Compansation and Athma Shanti
பரிகாரமும், ஆத்மா சாந்தியும்
Arulmigu Magudeshwarar Temple - Kudumudi - Erode Distric, Tamilnadu, India. |
நேற்று கொடுமுடி (Kodumudi) , மகுடேஷ்வரர் திருக்கோவில் (Magudeshwarar Sivan Temple) காவிரி (River Cauvery) ஆற்றங்கரைக்கு செல்லும் பயணம் நேர்ந்தது. அந்த கோவிலுக்கு செல்லும் எல்லா வீதிகளிலும், பரிகார் (ஹிந்தி) கடை இருக்கிறது. அங்கே இறந்தவர்களுக்கு கருமாதி எனப்படும் ஆத்மா சாந்தி, வாழ்க்கை வசதி தடை விலக்கல். திருமண வாய்ப்பு உருவாக்குதல் என்ற வகையில் பரிகாரம் செய்வதற்கான எல்லா பொருட்களும், செட் செட்டாக (ஒரே தொகுப்பாக) விற்கப்படுகிறது. பூக்கடைகளும், வண்ணப் பூமாலை கடைகளும் நிறைய இருக்கின்றன.
வீதியின் வழியே செல்லும் எல்லோரையும்,
“வாங்க பரிகாரமா? நான் செய்து தருகிறேன்” என்று கை பிடித்து அழைக்காத குறையில் பரிகாரம் நடத்தும் விற்பனர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்றல்லாது எல்லோரும் இதில் இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
கொடுமுடியின் இந்த ஸ்தலம், பரிகாரத்திற்கு மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். மனித ஆத்மாவின் வாழ்க்கை முடிவுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் தொடக்கமான திருமணமும் இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது.
Ritual athma santhi parikar at Cauvery river - Kodumudi |
திருச்சி மாவட்டத்திற்கும் நுழையும் காவிரி, அகண்ட காவிரி என்று அழைக்கப்படும். ஆனாலும், இங்கே கொடுமுடியிலும் அகண்ட காவிரியாகத்தான் ஓடிவருகிறாள். இப்போதும், முழங்கால் நீரில் மூழ்கும் அளவில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்துவரும் காவிரி ஆறு, கொடுமுடியில்தான் கிழக்கு நோக்கி பாய்ந்து, கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக, தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களை அடைந்து கடலில் தஞ்சமாகிறது. கொடுமுடி காவிரியில் குட்டியாக நிறைய மீன்களும் வலம் வருகின்றன. இதுவரை இப்பெரும் ஆற்றை கண்டிராத குழந்தைகள், மீண்டும் மீண்டும் நீரில் இறங்கி எழுவதை காணமுடிந்தது. இப்படியெல்லாம் குழந்தை குழந்தையாகவே இருப்பதை இங்கேதான் கண்டேன்.
படித்துரை முழுதும், யாரோ அவிழ்த்துப்போட்ட துணிகளும், உள்ளாடைகளும் கவனிப்பாரற்று கிடந்தன. உன் வாழ்க்கை சோகத்தோடு, இதையும் அங்கே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு என்று யார் பரிகாரம் சொன்னது என்று தெரியவில்லை.
பரிகார ஸ்தலம் என்றால், புண்ணியத்தை வேண்டிப்பெரும் இடம்தானே?! அதை எப்படி தூய்மையாக, சுகாதாரமாக, மற்றவர்களும் வந்துபோகவேண்டும் என்ற கவனத்தோடு, பெரும் நோக்கத்தோடு உபயோகப்படுத்தும் நிலை, நம்மிடம் அறவே இல்லை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், நாற்றங்களும், ஆற்றின் கரையில் மிதக்கும் வேண்டாத பொருட்களும், பரிகாரத்திற்குப்போய் வந்து நமக்கே பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது.
பரிகார விற்பனர்கள் அங்கங்கே குடில்கள், வீடுகள் அமைத்திருக்கிறார்கள். அதன் வாசலில் தற்காலிக பந்தல் அமைத்து, வேண்டுவோருக்கு பரிகார சடங்குகள் செய்துதருகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் மட்டுமே உட்காரும், பிளாஸ்டிக் இருக்கைகள் உள்ளன. நாம் உட்கார்ந்தால் அடுத்த நொடி “அங்கே போய் உட்காருங்க” என்று கிளப்பிவிடுகிறார்கள். செருப்பைக்கூட அங்கே தனிப்பட்ட ஓரிடத்தில்தான் கழற்றி வைக்கவேண்டியுள்ளது.
Tree around the snake stones and deities |
பெரிய ஆலமரமும், நாக சிலைகள் அடுக்கப்பட்ட கல் மேடையும், ஆற்றின் கரையெங்கும் இருக்கிறது. அதைச்சுற்றியுள்ள தரைப்பகுதியில்தான், பரிகார சடங்குகள் நிகழ்த்தித் தரப்படுகின்றன. சிலர் வேண்டுதலாகவே நாக சிலைகள் வாங்கி வணங்கி, அந்த ஆலமர மேடையில் வைத்துவிடுகிறார்கள். பரிகாரத்திற்கு நாங்கள் அங்கே விசாரித்தவகையில், பரிகார சடங்கு செய்ய தொகை, குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். அதுபோக அங்கே விரித்துவைத்திருக்கும் சடங்கு பொருட்களும், நவதானியங்களும், மளிகை சாமான்களும், காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் கூட, பரிகார விற்பனர்களுக்கே சென்றுவிடும். கூடுதலாக ஒரு பித்தளை சொம்பு, ஒரு பட்டுக்கரை வேட்டியும் தானம் உண்டு. வசதி இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக செய்யலாம். அந்தக்காலத்தில் பசுமாடும், கன்றுக்குட்டியும் தானம் தருவார்கள். கொடுமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் என்று சொல்லுகிறார்கள். ஆகவே இத்தகைய பரிகாரமும் அக்காலம் முதற்கொண்டே நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
எல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான உண்மை என்ன தெரியுமா? பரிகாரத்தால் ஒரு பயனுமில்லை. பரிகாரம் செய்வதால், இறைவனும் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆத்மாவும் சாந்தியடைவதில்லை.
இறை மனிதர்கள் செய்யும் எந்த தந்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதல்ல. நமக்கென்று நம் கருமையத்தில் ஏற்கனவே இருக்கிய வினைப்பதிவுகளையும், நாமே வரவழைத்துக்கொண்ட வினைப்பதிவுகளை அவ்வப்போது ஆராய்ச்சி செய்து, மனதையும், உடலையும், தூய்மை செய்து கொள்வதுதான் சரியான வழி. இதற்கு யோகமும், தவமும் முக்கிய தேவை. உடற்குறைகளை போக்கிக்கொள்ள அதற்கான உடற்பயிற்சியும் தேவை. அதன்றி, உனக்கு, இது செய்கிறேன், அது செய்கிறேன் என்மீது கருணைமழை பொழி என்று வேண்டுவது அபத்தம். இறைக்கு படைக்கும் பொருளனைத்தும் இறை படைத்ததே தவிர, உனதானது எது?!
ஒரு ஆத்மா சாந்தி பெற, இறந்தவரின் நினைவில் நின்று, வாழ்த்தி வணங்கி, அவர் விட்டுச்சென்ற நற்செயல்களை செய்வதும், அல்லது உறவினர்கள், உதாரணமாக, வாழ்க்கை துணைவர், மகன், மகள், பேரக்குழந்தைகள் ஆகியோர், அவரின் பெயரில் நன்மைகளை மக்களுக்கு செய்வதுமே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வழி செய்யும். குலதெய்வம் என்று சொல்லப்படுகிற முறையும் இதுவே. காலம் காலமாக, ஒருகுடும்பத்தில் குலதெய்வம் வழிபாடு, வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைந்து வழிபடும் முறையாகவே இருந்துவருவது உண்மை.
இந்த பரிகார சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களில் இருக்கும் பொது அர்த்தம் என்ன தெரியுமா?
“சிவம், சக்தி, விநாயகன், கந்தனுக்கான இறைத்துதிகளும், வணக்கங்களும், பிறகு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, இராகு, கேது ஆகிய கிரங்களுக்கான வணக்கங்களும், நான்கு தலைமுறை பாட்டனார், கொள்ளுதாத்தா, தாத்தா, தந்தை, இறந்து போன நபர் ஆகியோரின் பெயர் சொல்லி அவர்களை நினைத்து வணங்கி, உங்கள் பெயரில் இதை நடத்தி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டியும், உங்களுக்காக இதை தானமாக வழங்கவும் செய்கிறோம். எங்களோடு கலந்திருந்து நீங்கள் உன்னதம் அடைவீர்களாக. உங்கள் பெயரில் பிண்டம் வைத்து ஆற்றில் விடுகிறோம். (மீன், காகம் போன்ற) உயிரினங்களாக வந்து பசி தீர்த்துக்கொள்வீர்களாக. இனியும் நாங்கள் தானம், தருமம் செய்து எங்களை திருத்திக்கொள்கிறோம்” என்பதாக அமைந்திருக்கிறது.
பிண்டம் வைத்து வணங்கி, சமைக்காத அவ்வுணவை ஆற்றில் விடும்பொழுது, மீனுக்கும், காகத்திற்கும் இரை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆத்மாவுக்கு என்ன? என்று விடைதருவார் யாருமில்லை. ஒரு நபர் செய்யும் பரிகார சடங்கு, நான்கு தலைமுறை ஆத்மாவுக்கு சாந்தி தரும் என்பது வியப்புக்குரிய செய்தி. இது குறித்த தெளிவு யாரிடமும் இல்லை. கேள்வி கேட்கவும் தயங்கி, எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன் என்றே பதில் கிடைக்கும். இதை செய்யாவிட்டாலும் குற்றம் என்று புலம்பவும் செய்வார்கள். பிறர் ஏதேனும் கேள்வி கேட்டு ஏளனம் செய்வார்கள் என்ற பயமும், இதைக்கூட செய்யமுடியாத என்ன என்ற கிண்டலும், ஒருவேளை “சாந்திபெறாத ஆத்மாவால்” தங்கள் குடும்பத்தில் ஏதேனும் தீங்கு நேருமோ என்ற குழப்பமுமே காரணம். ஆனால் உண்மை என்னவெனில், வாழ்ந்த மனிதரின் இறப்பு பற்றிய விளக்கம் தெரியவில்லை. வாழும் மனிதருக்கு தன் வாழ்வு குறித்தும் அக்கறை இல்லை. தானும் இறப்போமே அப்போது என்ன ஆகிவிடுவோம் என்ற உள் தேடல் கேள்வியும் இல்லை. அக்கேள்விக்கான பதிலைத்தேடவும் ஆர்வமில்லை.
“இறந்தவனை சுமந்தவனும், இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்”
பின்குறிப்பு: இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. யோகம், தவம், உடற்பயிற்சி என்ற சிந்தனை தூண்டுதலுக்காகவே எழுதப்பட்டது. இறை, ஒருகுறிப்பிட்ட இன மறுப்பாளர்கள் இக்கட்டுரையை மேற்கோள் காட்டக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
photos thanks to: tripadvisor, Tamilnadu Tourism and June3 studio