Is the Zodiac Horoscope our Initials?
ஜெனன ஜாதகம் நம் தலையெழுத்தா?
இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற சூரியன்கள் இருக்க, நாம் இந்த சூரிய குடும்ப கிரகங்களை மட்டுமே உள்ளடக்கி, 7 கிரகங்களையும், 2 நிழல் கிரங்களையும் எடுத்துக்கொண்டு, இந்த பிரபஞ்சத்தை 360 கோண சுற்றாக வைத்துக் கொண்டு, அதை 12 பகுதியாக பிரித்து, நட்சத்திர மண்டலங்களை, 27 நட்சத்திரங்களாக்கிக் கொண்டு, அதில் ஓவ்வொரு நட்சத்திரத்தையும் நான்கு பாகையாகவும் பிரித்துக்கொண்டு, பிறக்கும் ஓவ்வொருவருக்கும் “இந்தா உன் தலையெழுத்து” என்ற ரீதியில் ஜாதகம் கணிப்பதும், அதை அடிக்கடி எதிர்காலத்திற்காக பரிசோதித்துக்கொண்டே இருப்பதும் பொருத்தமானதா?
பிறக்கும் நேரம் எது?
1) திருமணத்திற்குப்பிறகு, ஆணும் பெண்ணும் கலப்புறும் நேரமா?
2) விதைக்கப்பட்ட நேரமா?
3) கரு உருவான நேரமா?
4) இயற்கையாக தலை வெளிவந்த நேரமா?
5) முழு உடலும் வெளிவந்த நேரமா?
6) தொப்புள் கொடி அறுத்த நேரமா?
7) மூச்சை உள்வாங்கி குழந்தை சுவாசித்த நேரமா?
8) குழந்தை சூழ்நிலை தாங்காது அழுத நேரமா?
இன்னொன்றும் உண்டு
9) நல்ல நேரப்படி, வயிற்றைக் கிழித்து கையிலெடுத்த நேரமா?
மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மட்டுமே தெரிந்த அல்லது அவர்கள் சொல்லும் நேரமே “ஜனன நேரம்”
பொது சமரசம்
இந்த நேர குழப்பங்களில் சிக்காமல் ஜென்ம ஜாதகம் கணிக்க சில வழிகள் இருக்கிறது. ஒரு ராசி கட்டத்தில் லக்கனம் என்பது சுமார் 2.30 மணி நேரம் நிற்கும். அந்த நேரத்திற்குள் பெரிதான எந்த கிரக, நட்சத்திர மாற்றங்கள் வந்துவிடுவதில்லை. ஆனால் இந்த நேரம் கடந்துவிட்டால், ஜாதகனின் ராசி மாறாதிருந்தாலும், லக்கினம் மாறிவிடும். இதனால் கணிப்புக்களும் மாறிவிடும்.
மிக முக்கியமாக வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் இரண்டிலும், இந்த லக்கின குழப்பம் வந்துபோகும்.
ஜாதகம் எழுதுதல்
ஜெனனி ஜென்ம செளக்யானம் வர்தனி குல சம்பதாம் - பதவி பூர்வபுன்ணியானம் லிக்யதே ஜென்ம பத்திரிக்கா
கடந்த பிறவிகளின் நல்லது கெட்டது வழியாகவும், குடும்பத்தின் நிலைத் தன்மைக்கான வழியிலும், இதுவரையில் அமைந்திருக்கின்ற பூர்வ புண்ணியம் வழியாக இந்த பிறப்பு ஜாதகம் எழுதப்பட்டிருக்கிறது - என்பது இதன் பொருளாகும்.
அப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களை, பிறந்தநாளின் அடிப்படையில் நின்ற கிரங்களின் நிலைகளையும், ஜாதகன் பிறந்த நேரத்திலிருந்து, கர்ப்ப செல் கால நிலை நீக்கி, நட்சத்திர சார கிரகத்தின் திசை இருப்பு கழித்து, மீதத்திலிருந்து, அடுத்துவரும் வருடங்களை கூட்டி பலன் சொல்லுகிறார்கள். இது திசா பலன்கள் என்றாகிறது. கூடவே புத்தி, அந்தரம் என்ற அளவுகோளிலும் நுணுக்கி பலன்கள் சொல்லப்படும். மேலும் அன்றைய கோள்சார நிலை கொண்டும் பலன் சொல்லுகிறார்கள்.
கிரகம் நின்ற நட்சத்திர சார அடிப்படையைக் கொண்டும் பலன் சொல்லுகிறார்கள். கிரக திரேக்கோணம், கிரக கேந்திர நிலை, கிரக பரிவர்த்தனை, கிரக பார்வை, கிரக கூட்டு, கிரக நேச நீச நிலை, கிரக யோக நிலை, கிரகம் அஷ்டவர்க்க பரல் நிலை தகுதி இப்படியாக பலப்பல ஆராய்ச்சிகளில் பலன் சொல்லுகிறார்கள்.
இவை எல்லாமே, ஒவ்வொரு சோதிட வல்லுனரின் அனுபவத்திற்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்றபடி உயர்வையும், மதிப்பை கொண்டிருப்பதை அறியலாம். என்றாலும் ஒருவர் சொன்னது, இன்னொருவரால் மறுக்கப்படுவதும் உண்டு.
ஜாதகம் என்ன சொல்லும்?
ஒரு விதைக்குள் அதன் தன்மை ஒளிந்திருப்பதுபோலவே, ஒரு மனிதனுக்கும் அவனின் வாழ்க்கை, அவனின் பலம், பலவீனம், சுகம், துக்கம், வளர்ச்சி, வீழ்ச்சி, இணைப்பு, துண்டிப்பு, நட்பு, துரோகம் இப்படியாக இன்னும் பலப்பல எண்ணற்ற வாழ்வியல் தன்மைகள் அடங்கியிருக்கின்றன. இவை அவனுடைய வளர்ச்சியில், தானாகவே மலரும். இவை அனைத்தையும் “இந்த கிரங்கள்” சொல்லிவிடுமா? இல்லை இதையெல்லாமே இன்னொரு மனிதன்தான் முழுமையாக அறிந்துகொள்ள முடியுமா?
அப்படியான நிலையில் இதை “தலையெழுத்து” என்று எண்ணுவது எப்படி?
ஒன்றுக்கு மற்றொன்று முரண்
ஒரு ஜாதகன் இப்படித்தான் என்று சொல்லும்பொழுது, ஏறக்குறைய சரியாக இருப்பது போல இருந்தாலும், இது தீர்மானமில்லை, இப்படியும் இருப்பான் என்றும் சொல்லமுடியும். ஏன்?
ஒருவனுடைய பாதையில் பூக்கள் மட்டும் மலர்ந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. அவன் தன் பாதையில் எதை வேண்டுமானாலும் சந்திக்க முடியும். அவன் சந்திக்கின்ற ஒவ்வொன்றும் அவனுக்கு சாதக பாதகங்களை ஏற்படுத்தும் அல்லது அவனே அதை ஏற்றும் விலக்கியும் பயணிப்பான். எனவே கணிப்புக்கள் முரணாகும்.
பிறருக்கு பலன் சொல்லும் ஜோதிடருக்கே, திடுக் திடுக்கென்று மாற்றம் உண்டாக்கிகொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை.
அப்படியானால் எது உண்மை?
மனிதன்,
1) ஒருவேளை தன் “அறிவின்” துணையோடு பயணிக்காதவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம்.
2) தன் எண்ணங்களின் வழியே செயல்படாதவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம்.
3) தனக்கு ஏற்படும் சூழ்நிலைகளின் தாக்கத்தால் பாதிக்கப்படாதவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம்.
4) இறையிடம் தன்னை ஒப்படைக்காத மனிதாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம்.
5) நான் யார்? என்று தன்னை உணரமறுக்கிறவனாக இருந்தால் ஜாதகம் சரியாக இருக்கலாம்.
எப்போது ஜாதகம் பார்க்கப்படும்?
1) வாழ்க்கையில் விட்டேத்தியாக இருந்துவிட்டு, இனி என்ன செய்ய என்ற விரக்தியில்
2) சொந்தத்தொழிலா, வேலையா, வெளிநாடா கேள்வி எழும்பொழுது
3) தன்னுடைய செயலில் தடை ஏற்படும்பொழுது
4) தான் நினைத்த எண்ணம் நிறைவேறாத பொழுது
5) தான் பிறரால் ஏமாற்றப்படும் பொழுது
6) ஏதேனும் நோயால் அவதிப்படும்பொழுது
7) விபத்து ஏற்பட்டு முடங்கும் பொழுது
8) கையில் நிறைய பணம் இருந்து, புதிய தொழில் துவங்கும் பொழுது
9) திரட்டிய பணத்தில் இடம், வாகனம் வாங்கலாமா, தங்குமா என்ற கேள்வியில்
10) வாழ்க்கைத்துணை வரமா சாபமா என்ற கேள்வியில்
11) பிறந்த குழந்தையால் என் வாழ்க்கை உயருமா தாழுமா சந்தேகம் எழும் பொழுது
12) தன் குடும்பத்தின் வளர்ச்சி இனி என்ன என்ற கேள்வியில்
13) ஆயுள் நீடிக்குமா என்ற சந்தேகத்தில்
இந்த சில தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த கேள்விகளுக்கு முந்தைய நிலைகளில், ஜாதக ஆலோசனை இல்லாமல் எப்படி இருந்தார் என்பது தெரியவில்லை. ஆனால், தன்னுடை செயல்களில், திட்டங்களில் தயக்கமும், சந்தேகமும் வந்த பிறகு, தன் ஜாதகத்தை பிறரிடம் காட்டத் துவங்குகிறார்.
உண்மை என்ன?
கடந்த பதிவிலும் இந்த குறிப்பை நாம் தந்தோம். மறுபடியும் ஞாபகப் படுத்திக் கொள்க. சோதிட கணிதம் என்பது, இந்த பிரபஞ்சத்தில், நாம் வாழும் பூமி உட்பட, கிரகங்களின் இருப்புநிலை கணக்கு. இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் கூட்டு. இத்தகைய அணுக்களின் கூட்டு என்பது அணுவியல் அளவில் நின்றுவிடுகிறது. ஆனால் வேதாத்திரியத்தில் அணுவையும் கடந்து, விண்களின் கூட்டு என்றும், அதனினும் கடந்த பரமாணுக்களின் கூட்டு என்பதாக அமையும். இவை சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தால் சுழன்றுகொண்டே இருப்பதால், வான்காந்தம் உருவாகி அவை இந்த பிரபஞ்சம் எங்கும் பரவிக்கொண்டே இருக்கும்.
இந்த வான்காந்தத்தில் எந்தெந்த பொருட்களில் இருந்து உருவானதோ அதன் தன்மைகளை கொண்டிருக்கும். எந்த கிரகம் எந்த தன்மையை பெற்றிருக்கிறதோ அத்தகைய தன்மையை, இந்த வான்காந்தமும் பெற்றிருக்கும் என்கிற உண்மையும் தெளிவாகிறது.
நமது உடலும் இந்த பரமாணுக்களின் கூட்டுதானே? அந்த வகையில் நமக்குள் ஏற்படுகின்ற வான் காந்தத்திற்கும், பிரபஞ்சத்தில் உருவாகும் வான் காந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் வலிமை, அளவில் பெரிது என்ற அளவுகளும் இல்லை. ஆனால் ஒன்றோடு ஒன்று கலக்கும் பொழுது, அந்ததந்த அளவிலான மாற்றத்தை தருகிறது. இத்தகைய மாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்வதாகவோ, ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ அமையும். ஆகவே ஏற்றுக்கொண்டால் நன்மை, ஏற்றுக்கொள்ள முடியாதபோது தீமை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ளலாம்.
முக்கிய தன்மைகள்
வெளி என்பதற்கு சூழ்ந்தழுத்தும் ஆற்றலும், வான்காந்தம் மற்றும் ஜீவகாந்தத்திற்கு சூழ்ந்தழுத்த ஆற்றலும் விலக்கும் ஆற்றலும் சம அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முடிவுக்கு முன்னதான ஒரு அலசலில்
இன்னும் பல எடுத்துக்காட்டாக சொல்லுவதானால், நான் இங்கே முடிவில்லாத பாடமே நடத்தவேண்டிவரும், அவ்வளவு விரிவானது இந்த “ஜோதிடம்” இந்த பதிவுக்கு என்ன வேண்டுமோ, அதோடு நான் நின்றுவிடுகிறேன்.
ஜோதிடம் முழுமையான வானியல் அறிவியல் தான் அதில் சந்தேகமில்லை. மேலும் அந்தக்காலத்திய வாழ்க்கை முறையில் குறிப்பிட்ட கணக்கியல்களில் பல தற்போதைய நவீன வாழ்க்கை முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டியவையே. கிரக, நட்சத்திரங்களின் தன்மையின் காலக்கெடு, மனிதர்களால் தீர்மானிக்க முடியாதவை. எனவே இவற்றின் அடிப்படை குணாதசியம் (காரதத்துவம்) என்றும் மாறாதவை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையில் கிரக, நட்சத்திரங்களின் அலைகள், மனிதர்களின் உடல், மன, உயிர் என்ற வகையில் பாதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. அது உண்மையே.
ஒரு மனிதனுக்குள், அவன் பிறந்தாளில் இருந்து இவனை, கிரகங்களும், நட்சத்திரங்களும் ஆட்டுவிக்கிறது என்ற நோக்கில் ஜாதகத்தை “தலையெழுத்தாக” அமைப்பதும், அதை அந்த மனிதரே ஏற்றுக்கொண்டு, எல்லா வகையிலும் “நல்லது நடக்குமா?” என்று அலசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
உண்மை என்ன?
ஒரு விதைக்குள் இருக்கிற தன்மை என்று சொன்னேன் அல்லவா? அதுபோலவே ஒரு மனிதனின் அடிப்படை தன்மைகளை “ஒருவேளை” மிகச்சரியாக அவன் பெற்றிருக்க கூடும். அவை அவனின் ஜாதக குறிப்பில் தெரியவும் கூடும். கிரக, நட்சத்திரங்களின் குணாதியசங்களின் படி, இவன் இந்த மாதிரி என்ற “கணிப்பு” சரியாகலாம். அவ்வளவுதான்! அது ஒரு பதிவு, அவன் பிறந்த நேரத்திய பதிவு, ஒரு ப்ளூ பிரிண்ட் எனலாம்.
இந்த அடிப்படையில் அவனுக்கான பாதை வகுக்கலாம் தவறில்லை. இதுதான் நிகழும் என்று தீர்மானிப்போர் யாருமில்லை. அது நிகழலாம் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால், ஜாதகனின் கடந்தகாலம் ஓரளவு மிகச்சரியாக சொல்லமுடியும். ஏனென்றால் அவன் இயல்பான வாழ்க்கை முறையை கொண்டிருந்தால், அவன் அதையே பெற்றிருப்பான். ஆப்பிள் விதை ஆப்பிள் மரத்தையும், ஆப்பிள் பழத்தையும் தானே தரும். இதில் வியப்பென்ன?!
இதற்குமேல், அந்த கிரகமும், நட்சத்திரங்களும் அவனை வழி நடத்துவதில்லை, ஆர்டர் செய்வதில்லை, இயக்குவதில்லை, துணை நிற்பதும் இல்லை. அவனை கண்டுகொள்வதும் இல்லை. என் பதின்ம காலங்களில். கிரகங்கள் தூண்டுகின்றன, ஆளுமை செய்வதில்லை என்று யோசித்திருக்கிறேன். ஆனால் இவன், அவைகளை கணக்கில் கொண்டு, நீங்கள் தான் என்னை எல்லாம் செய்கிறீர்கள் என்று சொன்னால், “அப்படியா” என்று கேட்கவும், அவைகளுக்கு அவகாசமில்லை.
முடிவாக
இறக்கைகளை பெற்றிருக்கும் பறவைகள் நடக்கவேண்டியதில்லை. (உடனே பெங்குவின் ஏன் பறக்கவில்லை என்று புத்திசாலித்தனமாக கேட்காதீர்கள், அது இறக்கை அல்ல துடுப்பு) ஒரு ஜெனன ஜாதகம், இந்த இறக்கைகளை மறக்கடிக்கிறது என்றுதான் நான் சொல்லுவேன். ஒரு மனிதனுக்கு ஜெனன ஜாதகம் எழுதப்பட்டிருக்குமானல் மகிழ்ச்சி. இதுவரை எழுதப்படவில்லை என்றால் ரொம்பவே மகிழ்ச்சி.
அதை கவனத்தில் கொள்ளாமல், அதை விடுத்து, தனித்து, நான் என்ற வகையில், தன்னை ஏதேனும் வழியில், நிற்க எடுக்கும் ஏல்லா முயற்சிகளிலும் தடைவரவே செய்யும். அத்தடைகளை தருவதற்கு கிரகங்கள், நட்சத்திரங்கள் தேவையில்லை, இறையே தரும்.
ஜெனன ஜாதகம் தலையெழுத்தா? நீங்களே பதில் சொல்லுங்கள், கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்!
வாழ்க வளமுடன்.
------------------
Present by:
Thanks to photos and images: copyright to their owners