The Other Side of Man - Part 2
இசைஞானி இளையராஜா அவர்கள் எப்போது பேட்டி கொடுத்தாலும், (பெரும்பாலும் தருவதில்லை) எதாவது “இவரை சிக்கவைக்க ஏதேனும் சொல்லுவாரா?!” என்று பெரும்பாலும் எண்ணுவார்கள். உள்ளதை உள்ளபடியும், சுற்றி வளைக்காமலும், எளிய வார்த்தைகளாக பேசக்கூடியவர்களில் இவரும் ஒருவர். அதனால் இசைஞானி இளையராஜா எது சொன்னாலும் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று கிளம்புவார்கள். உண்மையிலேயே பிரச்சனை, நம் மக்களின் “மறு மனிதன் சிந்தனையில்தான்” இருக்கிறது.
இசைஞானி இளையராஜா, தானாக மேடைகளில் பேசினாலும், அப்படியான வில்லங்க பிரச்சனையாக மாறிவிடும் அல்லது மாற்றிவிடுவார்கள். உண்மையில் இசைஞானி இளையராஜா உள்முக தேடலில் ஆழ்ந்துபோனவர் என்றே நான் கருதுகிறேன். எனக்கு கிடைத்த சில குறிப்புக்களின் வழியாக, அவர் “தீட்சை” பெற்று தவம் பயின்றவராகவே இருக்கிறார். இதனால், குறிப்பாக, எளிமையாக, தனக்கு தோன்றுவதை சொல்லிவிடும் தன்மை வந்துவிடுவது இயல்பு.
இப்படியான மனிதர்களிடம் நாம் கலந்துரையாடுவதற்கு எளியவழி உண்டு. அது, நாம் இயல்பாக இருப்பதுதான். எதிராளைப்பற்றிய எந்த பிம்பத்திற்கும் நாம் வந்துவிடக்கூடாது. முக்கியமாக “மறு மனிதன் சிந்தனை” வேண்டவே வேண்டாம்.
திருட்டுத்தனம் உள்ளவர்தான், உலக இயல்பில், இதை பேசினால் தப்பாகிவிடும், இதைச்செய்தால் தப்பாகிவிடும், இவர் என்னை தப்பாக நினைப்பார், பிரச்சனை உருவாகிவிடும் என்று பயந்தும், தயங்கியும், தான் நினைத்ததிற்கு மாறாக ஒன்றைச்சொல்லி தப்பித்துவிடுவார். அல்லது தன்மேல் எந்த தவறும் வராதவாறு அந்த விசயத்தை கடந்துவிடுவார்.
திரை ஒளிப்பதிவாளர், இயக்குனர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள். திரைக்கு பின்னே இருந்த ஒளிப்பதிவாளார்களை, மக்களின் மனதில் நிலைக்கச்செய்தவர்களில் முன்னோடி. இவரைபார்க்கும் ஓவ்வொருவரும் “மகா கலைஞன்” என்பதோடு தனக்குள் “இன்னொரு பிம்பத்தையும், மறு மனிதன் சிந்தனையும்” கொண்டுவிடுவார்கள். ஆனால் பி.சி. ஸ்ரீராம் மிக எளியவராகவே இருக்கிறார். ஆரம்பநாட்களில், எனக்கே அப்படியான பிம்பமும், சிந்தனையும் இருந்தது உண்மைதான். காரணம், அமைதியாக தோற்றமளிப்பார், பேச ஆரம்பித்தால் கீச்சுக்குரலில் வேகமாக, சுருக்கமாக பேசுவார். அவரின் இயல்பே இதுதான் என்றதும், நான் என் இயல்புக்கு உடனே வந்துவிட்டேன்.
சமீபத்தில் ஒரு காணொளி செவ்வியில், (Video interview) தன்னை பேட்டி கண்டவரிடம் சொல்கிறார். “ எனக்கும் இது ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு நல்ல பேட்டியாக இருந்தது. நான் சொல்வதை புரிந்துகொண்டு அடுத்த அடுத்த நல்ல கேள்விகளுக்கு வந்தீர்கள். அதற்காக நன்றி. நிறையபேர் நான் சொல்றதை, நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியலை என்று என்னிடம் சொல்லுவார்கள்” என்று பேட்டியை முடித்துக்கொண்டார். இதன் காரணம் உங்களுக்கும் புரிந்திருக்குமே!
ஒரு ஓவியர் சொன்னார் “அழகாக இருக்கும் பெண்களெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்து பேசவே பயந்திருக்கிறேன்”.
எனக்கும் அத்தகைய பயம் இருந்திருக்கிறது. என் கேரிகேச்சர் வேலைகளில், தமிழே பேசத்தெரியாத, தமிழ் பேசினாலும் புரிந்துகொள்ள முடியாத, தமிழ்நாடு, சென்னையில் வாழும் “ஒரு அழகான பெண்” பைசா செலவு செய்யாமல் என்னிடம் வேலைகளை வாங்கிவிட்டு, மூன்று முறை அலைக்கழித்துவிட்டு, கைவிரித்துவிட்டார். அந்த வேலையில் நான் ஈடுபட காரணம், அவள் பெண் என்பதும், அழகும், பணக்காரத்தனமும், அவள் வேலைபார்த்த நிறுவனமும், அவளின் வேலை தகுதியும், அது தந்த “பிம்பமும், மறு மனித சிந்தனையும்” தான். அதோடு நானும் இது “விதியின் சதி” என்று நினைத்து விட்டுவிட்டேன். இன்றுவரை எந்தப்பதிலும் இல்லை.
ஆகவே, ஒரு மனிதர் (ஆண், பெண் இருபாலரும்) இயல்பாக இருப்பதுதான் நியதி. யாருக்காகவும் அவர்கள் தன்னை மாற்றிக்கொள்வதில்லை, மாற்றிக்கொள்ள வேண்டியதும் இல்லை. அதைப்போலவே அவரை, நாமும் எந்த “பிம்பத்திற்கும், மறு மனித சிந்தனைக்குள்ளும்” அடக்கிவைக்க வேண்டியதில்லை. அவர்களைப்போலவே நாமும் இயல்பாக இருக்கப்பழவேண்டியது அவசியமானதாகும்.
முக்கியமாக, உங்கள் மனைவியே, கணவனோ, குழந்தைகளோ, நண்பர்களோ கூட இயல்பாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் அப்படியே இயல்பாக அவர்களிடம் பழகிப்பாருங்கள். வாழ்வில் இனிமை இருப்பதை உங்களுக்குள்ளும், தக்கவைப்பீர்கள்.
வாழ்க வளமுடன்.