October 2021 | CJ

October 2021

What do the planets do to me?! - 01


கிரகங்கள் என்னை என்ன செய்கிறது?!


பூமியும் ஓர் கோள் தான்!

கிரகங்கள் என்பதை விட கோள்கள் சிறப்பான வார்த்தையாக உள்ளது. அவை கோள வடிமானவை. இயங்குபவை என்றும் அர்த்தமாகும். இந்த பிரபஞ்சம் முழுதும் கோள்களால் நிரம்பியவை என்பதை ஒரு நொடி சிந்தித்துப்பாருங்கள். அத்தகைய கோள்களின் கூட்டத்தில், சூரியன் எனும் குடும்பத்தில் உள்ள, ஒரு கோளில், பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியனோடு ஒப்பிட்டால், பூமி மிகச்சிறியது, மனிதன் நிலை என்ன?

ஆனால் ஒரு சிறு துளியில் ஆரம்பித்த உயிர்வாழ்க்கை, ஓர் உயிர் தாவரமாகி, தன் மூலம் அறிந்து இன்புற்று வாழும், ஆறாம் நிலை மனிதனாக முழுமை பெற்றிருக்கிறது. எனினும் மனிதரில் பெரும்பாலோர் இவ் உண்மை உணரவில்லை. அவர்களுக்கு அதனினும் வேறான ஒரு வாழ்க்கை போதுமானதாக இருக்கிறது. சரி அவர்கள் மெதுவாக வரட்டும். 

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, புவி என்ற ஒரு கோளில்தான் என்பதை மறந்திட வேண்டாம். எனவே கோள்கள் பொய்யில்லை. அக்கோள்கள் நம்மோடு தொடர்புடையன என்பதும் பொய்யில்லை. எனவே இந்த சூரிய குடும்பம் பொய்யில்லை. இந்த பிரபஞ்சமும் பொய்யில்லை.


அப்படியானல் இந்த கோள்கள் நம்மை என்ன செய்கின்றன?

சூரியனின் அலை

புரட்டாசி மாதம் துவங்கி கார்த்திகை மாதம் வரை மழைக்காலம், நம் இந்திய நாட்டில். நம் இந்தியா ஒரு தீபகற்பம் என்பதால், முக்கடல் சூழ்ந்திருக்க, அவ்வப்பொழுது புயல் வந்து தாக்கும். அப்படியான ஒரு மழை, பெருமழை வருகிறது. நகரமும், ஊரும் வீடும், மழையில் ஊறி, நமக்கும் குளிர் எடுத்து நடுங்க, என்று வெப்பம் வரும் என்று காத்திருப்போம். அதாவது சூரியனுக்காக காத்திருப்போம். 

சூரியன் என்ற கோள் என்ன செய்கிறது? அதன் அலைகளை 8 நிமிட பயணத்தில் பூமியை நோக்கி செலுத்துகிறது. அவ்வலைகள் பூமியில் காற்று மண்டலம் வழியாக நுழைந்து, ஒளியாக மாறி, இடங்களிலும், பொருட்களிலிலும் பட்டு தெறிக்க, அங்கே வெப்பம் ஏற்படுகிறது. அதன் வழியாக சராசரியான வெப்பம் ஏற்பட்டு குளிர் விலக்கப்படுகிறது. நம் உடலிலும் சூரியனின் அலை மூலமாக வெப்பம் உணர்ந்து மகிழ்கிறோம். வெப்பம் அதீதமானால் போதும் என்று நிழலுக்கு நகர்கிறோம்.


எல்லாம் அலைகள்

சூரியனிடமிருந்து ஒளி வருகிறதா? அலை வருகிறதா?

அலைதான் ஒளியாக தன்மாற்றம் பெறுகிறது என்று வேதாத்திரி மகரிசி தெளிவு செய்துள்ளார். இல்லை என்கிறீர்களா? சரி ஒளி என்றே நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. 

எல்லா கோள்களில் இருந்தும் அலை வருகிறது, உங்களைப் பொறுத்தவரை ஒளி வருகிறது. ஆனால் இங்கே அலை என்று அர்த்தம் கொண்டே படிப்போமே!  அப்படியானல் இந்த பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் இவற்றில் இருந்தும் அலைகள் வரும் அல்லவா? ஆம்.

மேலும் நாம் காணுகின்ற ஒவ்வொரு பொருளில் இருந்தும் அலை வருகிறது. அவை இயங்கலாம் அல்லது இயங்கா பொருளாகவும் இருக்கலாம்.


உங்களிடமிருந்தும் அலைகள்

என்னிடமும், உங்களிடமும் இருந்தும் அலைகள் வருகின்றன. ஆனால் நாம் அந்த அளவிற்கு நுணுகி அதை அணுகுவதில்லை. அதனால் அதை விளங்கிக்கொள்ள அல்லது விளக்கிக்கொள்ள கடினமாக இருக்கும். உங்களோடு ஒரு நண்பர் நட்பு பாராட்டுகிறார் என்றால் உங்களுக்கும், அவருக்கும் ஒரு சமமான அலைகள் தொடர்பில் இருக்கின்றன. 

எப்போதும் உங்களோடு ஒருவர், வம்புச் சண்டை இழுத்துக்கொண்டே இருக்கிறார் என்றால், உங்களுக்கும் அவருக்கும் ஒத்துமையான அலைகள் இல்லை என்றே கருதவேண்டும். அதை சரி செய்யலாமா? செய்யலாம்,

தடாலென்று அவர் கைகளை பிடித்து, “நண்பரே, ஏதோ என் தவறாகவே இருக்கட்டும், அப்படி செய்திருக்க கூடாது. இனிமேல் உங்களை துன்புறுத்தும் விதமாக, மனதிற்கு விரோதமாக நான் நடந்துகொள்ள மாட்டேன்” என்று சொல்லிவிடுங்கள். அவரும் கையிலிருப்பதை கீழே போட்டுவிட்டு, “சரி விடுங்க, பரவாயில்லை” என்று சொல்லலாம். அவரே உங்களை கட்டி அணைத்துக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. 

இன்னும் அலை வரும்!

இந்த கட்டுரையின் இரண்டாம்பாகம் படிக்க:

இங்கே படிக்கலாம்

-----

Present by:





Thanks to Image by: Nasa 

Mind Perfection is Human


மனம் + இதன் = மனிதன்


அனைத்தும் பணிகளிலும் சவால்கள் நிறைந்துள்ளன என்றாலும், உங்கள் பார்வையில் மிகவும் கடினமான அல்லது சவாலான பணி எது? ஏன்?

கடினமான, சவாலான பணி என்றால், “ஒரு மனிதனை மனிதத்தன்மையோடு” இருக்கத் தூண்டுவதுதான். மனிதன் என்ற போர்வையில் இருக்கும் “பல்லுயிர் மிருங்கங்கள்” என்பதாகத்தான், பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறான். மனிதன் மனம்+இதன் ஆக வேண்டும் என்றுதான், அவ்வப்பொழுது சித்தர்கள், ஞானிகளும், மகான்களும் தோன்றி வழிநடத்துகிறார்கள். 


ஏதோ ஒரு கவிதை இப்படி சொல்லும்...


எங்கள் பள்ளிகள்

கல்லூரிகள்

எத்தனையோ பட்டதாரிகளை

எத்தனையோ ஆராய்ச்சியாளர்களை

எத்தனையோ பொறியியலாளார்களை

எத்தனையோ தொழிநுட்பர்களை

எத்தனையோ சாதனையாளர்களை

எத்தனையோ திறமைசாலிகளை

உருவாக்கி தந்திருக்கிறது

எப்போது ஒரு மனிதனை

உருவாக்கித்தரும்?!


ஒரு மனிதன் பிறப்பிலேயே, இயற்கையோடு ஒன்றிய (அந்த ஒன்றியமல்ல)  திறமைகளை பெற்றிருந்த போதிலும், அவை எல்லாம் சிதைக்கப்பட்டு, மடை மாற்றப்பட்டு  குறிப்பிட்ட துறைக்கென வளர்த்தெடுக்கும் நிலை தான் இங்கே. எல்லா உயிரினங்களும் அதனதன் இயல்பில் இருக்கும்பொழுது, மனிதன் தன்னை எல்லா பிறப்பிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு, ஆறாவது நிலை அறிவானவன் என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, சக மனிதனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். 

கூட்டம் கூட்டமாக விலங்குகள் ஒன்றாக வாழும் பொழுது, இரண்டு மனிதர்கள், கணவன் மனைவி கூட ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழ முடியவில்லையே?! 

எனவே என்னைபொறுத்தவரை, மனிதனை மனிதனாக மாற்றுவதுதான் கடினமான, சவாலன பணி ஆகும்!

-----

நன்றி கோரா தமிழ்

Thanks to Image by: theexplanation.com

Today's world in people's sharing! 3


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 3



நிறைவுப்பகுதி

பகிர்வோரின் மனநிலை

இந்த கட்டுரையின் சாரமே இதுதான். உலகம் கையிலடங்கி விட்டதால், மனிதனுக்கு நிலை கொள்ளவில்லை. தன் கருத்தை பகிர்கிறேன் என்று பல வழிகளில், தானே சிக்கிக் கொள்கிறான். தன்னளவில் புரிந்துகொண்ட ஒன்று, பிறருக்கு சென்றடைகையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படையும் தெரியவில்லை. அதை கற்றுக்கொள்வதும் இல்லை. அதுகுறித்து கவலை கொள்வதும் இல்லை.

இன்றைய தொல்லைகாட்சி செய்தி பகிர்வுகளும் அப்படித்தான். மக்களின் மூளையை சலவை செய்வதில் முதலிடம் இதற்குத்தான் தரவேண்டும். மக்களை ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே, நிறுத்தி வைக்க இவர்களால் முடியும். உதாரணமாக, ஏதோ இரண்டு வீடுகளில், அருகருகே நடந்த ஒரு சாதாரண பிரச்சனையை, சாதிப் பிரச்சனையாக மாற்றி, தெருவை, ஊரை, சமூகத்தை, நாட்டைச்சார்ந்த கலகமாக மாற்ற இவர்களால் முடியும். ஆனாலும் தொல்லைக்காட்சி ஒரு குழு அமைப்பு.

தனி மனிதனில், ஒரு சாதாரண பிரச்சனை வளரும், ஆனால் சீக்கிரமாக அடங்கிவிடும் என்பது பொதுவானது. இதில் பழிக்கு பழி வாங்குதல் என்பது, பிறர்தூண்டுவதால் மட்டுமே நடக்கும். உண்மையாகவே பிரச்சனையில் தொடர்புடையோர் சமாதனத்திற்கே தயாராக இருப்பார்கள். இங்கே தனி மனிதர்கள், தங்களின் கருத்துக்களை புகுத்தி இரண்டு பேருக்கும் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

பொதுவாக தனிமனிதனின் மனம், இந்த சுருங்கிய உலகில், எந்நேரமும் கொந்தளிப்பாக இருக்கிறது. ஒரு குப்பைத்தொட்டியில், குப்பை சேருவதைப் போல, எல்லா விசயங்களையும் தனக்குள் ஏற்றிக்கொண்டு தன் நிலை என்ன, தன் குணம் என்ன என்பதை மறந்தே போகிறான். ஒரே ஒரு நெருப்புப் பொறி கிடைத்தால், குப்பென்று பற்றி எரிவார்கள் அல்லது எரித்துவிடுவார்கள். இதில் படித்தவரும், படிக்காதவரும் பொதுவே.


இணையத்தில் பகிர்வோரின் மனநிலை

வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற, வெள்ளந்தியான மன நிலையில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது மனம் விரிந்த நிலையில் எல்லாவற்றை சமநோக்கில் பார்க்கும் மனிதனாக இருங்கள். இப்பொழுது, நீங்கள் இணையத்தில் ஏதேனும் ஒரு இணைய பத்திரிக்கை செய்தி, சமூக பகிர்வு வளைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடுயூப் இவற்றை சற்றே பார்வை இடுங்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக, உங்கள் மனம் கொந்தளிக்கும் என்பது உறுதி. 

இப்படியான உலகிலா நாம் வாழ்கிறோம்? இவன் இப்படியா? அவன் அப்படியா? இந்தத் தலைவரா? என்று பலப்பல வகைகளில் சிந்தித்து, உங்களுக்குள் தீர்வு நோக்கி நகர்வீர்கள். இவனை அடக்கலாம், அவனை ஒடுக்கலாம், இதையெல்லாம் இப்படி செய்யலாமே என்று ஒரு கூட்டத்தின் தலைவனைப்போல திட்டமிடுவீர்கள் என்பது உறுதி. நீதியை நிலை நாட்ட வந்த தலைவனைப்போல நீங்கள் மாறிவிடுவீர்கள். இத்தகைய தூண்டுதலைத்தான் இந்த இணையவழி பகிர்வுகள் தருகின்றன. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.


பகிர்வில் தனி மனித மனநிலை

இது இன்னும் ஓர் முக்கியமான தலைப்பு. திரைப்படங்களில், “ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்ற சொற்றொடர் மிகப்பிரபலம். அது உண்மையல்ல என்றாலும், ஒரு மனிதனின் மனநிலையை நாம் யூகம் செய்ய முடியும். வெளிப்படையாக சிலர் சொல்லாமல் இருந்தாலும், இப்பொழுது இதைத்தான் அவன்/அவள் நினைத்துக் கொண்டிருக்கிறான்/ள் என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அந்தக்காலம் மலையேறிவிட்டது அல்லது மலையிறங்கிவிட்டது. ஆம்.

நான் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், நீங்கள் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், ஒரு மூன்றாம் மனிதன் தன் கருத்தை  தெரிவிக்கும் வழியில் இணையம் வளர்ந்துவிட்டது. அந்த கருத்துப்பகிர்வு எவ்வளவு தன்மையாக இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். 100 க்கு 99 சதம் வன்மம் தூண்டும் நிலையில்தான் எதிர்கருத்துக்கள் பகிரப்படுகின்றன. மனிதனின் மனம் இதத்தை இழந்துவிட்டது. எதிராள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை ஏதுமின்றி, உடனுக்குடனே வன்மம் தலைக்கேறி எழுத்தில் வந்து நிறைந்து நிற்கிறது. தற்பொழுது “கிளப்ஹவுஸ்”ஸில் வார்த்தைகளும் கிடைப்பதாக அறிகிறேன். 

ஒட்டுமொத்தமாக மனித சமூகம், தன் தகுதி இழந்து கிடப்பதாக எண்ண இடமிருக்கிறது. வளர்ந்தோரும், வளர்வோரும் இதில் வித்தியாசமில்லை. பேசவும், எழுதவும் தெரியாத குழந்தைகள் கூட காட்சி வடிவத்தில் வந்துவிட்டார் என்றும் சொல்ல முடியும்.


தீர்வுப் பகிர்வு

எப்பொழுதுமே நமக்கு இருக்கும் ஒர் உயர்ந்த எண்ணம் என்ன என்றால், எல்லாமே உடனடியாக மாறிவிட வேண்டும் என்று விரும்புவதுதான். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆனால் தனி மனிதனாக, நாம் மாறினால் நிச்சயமாக மாறிவிடும். அதாவது நம் மனம் மட்டுமே. ஒரு பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம். இருக்கட்டுமே, அதற்கு அதனுடைய உலகம் இருண்டுவிட்டது. உனக்கென்ன கவலை. நீ உன் உலகத்தில் இரு.

உன் வீட்டின் கதவுக்கு வெளியே புயலும், மழையும் என்றால், வீட்டில் கதவுக்குப் பின்னே நீ பாதுகாப்பாகத் தானே இருப்பாய்? கொஞ்ச நாளைக்கு அப்படி இருக்கலாம். நீ இல்லை என்பதால் கூட, அந்த புயலும் மழையும் அடங்கிவிடாது என்றாலும், பார்வையாளர் இல்லை என்றால் அங்கே ஆட்டம் நடக்காது அல்லது ஒத்திவைக்கப்படும் அல்லவா? அதுபோல காலத்தால் அடங்கிவிடும்.

பகிர்தல் அல்லாது இந்த உலகம் இல்லை. பகிர்வுதான் இந்த உலகை, மனித சமூகத்தை நகர்த்துகிறது என்பது மாபெரும் உண்மை. பகிர்தலில் நமக்கும் கடமை இருக்கிறது. நல்லதை பகிர்வோம், விலகி நிற்போம். மீண்டும் நல்லதை பகிர்வோம். மாற்றம் கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது.

வாழ்க வளமுடன். 

-----

Perfect Judgement


 நின்று கொல்லும் இறை 


உலகில் எல்லோருக்குமே இறை உணர்வு எந்த வகையிலாவது கிடைத்துக் கொண்டிருக்கிறது. தான் உணர்ந்ததை பிறருக்கு தர வேண்டும் என்ற ஒரு மேம்போக்கான எண்ணம், உண்மை அறிந்தவர்களிடம் நிறைந்திருக்கும். அந்த வழியில்தான் நமக்கு முன்னே சித்தர்கள், ஞானிகள், மகான்கள் இந்த உலகுக்கு உண்மைகளை, அதை கண்டறியும் வழிகளையும் தந்தார்கள். 

சிலர் வெளிப்படையாக தந்தாலும், முக்கியமான உண்மைகளை, நீயே இந்த வழியாக தேடி எடுத்துக்கொள் என்று மறைத்தும் வைத்தார்கள். ஆனால் உண்மையை சொல்லாமல் விடவில்லை. ஏனென்றால், உண்மை என்பது சரியான நபருக்கு போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணம்.

இந்த உலகில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, இரட்டை எண்ணம் கொண்ட மனிதர்கள்  வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். எப்படியெனில், ஒன்றை இலவசமாக எதிர்பார்ப்பார்கள். வேண்டி வணங்கி, அழுது புரண்டு பெற்றுக்கொள்வார்கள். அதற்கு கைமாறாக எதும் செய்ய மாட்டார்கள். சிறிது காலம் கழித்து அதன் பலனை பெற்று அனுபவிப்பார்கள். வேறு ஒரு நபர் வந்து கேட்டால், “நான் ஒன்றும் சும்மா பெறவில்லை. இது உனக்கு வேண்டுமானால், இவ்வளவு பணமோ, பொருளோ கொடுத்து பெற்றுக்கொள்” என்று சொல்லிவிடுவார்கள். இவர் பெற்றதோ இலவசம், அதை அப்படியே பகிர்ந்து கொடுக்க மனமில்லை. 

இன்னும் உண்மையை சொல்லப்போனால், இவர் பெற்ற பலனை தரப்போவதில்லை. அதை பகிரவும் முடியாது. ஆனால் அந்த வித்தையை, அறிவை தர மறுக்கிறார். இதனாலே அந்த உண்மை, அவரளவில் நின்று விடுகிறது. பொருள் வாங்காமல் தரமாட்டேன் என்று முடிவு செய்து விடுவதால் அது அழிந்தும் போய்விடும். இந்த மாதிரியான நபர்களிடம் சிக்கிவிட கூடாது என்பதில், சித்தர்கள் கவனமாக இருந்தனர் என்று சொல்லலாம். 

ஆனாலும், சித்தர்கள் உண்மை உணர்ந்தவர்கள். அவர்கள் இத்தகைய தவறான மனப்போக்கு கொண்ட மனிதர்களை தண்டிப்பதில்லை. ஏனென்றால், அவரவர்க்கு அவரே நீதியரசர். எனவே தான் செய்த செயலுக்கு, இயற்கையின் வினை விளைவு நீதியால் தண்டிக்கப்படுவார். அது எப்பொழுது என்பது அவருக்கு தெரியாது. 

இதன் அடிப்படையில்தான், அரசன் அன்று கொல்வான், இறை நின்று கொல்லும் என்று சொல்லுவார்கள்.

வாழ்க வளமுடன்.

-----

Thanks to image by: BBC

Today's world in people's sharing! 2


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 2


முதல்பகுதி படிக்கலாமே


இரண்டாம் பகுதி

பகிர்தலின் வளர்ச்சி

ஒரு தனி மனிதனின் கருத்துப்பகிர்வு தடைசெய்ப்பட்டிருந்த காலம் ஒன்றும் உண்டு. அதாவது கருத்து சுந்ததிர தடை. இத்தடை இருந்தால்தான் அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று ஒரு கண்டிப்பு அல்லது மக்களிடம் பயம். ஆனாலும் கால மாற்றம் எல்லாவற்றையும் கடந்துவிட்டது.  

குழுவாக வாழ்ந்து வந்த மனிதர்கள், பிறர் அறிய முடியாத ரகசிய மொழிகளில் தங்கள் கருந்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இன்றும் கூட சில கிராமங்களில் நடப்பதுண்டு. மேலும் இப்போது, குழு அமைப்பு சிதைந்துவிட்டது. கூட்டுக்குடும்ப அமைப்பும் சிதைந்துவிட்டது. தனித்தனியாக, நான்கு நபர்கள், மூன்று நபர்கள் என்று குடும்பம் சுருங்கிவிட்டது. ஆனால் இது எவ்வளவு மோசமான விளைவுகளைத்தரும் என்பது யாருக்குமே புரியவில்லைதான். அத்தை மாமா என்ற உறவும், கூட்டமும் இனிவரும் காலத்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், குடும்பத்தை விட்டு வெளி நபர்தான் உதவிக்கு வரக்கூடிய சூழல். இனிவரும் காலத்திலாவது மாறவேண்டும் என்று விருப்பம் கொள்வோம்.

இப்படியாக தன் குழுவிடமும், குடும்பத்தாரிடம் மட்டுமே, கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்த மனிதன், கடிதங்கள் வாயிலாக, தன்னை கடந்து தூரத்தில் இருப்பவரிடமும் தன் கருத்தை பகிர முனைந்தான். தொலைத்தொடர்பு புரட்சியில், எழுத்தை தவிர்த்து, தன் குரல் வழியாகவே கருத்தைப் பகிரும் நிலைக்கு உயர்ந்தான். மனிதனின் சிந்தனையில் எழுந்த உச்ச நிகழ்வாக, இணையம் (Internet, Worldwide web)வந்துவிட உலகமே சுருங்கி, தற்போது உள்ளங்கையில், கைபேசி அளவில் அடங்கிவிட்டது. அடேங்கப்பா, என்ன ஒரு அசுர வளர்ச்சி!


பகிர்வோரின் நிலை

இந்த வளர்ச்சிக்கு ஈடாக, சமமாக மனிதன் தன்னை உயர்த்திக் கொண்டானா? என்றால் இல்லை. அவன் அவனளவில் அப்படியே இருக்க, சும்மா சொரிந்து கொண்டிருந்தவனுக்கு கையில் கத்தியை கொடுத்தாக மாறிவிட்டது. அவன் தன்னையே, தன் இனத்தையே வெட்டி வெட்டி ரத்தக்களரி ஆக்கிக்கொண்டு இருக்கிறான். தனக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு உதித்த, இணையம், எல்லோரையும் அள்ளி அணைத்து பினைத்துக்கொண்டது. ஆனால் மனிதன், இன்னொரு மனிதனை இணைத்துக்கொள்ள தவறிவிட்டான். 

இவ்வளவு காலத்திலும் கூட, வரப்பு சண்டைகள் போல எல்லைச் சண்டைகள் ஓவ்வொரு நாட்டிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.  எல்லைகள் இல்லா இணையம் சாத்தியமாயிற்று. ஆனால் எல்லைகளில்லா மனோநிலை சாத்தியப்படவில்லை. இதற்கு யார் காரணம்? உலகில் உள்ள பொறுப்புடைய தலைவர்கள் தான்.

உலகின் வல்லரசு யார் என்ற போட்டியில், மார்தட்டிக்கொண்டு, ஒரு கேக்கை இரண்டாக வெட்டுவது போல, உனக்கு பாதி, எனக்கு பாதி என்று நாடுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இன்று, இணைந்து கைகோர்த்து, விண்வெளியில் 400 கிலோமீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து திடல் அளவான, விண்கப்பலில் (International space station-ISS) ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கு விண்ணில் எல்லைகள் இல்லை, ஆனால் மனித சமூகம் வாழும் பூமியில் எல்லைகள், “இவர்கள்மாதிரியான “ தலைவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்கள் என்னும் நிலை என்று மாறுமோ தெரியவில்லை. அது மாற வேண்டும் என்றும் விருப்பம் கொள்வோம்.

அன்பர்களே இதன் நிறைவு பகுதி, நாளை வரும்.


Today's world in people's sharing!


மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்!



கால மாற்றம்

மக்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வேகமாக மாறிவிட்டது. அறிவியல் முன்னேற்றமும், தொடர்பு சாதனங்களை எளிமையாக்கி மக்களிடம் கிடைக்கச் செய்ததின் மாற்றமே இது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்தகாலம் போய், குரலாலே பேசி கருத்து பரிமாற்றம் மாறி, முகம்பார்த்து பேசிக்கொள்ளும் மிக எளிய முறைக்கு வந்துவிட்டோம். 

அதுவும் இந்த கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இன்னும் கூடவே மாற்றம் பெற்றுவிட்டது.  வாயிலே சில வார்த்தைகள் மட்டுமே பேசத்தெரிந்த, கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாத, தன் வீட்டு ஆட்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கத் தெரிந்த, வெளி உலகமே தெரியாத, ஆனால் ஒரு சின்ன, பெரிய LED திரையில் மட்டுமே பார்க்கத் தெரிந்த நான்கு வயது குழந்தைக்கு (?!) ஆரம்ப கல்வி பயிலும் நிலை, ஆன்லைனில் வந்துவிட்டது. அந்த குழந்தையிடம் கைபேசி வாயிலாக குரலாக பேசினால் “வீடியோ காலில் வரத்தெரியாதா?” என்று எதிர்கேள்வி கேட்கிறது.

ஆனால் இந்தக் கட்டுரை அலசல் அக்குழந்தைகள் எதிர்காலம் பற்றியதல்ல, எனவே யாரும் கவலைப் படவேண்டம் :P


கடமை

ஒரு பெரும்பான்மையான மக்களுக்கு, தான் அறிந்ததை சமூகத்திற்கு தரவேண்டும் என்ற உந்துதல் எப்போதுமே இருக்கும். அது உண்மையாகவே இயல்பான கடமை. பணம் வாங்கிக்கொண்டு தருதல் என்பது பின்னால் வந்த பிசினஸ் ரகசியம். தான் அறிந்ததை பிறருக்கு தராது இருந்தால், நாம் இந்த உலகில் இன்றுவரை காட்டுமிராண்டியாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, மனித சமூகம் அற்புதமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தது என்பதை, தமிழ்சங்க கால நூல்கள் வழியாக அறியலாம்.

அப்படியான காலத்தில், இந்த உலகின் பல பகுதிகளில், “ஒரு சில மக்கள்” வாழ்க்கை முறை அறியாமல், பிறர் வளம் பறித்து கொள்ளையர்களாக, கொலைக்கார்களாக, பச்சைக்கறி திண்ணும் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே.

தன் அனுபவத்தை, அறிவை இன்னொருவருக்கு பகிர்வதால், பெற்றுக்கொள்ளும் மனிதர், கற்றுத்தரும் மனிதருக்கு அறிவில், ஏறக்குறைய சமநிலை அடைவார். அவருடைய வாழ்வின் உயர்ச்சிக்கு அது உதவும். இந்த அறிவு அனுபவ பகிர்வு, மனிதன் உடல் அசைவுகளை, சைகைகளை, சப்தங்களை மொழியாக கொண்டபோதே வந்திருக்கும். உதாரணமாக, அந்தபக்கம் போகாதே காட்டுயானை இருக்கிறது, புலி இருக்கிறது என்று, எதிர்படும் மனிதனை எச்சரிக்கை செய்திருப்பார்கள். இந்தப்பக்கம் நல்ல பசி போக்கும் பழம் தரும் மரம் இருக்கிறது, நீ சாப்பிட்டுக்கொள் என்று வழிகாட்டி இருப்பார்கள்.

பேசும் மொழி வளர்ந்த பிறகு, மிக எளிதான வேலையாகிவிட்டது. எழுத்தும் வளர்ந்தபிறகு, அறிவு, அனுபவ பகிர்வு எல்லைகளை கடந்துவிட்டது. கடல் கடந்து மனிதர்கள் செல்லச்செல்ல உலகம் சுருங்கி, இப்பொழுது கையடக்க கைபேசியில் அமைந்துவிட்டது. இந்த மாற்றங்கள் எல்லாமே, ஒருவர் தன் அறிவை, அனுபவத்தை பிறருக்கு, பிரதிபலன் பாராமல் பகிர்ந்து கொண்டதால் மட்டுமே. 


பகிர்தலின் வளர்ச்சி

இத்தலைப்பில் அடுத்த பதிவில் காண்போம். காத்திருங்கள்.

வாழ்க வளமுடன்!