April 2023 | CJ

April 2023

Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 04


Shri Vethathiri Maharishi- Art by Sugumarje


CENTER FOR THE SELF-REALIZATION BY VETHATHIRIYA YOGA



சுருக்கமாக ‘SEREVEYO’ (செரெவியொ) என்ற பெயரில் இந்த, வேதாத்திரிய யோகம் வழியாக, தன்னையறிதல் (குண்டலினி யோக அடிப்படையில்)  என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அன்பர்களே, முக்கியமாக இந்த சேவை வழியாக, குண்டலினி யோக தீட்சை, காயகல்ப பயிற்சி வழங்கப்படுவதில்லை. எனவே அவற்றை, ஆழியாறு அறிவுத்திருக்கோவில், உங்கள் நகரில் அமைந்திருக்கும் மனவளக்கலை மன்றங்கள், தவ மையங்களில் தொடர்பு கொண்டு  கற்றுக்கொள்ளலாம். அதன்படி வேதாத்திரியம் வழியாக கற்றுக்கொண்ட அன்பர்களுக்கும், ஆர்வமுள்ளோர்க்கும் உதவும் வகையில் இந்த சேவை வழங்கப்படுகிறது

அந்த வகையில், சேவை இரண்டு வகையாக செயல்படுகிறது. 


முதலாவது/ நன்கொடை வழியில் சேவை / நேரடி இணையவழி தொடர்பு சேவை
1) இணையம் வழியான கருத்தரங்கு, கலந்துரையாடல் அதன் பிறகான கேள்விக்கான பதில் நிகழ்வாக இருக்கும். இதில் நன்கொடை செலுத்திய அனைவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். நேரடியாக தத்துவ விளக்கம், கேள்வி பதில்! தனி நபருக்கான நன்கொடை Rs.999/- காலை  / மாலை  என இருநேர நிகழ்வு.
ஒரு நபர் தனியாக, விரும்பினால், ஒரு பகிர்வுக்கு, ஒரு நாளில் 30 to 40 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.(Google Meet or Zoom)
அதற்குப்பிறகு அவரே தொடர முடியாது. மறுநாள் வரை காத்திருக்க வேண்டும், எனவே அடுத்த வாய்ப்பு வேறு நபருக்கு வழங்கப்படும். இப்படியாக நன்கொடை அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்
இதற்கு நன்கொடை Rs. 999/- செலுத்தியவர்கள் WA.ME/919442783450 என்ற வாட்சாப் (WhatsApp) வழியாக விபரமளித்தால், அவர்களுக்கான இணைய கருத்தரங்கு இணைப்பு சுட்டி (Link) அனுப்பிவைக்கப்படும். இதை பிறருக்கு பகிர்வது தவறு என்று அறிந்து கொள்க! நீங்கள் பகிர்ந்து வேறு யாரேனும் வர அனுமதிக்காதீர்கள்.
நன்கொடை செலுத்தாதவர்கள் இணைவதற்கு அனுமதி மறுக்கப்படும். We will block that persons, who entered to webinar without donate.
இந்த நிகழ்வு ஒருபோதும் இணையத்தில், வேறுயாரும் பார்ப்பதற்காக பதிவாக பகிரப்படாது


இரண்டாவது/ நன்கொடை வழியில் சேவை / YouTube பதிவுகள் வழியான சேவை
2a) அடிப்படை உறுப்பினருக்கான விரிவான தகவல்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், விஞ்ஞான விளக்கங்கள் அடங்கிய காணொளிகள் (YouTube ல்) உறுப்பினர் / Membership வழியாக, நன்கொடை Rs.299/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
2b) தவமும் தவவிளக்கமும் பயன்களும், அனுபவங்களும், விளக்கங்களும் கொண்ட காணொளிகள் பெற நன்கொடை Rs.799/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
2c) இறை உண்மை ஆய்வு பதிவுகள், தனையறியும் பயணத்தில் கண்ட உண்மைகள், ஆராய்ச்சிகள், பயன்கள், கிடைத்த விளக்கங்கள் ஆகியன பலவித தலைப்பிலான காணொளிகள். நன்கொடை Rs.1.999/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
இதற்கான நன்கொடையை இங்கே YouTube வழியாகவே, அதன் வரையறைக்குட்பட்டு செலுத்தி பயன் பெறலாம். எங்கள் சேவை இந்நிர்வாகத்தால் கண்காணிக்கப்படும் என்றும் அறிக!
இந்த காணொளிகளை பொதுவெளியில் யாரும் பார்க்க முடியாது

விளக்கமாக!
வேதாத்திரியத்தில் என் 34 ஆண்டுகளுக்கு மேலான அனுபவ அறிவை தருகிறேன். எனவே சரியான நபர்களுக்கு சேரவேண்டும் என்றும் விரும்புகிறேன். அவர்களின் வளர்ச்சியில் என் பங்காக சிலவற்றை தரவும் எண்ணம் கொண்டுள்ளேன். எங்களின் அனுபவம், உழைப்பு, அறிவுப்பகிர்வு இவையெல்லாம் சரியான அன்பர்களுக்கு, தேவையானவர்களுக்கு, நோக்கத்தின் வழியாக முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டுமே சேரவேண்டும் என்று விரும்புகிறோம்.

சமீபமாக, வேதாத்திரியத்தில் நம் கைகளை உயர்த்தினால், வேதாத்திரி மகரிஷியைத் தவிர பற்றிக்கொள்ள யாருமில்லை என்று சொல்லுகிற அன்பர்களின் மனக்குறையை, நாங்கள் போக்கிட முயற்சிக்கிறோம்.

மேலும் இங்கே இணையம் வழியாக அறிவுத்திருட்டு அதிகமாக நிகழ்வதை காணமுடியும். ஒருவருடைய பதிவை, அவரிடம் கேட்காமல், தெரியப்படுத்தாமல், நன்றி சொல்லாமல், யாருடையது என்றும் சொல்லாமல், ஏதோ தானே ஆராய்ந்து கண்ட உண்மைபோல பேசி, அவர்களுடைய பெயரில் பகிர்ந்து விடுவார்கள். ஆனால், வேதாத்திரிய சானலில், ஒருபோதும், யாருடைய பதிவையும் எங்கள்பதிவாக வெளியிட்டதில்லை. வேதாத்திரி மகரிஷி பதிவுகள், ஏற்கனவே பொது தன்மையில் உள்ளதால், அவை மட்டுமே இருக்கும். மற்ற எல்லா பதிவுகளிலும் எங்கள், சிந்தனையும், உழைப்பும், ஆராய்ச்சியும், அனுபவங்கள் மட்டுமே இருக்கிறது.

மேலும் என் ஓவிய வாழ்க்கையிலும், 16 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை நான் சந்தித்து இருக்கிறேன். நான் வரைந்த ஓவியம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளாக, அந்த ஓவியத்தை எடுத்து திருத்தி, மேலும் ஓவியத்தில், என் கையெழுத்தை அழித்துவிட்டு, தன் பெயரில் வெளியிட்டவரிடம் கேட்டதற்கு, ‘இணையத்தில் வந்துவிட்டால், அது உன் சொத்து அல்ல’  என்று என்னிடம், தெனாவட்டாக பதில் சொன்னவரோடு முரண்பட்டு அவரை என் நட்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளேன்.

மேலும் 2c) திட்ட வழியாக இணையும் அன்பர்களுக்கு மட்டும், பகிரப்படும் சில ஆய்வு பதிவுகளுக்கு, கூடுதலாக அதன் வடிவ கோப்பும் (PowerPoint Document) தர முடிவு செய்துள்ளோம் எனினும், எல்லாவற்றிற்கும் அப்படி தர இயலுமா என்பது கடினமே. வார்த்தையாலும், ஒளிப்படங்களாலும், ஓவியத்தாலும் சொல்லமுடியாத உண்மைகளும் இருக்கின்றனவே. எனினும் உங்கள் சந்தேகங்களை தீர்க்கவே நாங்கள் தயாராக உள்ளோம். வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள, அன்புடன் வரவேற்கிறோம்
.
இந்த சேவை வழியாக, என்னோடு துணை நிற்கும், குரு மகான் வேதாத்திரி மகரிஷிக்கும், இன்னும் பல நல்ல சித்தர் பெருமக்களுக்கும் என் நன்றி.

-
குறிப்பு: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நன்கொடை திட்டத்தை அகற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்! அருட்பேராற்றலும், குரு மகானும் அந்நிலை அமைந்திட உதவட்டும்!
-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
Link for 1st part: Sereveyo Part1

Name changes, self-description post by Sugumarje


sugumarje


ஒத்துபோகிற தன்மை!

ஒரு கேரிகேச்சர் என்ற கேலிச்சித்திரம் எழுதுபவனாக இருந்தவன், தன்னையறியும் பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் உந்துதலில் இதை பிறருக்கும் சொல்லலாம் என்ற கருத்தில் 2018 உருவானதுதான், வேதாத்திரிய சானல். தொடங்கும் பொழுது அதற்கு சூட்டப்பட்ட பெயர், Coincide Channel, இதன் நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு ‘ஒத்துப்போகிற தன்மை’ என்பதாகும், இந்த பெயரிலேயே, என்னுடைய உண்மை விளக்கத்தை சொல்ல நினைத்தேன். அதாவது மனிதனின் மனமும், இறைநிலையும் ஒத்துப்போகிற தன்மையில் இருக்கிறது என்பதே ஆகும். இதன் மூலக்கருத்து ‘அலையலையாய் இயங்கும் மனதின் அடித்தளமே நிலைபொருள், அது தெய்வம்’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதாகும்.


வேதாத்திரிய சானல்

என் பள்ளித்தோழர், சக வேதாத்திரிய பயணி, இந்த YouTube பெயரை கேட்டுவிட்டு, இப்படியெல்லாம் பெயர்வைத்தால், வேதாத்திரிய அன்பர்களுக்கு பயன்படுவதில் சிரமம் இருக்கும், பெயரை மாற்றுக  என்றார். உடனடியாக ‘வேதாத்திரிய சானல்’என்று பெயர் மாற்றம் செயப்பட்டது. அதுதான் இன்னமும் தொடர்கிறது, பதிவுகளையும் வழங்கி வருகிறோம்.

நீண்ட பயணம்

நான் யார்? என்று தன்னையறிதல் என்பது நீண்டபயணம் தான். அதற்கு முயற்சி, ஆர்வம், சூழ்நிலை, செயல்பாடு என்று எல்லாமே கூடி வர வேண்டும். முக்கியமாக நம் கர்மா என்ற வினைப்பதிவுகளின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ‘என்ன வாழ்வதை விட்டுவிட்டு தன்னை அறிகிறயா, விடுவேனா உன்னை!’ என்று பல குழப்பத்தை ஏற்படுத்தும். அடிக்கிற காற்றில் பறக்கிற சருகு போல நாம் இருந்துவிட வேண்டியது அவசியம். இதை தாங்கிக்கொள்ள முடியாமலும், இதெல்லம் நமக்கு அவசியமா? குறுக்கு கேள்வியாலும்தான், நான் யார்? தன்னையறிதலை கைவிட்டு விடுகிறார்கள். எனக்கு என் முன்னோர்களின் ஆசி இருந்ததாக கருதுகிறேன்.

தன்னிலை விளக்கம்

என்னுடைய வாழ்வில் என்னை / என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆண்டு 2016 என்று சொல்லலாம். 2017 கிட்டதட்ட தன்னையறிதலுக்கு தகுதியாகிவிட்டேன். 2018 ம் ஆண்டு, எனக்குள் இறையாற்றல், அறிவாகவும் இருந்து செயல்படுகிறது என்பதையும், வெளியாக இருக்கிற இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் தான் நான் இயங்கிக்கொண்டும் இருக்கிறேன், அதே இறையாற்றலினால்தான் நான் உலகியல் வாழ்வில் உணர்வைப் பெறும், இறையாற்றலையே உணரக்கூடிய  மனமாகவும் இருக்கிறேன் என்பதை உணர்வாக பெற்றேன். இதோ, என்னுடய வேதாத்திரிய பயணம் விபரம்...

18 வயதில் தீட்சை (1988 ம் ஆண்டு) 

21 வயதில் அருள்நிதி (1991 ம் ஆண்டு)

47 வயதில் தன்னையறிதல் (2017 ம் ஆண்டு)

53 வயதில் நிறைபேற்று நிலை (2023 ம் ஆண்டு)

மொத்தமாக 34 ஆண்டுகள் ஆகும்.

நான் யார்?

இந்த விளக்கங்களை, அதாவது, நான் இந்த வேதாத்திரியத்தில் பெற்ற அனுபவங்களை, என்னுடைய எழுத்திலும், குரலிலும் பதிந்து வெளியிட்டுள்ளேன். ஏன் அப்படி ஒரு திட்டமும் ஆர்வமும் எழுந்தது என்றால்? வேதாத்திரி மகரிஷி சொன்னது போல, ‘அறிந்த உண்மை நம்மை சும்மா விடாது, அதை எப்படியாவது பிறரிடம் சொல்லி, அவர்களும் அந்நிலை பெற துணையாக நிற்கும்’ என்பதே உண்மை. ஆனால், இந்த நவீன காலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்குப்பிறகு, தகவல் தொடர்பாகவும், கருத்து பரிமாற்றமாகவும், யுடுயூப் (YouTube) மாறிவிட்ட பிறகு, எனக்கும் அதுவே சரியாக தோன்றியது. 2009 ம் ஆண்டில் இருந்து YouTube உறுப்பினராக இருந்தாலும் கூட, நம் வேதாத்திரியம் 2018ம் ஆண்டுதான் பகிர ஆரம்பித்தேன்.அதுவும் சந்தேகமற, உண்மை அறிந்த பிறகே!. ஆனால், கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக, இன்றுவரை 729 காணொளிகள் பதிவேற்றிய நிலையிலும், என்னைவிட என்பகிர்வுகளை புரிந்து கொண்டு, வேதாத்திரிய சானலை பகிர்ந்துள்ள 18200 அன்பர்களைக் கடந்தும் கூட, சிலர்  என்னை நீ யார்? என்றுதான் கேட்கத்தான் செய்கிறார்கள்.

 1) ஒரு செய்தியை, விளக்கத்தை, பதிவை, கட்டுரையை, காணொளியை, குரல்பதிவை தருவது யார்?

2) அவருடைய அனுபவம் என்ன?

3) எப்போது இருந்து இந்த சேவையை பகிர்ந்தளிக்கிறார்?

4) அவருடைய சிறப்பு ஏதேனும் உள்ளதா?

5) இதற்குமுன் என்ன செய்தார்?

6) அவர் பின்புலம் என்ன? என்றெல்லாம் ஆராய்வதே இல்லை. பதிவாக செய்திருந்தாலும் அதை பார்ப்பதில்லை, படிப்பதில்லை.

வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை காட்டி,
அவரிடமே கையெழுத்து வாங்கிய பொழுது (1993 ம் ஆண்டு)


நேற்று முளைத்த காளான்

கடந்த முப்பத்திநான்கு ஆண்டுகளாக வேதாத்திரிய பயணத்தில், என் அனுபத்தில், தன்னிலை விளக்கம் பெற்றபிறகு, என்னை அவர்கள் பார்க்கும் பார்வையும், பதிலுரைக்கும் முறையும், நேற்று முளைத்த காளான் என்றுதான் இருக்கிறது. ஒரு உண்மை சொல்லட்டுமா? ஓவ்வொரு மனிதனும் முகம்பார்க்கும் கண்ணாடி மாதிரி. ஒருவர் தன் அனுபத்தை வைத்துத்தான், அடுத்தவர் எப்படிப்பட்டவர் என்று பார்ப்பார். அதில் தன் முகம்தான் அதில் தெரியும். பழகிப்பார்க்கும் பொழுதுதான், ‘அடடா இவர் நம்மளை மாதிரி இல்லையே, நாம நினைச்ச மாதிரியும் இல்லையே’ என்று தோன்றும். 

சேவையில் எழுந்த தயக்கம்

வேதாத்திரி மகரிஷி அவர்களின் நேரடியான வகுப்பில் கலந்து அருள்நிதி ஆகிவிட்ட பிறகு, மன்றத்தில் சேவையில் இருந்தாலும் கூட, நான் யார்? என்று தன்னையறியாமல், இறையுணர்வு பெறாமல், சுத்தவெளி தத்துவம் உணர்வாக பெறாமல் எனக்கு சேவையில் ஈடுபட முடியவில்லை. லட்டை சுவைத்தால் தானே லட்டு எப்படி இருக்கும் என்று பிறருக்கு சொல்லமுடியும்? லட்டு குறித்து பிறர் சொன்னதையும், படித்ததையும் அடுத்தவருக்கு எப்படி சொல்வது என்று எனக்குள் தயக்கம். அதனால் நானாகவே மன்ற செயல்பாடுகளில் விடுவித்துக்கொண்டேன்.

அதன்பிறகு எந்த ஒரு மன்றத்தில் நான் சேவையில் இல்லை. ஆனாலும் வேதாத்திரியத்தை நானும் விடவில்லை, அதுவும் என்னை விடவில்லை. இதனால் எனக்கு மன்றம் சார்ந்த சேவையில் எந்த நிலைபாடும் பெறவில்லை.அதாவது, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும், பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும் எனக்கு அக்கறையில்லை.

by Sugumarje for Caricaturelives

by Sugumarje for personal collection


சுகுமார்ஜெ (Sugumarje)

கடந்த 1996 ம் ஆண்டு முதல் என்னோடு கணிணி இணைந்து கொண்டது, அந்த கணிணி ஆர்வத்தின் வழியாகவே, வேலைகளிலும் ஆர்வம் வர, 2003 ம் ஆண்டு மல்டிமீடியா எனும் வேலையில் தொடர்ந்து வருகிறேன். 2007 ம் ஆண்டு நிறுவனம் சாராத, தனி நபர் சேவையாக, CARICATURELIVES என்ற கேரிகேச்சர் ஓவிய நிறுவனம் நடத்தி வருகிறேன். இப்போதும் சில ஓவிய வேலைகள் உண்டு. இந்த வேலை நிறுவனத்தின் வழியாக என்பெயர் சுகுமார்ஜெ (Sugumarje). இன்றும் கூட இணையத்தில் தேடினால் என்னைபற்றி தெரிந்து கொள்ளமுடியும். ஆனால், வேதாத்திரிய சானலை பொறுத்தவரை, அதற்கு தகுதியுள்ள பெயராக வைப்போம் என்றுதான், அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்று வைத்துக்கொண்டேன். ஏதோ கொஞ்சம் தெரிந்தவர், அறிந்தவர் சொல்லுகிறாரே என்று நம்புவார்கள் அல்லவா? அதனால்தான்!

அருள்நிதி என்பது முழுமையை குறிக்கும் சொல். தகுதி இல்லாவிட்டாலும், நமக்கு அது கிடைத்துவிடுகிறது. ஒரு பிச்சைக்காரர் தன் குழந்தையை ‘ராஜா’ என்று கொஞ்சுவது போல. யார் கண்டார்கள், அக்குழந்தை நிஜமாகவே ராஜா ஆகலாம் அல்லவா? அதுபோல ‘நீ உன் தகுதியில் நின்றிரு’ என்பதற்காகத்தான் ‘அருள்நிதி’ என்ற பட்டம் கிடைக்கிறது. ‘நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்க.

பெயரில் குழப்பம்?

ஆனால் என்ன நிகழ்ந்தது என்றால், அருள்நிதி என்றுதானே இருக்கிறது, எனவே பதிவுகளை பார்ப்போர், என்னடா இது அருள்நிதி என்று பெயருக்கு முன்னால் போட்டிருக்கு? இவ்வளவு பேசுகிறானே? எல்லாம் தெரிந்த்து போலவேறு பேசுகிறான்? இந்த ஆண்டுதான் அருள்நிதி ஆனாலும் ஆகிருப்பான். இப்பவே இவ்வளோ திமிறா? என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் அடிக்கடி நம் வேதாத்திரிய சேனலில், என்மீது வன்ம கருத்துக்கள் பதியப்பட்டன சிலரால். நான், என்கருத்தை, உண்மையை, அதை விளக்கமாக சொல்லியும், பெரிய இவனா நீ?  நீ என்ன மகரிஷியா? அவரை வைத்து பிழைக்கிறாயே? என்ற அளவில் கேட்டுவிட்டனர். அருள்நிதிக்கு பதிலாக, துணை பேராசிரியர், பேராசிரியர், முதுநிலை பேராசிரியர் என்று போட்டிருந்தால், பேசாமல் போயிருப்பார்களோ என்னவோ?! வாட்சாப் குழுவிலும் ‘உனக்கு ரொம்ப தெரியுமோ?’ என்று யாரேனும் கேட்பதுண்டு.

ஆனால் நான் எதையுமே பிரச்சனையாக கருதாமல், எது உண்மையோ, எது விளக்கமோ, எதை புரியவைக்க வேண்டுமோ அதில் நான் தவறுவதில்லை, பூசிமொழுகி பேசும் கலை எனக்கு வரவில்லை. ஆனாலும் நம் வேதாத்திரிய இரண்டொழுக்க பண்பாட்டின் படி, மனதுக்கு துன்பம் தருவதில்லை (அவர்கள் எனக்கு கொடுத்தாலும் கூட) அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே அடுத்தடுத்த கேள்விவை வாக்குவாதமாக மாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. எனவேதான் வேதாத்திரிய சானலில், பின்னூட்டமிடுவது முடக்கப்பட்டது.  இங்கேயும் ஒரு உண்மை சொல்லட்டுமா? பின்னூட்டம் வழியாக, பெரும்பாலோர் தான் என்ற அகங்காரத்தைத்தான் பதிவு செய்கிறார்கள்.

இனி என் பெயர்...

அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்ற பெயருக்குப் பதிலாக, சுகுமார்ஜெ (Sugumarje) என்றே செயல்பட முடிவு செய்துள்ளேன். பெயரில் மதிப்பை தூக்கி அலைவது எனக்கு தேவையில்லை என்று கருதுகிறேன். அந்த விளக்கத்திற்காகவே, இந்த மிக நீண்ட கட்டுரை.

ஒரு பூ மலர்கிறது, வாசனை பரப்புகிறது. நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும், பயன்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், இழப்பு அந்த பூவுக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே?! 

'ஐயா, இதென்ன கதை? நாளைக்கும் பூ பூக்கும் தானே?!’

’ஆமாம், நாளைக்கும் பூக்கும், மறுநாளும் பூக்கும், அடுத்த மாதமும், ஆண்டும் பூக்கும். ஆனால் அதே பூ பூப்பதில்லையே; 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!







The spider's action and effects based on unnatural food



யோகத்தில் ஆர்வம்

கடவுளே இல்லை என்ற ஒரு தலைமுறையும் அவர்களின் மூன்று தலைமுறையினரும் நம்மோடு வாழ்ந்து வரும் காலம் இது. அப்படிபட்ட இடத்தில், தன்னையறியவும், இறையுண்மை பெறவும், யோகத்தில் ஆர்வம் எழுமா என்பதே சந்தேகம்தான். அதையும் மீறி யோகத்தில் இணைய விரும்பினால், சரியான குரு யார்? என்றும் சந்தேகம் எழுவது இயல்பு. வேறுவழியே இல்லை அவரவர், தன்னறிவின் துணை குருவையும், அவரின் விளக்க உரைகளை, விளக்கங்களை கேட்டு, பார்த்து, படித்து உண்மை ஆராய்ந்து தாங்களேதான் முடிவுக்கு வர வேண்டும். நான் சொன்னேன் என்பதற்காக, வேதாத்திரியத்தை பிடிப்பதும் சரியல்ல!

யோகத்தில் கட்டுப்பாடுகள்

பொதுவாக உலகில் எந்தவகையில் உள்ள யோக அமைப்பில் இணைந்தாலும் சில கட்டுப்பாடுகள் தரப்படுவதுண்டு. முதலாவதாக உடை, ஒழுக்க பழக்கங்கள், உணவு, தங்கும் விடுதி முறைகள், பிறரோடு பழகும் விதம், காலை எழும் நேரம், பயிற்சி கட்டுப்பாடுகள், இரவு படுக்கை நேரம் என இன்னும் பலவாறாக அமையும். இதற்கு ஒப்புகை அளித்தால் உள்ளே இருக்கலாம், இல்லையேல் அந்த அன்பர், தகுதியில் மீறிவிட்டார் என்று வெளியேற்றப்படுவார்.

உணவு மாற்றம்

யோக சாதனையில் இணைபவர்களுக்கு, அக்காலம் முதல் இக்காலம் வரை இருக்கும் பெரிய பயம், நினைத்ததை சாப்பிட முடியாதே என்பதுதான். ஏதோ இந்தக்காலகட்டத்தில் யோக அமைப்புக்கள் உள்ளன. இல்லை என்றால், 

நீ யோகத்தில் சேர்கிறாயா என்று கேட்டால்‘நான் என்ன பிச்சை எடுத்தா சாப்பிட முடியும்?’ என்று பதில் அளிப்பார்கள்.

யோகிகள் எல்லாருமே பிச்சை எடுக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அது அந்தக்கால கம்பிகட்டும் வேலை என்பதாக தெரிகிறது. சரி அந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம். ஆனாலும், யோகத்தில் இணைந்தால், இந்தந்த உணவு தான் உண்ணவேண்டும் என்ற திட்டம் உண்டு. ஏனென்றால் உடலை தேவையில்லாமல், இயல்பு மீறி ஊக்கிவிக்கக் கூடாது. சில தடகள விளையாட்டு வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யபடுவதை அறிவீர்கள் தானே?! 

உடலை அதன் இயல்பு மீறி பலகாலமாக நாம் மாற்றிக்கொண்டுள்ளோம் என்பதே உண்மை. அதனால் நமக்கு பிடித்ததே உணவாகிவிட்டது. உடலுக்கு இது ஏற்குமா? வயிறுக்கு இது ஏற்குமா? செரிமானத்திற்கு இது ஏற்குமா? என்ற கேள்விகள் எழுவதே இல்லை. ஏதேனும் சொன்னால் எதிர்கேள்விக்கு குறைவில்லாமல் கேட்பார்கள். ஊக்குவிக்கும் உணவுகூட பரவாயில்லை தான். ஆனால்!

போதை தரும் உணவுகள்

உடலுக்கு, மனதுக்கு, மூளைக்கு போதை தரும் உணவுகள் முற்றிலும் தவிர்க்கபட வேண்டும் இந்த யோக சாதனைக்கு. ஏன் என்றால், நீங்கள் எதை நோக்கி நகர்கிறீர்களோ அது முற்றிலும் நிகழாது. ஒரு பிறழ்ந்த மயக்கத்தில் நீங்கள் சிக்கி விடுவீர்கள். அப்படி போதை தரும் பொருட்கள் என்னென்ன என்று நான் இங்கே குறிப்பிடுவது தேவையில்லை. அது இக்கட்டுரைக்கு முக்கியமும் அல்ல.

அமெரிக்க நாஸா ஆய்வு

ஒரு போதைப்பொருள் என்னென்ன செய்கிறது? எப்படியெல்லாம் இயக்கங்களை பாதிக்கிறது? மனிதனை மட்டுமா? எல்லா உயிரினங்களையுமா? என்று அமெரிக்க அறிவியல் / விண்வெளி நிறுவனமான நாஸா ஆராச்சி செய்ய முயன்றது. அவர்கள் அவ்வராய்சிக்கு எடுத்துகொண்டது, சிலந்தி பூச்சி. சில வகை ஊக்க / போதை உணவுகள் அதற்கு உணவாகக் கொடுத்து. அதனுடைய செயல், நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்களை, அந்த ஊக்க / போதை உணவுகள் விளைவிக்கின்றன என்று ஆராய்ந்தனர். 

அந்த ஆராய்ச்சியின் முடிவு இங்கே!

அந்த ஆராய்ச்சியில், நாம் சிலந்தி பூச்சியை அதன் போக்கில் விட்டுவிட்டோம். ஆனால் அதன் செயல் / நடவடிக்கை எப்படி இருக்கிறது / இருந்தன என்று பார்க்கலாமா? இதோ...


-

இதன் முடிவுகளை நான் தனியாக, கட்டுரையாக தரவேண்டிய அவசியமின்றி, நீங்களே பார்த்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் கேள்விகள் இருக்குமானால், கேளுங்கள் அல்லது அமெரிக்க நாஸாவிடமே கேட்டுவிடுங்களேன்!

-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

Thanks to: image by https://www.sciencenews.org/ and article idea source from: @WallStreetSilv  (twitter) and NASA (USA)

Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 03


 


நான் யார்? என்ற தன்னையறியும் சேவை வழங்க தயாராகிறேன் 03

இறுதிக்கேள்வியும் அதற்கான பதிலும்

-

கேள்வி: சரி, ஏன் பணம் வாங்கித்தான் ஆகவேண்டுமா?

என் பதில்: இப்பொழுதான் நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கும் நிலைக்கு வந்திருக்கிறீர்கள். நன்றி. 

ஆம், நன்கொடை வழங்கிய பிறகு என்று அமைத்தால்தான், ஆர்வக்கோளாறு மிக்க சிலரை கட்டுப்படுத்த முடியும். முட்டிமோதும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியும். சும்மா தானே கிடைக்கிறது, சும்மாதானே தருகிறார், நாம் கேட்டால் என்ன? என்று, தானாக சிந்தித்து அறிந்துகொள்ளக்கூடிய விசயத்திற்குக்கூட என்னுடைய நேரத்தை வீணடிப்பார்கள். தீடீரெனெ எல்லாமே எனக்கு சொல் என்று மல்லுக்கு நிற்பார்கள். சொன்னாலும், மறுத்து மறுத்து மறுபடி அடுத்தடுத்த கேள்விக்குச் செல்வார்கள். முழுநாள் எடுத்துக்கொண்டு, நன்றாக விளக்கமளித்தாலும் கூட, கொஞ்சமும் புரிந்து கொள்ள மறுப்பார்கள். பிறகு என்னையே குறை சொல்லுவார்கள். ஏதோ நான் அவர்களிடம் பாடம் படிப்பதுபோல நிலைமை மாறிவிடும். 

மேலும் தினமும் வந்து நிற்பார்கள்,  என் சுதந்திரத்தை அது கெடுக்கும். நீதானே சேவை செய்கிறேன் என்றாய்? இதோ இதற்கு விளக்கம் சொல் என்று, கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு கேள்வியை என்னிடம் கேட்பார்கள். பிறகு சொல்லுகிறேன் என்று தவிர்த்தாலும், என்னை குறை சொல்லுவார்கள். இதற்கு நீங்கள் சொன்னபதில் சரியில்லை. உண்மையிலேயே இது இப்படி இருக்கிறது என்று, ஏற்கனவே ஒரு பதிலை வைத்துக்கொண்டு, அதுபோல நான் சொல்லுகிறேனா என்று என்னையே பரிசோதனை செய்வார்கள்.

உங்களுக்கே இந்த புரிதல் இல்லை, இதுலே நீங்க எனக்கு வழி சொல்றீங்களோ? என்று என்னையே கிண்டலடித்துவிட்டு கிளம்புவார்கள். அதை ஊர்முழுக்க பேசுவதுப்போல, சமூக வலைத்தளங்களில் எழுதி போட்டுவிட்டு, லைக்குகளை அள்ளுவார்கள். உண்மையாக இப்படியான ஆர்வக்கோளறு ஆசாமிகளை, அடிப்படை பயிற்சியில் கூட முழுமைபெறாத அன்பர்களை, ஏதோ நானும் வேதாத்திரிய அன்பர் என்று சொல்லிக்கொள்பவர்களை இதன் மூலமாக தவிர்க்கலாமே! ஆனாலும் அவர்கள் வருவார்கள் அதை நான்மட்டும் தடுக்கவும் முடியாதுதான்!

தன்னையறிதலில் யாருக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ளதோ அவர்கள் வரட்டும். இறையுணர்வு பெறுவதில் யாருக்கு அக்கறை உள்ளதோ அவர்கள் வரட்டும். வேதாத்திரிய விளக்கத்தில் யாருக்கு உண்மையான விளக்கம் தேவைப்படுகிறதோ அவர்கள் வரட்டும். யாருடைய மனதில், இவரிடம் கேட்டால் சில உண்மைகள் புரியும் என்று நம்புகிறார்களோ அவர்கள் வரட்டும். அவர்களுக்கு நான் உதவவே காத்திருக்கிறேன். என்னுடைய நோக்கமும் அதுவே!

இப்பொழுது நாம் போற்றி வணங்கிக் கொண்டிருக்கும் நம் குருமகான் வேதாத்திரி மகரிஷியும், தன் ஆரம்ப காலத்தில் இப்படியான, கசப்பான அனுபவங்களை பெற்றார். ஆனால் அது நிலைக்கவில்லை. பொதுவாகவே உலகில் மக்களை உயர்த்திட விரும்பும் ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவம் இது. நான் அந்தளவுக்கெல்லாம் இல்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால், வேதாத்திரிய அன்பர்களின் திண்டாட்டம் எனக்கு உறுத்துகிறது! அதனால்தான் இந்தசேவையை நான் தர விரும்பினேன்.

வேதாத்திரிய பாடங்கள் மிக அருமையாக எல்லோருக்கும் கிடைத்துவிடுகின்றன. சான்றிதழும், பட்டயமும் இன்னும் பலப்பலவும் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதற்குப்பிறகு அவர்கள் கற்ற வேதாத்திரியம் அவ்வளவுதான். பெரும்பாலோர், ஆசிரியராக, பேராசியராக இன்னும் வருகின்ற ஆரம்ப சாதகருக்கு சொல்லித்தர ஆர்வமாகிவிடுகிறார்கள். ஆனால், ஏற்கனவே கற்றுக்கொண்ட, வேதாத்திரியர்களுக்கு, வேதாத்திரியத்தில் முன்னேற துடிப்பவர்களுக்கு வழி என்ன? இந்தக் கேள்விதான் என் முன் நின்றது. அதுவே என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எனலாம். இதற்கு மேலும் என்ன சொல்ல வேண்டும்?!

இன்னமும் உலகியல் ரீதியாக, விளக்கமாக சொல்லுவதென்றால், நீங்கள் ஏதேனும் ஒரு வேலைக்கு செல்லுவதாக இருந்தால், உடனே உங்களை தேர்ந்தெடுத்து விட மாட்டார்கள். உங்களை சோதிப்பார்கள். சரியான நபரா? தகுதி உள்ளவரா? சொன்னால் கேட்பாரா? கருத்தை ஏற்றுக்கொள்வாரா? வாக்குவாதம் செய்யக்கூடியவரா? உண்மையிலேயே இந்த வேலையில் ஆர்வம் உள்ளவரா? எவ்வளவு காலம் நீடிப்பார்? அக்கறை உள்ளவரா? வழக்க பழக்கங்கள் எப்படி இருக்கிறது? மற்றவர்களோடு எப்படி பழகுவார்? மரியாதை அறிந்தவரா? அசட்டை செய்பவரா? முட்டாள்தனங்களை கொண்டவரா? தன்னை நம்புபவரா? அடுத்தவர்களை மதிப்பவரா? அவர்களுடைய கருத்தை ஏற்பவரா? முடிவுக்காக சிந்திப்பாரா? ஆலோசனைகளை கேட்டு ஏற்பவரா? தன்முடிவில் நிற்பவரா? இன்னும் பலப்பல. இந்த கேள்விக்கெல்லாம் விடை அறிந்த பிறகுதான், உங்களை அந்த நிறுவனத்தில் அமர்த்திக் கொள்வார்கள். இதெல்லாம் ஒரு வடிகட்டல்தான். அப்படியாகவே ஒரு வடிகட்டலை நான் இங்கே அமைக்கிறேன். இதிலும் கூட சிலர் வருவார்கள்தான். அவர்களின் நோக்கமறிந்து, விளக்கமளிக்கவும் என்னை தயார் செய்துள்ளேன் என்பதே உண்மை. இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நன்கொடை என்னை ஊக்கப்படுத்தும், இன்னும்பல வேதாத்திரிய ஆய்வுகளை செய்யவும், அதை உங்களுக்கே பகிரவும் துணையாக நிற்கும்!

-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Link for 4th part: Sereveyo Part4

Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 02



நான் யார்? என்ற தன்னையறியும் சேவை வழங்க தயாராகிறேன் 02

இனி கேள்வி பதில்!
-

கேள்வி: இதெல்லாம் எங்களுக்கு அவசியமில்லை!

என் பதில்: சரி எனக்கும் உங்களுக்கு சொல்லித்தர வேண்டுமென்ற கட்டாயமில்லையே!

-

கேள்வி: இப்படியெல்லாம் வேதாத்திரியத்தை வித்து காசு பாக்கனுமா?

என் பதில்: என் அனுபவ அறிவை பகிர்கிறேன்.  நீங்கள் என்னிடம் பெற்றுக்கொள்ளும் வகையில் மதிப்பளிப்பதற்காகவே சிறிய அளவிலான நன்கொடை பெறுகிறேன். அந்தப்பணம் இணைய பயன்பாட்டுக்கும், மின்சாரத்திற்கும், வேதாத்திரிய ஆராய்ச்சியை உங்களுக்கே திருப்பி பகிரவும் உதவுமல்லவா?. சரி உங்களுக்கு எங்கே சும்மா கிடைக்கிறதோ அங்கே உயர்வுபெற வாழ்த்துகிறேன்.

-

கேள்வி: இதெல்லாம் ஒரு இறை அனுபவமா?

என் பதில்: இல்லையா? அப்படியானால் என்னை விட்டுவிடுங்கள்

-

கேள்வி: எதோ புலம்பல் போல இருக்கிறது. யோகத்திற்குரிய ஒன்றுமே இல்லை. வேதாத்திரியத்தில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது தெரியுமா?

என் பதில்: இருக்கிறது என்றால் அதையே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எனக்கு வேண்டாமே!

-

கேள்வி: நீங்கள் நன்றாக, துரியாதீத தவமும், அகத்தாய்வும் செய்து பயன்பெற வேண்டுகிறேன். வேதாத்திரியத்தின் உண்மை அறிய வாழ்த்துக்கள்.

என் பதில்: நல்லது, என் மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி!

-

கேள்வி: உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேதாத்திரியத்தை நீங்கள் பிறருக்கு தருவதற்கு?

என் பதில்: என் 34 (2023ல்) ஆண்டுகால வேதாத்திரிய அனுபவம் இருக்கிறது. நீங்கள் என்னை வாதத்திற்கு அழைக்க விரும்புகிறீர்களோ? வேதாத்திரி மகரிஷியிடமே சிலர் அவரை வாதத்திற்கு அழைத்தப்போது, அதில் அவர் சிக்கியதில்லை. எனக்கு தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால், என்னை விட்டுவிடுங்கள். நானும் வாதத்திற்கு தயாரில்லை. என்னிடம் யாரெனும் வந்தால் கூட நீங்கள் தடுத்துவிடலாம், சரியா? உங்கள் விருப்பம் போல செய்யுங்கள். 

-

கேள்வி: ஊருல இப்படித்தான் நிறைய பேரு கிளம்பிட்டாங்க!

என் பதில்: ஆமாம், வேதாத்திரியத்தை பிறருக்கு சொல்லித்தருவதை கடமையாகவே சிலர் வைத்திருக்கிறார்கள். நானெல்லாம் சும்மா!

-

கேள்வி: இதை நம்பி உங்க கிட்ட விளக்கம் பெற்றால் விளங்கின மாதிரிதான்!

என் பதில்: உங்களுக்குத் தனியாக தேடிவந்து சொல்லிதர வேண்டுமென்று எனக்கொன்றும் அக்கறை இல்லை. என்னை தேடி வருபவர்களுக்கு மட்டும் தரவிருக்கிறேன். என்னிடம் வருவது யார் என்று அருட்பேராற்றல் பார்த்துக்கொள்ளும்! நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை!

-

கேள்வி: ஹூம் நல்லா ஏமாத்த ஆரம்பிச்சுட்டாங்கய்யா!

என் பதில்: உங்கள் அனுபவத்தில் அப்படியான நபர்களிடம் சிக்கி சீரழிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்யமுடியும்? என்னிடம் யாரும் ஏமாற மாட்டார்கள். ஒருவேளை ஏமாற்றப்பட்டால் உங்களிடம் வந்துதான் முறையிடுவார்கள்!

-

கேள்வி: இப்படி பணம் செலுத்தி உங்க கிட்ட தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்லை!

என் பதில்: நான் ஓவியன், அதை தொழிலாக கொண்டவன். என்னுடை 60 நிமிடங்களின் மதிப்பு ரூபாய் 2000 (INR) ஆகும்.  ஆனால், இங்கே வேதாத்திரியத்தை தருவதை என் விருப்பமாக மட்டுமே கொண்டுள்ளேன்.  சும்மா கொடுத்தால், அதை உடனே தூரப்போட்டு விடுவீர்கள், உங்களுக்கு ஒரு அக்கறையும் எழாது. இது சும்மா வந்ததுதானே என்ற எண்ணம் தான் உங்களுக்கு இருக்கும். எனவே உங்களுக்கு அவசிமில்லை என்றால், எதற்கு என்னிடம் வந்து இப்படி சொல்லுகிறீர்கள்?

-

கேள்வி: இப்படியெல்லாம் பணத்திற்கு வேதாத்திரியத்தை பரப்பச் சொல்லி வேதாத்திரி மகரிஷி சொன்னாரோ?

என் பதில்: மனிதனுக்கு ஐந்து கடமைகள் இருப்பதாக, வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளார். அதில் உழைப்பதும் பொருளீட்டுவதும், சும்மா இருந்து யாருக்கும் பாரமில்லாமல் வாழவேண்டுமென்பதும் உண்டு. நான் என் வேதாத்திரிய அனுபவத்தை, நான் கற்ற தொழில்நுட்ப அறிவால், உழைத்து உங்களுக்கு தருகிறேன். மேலும் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொள்ள பல்லாயிரம் அன்பர்கள் இருந்தனர். எனக்கு அப்படி யாருமே இல்லையே? நீங்கள் என்னை, என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறீர்களா? நான் சும்மா தருகிறேன். சம்மதமா?!

-

கேள்வி: உங்கள் வாழ்க்கையை நீங்கள் தானே பார்க்கனும், நாங்க எதுக்கு உங்களை தாங்கனும்?!

என் பதில்: சும்மா தந்தா என்ன என்ற கேள்விக்கு பதிலாகத்தான் சொன்னேனே தவிர, என்னை தாங்குங்கள் என்று வேண்டவில்லை. யாரையும் எதிர்பார்த்தும் வேதாத்திரியர் வாழ்வதில்லை. என் உழைப்பிற்கு சிறிய கூலியே இது!

-

கேள்வி: எங்க யோகசாதனை முன்னேற்றத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!

என் பதில்: அருமை, அதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் விரும்பினார். உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்தி மகிழ்கிறேன்.

-

கேள்வி: உங்களுக்கு பணம் கிடைத்துவிடும். இதுனால எங்களுக்கு என்ன லாபம்?

என் பதில்: லாபம் உத்திரவாதம் எல்லாம் தீட்சை பெற்றுக்கொள்ளும் பொழுது கேட்டீர்களா? இது அப்படியல்ல. உங்கள் வாழ்நாளுக்குள் உண்மை அறிய, நான் அறிந்த வேதாத்திரியத்தின் வழியாக, என்னுடைய பணி ஒரு தூண்டுகோல். வேறொன்றுமில்லை. பணத்தை மட்டுமே பார்க்கும் உங்கள் வேதாத்திரிய பயணம் தொடரட்டும்!

-

கேள்வி: எப்படியோ உங்க பொழைப்பும் கொஞ்ச நாள் நல்லா ஓடும். அனுபவிங்க!

என் பதில்: எனக்கு இது அவசியமே இல்லைதான். ஆனால் தெளிந்த அறிவை தருவது, தானாக எழும் ஆர்வம். வேதாத்திரி மகரிஷி, அறிந்த உண்மை உங்களை, விடாது இயக்கும் என்று சொல்லுகிறார். அதுபோலவே, இயற்கை என்னை செலுத்துகிறது. அவனும், அவளும் நான் தானே? அவர்களுக்கு இதை பகிர மாட்டாயா? அவர்கள் துன்பப்படுவதை வேடிக்கை பார்க்கிறாயா? என்று என்னை கேள்வி கேட்கிறது. நான் என்ன செய்யட்டும்? உண்மையிலேயே, உண்மை விளக்கத்தில் சிக்கித்தவிப்பவருக்கு மட்டுமே உதவ விரும்புகிறேன்.

-

கேள்வி: இந்த பணத்தை நாங்கள் ஆழியாறுக்கே அனுப்பி விடுகிறோமே? உங்களுக்கு ஏன் தரவேண்டும்?

என் பதில்: மிகச்சரி, நானும் என் அனுபவத்தை ஆழியாறுக்கே அனுப்பி விடுகிறேனே! எனக்கும் நிம்மதிதான்.

-

கேள்வி: நீங்க சொல்லிக்குடுக்காம போய்ட்டா எங்களுக்கு கிடைக்காம போய்டுமா? நல்ல கதைங்க!

என் பதில்: இறை அப்படியாரையும் கைவிட்டு விடுவதில்லைதான். எப்படியாவது உங்களுக்கு அந்த அனுபவத்தை தரும். வேதாத்திரி மகரிஷி எனக்கு காட்டிய பாதையை, உங்களுக்கு காட்டி, இந்த வழியில் சென்றால் உங்களுக்கு உதவும் என்கிறேன். அடபோய்யா, நானே போய்க்கிறேன் என்கிறீர்கள். சரி பயணியுங்கள், தன்னம்பிக்கையோடு!

-

கேள்வி: ஆஹா உடனே இது உங்க கர்மா, குருமான்னு ஆரம்பிச்சுருவீங்களே?

என் பதில்: உங்கள் கிண்டலுக்கு இங்கே இடமில்லை. அது எப்படிவேண்டுமானலும் இருக்கட்டும். உண்மை குறித்து உங்களுக்கே கவலை இல்லை என்கிறபோது எனக்கேன் கவலை.

-

கேள்வி: பாமர மக்களின்  தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி தத்துவத்திற்கு காசு கேட்பது தவறு என தெரியவில்லையா?

என் பதில்: என் உழைப்பை, அனுபவ அறிவை, பகிர்வுகளை சும்மா பெற உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?! அப்படி தருபவர்களை ஊக்கப்படுத்தவும் மாட்டீர்களா? என்னிடம் கேட்ட இதே கேள்வியை எல்லாபக்கமும் நீங்கள் கேட்க தயாரா?

-

கேள்வி: கடைசியா என்ன சொல்ல வர்றீங்க?

என் பதில்: யாருக்கு விருப்பமோ அவர்களுக்கு நான் உதவுவேன். அந்த உதவிக்கு ஒரு குரு சீடன் என்ற உறவை காப்பது போலத்தான் இந்த நன்கொடை. மற்றவர்களை நான் சிரமப்படுத்த விரும்பவில்லை. 

-

கேள்வி: ஒருவேளை யாருமே வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

என் பதில்: எனக்கொன்றும் உடனடியாக யாரையும் தன்னையறிதலுக்கு உயர்த்த வேண்டும் என்ற நிலை இல்லை. அந்த இயற்கை அமைப்பை, நீங்களோ, நானோ வேகப்படுத்தவும் முடியாது. ஆனால், பிறவிக்கடன் தீர்க்காமல், தன்னை அறியாமல், எது இந்த இயற்கை என்பதை அறியாமல், இந்த உலகைவிட்டு போகும் நீங்கள்தான் கவலைப்படவேண்டும். தன்னிலையறிந்த ஒருவருக்கு ஒரு இழப்பும் இல்லை. உங்களுக்கு இறையாற்றல் இன்னொரு வாய்ப்பு உங்கள், மகன், மகள் வழியாக தரக்கூடும். எனவே உங்களுக்கும் கவலையில்லை!

-

கேள்வி: கடைசியா ஒரு கேள்வி. சும்மா கிடைக்குமா?

என் பதில்: இல்லை!

-

அன்பர்களே, இத்தனை கேள்விகளில் ஏதேனும் ஒன்றாவது உங்கள் கேள்வியாக இருக்கக்கூடும். இத்தனை பதில்கள் சொல்லியும், உங்களுக்கு மீண்டும் ஏதேனும் கேள்விகள் எழுமானால், அதை பின்னூட்டத்தில் கேட்கலாம். அதற்கும் பதில் தர தயாராக உள்ளேன். 

அடுத்தும் ஒரு கேள்வியும் பதிலும் பதிவு உண்டு, அதையும் படித்துப்பார்க்க உங்களை வரவேற்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Link for 3rd part: Sereveyo Part3

Sereveyo: Center for Self-realization by Vethathiriya Yoga 01



நான் யார்? என்ற தன்னையறியும் சேவை வழங்க தயாராகிறேன் 01

பிறப்பின் நோக்கம்?!

இந்த உலகில் நான் பிறக்கும் பொழுது எனக்கு என்ன நோக்கம் இருந்தது என்று எனக்குத்தெரியாது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், 

என்னையறிவே நான் உலகில் வந்தேன்,
வந்தபின் எனைமறந்தேன் எந்தன்வினை மறந்தேன்’ 

என்று சொன்னது போல எனக்கு விளக்கமெல்லாம் கிடைக்கவில்லை. எனினும், ஏதோ என் முன்னோர்களின் விருப்பமும் ஆசியும் என்னை இயக்கியது எனலாம். பள்ளிக்காலங்களிலேயே வீட்டில் இருந்த, என் தாத்தாவின் நூல்களான, பழைய யோக நூல்கள், ஜாதக நூல்கள், பகவத்கீதை விளக்கம் இப்படி கொஞ்சமாக் புரட்டிப்பார்திருக்கிறேன். அகத்தியர், திருமூலர், இன்னும் பல சித்தர்கள், பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரும், சாரதாதேவி அம்மையாரும், விவேகாநந்தரும், காஞ்சி பெரியவரும் அப்போதே அறிமுகமாகிவிட்டார்கள். ரமண மகரிசியும் அவ்வாறே. உயர்நிலை பள்ளி படிக்கும்பொழுது ஓஷோ, சிவானந்தா, சின்மயானந்தா, பாபா, இன்னும் பலரும் கூடவே ஜக்கி வாசுதேவ் போன்ற சிலரும் பத்திரிக்கைகள் வாயிலாக அறிமுகமானார்கள். ஆனால் வேதாத்திரி மகரிஷி, எங்கள் பகுதியில் இருந்த நூலகம் வழியாக அறிமுகமானார்

தீட்சையும் பயணமும்

எனினும், உடனடியாக இவர்தான் பொருந்தமானவர் என்ற முடிவெல்லம் இல்லை. அவரின் சங்கற்பம் என்ற Autosuggestion என்னை கவர்ந்தது. என்றாலும் சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? என்ற கேள்வியும், நேரில் பார்த்தால் ஏதேனும் விளக்கம் கிடைக்குமா என்ற எண்ணமும் வந்தது. சென்னையில் இருக்கும் சங்கத்தில், எப்படி நான் போய் எப்படி இணைவது? என்வயதில் அங்கே ஏற்றுக்கொள்வார்களா? வீடும் விடாதே? என்ற குழப்பம் எழுந்தது. ஆனால், சில நாட்களுக்குள்ளாக என் பள்ளித்தோழன் வழியாக, இங்கேயே தவ மையம் இருக்கிறது என்று அறிந்து, இதை ஏன் முன்னமே என்னிடம் சொல்லவில்லை என்ற சிறிய கோபத்தோடு, என் பதினெட்டு வயதில் (ஆண்டு 1988), என் வீட்டில் பெற்றோர், உடன்பிறந்தோர், பிறரிடமோ கலந்து ஆலோசிக்காமல், கருத்து கேட்காமல், நானே சுயமாக முடிவெடுத்து, வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆக்கினை தீட்சையும் பெற்றுக் கொண்டேன்.

தொடர்ந்த மனவளக்கலை பயணத்தில், தவம், உடற்பயிற்சி, காயகல்பம், அகத்தாய்வு முடித்து ஆண்டு 1991ல் ஆழியாரில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் நடத்திய முன்று நாள் ஆசிரியர்/ அருள்நிதி கலந்து கொண்டு பட்டயம் பெற்றேன். நான் ஓவியன் என்பதால், அங்கேயே மகரிஷி அவர்களை வரைந்து, நிகழ்வின் இறுதியில் அவரிடம் ஆசீ வாங்கும் பொழுது, ஓவியத்தைக் காட்டி பாராட்டு பெற்றேன். எனது மன்றத்தில் துரியம் வரை தீட்சை வழங்கும் ஆசிரியராக சேவையில் இருந்தேன் எனினும், தன்னிலை விளக்கத்தை, உண்மையை உணராமல் பிறருக்கு அதைச் சொல்லித்தர எனக்கு விருப்பம் எழவில்லை. அது ஒரு குறையாக இருந்துகொண்டே இருந்தது. 1993ம் ஆண்டில், மகரிஷி அவர்களை மறுபடி சந்திக்கும் வாய்ப்பு வந்தது. இந்த முறை, நீர்வண்ண ஓவியம் வரைந்து, அவரிடமே காட்டி, பாராட்டையும் பெற்று, அவருடைய கையெழுத்தையும் அதில் பெற்றுக் கொண்டேன். இந்த விபரங்களை நானே பேசி குரல் பதிவாக, வேதாத்திரிய சானலில் தந்துள்ளேன்.

உண்மை விளக்கம்!

அதற்குப்பிறகு மன்றத்தில் இணைந்து சேவை தருவதில் எனக்கு பின்னடைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த நிலைகளான, மன்ற பொறுப்பாசிரியர், பேராசியர் என்ற நிலையில் எனக்கு ஆர்வமும் இல்லை. எதற்கு வந்தேனோ, அதை பெற்றுக்கொண்டேன். போதுமே? இனி நாம் தேடிக்கண்டடைய வேண்டியதுதான் என்ற முடிவில், மன்றத்திற்கு போகவில்லையே தவிர, என்னுடைய ஆர்வமும், முயற்சியும் விட்டுவிடவில்லை. பெரும்பாலும் துரியத்தில் நிலைத்திருப்பது தானாகவே நிகழும் அளவிற்கு, தவத்தில் நான் ஆர்வமானேன். 2001 ம் ஆண்டு எனக்கு திருமணம் நிகழ்ந்தது. அதன்பிறகே, திருச்சிராப்பள்ளியில் வேலை நிமித்தமாக குடிபுகுந்தேன். இங்கும் கூட நான் எந்த மன்றத்திலும் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் முழுதாக என்னை வேதாத்திரியத்தில் ஈடுபடும்படிச் செய்ய எனக்கு ஒர் விபத்து நடந்தது.

2016ல் எனது இருசக்கர வாகனத்தின் பயணிக்கையில், ஒரு டிப்பர் லாரியில் இடித்து கீழே விழுந்து மூர்ச்சையானேன். வலதுகை மேல் எலும்பு உடைந்து, கட்டுபோட்டு 45 நாள் வீட்டில் இருந்திட, எனக்கு வேதாத்திரி மகரிஷியே துணை என்றாகி விட்டது. அடிக்கடி அவர் வழங்கிய தத்துவ விளக்கத்தை கேட்பதும், ஞானமும் வாழ்வும் நூல் படிப்பதும், ஞானக்களஞ்சிய கவிகள் படிப்பதும் ஆராய்வதும் என் நேரத்தை எடுத்துக் கொண்டன. உடலும் நானும் நல்ல நிலைக்கு வந்தபிறகும் அதை இன்னும் அதிகமாக தொடர்ந்தேன். ஆராய்ந்தேன். 2017ம் ஆண்டு இறுதியில் வெட்டவெளி தத்துவம் புரிந்தது. மேலும் தொடர, 2018ல் இறையுணர்வு பெற்றேன். நிலைப்பேற்று நிலையிலிருந்து நிறைப்பேறு நிலை அடைந்தேன் எனலாம். நான் அடைந்தேன் என்பதை விடவும், அது என்னை ஏற்றுக்கொண்டது என்பதே சரியாகும்.

கிடைத்த மாற்றம்!

அந்த விளக்கம் நிலை தந்த ஊக்கத்தில், கவிதைகள் எனக்குள் எழுந்தன. எழுதிய கவிகள், வேதாத்திரி மகரிஷியின் கவிதைப்போலவே அமைந்ததைக் கண்டேன். இதை படித்த என் நண்பர்களும், பிறரும் கூட உறுதி செய்தார்கள். எனக்கு என்மேல் நம்பிக்கை வர, வேதாத்திரிய சானல் என்ற, YouTube காணொளி தளத்தை ஆரம்பித்து, பதிவுகள் செய்யலானேன். என் பள்ளித்தோழர், சக வேதாத்திரி பயணியும் என்னோடு இணைந்து கொண்டார். இன்றுவரை பதிவுகளை தொடர்கிறோம். மேலும் தினமும் வேதாத்திரி கவிதைகள் எழுதி அதை 7 தலைப்பிலான நூலாகவும் வெளியிட்டுவிட்டேன். இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவைகளும் நூலாக வெளி வரும்.

சேவையில்!

தினமும் YouTubeல் Shorts வழியாகவும் வேதாத்திரிய கருத்துக்களை தந்துகொண்டு, நிறைய அன்பர்களை, வேதாத்திரிய சானல் தொடர்பாளர்களாக பெற்றிருக்கிறேன். பெற்றுக்கொண்டும் வருகிறேன். பெரும்பாலும் வேதாத்திரி மகரிஷி சொன்னதை, வார்த்தை மாறாமல் அப்படியே சொல்லாமல், எனக்கு என்ன புரிந்ததோ, நான் என்ன அனுபவத்தை பெற்றேனோ அதைத்தான் என்னுடைய பதிவாக தருகிறேன். இதனால் நான் வேதாத்திரியத்தில் தனிப்பட்டு தெரிவதாக சிலர் சொல்லியுள்ளார்கள். உண்மையும் அதுவே. மேலும் நான் என்னுடைய விருப்பத்தின் பெயரில்தான், வேதாத்திரியத்தை பிறருக்கு கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளேன். ஆம் தனிமனிதனாகவும், சில நண்பர்களின் துணையோடும். விரைவில் தனியான அமைப்பு ஒன்றை உருவாக்கி உறுப்பினர்களை இணைக்கும் திட்டமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

விபத்தில் கிடைத்த முழுமை அனுபவம்!

இதற்கிடையில் முழுமையாக என்னை அறிந்துகொள்ளும் வாய்ப்பும், என்னில் இறை என்று வேதாத்திரி மகரிஷி எடுத்துக்காட்டிய நிகழ்வும், இன்னொரு விபத்து வழியாக, ஆம், 2023ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, மீண்டும் இருசக்கர வாகன பயணத்தில், பச்சை விளக்கு எரிந்த சிக்னலில் இருந்து கிளம்பும்பொழுது, யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனர் இடித்து என்னை தள்ளிவிட்டு விரைதோடி விட்டார் என்று அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள் என்று என் மைத்துனர் 2 நாள் கழித்து என்னிடம் சொன்னார்.

என்ன நடந்தது?. அந்த விபத்தில்,

மறுபடியும் நான் மூர்ச்சையானேன். அங்கிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து, என்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் அங்கே காத்திருக்கும் பொறுமை தாளாது, CSI மிஷன் மருத்துவமனைக்கு என் வீட்டார் அழைத்துவந்து விட்டார்கள். இங்கே என்னுடைய இடது காலர் எலும்பு உடைந்து சேரவேண்டிய கட்டாயமாகிவிட்டது. சுவாரஸ்யமாக, விபத்துக்குப் பிறகு, மயக்கம் தெளிந்த பிறகு  மருத்துவமனையில், 15 மணி நேரம் நான் எப்போதும் போல இருந்திருக்கிறேன், என் வீட்டாரை கைபேசி வழியாக மருத்துவமனைக்கு வரவழைத்ததும் நானே. ஆனால், இன்றுவரை அந்த 15 மணி நேரம் என்ன நிகழ்ந்தது என்பதும், எப்படி அந்த விபத்து நடந்தது என்றும் என் ஞாபக அடுக்குகளில் பதிவாகவில்லை, யோசித்தாலும் கிடைக்கவில்லை. அதுகுறித்து எனக்கு கவலையில்லை, இது எனக்கு மிக நல்ல ஒரு அனுபவம், என் அறிவுக்குக் கிடைத்த பாடமும் கூட, யாருக்கு கிடைக்கும் இப்படியான ஒரு சந்தர்ப்பம்? அந்த பாடமும் என் விளக்கமும், பின்னாளில் தனி கட்டுரையாக தர விரும்புகிறேன்

இது, இந்த விபத்து மார்ச் 4ம் தேதி நிகழ்ந்தது அல்லவா, 8ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீட்டிக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டில் அன்று நான் முடிவெடுத்தேன். வேதாத்திரியத்தை கொண்டுசெல்வதில் நேரடியான முறையும் வேண்டும் என்றும், அதற்கு இணையவழி வகுப்பும் தேவை என்றும் திட்டமிட்டேன். அதன்படியே நானே அதை வடிவமைத்து முழுமையும் செய்தேன்.

அந்த அறிவுப்பு இதுவே!

🔎 click the image and see it on big view



இந்த
1) இணைய வழி நேரடி கருத்தரங்கு, கேள்வி பதில் சேவையோடு,
2) வேதாத்திரிய சானலிலும், தன்னிலை விளக்கத்திற்கு உதவும் ஆய்வுகள் காணொளி சேவையும் உண்டு.

இந்த இரண்டு சேவைகளிலும் உங்களால் பெறப்படும் நன்கொடைகள், உங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வேதாத்திரிய ஆய்வுகளுக்கே பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நீண்ட நாட்களுக்கு உதவும் வகையில் தொடர்ச்சியான சேவை கிடைக்கும்! 

இதன்படி நான் தீட்சையும்,  மற்ற பயிற்சிகளும் வழங்குவதில்லை. ஆனால் கற்றுக்கொண்டு வந்தவர்களுக்கு, எப்படி தன்னை அறிவதில் உயரலாம்? எவ்வகையில் விழிப்புணர்வு பெறலாம்? இறையுணர்வை எப்படி உணரலாம்? பேரறறிவோடு எப்படி எப்போதும் கலந்திருக்கலாம்? என்ற விளக்கங்களை, சந்தேகங்களை தீர்க்கும் பதில்களை என் அனுபவ அறிவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘உணர்ந்து விட்டீர்கள் என்றால் அது உங்களை சும்மா இருக்க விடாது’ என்பதை நான் உண்மை என்றே கருதுகிறேன்.

இதன் தொடர்ச்சியாக, சில கேள்வி பதில்கள் பகுதி உண்டு. அதையும் படிக்க உங்கள் வரவேற்கிறேன். நன்றி. 

வாழ்க வளமுடன்.

-

Link for 2nd part: Sereveyo Part 2