June 2021 | CJ

June 2021

Who is Eman the God of Death?


 எமன் என்பவன் யார்?


சிக்கவைக்கும் அல்காரிதம்

பொதுவாகவே, நாம் எந்த காணொளி குறித்து தேடினாலும், பார்த்தாலும், அதோடு தொடர்ச்சியுடைய மற்றொரு காணொளி, தானாகவே நமக்கு தேடித்தரும் வகையில்தான் YouTube algorithm அமைத்திருக்கும். இந்தா, இதையும் பார் என்று கொடுத்துக்கொண்டே இருக்கும். யுடுயூப் மட்டுமல்ல, நம் ஆர்வத்திற்கு தீனி போட அத்தனை வேகமாக இப்போது உள்ள இணையதளங்கள் செயல்படுகின்றன. சமீபகாலமாகவே நீங்கள் எதை தேடினாலும் அதுகுறித்த விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில்  வருவதையும் அறிந்திருப்பீர்கள்.


எமன் வாகனம்

கடந்தவாரத்தில், ஒரு நண்பர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். யுடுயூப் காணொளியில், எதேதோ பார்த்துக்கொண்டிருந்த பொழுது, காட்டுயானைகள் குறித்த காட்சிகளை பார்த்து ஆர்வம் கொண்டிருந்த வேளையில், இந்திய மேற்குமலை தொடர்களில் வாழ்ந்துவரும் காட்டு எருமைகள்,  வால்பாறை, கொடைக்கானல், ஊட்டி போன்ற நகருக்குள் வந்துசெல்லும் காணொளியை பார்த்திருக்கிறார். 

“அதை ஏன் கேட்கறீங்க, பார்த்ததிலே இருந்து அதுதான் மனசுல நிக்கிது”

“பிரமாண்டமா இருந்திருக்குமே, இந்திய காட்டு எருமைகளுக்கு நல்ல வலிமை, பெருமை இருக்கு, தெரியுமா?” என்றேன்

“ஆமா, பார்த்தாலே ஒரு பயம் கலந்த ஆர்வம்தான். ஆனா பயங்கர தெனாவட்ட நடக்குது” என்று சொல்லி சிரித்தார்.

“சில ரொம்ப ஆக்ரோஷமானவைதான், ஆனால் தேவையின்றி மனிதரை தாக்குவதில்லை. ஆனாலும் அது தாக்கும் தூரத்தை தாண்டி நிற்பதுதான் நமக்கு நல்லது”

“ஆமாம், இதுலே, ஊட்டி பார்க்கில், திருமணமாகி மூன்று மாதமே ஒரு தம்பதியினரை காட்டெருமை முட்டி, பையன் ஸ்பாட் அவுட், பொண்ணு 2 அப்புறமா இறந்துட்டாளாம்.”

“அடடா, உண்மையில் அது தாக்க வந்துட்டா, தரையில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி கேட்டிருக்கேன். ஆனால் நம்மை மாதிரி சாதரணமாவர்களுக்கு உடனே நினைவுக்கும் வந்துவிடாது. நாம் ஓட முயற்சிப்போம். அது பாய்ந்து வரும். வலிமையான முன் தலையும், கூர்மையான கொம்பும் அதற்கு உண்டே”

“ஆமா, கனவிலே கூட வந்து பயமுறுத்தும் போல இருக்கு” என்றார் சிரித்துக்கொண்டே.

“அதுமட்டும் வந்தா தப்பிச்சிரலாம், மேல ஒருத்தன் உட்கார்ந்து வந்தால்தான் தப்பிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு இருவரும் சிரித்தோம்.

“சரி, எமன் பற்றி ஒரு பதிவு போடுங்க” என்றார்.

எமன் வாகனம், காட்டெருமை அல்ல, கிராமப்புற வளர்ப்பான எருமை ஆகும். ஆனால், எமன் மாதிரியான ஆளுக்கு (?!) காட்டெருமை மிக பொருத்தமானதே!. 


எமன் கோவில்

எமன் பொதுவாகவே வழிபடும் தெய்வமாக இல்லை. ஆனால் மரணபயம், ஜாதகத்தில் மார்கஸ்தான கிரக நிவர்த்தி எனும் வகையில் பரிகாரம் செய்வதற்காக வணங்கவேண்டிய நிர்பந்தம் மனிதர்களுக்கு நேர்கிறது. சண்டைக்காரனிடமே சரணடைவது என்பது இதுதான். இப்படி பரிகார நேர்த்திக்காக சில கோவில்கள் அமைத்திருக்கிறார்கள். அந்தக்காலம் முதலாக என்று சொன்னால், விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை எனும் ஊரிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி எனும் ஊரிலும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் எனும் ஊரிலும், தனித்த எமனுக்கான கோவில்கள் அமைந்திருக்கின்றன. காலத்தால் பிறகு அங்கங்கே நிறைய கோவில்கள் அமைந்திருக்கின்றன. 

Art by Suresh Pydikondala

யார் எமன்?

கதைகளாக பார்த்துகொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. சுருக்கமாக பார்த்தால், சூரியனின் மகன், சனியின் சகோதரன் என்கிறார்கள். ஏதோ சாபத்தால் முதலில் இறந்தவனே எமன், பிறகு சிவன், எமனை உயிர்பித்து மக்களின் உயிர்பறிக்கும் தகுதி கொடுத்ததாகவும், மார்கண்டேயன் உயிரை காப்பற்றி, சிவனெ எமனை எரித்ததாகவும், பூமியில் மனிதபாரம் அதிகமாக, தேவர்களின் கோரிக்கைபடி, எமனை உயிர்பித்ததாகவும் அப்போதிருந்து எமன் மக்களை உயிரைபறிக்கும் வேலைகளை மறுபடி தொடங்கியதாகவும் கதைகள் உண்டு. இந்த கதைகளுக்கு எல்லாம் பஞ்சமே இல்லை. 


உண்மையில் எமன் யார்?

எமன் இந்த வார்த்தையே மருவி வந்ததாகும். நியமம் என்றொரு வார்த்தை உண்டு. நியமம் என்பது #எண்வகை (எட்டு / அஷ்டாங்கா) யோகத்தில் இரண்டாவது நிலை. இறை அல்லது இயற்கையின் விதி, ஒழுங்கு, மாறாத நீதி என்ற வகையில் உணர்த்துவது ஆகும். 

(#எண்வகை யோகம் குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம். காத்திருங்கள்)

இந்த நியமம், ஓவ்வொரு நொடியும் கடந்துகொண்டே இருப்பதும் ஆகும், முன்னோ, பின்னோ நகர்வதும் இல்லை. இந்த நியமத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு பாவம் நேர்கிறது என்றும், அது அவர்களிடைய வாழ்க்கை கணக்கில் வரவாக வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் வரவு வைப்பது சித்திரகுப்தன் என்றும், கணக்கை தீர்ப்பது எமன் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

கற்றுத்தேர்தலோ, படிப்போ, கல்வியோ இல்லாத பாமர மக்களுக்கு, ஒழுக்க வழக்க பழக்கங்களை கதைகளாக சொல்வது அக்காலத்திய வழக்கம்.  அதுவே இன்றும் ஆனால் கதைகளாக மட்டும் நிலைத்துவிட்டது.  

நியமம் செய்வது நியமன் என்ற வார்த்தையில், நியமன் (யமன்) எமனாகிப் போனான். நியமன் என்ற சமஸ்கிருத வார்த்தை, அப்படியே தமிழுக்கு மாறுகையில், காலன், காலத்தை ஒழுங்காட்சி செய்வபன் என்றாகிவிட்டது. 


காலன் காளி ஆனது

இந்த காலன் என்ற தமிழ்வார்த்தை, வட இந்தியாவிற்கு செல்கையில், திரிபு ஆகி, பெண்ணாகவும் ஆகி, காளி என்றாகிவிட்டது. மறுபடியும் அது தமிழுக்கு வந்து, இங்கும் காளி ஆகிவிட்டது. 

எமனுக்கும், காளிக்கும் உள்ள உருவம், செயல், அவர்களிடமிருக்கும் பொருட்கள் இவற்றைக்கொண்டு ஒற்றுமையை அறியலாம். எமனும், காளியும் சகோதர, சகோதரிகள் என்றும் சொல்லபடுவதுண்டு. இராமகிருஷ்ண பரமஹம்சரின் விருப்பத்திற்கு உரிய தெய்வமும், அவருக்கு உண்மையை உணர்த்தியதும் காளியே. 


இறப்பில் உயிர்ப்பு

பொதுவாக, இந்த உலகில் உயிர்வாழும் மனிதருக்கு மரணம் குறித்த தனிக்கவனம் இல்லாதிருந்திருக்க(!)  வேண்டும்.  அதாவது, மரணம் குறித்த அறிவோ, விளக்கமோ இல்லை என்ற நிலையில் வாழ்ந்திருக்க கூடும். நேற்றிருந்தான் இன்றில்லை என்றும், அவனுக்கு என்ன நடந்தது, நடந்திருக்கிறது என்பது விளங்கிக்கொள்ளாத நிலையில்தான் மனிதன் இருந்திருக்கிறான். பின்னாட்களில் அறிவு விளக்கம் பெற்றோர் அந்த நிலையை உணர்ந்து மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அந்த விளக்கத்திற்காக பின்னப்பட்ட கதையே நியமம் என்பதும், அதுவே எ(ய)மன் ஆகவும் மாறிவிட்டது.  

அதுவே இறப்பு குறித்த பயத்தையும் உண்டாக்கி விட, அதிலிருந்து தப்பிக்க அதையே இறை வடிவமாகவும் மாற்றி வழிபாடாகவும் வந்துவிட்டது. ஆனால், உண்மையாகவே இறப்பு குறித்த சிந்தனை வந்துவிட்டால், உயிர்வாழ்வது என்ற நிலை குறித்த உண்மையும் வந்துவிடும். எனவே காலனும், காளியும் உயிர் குறித்த சிந்தனையை தூண்டும் தெய்வ வடிவாகவும் ஏற்றுக்கொள்ளலாம்.


பகவான் ரமண மகரிஷியும் மரணம் குறித்த சிந்தனை வாயிலாகவே, “தான் யார்?” என்ற கேள்வியை தொடங்கினார் என்பதை நாம் அறிகிறோம். 


உயிர் காப்பானா (ளா), அழிப்பானா(ளா)

இரண்டு கேள்விக்கும் பதில் காத்தாலும் அழிப்பான்(ள்).  ஆனால், உயிரினங்களுக்கு பிறப்பு என்று நிகழ்ந்ததோ அன்றே இறப்பும் நிச்சயப்பட்டுள்ளது. இதில் மனிதன் விதிவிலக்கல்ல. சுழற்றிய பம்பரம், சுழலை நிறுத்தி கீழே விழுவது நமக்கு தெரிந்த உண்மைதானே. வேதாத்திரி மகரிஷி சொல்வது போல, “எல்லோருக்கும் தேதி குறிப்பிடாத ரிட்டன் டிக்கெட் வைத்திருக்கிறோம். யாரும் இதுவரையில் பயணத்தை நிறுத்தி வைத்ததில்லை”

நியமத்திலிருந்த வந்த எமனோ, காலனோ, காளியோ யாராக இருந்தாலும், இவர்கள்  நம் வாழ்வில், நம் வாழ்க்கையை குறிப்பிடும் ஒரு குறியீடு. அவர்களை தெய்வமாக வழிபடுவதும் நெடுங்கால பழக்கம். அதில் குறையும் இல்லை. ஆனால், வழிபடுகிறோம் என்பதற்காக, காலத்தில் இருக்கிற நியமங்களை விட்டு விலகிச்செல்வது முறையல்ல. 

நியமம் என்ற வகையில், இயற்கையின் விளைவோடு கூடிய நீதியில், சித்தர்கள் நமக்கு சொன்ன, 1) ஒழுக்கம் 2) கடமை 3) ஈகை இந்த மூன்றின் வழியாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், கிடைத்த உயிர் வாழ்வை இனிதே வாழலாம். தன்னைப்போலவே பிறரையும் மதித்து, கடமையாக உதவியும் செய்து வாழ்தலில் மகிழலாம். தான் செய்ததின் பிரதிபலனாக மீண்டும் நமக்கு, தகுந்த நேரத்தில் உதவி கிடைப்பதை எண்ணி வியக்கலாம்.  


மரணபயம்?!

ஒரு புதிய, புத்தம் புது திரைப்படம் (அரசால் தடை செய்யப்பட்டது), வீட்டில் OTT மூலம், தொல்லைகாட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். திரைப்படம் பார்ப்பது என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். உடல் மண்ணுக்கு, உயிர் அந்நடிகருக்கு (அந்நடிகைக்கு) எனும் வகையில் என்று வைத்துக் கொள்ளலாமே. இப்பொழுது உங்கள் வீட்டில், திரைப்படம் இன்னும் 40 நிமிடத்தில் முடிவடையும் நேரத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

“ஐயகோ, இதென்ன சோதனை? முடிவு தெரியாமல் எப்படி?!” அழுது புலம்பி தவிக்கிறீர்கள். காரணம் தடை செய்யப்பட்ட அந்தப்படம் இனிமேல் வெளியிடவே மாட்டார்கள் என்பதே காரணம். 

வாழ்க்கை ஒரு தரம் தான் வாழ முடியும், திரைப்படம் பார்ப்பது போல இன்வெர்ட்டர் வைத்துக் கொண்டு அடுத்த 40 நிமிடத்தை கடத்த முடியாது. உங்கள் வாழ்க்கைக்கும், உயிருக்கும் இன்வெர்ட்டர் இல்லை. 

உங்கள் வாழ்வை, வாழும் காலத்திலேயே திருப்தியும், மன நிறைவும், உண்மையும் பெற்று, இயற்கையையும், இறையையும் உணர்ந்து, நான் யார்? (இவை எல்லாமே இன்வெர்ட்டர் தரும் 40 நிமிட மின்சாரம் என்று வைத்துக்கொள்க!) என்றும் தெளிந்தால் அடுத்த நாட்களை குறித்தோ, வரும் காலம் குறித்தோ கவலை இருக்கப் போவதில்லை.இப்போது மரண பயம் ஏன் வரும்?! எமனோ, காலனோ, காளியோ கவலை என்ன வந்துவிடும்? 

மனித பிறப்பின் முழுமையை அறிந்ததனால், இறப்பை இயல்பாக வரவேற்பீர்கள்.  

வாழ்க வளமுடன்.

----------
Present by:





Thanks to Photos and Images: Google and It's copyrighted owners

The mind and social media Its problems


 மனமும் சமூக வலைத்தளங்களும், அதன் பிரச்சனைகளும்


மனம் எப்படிப்பட்டது?

உதாரணமாக சொல்லுவதென்றால். மூன்று தாள் கொண்ட ஒரு தொகுப்பு என்று வைத்துக்கொள்ளலாம். 

1) முற்றிலும் புதிய வெள்ளைத்தாள்

2) பழைய குறிப்புக்களோடு எழுதப்பட்ட தாள்

3) எழுதவே இடமில்லாதபடி எழுத்துக்களால் நிரம்பிய தாள்

இந்த மூன்று தாளுக்கும் உள்ள உறவு என்ன என்றால், ஒன்றில் எழுதுவது பிறகு மற்றொரு தாளுக்குள் போய் ஒட்டிக்கொள்ளும்.  மூன்றாவது தாளில் இருப்பதும் அங்கே நிலைப்பதில்லை. அதுவேறெங்கோ சென்று விடுகிறது. அது எங்கே என்று வேதாத்திரிய அன்பர்களுக்கு தெரியும், அதை தனியாக கட்டுரை செய்கிறேன். எனவே இந்தக்கட்டுரைக்கு இதுவரையில் போதுமானது. 

ஒருதாள், வெள்ளைத்தாள் போல இருக்கிறதே, அதில்தான் நாம் தினமும் ஏதேனும் எழுதி அவ்வப்பொழுது ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். இந்த தாள் நிரம்பிவிட்டால், அந்த செய்திகள் 2ம் தாளுக்கு நகர்ந்துவிடுவதால் மீண்டும் 1ம் தாள் காலியாக இருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.


புள்ளியும் கோலமும்

ஒரு வெள்ளைத்தாளை அப்படியே வெள்ளைத்தாளாக வைத்திருக்க யாருக்கும் விருப்பமில்லை. பொதுவாகவே, அப்படி வைத்திருக்கவும் முடியாது. யோகிகளுக்கும், மகரிஷிகளுக்கும் மட்டுமே அப்படியான திறமை உண்டு. அவர்கள் மட்டுமே, எந்நாளும் வெள்ளைத்தாளை அப்படியே வைத்திருப்பார்கள். நாம் வழக்கமாக புள்ளி வைப்போம், அதில் கோலம் போடுவோம். சில நேரங்களில் மையை கொட்டி தாளை அசிங்கப்படுத்தியும் விடுவோம். ஆனாலும் அதைக்குறித்து நாம் கவலை கொள்வதில்லை. நாளைக்கு கிடைக்கும் வெள்ளைத்தாளையும் இப்படியே அசிங்கமாக்கி கசக்கிப் போடுவோம்.

ஆனால் பெரும்பாலும் எல்லோருமே, “மனசுதான்யா எல்லாம்” என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம். அதிர்ஷ்டவசமாகவோ, துர் அதிர்ஷ்டவசமாகவோ, இந்த தாளானது, தானகவே எழுதிக்கொள்ளும் திறமைகொண்டது. அது இந்த இயற்கையின் ஒழுங்கமைப்பு விதியில் இணைந்திருக்கிறது. இதை “எழுதிக்கொள்ளாதே” என்று நீங்கள் கட்டளை இட முடியாது. அதுபோலவே இன்னதுதான் நான் எழுதியிருக்கிறேன் அல்லது இதைத்தான் நீ எழுதியிருக்கிறாய் என்றும் நம்மிடம் காட்டாது. நாமும் விரும்பி, என்ன எழுதினேன் என்று தாளில் பார்க்கவும் முடியாது.

ஒருவேளை நீங்கள் யோகசாதனையில் இறங்கினால், ஓரளவு என்ன எழுதியிருக்கிறது என்று காணலாம். நீண்ட பயிற்சிக்குப்பிறகு, முதல் தாளின் வழியாக திருத்தியும் அமைக்கலாம். ஆனால் இதற்கு “குரு” தேவைப்படுகிறார்.


நிரப்பியது குப்பையா?

நீங்கள் எந்த அளவுக்கு, உங்களைச்சார்ந்த சூழலில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, உங்களுக்கு தேவையானது என்ற தேர்வில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, இயற்கைக்கு மாறாத செயலில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, நீங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, பிறருக்கு தீங்கிழைக்க கூடாது என்று தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும். 

நீங்கள் எந்த அளவுக்கு, யாரோ ஒருவர் துன்பத்திற்கு உதவுவதில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும். 


மெனு கார்டாக மாறும் தாள்

நாமே நிரப்பி, நிரப்பி தொடர்ந்து கொடுக்கும் நிர்பந்தத்தால், இந்த தாளில் பதிந்த விபரங்கள் மூளைக்கு அனுப்பப்படும்.  மூளை, அந்த தாளில் இருக்கிற விபரங்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையாகத் தரும் அல்லது செயல்பட தூண்டும். அது நல்லதா கெட்டதா என்பது நீங்கள் ஏற்கனவே அந்த தாளில் என்ன கொடுத்தீர்கள் என்பதை பொறுத்தது தான். 

எனவே நீங்கள் கேட்டதை, அல்லது உங்களுக்கு விருப்பமானதை தரும் ஒன்றாக, இந்த தாள் “மறைமுகமாக” செயல்படுகிறது.


மனப்பிறழ்வில்... 

சமீபகாலமாக நீங்கள் சமூக வலைத்தளங்களில் இயங்குபவராக இருந்தால் உங்களுக்கு மனப்பிறழ்வு என்ற நோய்க்கு சமமான மன நோயில் சிக்கியிருப்பீர்கள். 

மனம் ஒரு வெள்ளைக் காகிதம் என்பதை இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம், அதன்படி அதை நீங்கள் அப்படியே வைத்திருக்கலாம், புள்ளி வைக்கலாம், அழகான கோலமும் ஆக்கலாம், அலங்கோலமும் ஆக்கலாம், அல்லது அதில் மை கொட்டி அழுக்காகவும் ஆக்கலாம், கசக்கியும் போடலாம் என்பதையும் பார்த்தோம்.

ஆனால் எல்லாவற்றிற்கும் “அது” எதிர்வினை ஆற்றும். சமூக வலைத்தளங்களான, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிரம், வாட்ஸாப், டெலிகிராம் இன்னும் ஏதேதோ ஆகியவற்றில், நீங்கள் ஒரு புதிய பதிவு பதியாவிட்டாலும், அந்த சமூக வலைத்தளங்களில் நுழையும் பொழுதே, உங்களோடு நண்பர்களாக பழகுபவர்களின் பதிவுகள் டைம்லைனில் (Timeline) காணக்கிடைக்கும். 


அங்கே நப்பது என்ன?

நீங்கள் ஒரு மகிழ்ச்சிகரமான மன நிலையில் இருப்பீர்கள். அங்கே ஒரு அன்பரின் இறப்புச்செய்தி, கொலை செய்தி, தற்கொலை விபரம், விபத்தில் மரணம் இவையெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை பிடிங்கிவிடும்.

பலவருசமாக தூங்கிவிட்டு, இன்று எழுந்து, என்ன மகாத்மா காந்தியை சுட்டுட்டாங்களா? என்பது மாதிரியான பதிவுகள், உங்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

உங்களுக்கு முற்றிலும் முரண்பாடான, எதிர்மறையான பதிவுகளையே எப்பொழுதும் பதிந்து கொண்டிருப்பவரும் உங்கள் நண்பர்தான்.

சமுகத்தில் நடக்கும் எந்த நல்ல விசயங்களையும், குறை சொல்லிக்கொண்டே, தன் கருத்தை, தன் மரபை, தன் தத்துவங்களை திணிக்கும் நண்பரும் அங்கே இருப்பார்.

எப்போது பார்த்தாலும், எந்த விசயத்திற்கும், எந்த கருத்திற்கும் பகடி, கிண்டல் செய்துகொண்டே இருக்கும் நண்பரும் அங்கே பதிவிடுவார், பின்னூட்டமும் இடுவார்.

இன்றைக்கு இந்த பாடல் கேட்டேன் என்று அதர பழசான ஒன்றை, உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத அந்தப்பாடலை, வரிக்கு வரி அழகு செய்து அங்கே பதிவிட்டிருப்பார் உங்கள் நண்பர்.

இதையெல்லாம் தாண்டி, உங்கள் மனநிலைக்கு ஏற்ப ஏதோ சில நல்ல பதிவுகளும் இருக்கலாம் தான், ஆனால் இப்படியான வலைத்தளங்களின் அல்காரிதம், பரபரப்பை மட்டுமே செய்தியாக்கும் படியாக அமைக்கப்பட்டிருக்கும். எனவே இப்படியான பதிவுகளே, உங்களுக்கு காட்டிக்கொண்டிருக்கும்


திணிக்காதீர்கள், ஏற்காதீர்கள்.

எனவே, நீங்கள் சமூக வலைத்தளங்களில் இயங்கும்பொழுது, உங்களுக்கு பிடிக்காத, மனம் ஏற்றுக்கொள்ளாத எதையும் “விருப்பம்” செய்யாதீர்கள்.  விருப்பமில்லா செய்தியாக இருந்தால், அதை தவிருங்கள், அப்பதிவை மேலோட்டமாகக் கூட படிக்காதீர்கள். மனம் ஏற்காத அந்த பதிவினை கடந்துவிடுங்கள். அப்படியான பதிவை பதிந்த, அந்த நபரை நீக்கலாம் (Unfriend), மறைக்கவும் செய்யலாம் (Block). உங்கள் மனதை கெடுத்துக்கொள்ளாதிருங்கள். உங்களுக்கு உண்மையில்லாத ஒன்றை நீங்களும் பகிராதீர்கள். ஏற்பில்லாத விளம்பரம் வந்தால் அதை மறைக்கலாம் (Hide All).

இவை எல்லாவற்றிலும் எளிய, அற்புதமான வழி என்ன தெரியுமா? சமூக வலைத்தளங்கில் இருக்கும் உங்கள் கணக்குகளை நிறுத்தி வையுங்கள். ஆமாம், நீங்கள் உங்கள் கணக்கை, நீங்கள் உருவாக்கிய கணக்கை அழிக்க உங்களுக்கு அனுமதி மறுக்கபடுவதை அறிந்துகொள்ளுங்கள். 

சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் மன நிலை, உங்கள் வாழ்க்கையையே தடம் மாற்றும் எனவே, உங்கள் சுவரையும், உங்கள் மனதையும் அழுக்காக வேண்டாம். அப்படியான செய்கைதான் உங்கள் வாழ்க்கையையும் அழகாக்கும்.  

வாழ்க வளமுடன்.

-------------

Present by:





Photos and Images: Thanks to Google, Copyrighted to Owners

 





Is Zodiac Horoscope Dosha Remedies Working?


ஜெனன ஜாதக தோஷ பரிகாரம் வேலை செய்கிறதா?


தோஷம் என்றால் என்ன?

ஒரு ஜெனன ஜாதகத்தில் இருக்ககூடிய நல்லன, நிறைகள் எல்லாம் யோகம் என்ற அழைக்கப்படும் வேளையில், அதில் இருக்கக்கூடிய தவறுகள், குறைகள் தோஷம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த தோஷம் என்பதிலும், ஒரு ஜாதகனின் பலமும் வெளிப்படும். அதாவது இக்குறை உள்ளவரோடு, குறை உள்ளவரை சேர்த்தால் பலன் உண்டாகும். உதாரணமாக, செவ்வாய் தோஷம் இருக்கிற ஆணுக்கு, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணே பொருத்தமாவாள். இரண்டு குறைகள் சேரும்பொழுது அவை நிறைகளாக மாறுகிறது அல்லது குறைகள் சமம் ஆக்கப்படுகின்றன.


தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்

பெருமளவில் இந்த வகையில், ஒரு ஜாதகருக்கு அனுபவம் கிடைத்திருக்கும். முக்கியமாக திருமணம் செய்வதற்கு, “தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்” என்ற வகையில், ஏதேனும் ஜோசியரிடம் ஆலோசனை கேட்டிருப்பார்கள். அவர்கள் சொன்னபடி குறிப்பிட்ட வகையில் அதை நிறைவேற்றி இருப்பார்கள். ஜாதகருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட, பெற்றோரின் தொல்லை தாங்காமல் செய்திருப்பார்கள். உண்மைதானே?

இந்த தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆராய்வோம்.


தோஷங்கள்

1) ராகு, கேது சர்ப்ப தோஷம்

திருமண தடையும், வாழ்க்கை முன்னேற்ற தடையும், பூர்வ புண்ணிய தடையும், குழந்தைபாக்கிய தடையும் உண்டாக்கும் என்று சொல்லுவார்கள்

2) செவ்வாய் தோஷம்

ஆண், பெண் திருமண பொருத்தத்தில் இந்த தோஷத்திற்கு முக்கிய இடம் உண்டு

3) மாங்கல்ய தோஷம்

பெண்ணின் ஜாதகத்தின் வழியாக, கணவனின் ஆயுள் நிர்ணயம் செய்யும் தோஷம் என்பார்கள்

4) களத்திர தோஷம்

கணவனாக வருபவன், மனைவியாக வருபவள் குணங்களில் இருக்கும், அல்லது ஏற்பட போகும் மாற்றத்தை குறிப்பிடும் தோஷம் என்று சொல்லுவார்கள்.

5) புத்திரதோஷம்

குழந்தை பிறக்காத அல்லது பிறந்த குழந்தை குறித்த தோஷங்களை குறிக்கிறது என்பார்கள்.

6) சூரிய தோஷம்

உயிர், வாழ்க்கை, வளர்ச்சி, தொழில், அரசாங்க துணை ஆகியன குறித்த தோஷங்களை குறிக்கும் என்பார்கள். 

7) புனர்பூ தோஷம்

சந்திரன் சனி ஆகிய கிரங்களின் கூட்டினால் உண்டாகும் தோஷம் ஆகும்.

8) விஷ கன்யா தோஷம்

பெண்களின் ஜெனன ஜாதகத்தில் இருக்கும் இத்தோஷம் கணவனுக்கு  பிரச்சனைகளை உண்டாக்கும் என்று சொல்லுகிறார்கள்

9) பாபகத்ரி நீச்ச தோஷம்

ஒரு ராசி கட்டத்தின் முன்பும், அடுத்தும் அமைதிருக்கின்ற சுபர் அல்லது பாவர் கிரங்களைக் கொண்டு இந்த தோஷம் அமைவதாக சொல்லுகின்றனர். 

10) பாலரிஷ்ட தோஷம்

ஒரு குழந்தை இறந்தே பிறப்பது அல்லது 14 வயதிற்குள் இறப்பது இத்தகைய தோஷமாகும். 

இவை போக வேறு சில தோஷங்களும் இருக்கலாம், ஆனால் இந்த பதிவைப்பொறுத்தவரை இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.


பொதுவான நிவர்த்தி அல்லது பரிகாரம் என்ன?

எந்த ஒரு ஜெனன ஜாதகத்தை ஒரு சோதிடரிடம் கேட்டு, தோஷம் தொடர்பாக ஆலோசித்தால், இன்ன இன்ன தோஷம் இருக்கிறது, இதனால் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லுவார்.  வியாபார ரீதியிலான ஜோதிடர் என்றால் “யாகம் செய்யலாம்” என்றும் அதற்கு இவ்வளவு செலவு ஆகும் என்றும் பட்டியல் போட்டுத் தருவார்கள். 

சில ஜோதிடர்கள், இந்த பரிகாரத்திற்கு இந்த கோவிலுக்கு போய்வாருங்கள், பால் அபிஷேகம் செய்யுங்கள், இந்த கடலில், ஆற்றில் பிண்டம் வைத்து வழிபடுங்கள், அன்னதானம், ஆடைகள் தானம் செய்யுங்கள்,  ஏழைக் குழந்தைக்கு, உடல் ஊனமுற்ற, பார்வையற்ற சிறப்பு நபர்களுக்கு உதவுங்கள் என்றெல்லாம் சொல்லி விடுவார்கள்.

இன்னும் சில சோதிடர்கள், உங்கள் ஊரிலேயே இருக்கும் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள், நவ கிரகங்களுக்கு நீர் ஊற்றுங்கள் என்று எளிய வகையில் சொல்லிவிடுவார்கள்.


தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்தபிறகு?!

சோதிடர்கள் சொன்ன பரிகாரம் செய்த பிறகு என்ன நடந்துவிடும்? அந்த ஜாதகருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் மனதிருப்தி கிடைக்கும்.  இவர் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்துவிட்டார் என்று கிரகங்கள் திருப்தி கொண்டு இடம் மாறி அமர்ந்து விடுவதில்லை. தன் தாக்கத்தை குறைத்துக் கொள்வது இல்லை. உடனே நல்லது செய்துவிடுவதும் இல்லை. அல்லது அந்ததந்த கிரகங்களுக்கு அதிபதியாக சொல்லப்படும், கோவிலில் இருக்கும் இறைவன்கள் அருளைப்பொழிந்து விடுவதில்லை. நீங்கள் பிண்டம் வைத்துவிட்டீட்கள் என்பதற்காக, மூதாதையர்களும் பாசத்தால் பொங்கிவழிந்து உதவி செய்து விடுவதில்லை. 

எது இருந்ததோ அது அப்படியேதான் இருந்தது! 

அப்படியானால் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் என்பது பொய்யா?

உங்கள் மனம் ஏற்படுத்தும் மாயம், இந்த நிவர்த்தி, பரிகாரத்தால் “இனி நல்லது நடக்கும்” என்று நம்புகிறது. உங்கள் குடும்பத்தாரும் நம்புகிறார்கள், நீங்கள் இதைச்செய்யும் பொழுது, அதை பார்க்கும் “மற்றவர்களும்” நம்புகிறார்கள். அவ்வளவுதான்.


வேறு வழி என்ன? அல்லது உண்மை என்ன?

செவ்வாய் தோஷம் என்பது எந்த நிலையும், மாறாது, குறைவுபடாது. எனவே அந்த வரனுக்கு, செவ்வாய் தோஷம் இருக்கும் வரனை இணைப்பதுதான் அதற்கான பரிகாரமும், நிவர்த்தியும்.  இதைத்தவிர விளக்கு போடுவதாலும், நீர் ஊற்றுவதாலும், குறிப்பிட்ட ஸ்தல கோவில்களுக்கு போவதாலும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. செவ்வாய் தோஷத்திற்கும் திருமண தடைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. காலத்தால் காத்திருந்தால் தகுந்த வரன் அமையும். உங்கள் ஆர்வத்திற்கும், விருப்பத்திற்கும் வரன் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?! வாழ்க்கை என்ன பாஸ்ட் புட்டா?

கால சர்ப தோஷம் என்பது அமைந்திருக்கிறது. அமைந்துவிட்டது. ராகு கேது வுக்கு பால் அபிஷேகம் செய்துவைத்தால் குளிர்ந்து நகர்ந்து விடுவார்களா? இல்லை. அப்படி தோஷம் அமைந்ததற்கு தகுந்த காரணங்கள் இருந்திருக்கின்றன. அது காலத்தால் தானாக சரிசெய்யப்படும். காத்திருங்கள். 

என்னய்யா இவர், காத்திருங்கள், காத்திருங்கள் என்கிறாரே?! எனக்கு வயதாகிறதே? பொண்ணுக்கு வயதாகி காத்திருக்கிறாளே, இதற்கு மேல் காத்திருந்தால் கிழவி ஆகிவிடுவாளே என்றெல்லாம் நினைப்பீர்கள். இத்தகைய தோஷம் உள்ள ஒரு வரனுக்கு தகுந்த வரன் நிச்சயமாக கிடைக்கும். அந்த தகுந்த காலத்தை பெற காத்திருப்பதைத் தவிர வேறுவழி இல்லையே!


இயற்கையின் விதி

ஒரு குழந்தையின் ஜெனனம் என்ன சொல்லுகிறது? ஜாதகம் எழுதி பலன் பார்ப்பது பிறகு வைத்துக்கொள்ளலாம். பொதுவான பிறப்பு தரும் கேள்விகள் என்ன? பார்க்கலாமா!, இக்குழந்தை பெற்றோருக்கு உயர்வைத் தருமா? நல்ல கல்வி கற்குமா? நல்ல வேலைக்கு போகுமா? நிறைய சம்பாதிக்குமா? நல்ல நிலையில் திருமணம் செய்யுமா? அதற்குப்பிறகு குழந்தை பிறக்குமா? இவைதானே உங்கள் கேள்விகள்?

இந்த தோஷங்கள் ஒரு ஜாதகத்தில் அமைவதன் காரணம் என்ன? இந்த இயற்கைக்கு உங்கள் கேள்விகள் மேல் அக்கறை இல்லை. உண்மையாகவே அக்குழந்தை பிறந்தது, பெற்றோரின், அவர்களின் பெற்றோரின், அவர்களின் பெற்றோரின் (இன்னும்...) என்றவகையில் வரும் பூர்வ புண்ணியத்தால் நிகழ்வதாகும். அவைகளை கர்மா என்றும் வினைப்பதிவுகள் என்றும் சொல்லலாம். அந்த பூர்வ புண்ணித்தில் விட்ட குறை, நிறைகளை சரிசெய்யவே பிறந்திருக்கிறது. அந்த செயலில் முழுமையடையவில்லை என்றால் மட்டுமே, திருமணமும், அதன் பிறகான குழந்தையும் அமையும் என்பதுதான் இயற்கையின் விதி. 

அதென்ன இயற்கை விதி?! என்றால், நாம் எண்ணுகின்ற எண்ணங்களுக்கும் , செய்கின்ற செயலுக்கும் ஏற்ப பலன்கள் உடனேயும் கிடைக்கும், தாமதமாகவும் கிடைக்கும். ஒருமையில் கற்ற கல்வி ஏழுமையும் உய்க்கும் என்றால், கர்மா மட்டும் உடனே கழிந்துவிடுமா? பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருவர் இறந்த பிறகு, செய்யும் கர்ம சடங்குகளில் எல்லாமே கழிந்துவிடுகிறது என்பதாக. ஆனால் இறந்தவரின் கர்மா அவரின் குழந்தைகளை சார்ந்துவிடுகிறது என்பதுதான் நிஜம். ஐயா, அவருக்கு குழந்தைகள் இல்லையே என்கிறீர்களா? இறந்தவருக்கு பிரியமானவரிடம் போய்ச்சேர்ந்துவிடும். எந்த கர்மாவும் தனித்து நிற்பதில்லை. வாழையடி வாழையாக அடுத்து அடுத்து வந்து சேர்ந்துகொண்டே இருக்கும், அவ்வப்பொழுது கழிந்துகொண்டே இருக்கும்.

இந்த இயற்கையின் வினை விளை நீதி என்பதை அறிந்துகொண்டால், அதற்கேற்றபடி நம் எண்ணங்களை, செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் இதையேதான் மையப்படுத்துகிறார். 


பதற்றம் வேண்டாம்

ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் இருக்கட்டும் பதற்றப்படாமல், ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஓவ்வொரு நல்ல ஜோதிடராக பார்த்து, ஆலோசனை கேட்டு, ஊர் ஊராக, கோவில் கோவிலாக சுற்றாமல், விளக்கு ஏற்று, குடம் குடமாக நீர் ஊற்று என்று அந்தப்பெண்ணை பாடாய்படுத்தாமல் அமைதியாக இருங்கள்.

அவனோ, அவளோ அமைதியாக இருக்கட்டும், திருமணம் அது இது என்று தொல்லை செய்யாதிருங்கள். பிடித்த படிப்பை படிக்கட்டும், பிடித்த வேலையை பார்க்கட்டும், அவர்களை சுமையாக நீங்கள் கருதாது இருங்கள். அவர்களாகவே காதல் வயப்பட்டால் கூட, அந்தபையன், அந்தப்பெண் எப்படி வாழ்க்கை நடத்துவார் என்றும், எதிர்காலத்தில் எப்படி வாழ்வார்கள் என்றும், எந்த பிரச்சனையும் எழாதவகையில் ஆலோசித்து சரி என்றால் சம்மதம் சொல்லிவிடுங்கள். தடுக்காதீர்கள். ஒரு ஜாதகர் கண்டிப்பாக அந்த ஜாதகத்தின் வழியில் இயல்பாக பொருந்திப்போக வாய்ப்பு அதிகம். திருமணம் வேண்டாம் என்கிறாரா? விட்டுவிடுங்கள், அவர்களை வற்புறுத்தாதீர்கள். தனித்து வாழ பழகிக்கொள்ளட்டும்.  திருமணம் செய்தவர்கள் சொர்கத்திற்கு போவதில்லை, தனித்து வாழ்வபர்கள் நரகத்திற்கு போவதில்லை.  குழந்தை பெற்றவர்களுக்கு மட்டும் மோட்சம் கிடைப்பதில்லை, குழந்தை பெறாதவர்கள் முக்தி அடையாமலும் இல்லை. 


எனவே தோஷ நிவர்த்தி அல்லது பரிகாரம் உண்டா?

இருக்கிறது என்றால் அது பொய் அல்லது உங்களை திருப்தி செய்யும் ஒரு வார்த்தையே! இன்னொன்றும் உண்டு, அது வணிகம்!! 


ஒப்படையுங்கள்

இந்த ஜெனன ஜாதக தோஷம் என்பதிலிருந்து உங்களுக்கு நிவர்த்தி அல்லது பரிகாரம் வேண்டும் என்றால் ஒரே வழி, உங்களை இறையிடம் ஒப்படையுங்கள் மனதளவில். கோவிலும் வேண்டாம், குளமும் நதியும், கடலும் வேண்டாம். 

ஓவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் வானம் நோக்கி வணங்குங்கள். என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று மனதார சொல்லுங்கள். 


நவக்கிரக தவம்

நவ கோள்களை மனதார வணங்கி பழகுங்கள். (கோவில்தான் கரோனா நோய்தொற்று காலத்தால் பூட்டு போடப்பட்டிருக்கிறதே?) இருக்கும் இடத்திலிருந்தே பரிகாரத்தையும், நிவர்த்தியையும் செய்யலாம் எந்த செலவும் இல்லாமல். உங்களுக்கு கோளறு திருப்பதிகம் தெரியுமா? சொல்லுங்கள். பதிகம் பாடினால் சரியாகுமா? பாடினால் சரி ஆகாதுதான். ஆனால் அந்த நேரத்தில் அந்த நவ கோள்களை நினைத்து, மனதோடு  இணைந்திருக்கிறீர்களே! அதுதான் உண்மைக்காரணம். சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லலாமா? தாராளமாக சொல்லலாம். 

வீட்டில் தவம் செய்ய பழகுங்கள். நவக்கிரக தவம் என்று ஒன்றுண்டு. இதை  “மனவளக்கலை” மையத்தில் எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். அல்லது அந்த இணையதளத்தில் ஜூம், யூடூயுப் மூலமாக நடந்தால் கலந்து கொள்ளுங்கள். நவக்கிரக தவத்திலும், மனம்ஒன்றிபோகும், அதைத்தான் அமைதியாக செய்கிறீர்கள். 

நவ கோள்களின் தோஷம் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கைக்கு கொடுக்கப்பட்ட கசப்பு மருந்து. ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள். 


வாழ்க வளமுடன். 

---------------

Present by:





Photos Thanks to: Google and copyright their owners.

Is the Zodiac Horoscope our Initials?


 ஜெனன ஜாதகம் நம் தலையெழுத்தா?


இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற சூரியன்கள் இருக்க, நாம் இந்த சூரிய குடும்ப கிரகங்களை மட்டுமே உள்ளடக்கி, 7 கிரகங்களையும், 2 நிழல் கிரங்களையும் எடுத்துக்கொண்டு, இந்த பிரபஞ்சத்தை 360 கோண சுற்றாக வைத்துக் கொண்டு, அதை 12 பகுதியாக பிரித்து, நட்சத்திர மண்டலங்களை, 27 நட்சத்திரங்களாக்கிக் கொண்டு, அதில் ஓவ்வொரு நட்சத்திரத்தையும் நான்கு பாகையாகவும் பிரித்துக்கொண்டு, பிறக்கும் ஓவ்வொருவருக்கும் “இந்தா உன் தலையெழுத்து” என்ற ரீதியில் ஜாதகம் கணிப்பதும், அதை அடிக்கடி எதிர்காலத்திற்காக பரிசோதித்துக்கொண்டே இருப்பதும் பொருத்தமானதா?


பிறக்கும் நேரம் எது?

1) திருமணத்திற்குப்பிறகு, ஆணும் பெண்ணும் கலப்புறும் நேரமா? 

2) விதைக்கப்பட்ட நேரமா?

3) கரு உருவான நேரமா?

4) இயற்கையாக தலை வெளிவந்த நேரமா?

5) முழு உடலும் வெளிவந்த நேரமா?

6) தொப்புள் கொடி அறுத்த நேரமா?

7) மூச்சை உள்வாங்கி குழந்தை சுவாசித்த நேரமா?

8) குழந்தை சூழ்நிலை தாங்காது அழுத நேரமா?

இன்னொன்றும் உண்டு

9) நல்ல நேரப்படி, வயிற்றைக் கிழித்து கையிலெடுத்த நேரமா?

மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மட்டுமே தெரிந்த அல்லது அவர்கள் சொல்லும் நேரமே “ஜனன நேரம்”


பொது சமரசம்

இந்த நேர குழப்பங்களில் சிக்காமல் ஜென்ம ஜாதகம் கணிக்க சில வழிகள் இருக்கிறது. ஒரு ராசி கட்டத்தில்  லக்கனம் என்பது சுமார் 2.30 மணி நேரம் நிற்கும். அந்த நேரத்திற்குள் பெரிதான எந்த  கிரக, நட்சத்திர மாற்றங்கள் வந்துவிடுவதில்லை. ஆனால் இந்த நேரம் கடந்துவிட்டால், ஜாதகனின் ராசி மாறாதிருந்தாலும், லக்கினம் மாறிவிடும். இதனால் கணிப்புக்களும் மாறிவிடும். 

மிக முக்கியமாக வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் இரண்டிலும், இந்த லக்கின குழப்பம் வந்துபோகும். 


ஜாதகம் எழுதுதல் 

ஜெனனி ஜென்ம செளக்யானம் வர்தனி குல சம்பதாம் - பதவி பூர்வபுன்ணியானம் லிக்யதே ஜென்ம பத்திரிக்கா



கடந்த பிறவிகளின் நல்லது கெட்டது வழியாகவும், குடும்பத்தின் நிலைத் தன்மைக்கான வழியிலும், இதுவரையில் அமைந்திருக்கின்ற பூர்வ புண்ணியம் வழியாக இந்த பிறப்பு ஜாதகம் எழுதப்பட்டிருக்கிறது - என்பது இதன் பொருளாகும். 

அப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களை, பிறந்தநாளின் அடிப்படையில் நின்ற கிரங்களின் நிலைகளையும், ஜாதகன் பிறந்த நேரத்திலிருந்து, கர்ப்ப செல் கால நிலை நீக்கி, நட்சத்திர சார கிரகத்தின் திசை இருப்பு கழித்து, மீதத்திலிருந்து, அடுத்துவரும் வருடங்களை கூட்டி பலன் சொல்லுகிறார்கள்.  இது திசா பலன்கள் என்றாகிறது. கூடவே புத்தி, அந்தரம் என்ற அளவுகோளிலும் நுணுக்கி பலன்கள் சொல்லப்படும். மேலும் அன்றைய கோள்சார நிலை கொண்டும் பலன் சொல்லுகிறார்கள். 


கிரகம் நின்ற நட்சத்திர சார அடிப்படையைக் கொண்டும் பலன் சொல்லுகிறார்கள்.  கிரக திரேக்கோணம், கிரக கேந்திர நிலை, கிரக பரிவர்த்தனை, கிரக பார்வை, கிரக கூட்டு, கிரக நேச நீச நிலை, கிரக யோக நிலை, கிரகம் அஷ்டவர்க்க பரல் நிலை தகுதி இப்படியாக பலப்பல ஆராய்ச்சிகளில் பலன் சொல்லுகிறார்கள்.

இவை எல்லாமே, ஒவ்வொரு சோதிட வல்லுனரின் அனுபவத்திற்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்றபடி உயர்வையும், மதிப்பை கொண்டிருப்பதை அறியலாம். என்றாலும் ஒருவர் சொன்னது, இன்னொருவரால் மறுக்கப்படுவதும் உண்டு.


ஜாதகம் என்ன சொல்லும்?

ஒரு விதைக்குள் அதன் தன்மை ஒளிந்திருப்பதுபோலவே, ஒரு மனிதனுக்கும் அவனின் வாழ்க்கை, அவனின் பலம், பலவீனம், சுகம், துக்கம், வளர்ச்சி, வீழ்ச்சி, இணைப்பு, துண்டிப்பு, நட்பு, துரோகம் இப்படியாக இன்னும் பலப்பல எண்ணற்ற வாழ்வியல் தன்மைகள் அடங்கியிருக்கின்றன. இவை அவனுடைய வளர்ச்சியில், தானாகவே மலரும். இவை அனைத்தையும் “இந்த கிரங்கள்” சொல்லிவிடுமா? இல்லை இதையெல்லாமே இன்னொரு மனிதன்தான் முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா?

அப்படியான நிலையில் இதை “தலையெழுத்து” என்று எண்ணுவது எப்படி? 


ஒன்றுக்கு மற்றொன்று முரண்

ஒரு ஜாதகன் இப்படித்தான் என்று சொல்லும்பொழுது, ஏறக்குறைய சரியாக இருப்பது போல இருந்தாலும், இது தீர்மானமில்லை, இப்படியும் இருப்பான் என்றும் சொல்லமுடியும். ஏன்?

ஒருவனுடைய பாதையில் பூக்கள் மட்டும் மலர்ந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. அவன் தன் பாதையில் எதை வேண்டுமானாலும் சந்திக்க முடியும். அவன் சந்திக்கின்ற ஒவ்வொன்றும் அவனுக்கு சாதக பாதகங்களை ஏற்படுத்தும் அல்லது அவனே அதை ஏற்றும் விலக்கியும் பயணிப்பான். எனவே கணிப்புக்கள் முரணாகும். 

பிறருக்கு பலன் சொல்லும் ஜோதிடருக்கே, திடுக் திடுக்கென்று மாற்றம் உண்டாக்கிகொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. 


அப்படியானால் எது உண்மை?

மனிதன், 

1) ஒருவேளை தன் “அறிவின்” துணையோடு பயணிக்காதவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம். 

2) தன் எண்ணங்களின் வழியே செயல்படாதவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம். 

3) தனக்கு ஏற்படும் சூழ்நிலைகளின் தாக்கத்தால் பாதிக்கப்படாதவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம்.  

4) இறையிடம் தன்னை ஒப்படைக்காத மனிதாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம். 

5) நான் யார்? என்று தன்னை உணரமறுக்கிறவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம். 


எப்போது ஜாதகம் பார்க்கப்படும்?

1) வாழ்க்கையில் விட்டேத்தியாக இருந்துவிட்டு, இனி என்ன செய்ய என்ற விரக்தியில்

2) சொந்தத்தொழிலா, வேலையா, வெளிநாடா கேள்வி எழும்பொழுது

3) தன்னுடைய செயலில் தடை ஏற்படும்பொழுது

4) தான் நினைத்த எண்ணம் நிறைவேறாத பொழுது

5) தான் பிறரால் ஏமாற்றப்படும் பொழுது

6) ஏதேனும் நோயால் அவதிப்படும்பொழுது

7) விபத்து ஏற்பட்டு முடங்கும் பொழுது

8) கையில் நிறைய பணம் இருந்து, புதிய தொழில் துவங்கும் பொழுது

9) திரட்டிய பணத்தில் இடம், வாகனம் வாங்கலாமா, தங்குமா என்ற கேள்வியில்

10) வாழ்க்கைத்துணை வரமா சாபமா என்ற கேள்வியில் 

11) பிறந்த குழந்தையால் என் வாழ்க்கை உயருமா தாழுமா சந்தேகம் எழும் பொழுது

12) தன் குடும்பத்தின் வளர்ச்சி இனி என்ன என்ற கேள்வியில்

13) ஆயுள் நீடிக்குமா என்ற சந்தேகத்தில் 

 இந்த சில தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த கேள்விகளுக்கு முந்தைய நிலைகளில், ஜாதக ஆலோசனை இல்லாமல் எப்படி இருந்தார் என்பது தெரியவில்லை. ஆனால், தன்னுடை செயல்களில், திட்டங்களில் தயக்கமும், சந்தேகமும் வந்த பிறகு, தன் ஜாதகத்தை பிறரிடம் காட்டத் துவங்குகிறார். 


உண்மை என்ன?

கடந்த பதிவிலும் இந்த குறிப்பை நாம் தந்தோம். மறுபடியும் ஞாபகப் படுத்திக் கொள்க.  சோதிட கணிதம் என்பது, இந்த பிரபஞ்சத்தில், நாம் வாழும் பூமி உட்பட, கிரகங்களின் இருப்புநிலை கணக்கு.  இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் கூட்டு. இத்தகைய அணுக்களின் கூட்டு என்பது அணுவியல் அளவில் நின்றுவிடுகிறது. ஆனால் வேதாத்திரியத்தில் அணுவையும் கடந்து, விண்களின் கூட்டு என்றும், அதனினும் கடந்த பரமாணுக்களின் கூட்டு என்பதாக அமையும். இவை சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தால் சுழன்றுகொண்டே இருப்பதால், வான்காந்தம் உருவாகி அவை இந்த பிரபஞ்சம் எங்கும் பரவிக்கொண்டே இருக்கும்.

இந்த வான்காந்தத்தில் எந்தெந்த பொருட்களில் இருந்து உருவானதோ அதன் தன்மைகளை கொண்டிருக்கும். எந்த கிரகம் எந்த தன்மையை பெற்றிருக்கிறதோ அத்தகைய தன்மையை, இந்த வான்காந்தமும் பெற்றிருக்கும் என்கிற உண்மையும் தெளிவாகிறது. 

நமது உடலும் இந்த பரமாணுக்களின் கூட்டுதானே? அந்த வகையில் நமக்குள் ஏற்படுகின்ற வான் காந்தத்திற்கும், பிரபஞ்சத்தில் உருவாகும் வான் காந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் வலிமை, அளவில் பெரிது என்ற அளவுகளும் இல்லை. ஆனால் ஒன்றோடு ஒன்று கலக்கும் பொழுது, அந்ததந்த அளவிலான மாற்றத்தை தருகிறது. இத்தகைய மாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்வதாகவோ, ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ அமையும். ஆகவே ஏற்றுக்கொண்டால் நன்மை, ஏற்றுக்கொள்ள முடியாதபோது தீமை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ளலாம்.


முக்கிய தன்மைகள்

வெளி என்பதற்கு சூழ்ந்தழுத்தும் ஆற்றலும், வான்காந்தம் மற்றும் ஜீவகாந்தத்திற்கு சூழ்ந்தழுத்த ஆற்றலும் விலக்கும் ஆற்றலும் சம அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


முடிவுக்கு முன்னதான ஒரு அலசலில்

இன்னும் பல எடுத்துக்காட்டாக சொல்லுவதானால், நான் இங்கே முடிவில்லாத பாடமே நடத்தவேண்டிவரும், அவ்வளவு விரிவானது இந்த “ஜோதிடம்” இந்த பதிவுக்கு என்ன வேண்டுமோ, அதோடு நான் நின்றுவிடுகிறேன்.

ஜோதிடம் முழுமையான வானியல் அறிவியல் தான் அதில் சந்தேகமில்லை. மேலும் அந்தக்காலத்திய வாழ்க்கை முறையில் குறிப்பிட்ட கணக்கியல்களில் பல தற்போதைய நவீன வாழ்க்கை முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டியவையே. கிரக, நட்சத்திரங்களின் தன்மையின் காலக்கெடு, மனிதர்களால் தீர்மானிக்க முடியாதவை. எனவே இவற்றின் அடிப்படை குணாதசியம் (காரதத்துவம்) என்றும் மாறாதவை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். 

அந்த அடிப்படையில் கிரக, நட்சத்திரங்களின் அலைகள், மனிதர்களின் உடல், மன, உயிர் என்ற வகையில் பாதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. அது உண்மையே. 

ஒரு மனிதனுக்குள், அவன் பிறந்தாளில் இருந்து இவனை, கிரகங்களும், நட்சத்திரங்களும் ஆட்டுவிக்கிறது என்ற நோக்கில் ஜாதகத்தை “தலையெழுத்தாக” அமைப்பதும், அதை அந்த மனிதரே ஏற்றுக்கொண்டு, எல்லா வகையிலும் “நல்லது நடக்குமா?” என்று அலசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 


உண்மை என்ன?

ஒரு விதைக்குள் இருக்கிற தன்மை என்று சொன்னேன் அல்லவா? அதுபோலவே ஒரு மனிதனின் அடிப்படை தன்மைகளை “ஒருவேளை” மிகச்சரியாக அவன் பெற்றிருக்க கூடும். அவை அவனின் ஜாதக குறிப்பில் தெரியவும் கூடும். கிரக, நட்சத்திரங்களின் குணாதியசங்களின் படி, இவன் இந்த மாதிரி என்ற “கணிப்பு” சரியாகலாம்.  அவ்வளவுதான்! அது ஒரு பதிவு,  அவன் பிறந்த நேரத்திய பதிவு, ஒரு ப்ளூ பிரிண்ட் எனலாம்.

இந்த அடிப்படையில் அவனுக்கான பாதை வகுக்கலாம் தவறில்லை. இதுதான் நிகழும் என்று தீர்மானிப்போர் யாருமில்லை. அது நிகழலாம் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால், ஜாதகனின் கடந்தகாலம் ஓரளவு மிகச்சரியாக சொல்லமுடியும். ஏனென்றால் அவன் இயல்பான வாழ்க்கை முறையை கொண்டிருந்தால், அவன் அதையே பெற்றிருப்பான். ஆப்பிள் விதை ஆப்பிள் மரத்தையும், ஆப்பிள் பழத்தையும் தானே தரும். இதில் வியப்பென்ன?!


இதற்குமேல், அந்த கிரகமும், நட்சத்திரங்களும் அவனை வழி நடத்துவதில்லை, ஆர்டர் செய்வதில்லை, இயக்குவதில்லை, துணை நிற்பதும் இல்லை. அவனை கண்டுகொள்வதும் இல்லை. என் பதின்ம காலங்களில். கிரகங்கள் தூண்டுகின்றன,  ஆளுமை செய்வதில்லை என்று யோசித்திருக்கிறேன். ஆனால் இவன், அவைகளை கணக்கில் கொண்டு, நீங்கள் தான் என்னை எல்லாம் செய்கிறீர்கள் என்று சொன்னால், “அப்படியா” என்று கேட்கவும், அவைகளுக்கு அவகாசமில்லை.


முடிவாக

இறக்கைகளை பெற்றிருக்கும் பறவைகள் நடக்கவேண்டியதில்லை. (உடனே பெங்குவின் ஏன் பறக்கவில்லை என்று புத்திசாலித்தனமாக கேட்காதீர்கள், அது இறக்கை அல்ல துடுப்பு) ஒரு ஜெனன ஜாதகம்,  இந்த இறக்கைகளை மறக்கடிக்கிறது என்றுதான் நான் சொல்லுவேன். ஒரு மனிதனுக்கு ஜெனன ஜாதகம் எழுதப்பட்டிருக்குமானல் மகிழ்ச்சி. இதுவரை எழுதப்படவில்லை என்றால் ரொம்பவே மகிழ்ச்சி. 


தேனுக்கு இருக்கும் குணாதசியம், எதனோடும் சேரும், சேராததோடு சேர்ந்தால் தேனும் விஷமாகும். மனிதன் அவ்வாறே. அவனுக்கு அவன் பிறந்தபோது, கிரகங்களும், நட்சத்திரங்களும் மட்டுமே அவனை ஆட்கொள்வதில்லை. முக்கியமாக இறையும் அவனோடு கலந்து, அவனின் பூர்வ புண்ணியத்தில் இருக்கின்ற கழிவுகளை தீர்க்கும் வாய்ப்பை தந்திருக்கிறது.

அதை கவனத்தில் கொள்ளாமல், அதை விடுத்து, தனித்து, நான் என்ற வகையில், தன்னை ஏதேனும் வழியில், நிற்க எடுக்கும் ஏல்லா முயற்சிகளிலும் தடைவரவே செய்யும். அத்தடைகளை தருவதற்கு கிரகங்கள், நட்சத்திரங்கள் தேவையில்லை, இறையே தரும்.

ஜெனன ஜாதகம் தலையெழுத்தா? நீங்களே பதில் சொல்லுங்கள், கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்!

வாழ்க வளமுடன்.

------------------

Present by:





Thanks to photos and images: copyright to their owners



Non-Miracle Eclipse Event


 அதிசயமல்லாத நிகழ்வு


நேற்றைய நாள்

நேற்று அமாவாசை (புதுநிலவு நாள்) மற்றும் சூரிய கிரகணம் (வளைய கிரகணம்) நாளுமாக அமைந்தது. அதாவது முழுமையாக சூரியனை மறைக்காது, அதன் உள்ளடக்க அளவிற்கு நிலவு மறைப்பது, வளைய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் நம் இந்திய பகுதியில், அருணாச்சலம் மாநில பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் என்றனர். காரணம், இதன் கடல்மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் நிலப்பரப்பு ஆகும்.  பூமியின் வடகோள் பகுதி நாடுகளான ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளில் முழுமையாக காணக் கிடைத்தது. இது குறித்த செய்தி, காணொளி தேடுகையில், வேறுபல செய்திகளை நான் கண்டறிந்தேன். 


நிகழ்வது என்ன?

Image subject to the copyrights 


ஒரு புதுநிலவு நாள் (அமாவாசை) , முழு நிலவு (பௌர்ணமி) நாள் என்பது ஒவ்வொரு மாதத்தில் நிகழ்வதுதான். கிரகணங்கள் மட்டுமே குறிப்பிட்ட அந்த கால கட்டங்களில் நடைபெறுகிறது. பூமியும்  சந்திரனும் சூரியனும் சந்திக்கின்ற புள்ளிகள் தான் ராகு, கேது என்று அமைகின்றன. அந்த இடத்தில் மிகச்சரியாக, முழு நிலவு நாளில் சந்திரகிரகணமும், புதுநிலவு நாளில் சூரிய கிரகணமும் நடைபெறும். 

Image subject to the copyrights 

சூரியன், பூமியிலிருந்து கிட்டதட்ட 9 கோடி மைல் தூரத்தில் இருக்கிறது. நிலவு பூமியிலிருந்து 2 இலட்சத்து 86 ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கிறது. அளவுகளில் சந்திரனே மிகச்சிறியது. அதை விட மிகப்பெரிது பூமி, பூமியை விட மிக மிகபெரியது சூரியன். ஆனால் நாம் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது “இயற்கையின் அதிசயமாக” நிலவு அளவிற்கு சூரியனும் அல்லது சூரியன் அளவிற்கு நிலவும் இருப்பதை (மாய அளவுகளில்) காணலாம். இதனால் நிலவு தன் பாதையில் சூரியனை மறைப்பதும் (சூரிய கிரகணம்), பூமி தன் ஓட்டத்தில், நிலவுக்கான சூரிய ஒளியை மறைப்பதும் (சந்திர கிரகணம்) முழுமையாக நிகழ்கிறது. 


ராகு, கேது நிலை

இந்த ராகு, கேது இரண்டையும், ஜோதிட நூலார்கள் கிரகங்களாக எடுத்துக் கொண்டார்கள்.  உண்மையில் இவை காணக் கிடைக்காத நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும். வேதாத்திரியத்தின் அடைப்படையில் இவை இரண்டும், சூரியனில் இருந்து வெளிவரும் சுத்தவெளியாகும். சூரியனில் எப்போதும் அணுச்சிதைவு ஏற்படுக்கொண்டே இருப்பதை நாம் அறிவியல் ரீதியாகவும் அறிவோம். அந்த சிதைவின் காரணத்தால், மையத்தில் ஏற்படும் அழுத்தம் வெளியாகி, தன்னிடத்தில் தாங்காது பீறிட்டு, சூரியனிலிருந்து வெளிக்கிளம்புகிறது. சில அணுவியல் வல்லுனர்கள் இதை “கரும்புள்ளி” (Block Spots) என்றும் சொல்லுகிறார்கள். 

இத்தகைய சுத்தவெளிப்பாதை சூரியனின் இரண்டுபக்கங்களிலும் பாய்ந்து, சூரியமண்டலத்தை கடந்தும் செல்கிறது. இந்த ஒரு பக்கத்தைத்தான் ராகு என்றும், மறு பக்கத்தை கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். இரண்டும் எதிர் எதிராக 180 கோணத்தில் அமையும்.

சந்திரனில் இருந்து வரும் ஒரு கோடு அதில் எதிரும் புதிருமாக 180 கோணத்தில் புள்ளிகள் என்றும் ஜோதிட வல்லுனர்கள் சொல்லுவதுண்டு, ஆனால் வேதாத்திரியத்தில் சூரியனில் இருந்து கரும்புள்ளிகள் வழியாக பீறிட்டு கிளம்பும் வெளி என்பதுதான் உண்மை. 

இந்த படங்கள் உங்களுக்கு ஒரு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன்.

Copyrights to caricaturist-journal.blogspot.com

இவை எல்லாமே உண்மை என்பதால், இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் மற்றும் கோள்கள் இவற்றால் எழும் பாதிப்புக்களும் உண்மைதானா? இதன் அடிப்படையில் சோதிடமும் உண்மைதானா? என்ற கேள்விகள் எழும் தானே? இக்கேள்விக்கான விரிவான பதிலை அடுத்த பதிவில் காணலாம். 


உண்மை என்ன?

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் கூட்டு. இத்தகைய அணுக்களின் கூட்டு என்பது அணுவியல் அளவில் நின்றுவிடுகிறது. ஆனால் வேதாத்திரியத்தில் அணுவையும் கடந்து, விண்களின் கூட்டு என்றும், அதனினும் கடந்த பரமாணுக்களின் கூட்டு என்பதாக அமையும். இவை சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தால் சுழன்றுகொண்டே இருப்பதால், வான்காந்தம் உருவாகி அவை இந்த பிரபஞ்சம் எங்கும் பரவிக்கொண்டே இருக்கும்.

இந்த வான்காந்தத்தில் எந்தெந்த பொருட்களில் இருந்து உருவானதோ அதன் தன்மைகளை கொண்டிருக்கும். எந்த கிரகம் எந்த தன்மையை பெற்றிருக்கிறதோ அத்தகைய தன்மையை, இந்த வான்காந்தமும் பெற்றிருக்கும் என்கிற உண்மையும் தெளிவாகிறது. 

நமது உடலும் இந்த பரமாணுக்களின் கூட்டுதானே? அந்த வகையில் நமக்குள் ஏற்படுகின்ற வான் காந்தத்திற்கும், பிரபஞ்சத்தில் உருவாகும் ஜீவ காந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் வலிமை, அளவில் பெரிது என்ற அளவுகளும் இல்லை. ஆனால் ஒன்றோடு ஒன்று கலக்கும் பொழுது, அந்ததந்த அளவிலான மாற்றத்தை தருகிறது. இத்தகைய மாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்வதாகவோ, ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ அமையும். ஆகவே ஏற்றுக்கொண்டால் நன்மை, ஏற்றுக்கொள்ள முடியாதபோது தீமை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ளலாம்.


முக்கிய தன்மைகள்

வெளி என்பதற்கு சூழ்ந்தழுத்தும் ஆற்றலும், வான்காந்தம் மற்றும் ஜீவகாந்தத்திற்கு சூழ்ந்தழுத்த ஆற்றலும் விலக்கும் ஆற்றலும் சம அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


ஓதங்கள்

Image subject to the copyrights 


இந்த தன்மைகளின் அடிப்படையில், சூரியனும், நிலவும் தனக்குறிய வான்காந்த அலைகளை கொண்டிருக்கின்றன. நிலவு சூரியனின் முன் நேராக வந்து நிற்கையில், தன்னியல்பாக பூமியில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் கடல் தன் இயல்பில் இருந்து எழும்புகிறது, இதுவே ஓதம் எனப்படும். இப்படி ஓதம் ஒருபக்கம் உயர்கையில் இன்னொருபக்கம், ஓதம் தாழ்ந்து போகவும் செய்யும். 


உதாரணமாக,  உயர்ந்த ஓதமும் தரும், தாழ்ந்த ஓதமும் தரும். படம் காண்க.





 நன்றி: www.elitereaders.com


புரிதல் என்ன?

நாம் வாழும் பூமியே கொஞ்சம் பாதிக்கப்படுமென்றால், அதில் வாழும் உயிரினமான மனிதனும் பாதிக்கப்படுவான் தானே?. மனிதனின் உடலும் 70% நீரால் ஆனதுதானே! உடலுக்குள்ளாக ஓடுகின்ற இரத்தமும் நீரின் ஒரு நிலையே.  அதனால் மனித உடல் பாதிக்கப்படலாம். அதோடு நிலவின் வான்காந்த அலைகள், மனித மன அலைகளோடு அல்லது ஜீவகாந்த அலைகளோடு நெருக்கமான தொடர்புடையது. இதனால் மனிதனின் மன நிலையும் தடுமாறலாம். இன்னமும் கூட சில நுண்ணிய தொழிற்கருவி பயன்படுத்தும் வல்லுனர்கள், மனம் ஒன்றி வேலைசெய்யும் தொழிலாளார்கள் இத்தகைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்வதை காணலாம். 


கூடுதலான விளக்கமாக

மனிதனின் உடலும், மனமும் பாதிக்கப்படுவதால்...

1) உடல் உறுப்பு இயக்கங்களில் சிறு மாற்றம் உண்டாகலாம்.

2) உணவு செரித்தல் தடை, தாமதம் உண்டாகலாம்

3) எண்ணம் சிதறலாம், முடிவுகளில் குழப்பம் வரலாம்

4) கருவிகளால் தன்னையோ, பிறரையோ காயப்படுத்துவது நடக்கலாம்

5) இந்த நாளில் உடல் உறவில் திளைத்தால், புத்தி சுவாதீனமற்ற குழந்தை உண்டாகலாம் அல்லது கரு பாதிப்பு உண்டாகலாம்

6) நோய்க்கான மருந்து பயன்படாமல் போகலாம்

7) ஏற்கனவே மனநோய் கொண்டோர் நிலைகொள்ளாமல் தவிக்கலாம்

8) நோயாளிகளுக்கு நோய்தன்மை உயரலாம்

9) உயிர் போகாது இழுத்துக்கொண்டிருந்த முதியோர் இறக்க நேரிடலாம்

10) குண்டலினி யோகத்தில் ஆர்வமுள்ளோர்க்கு தீட்சை பலனளிக்கும்

11) ஏற்கனவே தீட்சை பெற்றுக்கொண்டோர் தவம் சிறக்கும்

12) விழிப்புணர்வோடு இருப்போர்க்கு சிந்தனை சிறக்கும்.


உண்மைபோல புரட்டு

மேற்கண்ட 12 குறிப்புக்களோடு சில பல நிகழலாமே தவிர, வேறெந்த பாதிப்பும் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால், பொதுவாகவே எல்லோரும், மக்களை பயமுறுத்தி, “கடவுள்” பயம் காட்டி, ஏதோ உலகமே ஒரு கெட்ட சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதான “உண்மைபோல புரட்டு” பகிரப்படுகிறது. வீட்டிற்கு, நாட்டிற்கு, உலகுக்கு ஆபத்து என்றெல்லாம் அள்ளித்தெளிக்கிறார்கள். அப்பதிவுகளையும் பல்லாயிரம்பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

இன்னும் மேலே “இந்த மந்திரம் சொல்லுங்கள், இந்த பதிகம் பாடுங்கள், இந்த பக்திபாடலை பாடுங்கள்” என்று மொத்தமாக மடை மாற்றுகிறார்கள். 


என்ன செய்யலாம்?!

உங்கள் வழக்கமான வேலைகளை, திட்டங்களை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, இயற்கையாக வானில் நடக்கும் அற்புதங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த எளிமையான செயல்களில் ஈடுபடலாம். திட்டமோ தீர்மானமோ வேண்டாம். உணவை தள்ளிப்போடலாம். வீட்டிற்கு வெளியே தாராளமாக வரலாம். தோட்டங்களில் ஓய்வு எடுக்கலாம். நல்ல இசை கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

கிரணங்களை பார்ப்பதில், சூரிய கிரகணங்களை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து. நேரடியான ஆதீத சூரிய ஒளி கண்களை குருடாக்கும். எனவே தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை உபயோகிக்கலாம். எப்படியும் தொல்லைகாட்சியிலும், யூடூயுபிலும் காட்டுவார்கள் அதை கண்டு மகிழுங்கள். சந்திர கிரகணம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும் அதற்கும் தகுந்த பாதுபாப்பு கண்ணாடிகள் கிடைக்கின்றன. 

சந்திரகிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாமா? ஆங்கில வளைத்தளம் - விளக்கம்


அன்பர்களே

நீங்கள் உங்களை, தவறாக வழிநடத்தும் அல்லது பயமுறுத்தும் “பொது ஆலோசனையாளர்களிடம்” இருந்து தள்ளி நிறுத்துங்கள். 

வாழ்க வளமுடன்.