Who is Eman the God of Death?
எமன் என்பவன் யார்?
சிக்கவைக்கும் அல்காரிதம்
பொதுவாகவே, நாம் எந்த காணொளி குறித்து தேடினாலும், பார்த்தாலும், அதோடு தொடர்ச்சியுடைய மற்றொரு காணொளி, தானாகவே நமக்கு தேடித்தரும் வகையில்தான் YouTube algorithm அமைத்திருக்கும். இந்தா, இதையும் பார் என்று கொடுத்துக்கொண்டே இருக்கும். யுடுயூப் மட்டுமல்ல, நம் ஆர்வத்திற்கு தீனி போட அத்தனை வேகமாக இப்போது உள்ள இணையதளங்கள் செயல்படுகின்றன. சமீபகாலமாகவே நீங்கள் எதை தேடினாலும் அதுகுறித்த விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில் வருவதையும் அறிந்திருப்பீர்கள்.
எமன் வாகனம்
கடந்தவாரத்தில், ஒரு நண்பர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். யுடுயூப் காணொளியில், எதேதோ பார்த்துக்கொண்டிருந்த பொழுது, காட்டுயானைகள் குறித்த காட்சிகளை பார்த்து ஆர்வம் கொண்டிருந்த வேளையில், இந்திய மேற்குமலை தொடர்களில் வாழ்ந்துவரும் காட்டு எருமைகள், வால்பாறை, கொடைக்கானல், ஊட்டி போன்ற நகருக்குள் வந்துசெல்லும் காணொளியை பார்த்திருக்கிறார்.
“அதை ஏன் கேட்கறீங்க, பார்த்ததிலே இருந்து அதுதான் மனசுல நிக்கிது”
“பிரமாண்டமா இருந்திருக்குமே, இந்திய காட்டு எருமைகளுக்கு நல்ல வலிமை, பெருமை இருக்கு, தெரியுமா?” என்றேன்
“ஆமா, பார்த்தாலே ஒரு பயம் கலந்த ஆர்வம்தான். ஆனா பயங்கர தெனாவட்ட நடக்குது” என்று சொல்லி சிரித்தார்.
“சில ரொம்ப ஆக்ரோஷமானவைதான், ஆனால் தேவையின்றி மனிதரை தாக்குவதில்லை. ஆனாலும் அது தாக்கும் தூரத்தை தாண்டி நிற்பதுதான் நமக்கு நல்லது”
“ஆமாம், இதுலே, ஊட்டி பார்க்கில், திருமணமாகி மூன்று மாதமே ஒரு தம்பதியினரை காட்டெருமை முட்டி, பையன் ஸ்பாட் அவுட், பொண்ணு 2 அப்புறமா இறந்துட்டாளாம்.”
“அடடா, உண்மையில் அது தாக்க வந்துட்டா, தரையில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி கேட்டிருக்கேன். ஆனால் நம்மை மாதிரி சாதரணமாவர்களுக்கு உடனே நினைவுக்கும் வந்துவிடாது. நாம் ஓட முயற்சிப்போம். அது பாய்ந்து வரும். வலிமையான முன் தலையும், கூர்மையான கொம்பும் அதற்கு உண்டே”
“ஆமா, கனவிலே கூட வந்து பயமுறுத்தும் போல இருக்கு” என்றார் சிரித்துக்கொண்டே.
“அதுமட்டும் வந்தா தப்பிச்சிரலாம், மேல ஒருத்தன் உட்கார்ந்து வந்தால்தான் தப்பிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு இருவரும் சிரித்தோம்.
“சரி, எமன் பற்றி ஒரு பதிவு போடுங்க” என்றார்.
எமன் வாகனம், காட்டெருமை அல்ல, கிராமப்புற வளர்ப்பான எருமை ஆகும். ஆனால், எமன் மாதிரியான ஆளுக்கு (?!) காட்டெருமை மிக பொருத்தமானதே!.
எமன் கோவில்
எமன் பொதுவாகவே வழிபடும் தெய்வமாக இல்லை. ஆனால் மரணபயம், ஜாதகத்தில் மார்கஸ்தான கிரக நிவர்த்தி எனும் வகையில் பரிகாரம் செய்வதற்காக வணங்கவேண்டிய நிர்பந்தம் மனிதர்களுக்கு நேர்கிறது. சண்டைக்காரனிடமே சரணடைவது என்பது இதுதான். இப்படி பரிகார நேர்த்திக்காக சில கோவில்கள் அமைத்திருக்கிறார்கள். அந்தக்காலம் முதலாக என்று சொன்னால், விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை எனும் ஊரிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி எனும் ஊரிலும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் எனும் ஊரிலும், தனித்த எமனுக்கான கோவில்கள் அமைந்திருக்கின்றன. காலத்தால் பிறகு அங்கங்கே நிறைய கோவில்கள் அமைந்திருக்கின்றன.
Art by Suresh Pydikondala |
யார் எமன்?
கதைகளாக பார்த்துகொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. சுருக்கமாக பார்த்தால், சூரியனின் மகன், சனியின் சகோதரன் என்கிறார்கள். ஏதோ சாபத்தால் முதலில் இறந்தவனே எமன், பிறகு சிவன், எமனை உயிர்பித்து மக்களின் உயிர்பறிக்கும் தகுதி கொடுத்ததாகவும், மார்கண்டேயன் உயிரை காப்பற்றி, சிவனெ எமனை எரித்ததாகவும், பூமியில் மனிதபாரம் அதிகமாக, தேவர்களின் கோரிக்கைபடி, எமனை உயிர்பித்ததாகவும் அப்போதிருந்து எமன் மக்களை உயிரைபறிக்கும் வேலைகளை மறுபடி தொடங்கியதாகவும் கதைகள் உண்டு. இந்த கதைகளுக்கு எல்லாம் பஞ்சமே இல்லை.
உண்மையில் எமன் யார்?
எமன் இந்த வார்த்தையே மருவி வந்ததாகும். நியமம் என்றொரு வார்த்தை உண்டு. நியமம் என்பது #எண்வகை (எட்டு / அஷ்டாங்கா) யோகத்தில் இரண்டாவது நிலை. இறை அல்லது இயற்கையின் விதி, ஒழுங்கு, மாறாத நீதி என்ற வகையில் உணர்த்துவது ஆகும்.
(#எண்வகை யோகம் குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம். காத்திருங்கள்)
இந்த நியமம், ஓவ்வொரு நொடியும் கடந்துகொண்டே இருப்பதும் ஆகும், முன்னோ, பின்னோ நகர்வதும் இல்லை. இந்த நியமத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு பாவம் நேர்கிறது என்றும், அது அவர்களிடைய வாழ்க்கை கணக்கில் வரவாக வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் வரவு வைப்பது சித்திரகுப்தன் என்றும், கணக்கை தீர்ப்பது எமன் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
கற்றுத்தேர்தலோ, படிப்போ, கல்வியோ இல்லாத பாமர மக்களுக்கு, ஒழுக்க வழக்க பழக்கங்களை கதைகளாக சொல்வது அக்காலத்திய வழக்கம். அதுவே இன்றும் ஆனால் கதைகளாக மட்டும் நிலைத்துவிட்டது.
நியமம் செய்வது நியமன் என்ற வார்த்தையில், நியமன் (யமன்) எமனாகிப் போனான். நியமன் என்ற சமஸ்கிருத வார்த்தை, அப்படியே தமிழுக்கு மாறுகையில், காலன், காலத்தை ஒழுங்காட்சி செய்வபன் என்றாகிவிட்டது.
காலன் காளி ஆனது
இந்த காலன் என்ற தமிழ்வார்த்தை, வட இந்தியாவிற்கு செல்கையில், திரிபு ஆகி, பெண்ணாகவும் ஆகி, காளி என்றாகிவிட்டது. மறுபடியும் அது தமிழுக்கு வந்து, இங்கும் காளி ஆகிவிட்டது.
எமனுக்கும், காளிக்கும் உள்ள உருவம், செயல், அவர்களிடமிருக்கும் பொருட்கள் இவற்றைக்கொண்டு ஒற்றுமையை அறியலாம். எமனும், காளியும் சகோதர, சகோதரிகள் என்றும் சொல்லபடுவதுண்டு. இராமகிருஷ்ண பரமஹம்சரின் விருப்பத்திற்கு உரிய தெய்வமும், அவருக்கு உண்மையை உணர்த்தியதும் காளியே.
இறப்பில் உயிர்ப்பு
பொதுவாக, இந்த உலகில் உயிர்வாழும் மனிதருக்கு மரணம் குறித்த தனிக்கவனம் இல்லாதிருந்திருக்க(!) வேண்டும். அதாவது, மரணம் குறித்த அறிவோ, விளக்கமோ இல்லை என்ற நிலையில் வாழ்ந்திருக்க கூடும். நேற்றிருந்தான் இன்றில்லை என்றும், அவனுக்கு என்ன நடந்தது, நடந்திருக்கிறது என்பது விளங்கிக்கொள்ளாத நிலையில்தான் மனிதன் இருந்திருக்கிறான். பின்னாட்களில் அறிவு விளக்கம் பெற்றோர் அந்த நிலையை உணர்ந்து மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அந்த விளக்கத்திற்காக பின்னப்பட்ட கதையே நியமம் என்பதும், அதுவே எ(ய)மன் ஆகவும் மாறிவிட்டது.
அதுவே இறப்பு குறித்த பயத்தையும் உண்டாக்கி விட, அதிலிருந்து தப்பிக்க அதையே இறை வடிவமாகவும் மாற்றி வழிபாடாகவும் வந்துவிட்டது. ஆனால், உண்மையாகவே இறப்பு குறித்த சிந்தனை வந்துவிட்டால், உயிர்வாழ்வது என்ற நிலை குறித்த உண்மையும் வந்துவிடும். எனவே காலனும், காளியும் உயிர் குறித்த சிந்தனையை தூண்டும் தெய்வ வடிவாகவும் ஏற்றுக்கொள்ளலாம்.
பகவான் ரமண மகரிஷியும் மரணம் குறித்த சிந்தனை வாயிலாகவே, “தான் யார்?” என்ற கேள்வியை தொடங்கினார் என்பதை நாம் அறிகிறோம்.
உயிர் காப்பானா (ளா), அழிப்பானா(ளா)
இரண்டு கேள்விக்கும் பதில் காத்தாலும் அழிப்பான்(ள்). ஆனால், உயிரினங்களுக்கு பிறப்பு என்று நிகழ்ந்ததோ அன்றே இறப்பும் நிச்சயப்பட்டுள்ளது. இதில் மனிதன் விதிவிலக்கல்ல. சுழற்றிய பம்பரம், சுழலை நிறுத்தி கீழே விழுவது நமக்கு தெரிந்த உண்மைதானே. வேதாத்திரி மகரிஷி சொல்வது போல, “எல்லோருக்கும் தேதி குறிப்பிடாத ரிட்டன் டிக்கெட் வைத்திருக்கிறோம். யாரும் இதுவரையில் பயணத்தை நிறுத்தி வைத்ததில்லை”
நியமத்திலிருந்த வந்த எமனோ, காலனோ, காளியோ யாராக இருந்தாலும், இவர்கள் நம் வாழ்வில், நம் வாழ்க்கையை குறிப்பிடும் ஒரு குறியீடு. அவர்களை தெய்வமாக வழிபடுவதும் நெடுங்கால பழக்கம். அதில் குறையும் இல்லை. ஆனால், வழிபடுகிறோம் என்பதற்காக, காலத்தில் இருக்கிற நியமங்களை விட்டு விலகிச்செல்வது முறையல்ல.
நியமம் என்ற வகையில், இயற்கையின் விளைவோடு கூடிய நீதியில், சித்தர்கள் நமக்கு சொன்ன, 1) ஒழுக்கம் 2) கடமை 3) ஈகை இந்த மூன்றின் வழியாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், கிடைத்த உயிர் வாழ்வை இனிதே வாழலாம். தன்னைப்போலவே பிறரையும் மதித்து, கடமையாக உதவியும் செய்து வாழ்தலில் மகிழலாம். தான் செய்ததின் பிரதிபலனாக மீண்டும் நமக்கு, தகுந்த நேரத்தில் உதவி கிடைப்பதை எண்ணி வியக்கலாம்.
மரணபயம்?!
ஒரு புதிய, புத்தம் புது திரைப்படம் (அரசால் தடை செய்யப்பட்டது), வீட்டில் OTT மூலம், தொல்லைகாட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். திரைப்படம் பார்ப்பது என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். உடல் மண்ணுக்கு, உயிர் அந்நடிகருக்கு (அந்நடிகைக்கு) எனும் வகையில் என்று வைத்துக் கொள்ளலாமே. இப்பொழுது உங்கள் வீட்டில், திரைப்படம் இன்னும் 40 நிமிடத்தில் முடிவடையும் நேரத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
“ஐயகோ, இதென்ன சோதனை? முடிவு தெரியாமல் எப்படி?!” அழுது புலம்பி தவிக்கிறீர்கள். காரணம் தடை செய்யப்பட்ட அந்தப்படம் இனிமேல் வெளியிடவே மாட்டார்கள் என்பதே காரணம்.
வாழ்க்கை ஒரு தரம் தான் வாழ முடியும், திரைப்படம் பார்ப்பது போல இன்வெர்ட்டர் வைத்துக் கொண்டு அடுத்த 40 நிமிடத்தை கடத்த முடியாது. உங்கள் வாழ்க்கைக்கும், உயிருக்கும் இன்வெர்ட்டர் இல்லை.
உங்கள் வாழ்வை, வாழும் காலத்திலேயே திருப்தியும், மன நிறைவும், உண்மையும் பெற்று, இயற்கையையும், இறையையும் உணர்ந்து, நான் யார்? (இவை எல்லாமே இன்வெர்ட்டர் தரும் 40 நிமிட மின்சாரம் என்று வைத்துக்கொள்க!) என்றும் தெளிந்தால் அடுத்த நாட்களை குறித்தோ, வரும் காலம் குறித்தோ கவலை இருக்கப் போவதில்லை.இப்போது மரண பயம் ஏன் வரும்?! எமனோ, காலனோ, காளியோ கவலை என்ன வந்துவிடும்?
மனித பிறப்பின் முழுமையை அறிந்ததனால், இறப்பை இயல்பாக வரவேற்பீர்கள்.
வாழ்க வளமுடன்.