Corona Effect at Madurai
மதுரையில் கரோனா பாதிப்பு
West tower gateway - image source to age Fotostock |
கடந்த செவ்வாய்கிழமை, குடும்ப நிகழ்ச்சி காரணமாக மதுரை (Madurai City, Tamilandu, India) நகரில் இருந்தேன். என் சகோதரியின் மகனோடு, சில பொருட்கள் வாங்குவதற்காக, மதுரை நகரின் மையப்பகுதிக்கு செல்லவேண்டியதாக இருந்தது. கிட்டதட்ட மதுரை சொக்கநாதர், மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுர வாசலின் அருகே. (Sokkanathar, Meenakshi Amman Temple, South Tower Gateway)
பெருகிப்போன வாகனங்களின் நடுவே, நாங்களும் இருசக்கர வாகனத்தில் நீந்தி, தங்க ரீகல் திரையரங்கு (Regal Cinema Theater) எதிரே இருக்கும், டவுன்ஹால் (TownHall Road) சாலையில் நுழைந்து, மக்களின் நெருக்கடி காரணமாக, அங்கே இருந்த நடைபாதை நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பாதையில் உள்நோக்கி நடந்தோம்.
மதுரை முன்னைவிடவும் மிக நெரிசலில் சிக்கித்தவிப்பதை அறியமுடிகிறது. இதோடு, ஸ்மார்ட் சிட்டி (Smart City Project) எனும் திட்டத்தில், மதுரை சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. மாமிசம் வெட்டித்தரும் இடத்திலிருக்கும், அடிமரத்தின் மேல்பகுதி போல நல்ல அடி வாங்கியிருக்கிறது நகரின் எல்லா சாலைகளும். எனக்குத்தெரிந்து மதுரை மக்கள் பொறுமைசாலிகள், சீண்டாமல் தன்னை வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால், இப்படி குண்டும் குழியும் பல தசம ஆண்டுகளாக இருந்தும், ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மாநகராட்சி (City Corporation) நிர்வாகமும் குழப்பமடைந்திருக்கிறதோ என்னவோ?
மதுரை நகரம் முழுதும், பனி படர்ந்து தவழ்ந்துவந்து நம் கண்ணை மறைப்பதுபோலவே எங்கும் மணல், தூசி படலம் பறந்துகொண்டே இருக்கிறது. ஒருநாள் முழுதும் மதுரை நகரை சுற்றிவந்தால் “மோட்சம்” நிச்சயம்.
வீட்டிலிருந்து கிளம்பும்பொழுதே,
“எனக்கும் தலைக்கவசம் (Helmet) வேண்டுமா? கேட்பார்களா?”
“இல்லை, ஆனா மாஸ்க் (corona mask) நிச்சயம் வேண்டும், ஃபைன் (Fine) கேட்பார்கள்”
ஏற்கனவே என்னிடமிருந்த மாஸ்க், வியர்வையில் நனைந்து, நசிந்து போனதால், இந்தமுறை 20 ரூபாய் மாஸ்க் இரண்டு வாங்கி, ஒன்றை அணிந்துகொண்டேன். இந்த மாஸ்க், நம்மை மூச்சுமூட்டவைக்கிறது உண்மைதான். ஆனால் இன்னமும், கரோனா தொற்று புரியாத மனிதர்கள் 1) ஒருஅடிக்குள்ளும் நெருங்கி பேசுவதும் 2) கைமூடாமல், மறைக்காமல் தும்முவதும் 3) பேச்சினிடையே இருமுவதும் நடக்கிறது. இவர்களுக்காகவே, நாம் மாஸ்க் அணிவது முக்கியமாகிறது.
உங்கள் கவனத்திற்காக |
உங்கள் கவனத்திற்காக |
ஆனால் மிகச்சிலரே, இங்கே மாஸ்க் அணிந்திருப்பதை காணமுடிந்தது. பிறரைப்பற்றி நமக்கென்ன? நான் அணிந்திருக்கிறேன் நல்லதே என்றெண்ணி கடந்தோம்.
பள்ளம், மேடு, சமதளம், வெளியே பாய்ந்து நிற்கும் இரும்பு கம்பிகள், செங்கல், சிமெண்ட் தடுப்பு, தற்காலிக மரப்பாலம், இரும்பு வலைப்பாலம் இவற்றில் எல்லாம் கவனம் வைத்து நடந்து, அங்கங்கே இருந்த தடுப்பு வளையங்களையும் கடந்து, மேற்கு கோபுரவாசல் வந்துவிட்டோம். அந்த வீதியின் முனையில் இருந்த தடுப்பு வளையத்தின் அருகே, ஒரு காவல் துணை ஆய்வாளர் (Sub-Inspecter) தன் இருசக்கரவாகனத்தில் உட்கார்ந்திருந்தார், ஒரு காவலர் (Police) கையில் நோட்டும், பேனாவோடும், விறைப்பாக நின்றிருந்தார். இருவருமே மாஸ்க் அணிந்திருந்தனர்.
நான் இவர்களை பார்த்துக்கொண்டேதான் அந்த வீதியில் நுழைந்தேன். உண்மையிலேயே இப்படியான காவலர்களின் பாடுதான் மிகுந்த அவஸ்தை. மழையும், வெயிலும், வேலையின் கடுமையும், சமூகத்தின் அக்கறையும் கூட இவர்களை சினம் கொள்ளவைக்கும். அமைதியான காவலரை, பணி ஓய்வு பெற்ற நிலையிலும் காண் இயலாது என்பதுதான் உண்மை. நம் ஆறுதல் வார்த்தைகள் கூட இவர்களின் மன நிலையை வெறி ஏற்றும்.
கால் இடறும்படி, கொத்திப்போட்ட வீதியின் உள்ளே உள்ள, கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு நடந்துவருகையில், நான் மாஸ்கை கழற்றி ஒரு கையில் பிடித்துக்கொண்டு, கைத்துணியால் முகத்தை துடைத்துக்கொண்டு, மீண்டும் மாஸ்க் அணிய தாயாரானேன், அதற்குள் நாங்கள் உள் நுழைந்த, காவலர்கள் நின்றிருந்த தடுப்பு வளையம் வந்துவிட்டது.
“இங்கவாங்க, 200 ரூபாய் ஃபைன் கட்டுங்க”
என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். அடப்பாவிகளா? அதுகுள்ளேயுமா? என்று மனதில் நினைத்தபடி அருகில் சென்றேன். ஒரு நோட்டில், ஓவ்வொரு நிலைக்கும் இந்த இந்த தண்டனை தொகை என்று அச்சிடப்பட்டிருந்தது. என் சகோதரியின் மகன் திகைத்து நின்றான். என்னையும் பார்த்தான். அதில் “நான் அப்பவே சொன்னேன்ல” என்ற அர்த்தம் இருந்தது.
“இங்கே பாருங்க, எனக்கு அடிக்கடி வியர்க்கும். அதுனாலே அப்பப்போ துடைத்துக்கொள்வேன். கையிலேதான் கழற்றிய மாஸ்க் வைத்திருக்கிறேன். மறுபடி அணிந்துகொள்வதற்குள் இப்படி கேட்டா என்ன செய்வது?” என்றேன். இருபக்கமும் கொஞ்சம் அமைதி நிலவியது.
“சிட்டி எப்படி மோசமான நிலையிலிருக்கு?! கவனமா இருங்க” என்று சொல்லிவிட்டு என்னமோ முணங்கிக்கொண்டார் அந்த காவலர்.
“சரி, இனி கவனமாக இருக்கிறேன். நன்றி” சொல்லிவிட்டு, அங்கேயே மாஸ்க் சரியாக அணிந்திருக்கிறேனா என்பதை கவனித்துவிட்டு நகர்ந்தேன்.
செவ்வாய் கிரக (Mars Planet) ஆளுமைக்கும், செவ்வாய் கிழமைக்கும் (Friday) எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று என் நண்பர் சொல்லுவார். ரொம்ப உதார் விடாதீங்க, மாட்டிக்குவீங்க என்று பயமுறுத்தியிருக்கிறார். அதனாலே “அடக்கி வாசிப்பது” பழக்கம். இதை என் இன்னொரு நண்பரிடம் சொன்னபொழுது, அடக்கி வாசிச்சா எப்படி கிதார் (Guitar) பழக முடியும் என்று கிண்டலடித்தார். நான் கிதார் வைத்திருக்கிறேன். கொஞ்சம் கிதார் வாசிப்பேன்.
குறிப்பாக என்னை நிறுத்தியது எப்படி என்பது எனக்கு புரியவில்லை. அந்த காவலர்களை கடந்து, எங்கும் தலைதிருப்பி பார்த்ததில், கொஞ்சமும் பயமின்றி, மாஸ்க் இல்லாத பல முகங்களை காணமுடிந்தது. நல்லவேலையாக அவர்களிடம் தண்டனைத் தொகை இல்லைபோலும். ஆனாலும் இது எனக்கொரு பாடமே. மனதிற்கு அக் காவலரை வாழ்த்திக்கொண்டே வீடு நோக்கி நகர்ந்தேன்.
“நல்லவேளையே தப்பிச்சீங்க” என்றான் என சகோதரியின் மகன்.