The mind and social media Its problems | CJ

The mind and social media Its problems

The mind and social media Its problems


 மனமும் சமூக வலைத்தளங்களும், அதன் பிரச்சனைகளும்


மனம் எப்படிப்பட்டது?

உதாரணமாக சொல்லுவதென்றால். மூன்று தாள் கொண்ட ஒரு தொகுப்பு என்று வைத்துக்கொள்ளலாம். 

1) முற்றிலும் புதிய வெள்ளைத்தாள்

2) பழைய குறிப்புக்களோடு எழுதப்பட்ட தாள்

3) எழுதவே இடமில்லாதபடி எழுத்துக்களால் நிரம்பிய தாள்

இந்த மூன்று தாளுக்கும் உள்ள உறவு என்ன என்றால், ஒன்றில் எழுதுவது பிறகு மற்றொரு தாளுக்குள் போய் ஒட்டிக்கொள்ளும்.  மூன்றாவது தாளில் இருப்பதும் அங்கே நிலைப்பதில்லை. அதுவேறெங்கோ சென்று விடுகிறது. அது எங்கே என்று வேதாத்திரிய அன்பர்களுக்கு தெரியும், அதை தனியாக கட்டுரை செய்கிறேன். எனவே இந்தக்கட்டுரைக்கு இதுவரையில் போதுமானது. 

ஒருதாள், வெள்ளைத்தாள் போல இருக்கிறதே, அதில்தான் நாம் தினமும் ஏதேனும் எழுதி அவ்வப்பொழுது ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். இந்த தாள் நிரம்பிவிட்டால், அந்த செய்திகள் 2ம் தாளுக்கு நகர்ந்துவிடுவதால் மீண்டும் 1ம் தாள் காலியாக இருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.


புள்ளியும் கோலமும்

ஒரு வெள்ளைத்தாளை அப்படியே வெள்ளைத்தாளாக வைத்திருக்க யாருக்கும் விருப்பமில்லை. பொதுவாகவே, அப்படி வைத்திருக்கவும் முடியாது. யோகிகளுக்கும், மகரிஷிகளுக்கும் மட்டுமே அப்படியான திறமை உண்டு. அவர்கள் மட்டுமே, எந்நாளும் வெள்ளைத்தாளை அப்படியே வைத்திருப்பார்கள். நாம் வழக்கமாக புள்ளி வைப்போம், அதில் கோலம் போடுவோம். சில நேரங்களில் மையை கொட்டி தாளை அசிங்கப்படுத்தியும் விடுவோம். ஆனாலும் அதைக்குறித்து நாம் கவலை கொள்வதில்லை. நாளைக்கு கிடைக்கும் வெள்ளைத்தாளையும் இப்படியே அசிங்கமாக்கி கசக்கிப் போடுவோம்.

ஆனால் பெரும்பாலும் எல்லோருமே, “மனசுதான்யா எல்லாம்” என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம். அதிர்ஷ்டவசமாகவோ, துர் அதிர்ஷ்டவசமாகவோ, இந்த தாளானது, தானகவே எழுதிக்கொள்ளும் திறமைகொண்டது. அது இந்த இயற்கையின் ஒழுங்கமைப்பு விதியில் இணைந்திருக்கிறது. இதை “எழுதிக்கொள்ளாதே” என்று நீங்கள் கட்டளை இட முடியாது. அதுபோலவே இன்னதுதான் நான் எழுதியிருக்கிறேன் அல்லது இதைத்தான் நீ எழுதியிருக்கிறாய் என்றும் நம்மிடம் காட்டாது. நாமும் விரும்பி, என்ன எழுதினேன் என்று தாளில் பார்க்கவும் முடியாது.

ஒருவேளை நீங்கள் யோகசாதனையில் இறங்கினால், ஓரளவு என்ன எழுதியிருக்கிறது என்று காணலாம். நீண்ட பயிற்சிக்குப்பிறகு, முதல் தாளின் வழியாக திருத்தியும் அமைக்கலாம். ஆனால் இதற்கு “குரு” தேவைப்படுகிறார்.


நிரப்பியது குப்பையா?

நீங்கள் எந்த அளவுக்கு, உங்களைச்சார்ந்த சூழலில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, உங்களுக்கு தேவையானது என்ற தேர்வில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, இயற்கைக்கு மாறாத செயலில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, நீங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, பிறருக்கு தீங்கிழைக்க கூடாது என்று தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும். 

நீங்கள் எந்த அளவுக்கு, யாரோ ஒருவர் துன்பத்திற்கு உதவுவதில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும். 


மெனு கார்டாக மாறும் தாள்

நாமே நிரப்பி, நிரப்பி தொடர்ந்து கொடுக்கும் நிர்பந்தத்தால், இந்த தாளில் பதிந்த விபரங்கள் மூளைக்கு அனுப்பப்படும்.  மூளை, அந்த தாளில் இருக்கிற விபரங்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையாகத் தரும் அல்லது செயல்பட தூண்டும். அது நல்லதா கெட்டதா என்பது நீங்கள் ஏற்கனவே அந்த தாளில் என்ன கொடுத்தீர்கள் என்பதை பொறுத்தது தான். 

எனவே நீங்கள் கேட்டதை, அல்லது உங்களுக்கு விருப்பமானதை தரும் ஒன்றாக, இந்த தாள் “மறைமுகமாக” செயல்படுகிறது.


மனப்பிறழ்வில்... 

சமீபகாலமாக நீங்கள் சமூக வலைத்தளங்களில் இயங்குபவராக இருந்தால் உங்களுக்கு மனப்பிறழ்வு என்ற நோய்க்கு சமமான மன நோயில் சிக்கியிருப்பீர்கள். 

மனம் ஒரு வெள்ளைக் காகிதம் என்பதை இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம், அதன்படி அதை நீங்கள் அப்படியே வைத்திருக்கலாம், புள்ளி வைக்கலாம், அழகான கோலமும் ஆக்கலாம், அலங்கோலமும் ஆக்கலாம், அல்லது அதில் மை கொட்டி அழுக்காகவும் ஆக்கலாம், கசக்கியும் போடலாம் என்பதையும் பார்த்தோம்.

ஆனால் எல்லாவற்றிற்கும் “அது” எதிர்வினை ஆற்றும். சமூக வலைத்தளங்களான, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிரம், வாட்ஸாப், டெலிகிராம் இன்னும் ஏதேதோ ஆகியவற்றில், நீங்கள் ஒரு புதிய பதிவு பதியாவிட்டாலும், அந்த சமூக வலைத்தளங்களில் நுழையும் பொழுதே, உங்களோடு நண்பர்களாக பழகுபவர்களின் பதிவுகள் டைம்லைனில் (Timeline) காணக்கிடைக்கும். 


அங்கே நப்பது என்ன?

நீங்கள் ஒரு மகிழ்ச்சிகரமான மன நிலையில் இருப்பீர்கள். அங்கே ஒரு அன்பரின் இறப்புச்செய்தி, கொலை செய்தி, தற்கொலை விபரம், விபத்தில் மரணம் இவையெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை பிடிங்கிவிடும்.

பலவருசமாக தூங்கிவிட்டு, இன்று எழுந்து, என்ன மகாத்மா காந்தியை சுட்டுட்டாங்களா? என்பது மாதிரியான பதிவுகள், உங்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

உங்களுக்கு முற்றிலும் முரண்பாடான, எதிர்மறையான பதிவுகளையே எப்பொழுதும் பதிந்து கொண்டிருப்பவரும் உங்கள் நண்பர்தான்.

சமுகத்தில் நடக்கும் எந்த நல்ல விசயங்களையும், குறை சொல்லிக்கொண்டே, தன் கருத்தை, தன் மரபை, தன் தத்துவங்களை திணிக்கும் நண்பரும் அங்கே இருப்பார்.

எப்போது பார்த்தாலும், எந்த விசயத்திற்கும், எந்த கருத்திற்கும் பகடி, கிண்டல் செய்துகொண்டே இருக்கும் நண்பரும் அங்கே பதிவிடுவார், பின்னூட்டமும் இடுவார்.

இன்றைக்கு இந்த பாடல் கேட்டேன் என்று அதர பழசான ஒன்றை, உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத அந்தப்பாடலை, வரிக்கு வரி அழகு செய்து அங்கே பதிவிட்டிருப்பார் உங்கள் நண்பர்.

இதையெல்லாம் தாண்டி, உங்கள் மனநிலைக்கு ஏற்ப ஏதோ சில நல்ல பதிவுகளும் இருக்கலாம் தான், ஆனால் இப்படியான வலைத்தளங்களின் அல்காரிதம், பரபரப்பை மட்டுமே செய்தியாக்கும் படியாக அமைக்கப்பட்டிருக்கும். எனவே இப்படியான பதிவுகளே, உங்களுக்கு காட்டிக்கொண்டிருக்கும்


திணிக்காதீர்கள், ஏற்காதீர்கள்.

எனவே, நீங்கள் சமூக வலைத்தளங்களில் இயங்கும்பொழுது, உங்களுக்கு பிடிக்காத, மனம் ஏற்றுக்கொள்ளாத எதையும் “விருப்பம்” செய்யாதீர்கள்.  விருப்பமில்லா செய்தியாக இருந்தால், அதை தவிருங்கள், அப்பதிவை மேலோட்டமாகக் கூட படிக்காதீர்கள். மனம் ஏற்காத அந்த பதிவினை கடந்துவிடுங்கள். அப்படியான பதிவை பதிந்த, அந்த நபரை நீக்கலாம் (Unfriend), மறைக்கவும் செய்யலாம் (Block). உங்கள் மனதை கெடுத்துக்கொள்ளாதிருங்கள். உங்களுக்கு உண்மையில்லாத ஒன்றை நீங்களும் பகிராதீர்கள். ஏற்பில்லாத விளம்பரம் வந்தால் அதை மறைக்கலாம் (Hide All).

இவை எல்லாவற்றிலும் எளிய, அற்புதமான வழி என்ன தெரியுமா? சமூக வலைத்தளங்கில் இருக்கும் உங்கள் கணக்குகளை நிறுத்தி வையுங்கள். ஆமாம், நீங்கள் உங்கள் கணக்கை, நீங்கள் உருவாக்கிய கணக்கை அழிக்க உங்களுக்கு அனுமதி மறுக்கபடுவதை அறிந்துகொள்ளுங்கள். 

சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் மன நிலை, உங்கள் வாழ்க்கையையே தடம் மாற்றும் எனவே, உங்கள் சுவரையும், உங்கள் மனதையும் அழுக்காக வேண்டாம். அப்படியான செய்கைதான் உங்கள் வாழ்க்கையையும் அழகாக்கும்.  

வாழ்க வளமுடன்.

-------------

Present by:





Photos and Images: Thanks to Google, Copyrighted to Owners