையும், தகவல்களையும், கடிதங்களையும், (உதாரணமாக, என் கவிதை, ஓவியம் இவற்றை பாராட்டி நம் இந்திய ஜனாதிபதி, அப்துல்கலாம் அவர்களின் (Indian President A.P.J. Abdul Kalam) நன்றிக் கடிதம்,  அமெரிக்க ஜனாதிபதி க்ளிண்டன் (American President Bill Clinton) சார்பாக அவரின் அலுவலர்,  என்னை பாராட்டி எழுதிய கடிதம்) அவ்வப்போது நான் வரையும் ஓவியங்கள் இப்படியெல்லாம் பாதுக்காக்க நினைத்த தருணங்களில், என் அத்தையின் தகவல் சேமிப்பில் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தேன். 

என்றாவது ஒருநாளோ அல்லது பொங்கலுக்கு முதல்வாரத்தில், வீடு வெள்ளையடிக்கும் பொழுது, இருப்பதை கழித்துப்போடும் சாக்கில், வெறுமனே தூசி தட்டி மீண்டும் அடிக்கி வைக்கும் நேரத்தில், அத்தையோடு நானும் அந்த இரும்புபெட்டியில் இருந்த பழைய சேமிப்பினை பார்த்து ரசித்து, காலத்தை பின்னோக்கி நினைப்பதுண்டு. ஆனாலும் இத்தகைய “குப்பையான” கால சேமிப்பு யாராலும் மதிக்கப்படவில்லை என்பது உண்மைதான். மிக முக்கியமான காரணம், குடும்பத்தின் பொருளாதார தேடல். ஓவ்வொருவரும் எப்படி தன்னிறைவு அடைவது என்ற நிலையிலேயே இருந்ததால், அத்தையையே யாரும் கண்டுகொள்ளாத நிலைதான். நானே கூட வேலைக்கு சென்ற நாட்களில் பழைய குறிப்புக்கள் குறித்தோ, இரும்பு பெட்டி குறித்தோ அத்தையிடம் பேசுவதில்லை. அத்தைக்கும்  தன் பேரக்குழந்தைகளோடு கலந்து பேசி, கவனித்து, கூடவே இருந்ததில், இரும்புபெட்டி பக்கம் செல்ல நேரமில்லை. மேலும் அத்தையின் இரும்புபெட்டி, வீட்டில் இடத்தை அடைக்கிறது என்று பரண்மேலும் போட்டாகிவிட்டது சோகம். 

காலத்தாலும், வயோதிகத்தாலும் அத்தைக்கு இரு கண்ணிலும், அறுவைசிகிச்சை செய்தும்,  ஒரு கண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையும் குறைந்துவிட்டது. ஆனாலும் கிடைப்பதை தனியே ஒரு பிளாஸ்டிக் பையில் சேமிக்கும் பழக்கம் குறையவில்லை.

திருமணத்திற்குப்பின், நான், எனக்கு கிடைத்த வேலையின் காரணமாக திருச்சியில் வாழத்துவங்கி விட்டேன். அத்தை, மதுரைக்கு சென்றுவிட்டார். அந்த இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி அவரோடு கூடவே, எங்கள் வீட்டிலிருந்து அவரின் பெரிய மகன் வீட்டில் இருந்து. ஆனால் அங்கேயும் பரணில் தான் அதற்கு இடம் கிடைத்தது. வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறை, என் அத்தையை பார்த்து பேசி வருவதாக அமைந்தது. கடந்த 2002ம் ஆண்டில் தன் உடல் நலக்குறைவால் இயற்கையோடு கலந்தார். அத்தையே போனபிறகு, இரும்புபெட்டி குறித்த கவனமும் போய்விட்டது. ஆனாலும் யாரும் அதில் கைவைக்கவும், தூக்கி எறியவும் யோசனை எழவில்லை. 

கடந்தவாரம், மதுரையில் வீடு பெயிண்ட் அடித்து, பொருட்களை கலைத்து அடுக்கும்பொழுது, அத்தையின் அந்த இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி திறக்கப்பட்டது. எங்களின், எங்கள் குடும்பத்தை சார்ந்தோரின் தொடர்பான, ஒளிப்படங்களும், திருமண அழைப்பிதழ்களும், ஓவியங்களும், குறிப்பு மற்றும் தகவல்களும் வெளியே எடுக்கப்பட்டன. எடுத்துப்பார்த்து மகிழ்ந்து, அதை மின்னணு பிரதி எடுத்து, (Digitalized copy) அந்தந்த குடும்ப உறவினர்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், வாரிசுகளுக்கும் அனுப்பப்பட்டது.

“ஆஹா, எங்க அப்பா கல்யாண பத்திரிக்கை, சூப்பர்”

“ஹே, எங்க தாத்தா, பாட்டி போட்டோ”

“சூப்பர், எங்களோட காதுகுத்து பத்திரிக்கை”

“அட என்னோட சின்ன வயது போட்டோ”

“ஹா எங்கம்மா சின்ன வயசிலே”

“ஹாஹா, எங்க அப்பா என்னா ஸ்டைலா போட்டாலே இருக்கார் பாரு”

இப்படியாக பலவகையிலான குதூகலம் பரவியது எல்லோரிடமும். அத்தை காலமாகி 19 வருடங்களுக்குப்பிறகு, கிட்டதட்ட 70 ஆண்டுக்கால தகவல் குறிப்புக்களும், பதிவுகளும் இன்னமும் அப்படியே தன்னை வெளிப்படுத்துகின்றன. 

இன்றைக்கு குப்பையாக தோன்றலாம், காலத்தால் வரலாறு ஆகலாம்.

Thanks and Photos Source from: rashminotes.com and photocase.com