Is Zodiac Horoscope Dosha Remedies Working?
ஜெனன ஜாதக தோஷ பரிகாரம் வேலை செய்கிறதா?
தோஷம் என்றால் என்ன?
ஒரு ஜெனன ஜாதகத்தில் இருக்ககூடிய நல்லன, நிறைகள் எல்லாம் யோகம் என்ற அழைக்கப்படும் வேளையில், அதில் இருக்கக்கூடிய தவறுகள், குறைகள் தோஷம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தோஷம் என்பதிலும், ஒரு ஜாதகனின் பலமும் வெளிப்படும். அதாவது இக்குறை உள்ளவரோடு, குறை உள்ளவரை சேர்த்தால் பலன் உண்டாகும். உதாரணமாக, செவ்வாய் தோஷம் இருக்கிற ஆணுக்கு, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணே பொருத்தமாவாள். இரண்டு குறைகள் சேரும்பொழுது அவை நிறைகளாக மாறுகிறது அல்லது குறைகள் சமம் ஆக்கப்படுகின்றன.
தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்
பெருமளவில் இந்த வகையில், ஒரு ஜாதகருக்கு அனுபவம் கிடைத்திருக்கும். முக்கியமாக திருமணம் செய்வதற்கு, “தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்” என்ற வகையில், ஏதேனும் ஜோசியரிடம் ஆலோசனை கேட்டிருப்பார்கள். அவர்கள் சொன்னபடி குறிப்பிட்ட வகையில் அதை நிறைவேற்றி இருப்பார்கள். ஜாதகருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட, பெற்றோரின் தொல்லை தாங்காமல் செய்திருப்பார்கள். உண்மைதானே?
இந்த தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆராய்வோம்.
தோஷங்கள்
1) ராகு, கேது சர்ப்ப தோஷம்
திருமண தடையும், வாழ்க்கை முன்னேற்ற தடையும், பூர்வ புண்ணிய தடையும், குழந்தைபாக்கிய தடையும் உண்டாக்கும் என்று சொல்லுவார்கள்
2) செவ்வாய் தோஷம்
ஆண், பெண் திருமண பொருத்தத்தில் இந்த தோஷத்திற்கு முக்கிய இடம் உண்டு
3) மாங்கல்ய தோஷம்
பெண்ணின் ஜாதகத்தின் வழியாக, கணவனின் ஆயுள் நிர்ணயம் செய்யும் தோஷம் என்பார்கள்
4) களத்திர தோஷம்
கணவனாக வருபவன், மனைவியாக வருபவள் குணங்களில் இருக்கும், அல்லது ஏற்பட போகும் மாற்றத்தை குறிப்பிடும் தோஷம் என்று சொல்லுவார்கள்.
5) புத்திரதோஷம்
குழந்தை பிறக்காத அல்லது பிறந்த குழந்தை குறித்த தோஷங்களை குறிக்கிறது என்பார்கள்.
6) சூரிய தோஷம்
உயிர், வாழ்க்கை, வளர்ச்சி, தொழில், அரசாங்க துணை ஆகியன குறித்த தோஷங்களை குறிக்கும் என்பார்கள்.
7) புனர்பூ தோஷம்
சந்திரன் சனி ஆகிய கிரங்களின் கூட்டினால் உண்டாகும் தோஷம் ஆகும்.
8) விஷ கன்யா தோஷம்
பெண்களின் ஜெனன ஜாதகத்தில் இருக்கும் இத்தோஷம் கணவனுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும் என்று சொல்லுகிறார்கள்
9) பாபகத்ரி நீச்ச தோஷம்
ஒரு ராசி கட்டத்தின் முன்பும், அடுத்தும் அமைதிருக்கின்ற சுபர் அல்லது பாவர் கிரங்களைக் கொண்டு இந்த தோஷம் அமைவதாக சொல்லுகின்றனர்.
10) பாலரிஷ்ட தோஷம்
ஒரு குழந்தை இறந்தே பிறப்பது அல்லது 14 வயதிற்குள் இறப்பது இத்தகைய தோஷமாகும்.
இவை போக வேறு சில தோஷங்களும் இருக்கலாம், ஆனால் இந்த பதிவைப்பொறுத்தவரை இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.
பொதுவான நிவர்த்தி அல்லது பரிகாரம் என்ன?
எந்த ஒரு ஜெனன ஜாதகத்தை ஒரு சோதிடரிடம் கேட்டு, தோஷம் தொடர்பாக ஆலோசித்தால், இன்ன இன்ன தோஷம் இருக்கிறது, இதனால் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லுவார். வியாபார ரீதியிலான ஜோதிடர் என்றால் “யாகம் செய்யலாம்” என்றும் அதற்கு இவ்வளவு செலவு ஆகும் என்றும் பட்டியல் போட்டுத் தருவார்கள்.
சில ஜோதிடர்கள், இந்த பரிகாரத்திற்கு இந்த கோவிலுக்கு போய்வாருங்கள், பால் அபிஷேகம் செய்யுங்கள், இந்த கடலில், ஆற்றில் பிண்டம் வைத்து வழிபடுங்கள், அன்னதானம், ஆடைகள் தானம் செய்யுங்கள், ஏழைக் குழந்தைக்கு, உடல் ஊனமுற்ற, பார்வையற்ற சிறப்பு நபர்களுக்கு உதவுங்கள் என்றெல்லாம் சொல்லி விடுவார்கள்.
இன்னும் சில சோதிடர்கள், உங்கள் ஊரிலேயே இருக்கும் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள், நவ கிரகங்களுக்கு நீர் ஊற்றுங்கள் என்று எளிய வகையில் சொல்லிவிடுவார்கள்.
தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்தபிறகு?!
சோதிடர்கள் சொன்ன பரிகாரம் செய்த பிறகு என்ன நடந்துவிடும்? அந்த ஜாதகருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் மனதிருப்தி கிடைக்கும். இவர் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்துவிட்டார் என்று கிரகங்கள் திருப்தி கொண்டு இடம் மாறி அமர்ந்து விடுவதில்லை. தன் தாக்கத்தை குறைத்துக் கொள்வது இல்லை. உடனே நல்லது செய்துவிடுவதும் இல்லை. அல்லது அந்ததந்த கிரகங்களுக்கு அதிபதியாக சொல்லப்படும், கோவிலில் இருக்கும் இறைவன்கள் அருளைப்பொழிந்து விடுவதில்லை. நீங்கள் பிண்டம் வைத்துவிட்டீட்கள் என்பதற்காக, மூதாதையர்களும் பாசத்தால் பொங்கிவழிந்து உதவி செய்து விடுவதில்லை.
எது இருந்ததோ அது அப்படியேதான் இருந்தது!
அப்படியானால் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் என்பது பொய்யா?
உங்கள் மனம் ஏற்படுத்தும் மாயம், இந்த நிவர்த்தி, பரிகாரத்தால் “இனி நல்லது நடக்கும்” என்று நம்புகிறது. உங்கள் குடும்பத்தாரும் நம்புகிறார்கள், நீங்கள் இதைச்செய்யும் பொழுது, அதை பார்க்கும் “மற்றவர்களும்” நம்புகிறார்கள். அவ்வளவுதான்.
வேறு வழி என்ன? அல்லது உண்மை என்ன?
செவ்வாய் தோஷம் என்பது எந்த நிலையும், மாறாது, குறைவுபடாது. எனவே அந்த வரனுக்கு, செவ்வாய் தோஷம் இருக்கும் வரனை இணைப்பதுதான் அதற்கான பரிகாரமும், நிவர்த்தியும். இதைத்தவிர விளக்கு போடுவதாலும், நீர் ஊற்றுவதாலும், குறிப்பிட்ட ஸ்தல கோவில்களுக்கு போவதாலும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. செவ்வாய் தோஷத்திற்கும் திருமண தடைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. காலத்தால் காத்திருந்தால் தகுந்த வரன் அமையும். உங்கள் ஆர்வத்திற்கும், விருப்பத்திற்கும் வரன் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?! வாழ்க்கை என்ன பாஸ்ட் புட்டா?
கால சர்ப தோஷம் என்பது அமைந்திருக்கிறது. அமைந்துவிட்டது. ராகு கேது வுக்கு பால் அபிஷேகம் செய்துவைத்தால் குளிர்ந்து நகர்ந்து விடுவார்களா? இல்லை. அப்படி தோஷம் அமைந்ததற்கு தகுந்த காரணங்கள் இருந்திருக்கின்றன. அது காலத்தால் தானாக சரிசெய்யப்படும். காத்திருங்கள்.
என்னய்யா இவர், காத்திருங்கள், காத்திருங்கள் என்கிறாரே?! எனக்கு வயதாகிறதே? பொண்ணுக்கு வயதாகி காத்திருக்கிறாளே, இதற்கு மேல் காத்திருந்தால் கிழவி ஆகிவிடுவாளே என்றெல்லாம் நினைப்பீர்கள். இத்தகைய தோஷம் உள்ள ஒரு வரனுக்கு தகுந்த வரன் நிச்சயமாக கிடைக்கும். அந்த தகுந்த காலத்தை பெற காத்திருப்பதைத் தவிர வேறுவழி இல்லையே!
இயற்கையின் விதி
ஒரு குழந்தையின் ஜெனனம் என்ன சொல்லுகிறது? ஜாதகம் எழுதி பலன் பார்ப்பது பிறகு வைத்துக்கொள்ளலாம். பொதுவான பிறப்பு தரும் கேள்விகள் என்ன? பார்க்கலாமா!, இக்குழந்தை பெற்றோருக்கு உயர்வைத் தருமா? நல்ல கல்வி கற்குமா? நல்ல வேலைக்கு போகுமா? நிறைய சம்பாதிக்குமா? நல்ல நிலையில் திருமணம் செய்யுமா? அதற்குப்பிறகு குழந்தை பிறக்குமா? இவைதானே உங்கள் கேள்விகள்?
இந்த தோஷங்கள் ஒரு ஜாதகத்தில் அமைவதன் காரணம் என்ன? இந்த இயற்கைக்கு உங்கள் கேள்விகள் மேல் அக்கறை இல்லை. உண்மையாகவே அக்குழந்தை பிறந்தது, பெற்றோரின், அவர்களின் பெற்றோரின், அவர்களின் பெற்றோரின் (இன்னும்...) என்றவகையில் வரும் பூர்வ புண்ணியத்தால் நிகழ்வதாகும். அவைகளை கர்மா என்றும் வினைப்பதிவுகள் என்றும் சொல்லலாம். அந்த பூர்வ புண்ணித்தில் விட்ட குறை, நிறைகளை சரிசெய்யவே பிறந்திருக்கிறது. அந்த செயலில் முழுமையடையவில்லை என்றால் மட்டுமே, திருமணமும், அதன் பிறகான குழந்தையும் அமையும் என்பதுதான் இயற்கையின் விதி.
அதென்ன இயற்கை விதி?! என்றால், நாம் எண்ணுகின்ற எண்ணங்களுக்கும் , செய்கின்ற செயலுக்கும் ஏற்ப பலன்கள் உடனேயும் கிடைக்கும், தாமதமாகவும் கிடைக்கும். ஒருமையில் கற்ற கல்வி ஏழுமையும் உய்க்கும் என்றால், கர்மா மட்டும் உடனே கழிந்துவிடுமா? பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருவர் இறந்த பிறகு, செய்யும் கர்ம சடங்குகளில் எல்லாமே கழிந்துவிடுகிறது என்பதாக. ஆனால் இறந்தவரின் கர்மா அவரின் குழந்தைகளை சார்ந்துவிடுகிறது என்பதுதான் நிஜம். ஐயா, அவருக்கு குழந்தைகள் இல்லையே என்கிறீர்களா? இறந்தவருக்கு பிரியமானவரிடம் போய்ச்சேர்ந்துவிடும். எந்த கர்மாவும் தனித்து நிற்பதில்லை. வாழையடி வாழையாக அடுத்து அடுத்து வந்து சேர்ந்துகொண்டே இருக்கும், அவ்வப்பொழுது கழிந்துகொண்டே இருக்கும்.
இந்த இயற்கையின் வினை விளை நீதி என்பதை அறிந்துகொண்டால், அதற்கேற்றபடி நம் எண்ணங்களை, செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் இதையேதான் மையப்படுத்துகிறார்.
பதற்றம் வேண்டாம்
ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் இருக்கட்டும் பதற்றப்படாமல், ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஓவ்வொரு நல்ல ஜோதிடராக பார்த்து, ஆலோசனை கேட்டு, ஊர் ஊராக, கோவில் கோவிலாக சுற்றாமல், விளக்கு ஏற்று, குடம் குடமாக நீர் ஊற்று என்று அந்தப்பெண்ணை பாடாய்படுத்தாமல் அமைதியாக இருங்கள்.
அவனோ, அவளோ அமைதியாக இருக்கட்டும், திருமணம் அது இது என்று தொல்லை செய்யாதிருங்கள். பிடித்த படிப்பை படிக்கட்டும், பிடித்த வேலையை பார்க்கட்டும், அவர்களை சுமையாக நீங்கள் கருதாது இருங்கள். அவர்களாகவே காதல் வயப்பட்டால் கூட, அந்தபையன், அந்தப்பெண் எப்படி வாழ்க்கை நடத்துவார் என்றும், எதிர்காலத்தில் எப்படி வாழ்வார்கள் என்றும், எந்த பிரச்சனையும் எழாதவகையில் ஆலோசித்து சரி என்றால் சம்மதம் சொல்லிவிடுங்கள். தடுக்காதீர்கள். ஒரு ஜாதகர் கண்டிப்பாக அந்த ஜாதகத்தின் வழியில் இயல்பாக பொருந்திப்போக வாய்ப்பு அதிகம். திருமணம் வேண்டாம் என்கிறாரா? விட்டுவிடுங்கள், அவர்களை வற்புறுத்தாதீர்கள். தனித்து வாழ பழகிக்கொள்ளட்டும். திருமணம் செய்தவர்கள் சொர்கத்திற்கு போவதில்லை, தனித்து வாழ்வபர்கள் நரகத்திற்கு போவதில்லை. குழந்தை பெற்றவர்களுக்கு மட்டும் மோட்சம் கிடைப்பதில்லை, குழந்தை பெறாதவர்கள் முக்தி அடையாமலும் இல்லை.
எனவே தோஷ நிவர்த்தி அல்லது பரிகாரம் உண்டா?
இருக்கிறது என்றால் அது பொய் அல்லது உங்களை திருப்தி செய்யும் ஒரு வார்த்தையே! இன்னொன்றும் உண்டு, அது வணிகம்!!
ஒப்படையுங்கள்
இந்த ஜெனன ஜாதக தோஷம் என்பதிலிருந்து உங்களுக்கு நிவர்த்தி அல்லது பரிகாரம் வேண்டும் என்றால் ஒரே வழி, உங்களை இறையிடம் ஒப்படையுங்கள் மனதளவில். கோவிலும் வேண்டாம், குளமும் நதியும், கடலும் வேண்டாம்.
ஓவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் வானம் நோக்கி வணங்குங்கள். என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று மனதார சொல்லுங்கள்.
நவக்கிரக தவம்
நவ கோள்களை மனதார வணங்கி பழகுங்கள். (கோவில்தான் கரோனா நோய்தொற்று காலத்தால் பூட்டு போடப்பட்டிருக்கிறதே?) இருக்கும் இடத்திலிருந்தே பரிகாரத்தையும், நிவர்த்தியையும் செய்யலாம் எந்த செலவும் இல்லாமல். உங்களுக்கு கோளறு திருப்பதிகம் தெரியுமா? சொல்லுங்கள். பதிகம் பாடினால் சரியாகுமா? பாடினால் சரி ஆகாதுதான். ஆனால் அந்த நேரத்தில் அந்த நவ கோள்களை நினைத்து, மனதோடு இணைந்திருக்கிறீர்களே! அதுதான் உண்மைக்காரணம். சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லலாமா? தாராளமாக சொல்லலாம்.
வீட்டில் தவம் செய்ய பழகுங்கள். நவக்கிரக தவம் என்று ஒன்றுண்டு. இதை “மனவளக்கலை” மையத்தில் எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். அல்லது அந்த இணையதளத்தில் ஜூம், யூடூயுப் மூலமாக நடந்தால் கலந்து கொள்ளுங்கள். நவக்கிரக தவத்திலும், மனம்ஒன்றிபோகும், அதைத்தான் அமைதியாக செய்கிறீர்கள்.
நவ கோள்களின் தோஷம் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கைக்கு கொடுக்கப்பட்ட கசப்பு மருந்து. ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.