Home » yoga and bhakti » Everyone in the world worships a different God. But who or who is the true God? How to understand the truth? Give an explanation.
உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர் என்ற கருத்து சரிதான். பல்வேறு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் இருந்து வருகின்றனர். நிச்சயமாக அதை குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. சொன்னால் மதம் முன்னே வந்து நிற்கும். அப்போது உண்மை மறைந்துவிடும்.
கடவுள் என்பது ‘கடந்து உள்ளே’ என்ற வினைச்சொல்லின் விளக்கமாகும். ஒரு மனிதன் தனக்குள்ளே கடந்து உள்ளே கவனித்தால், தன்னை விட மதிப்பு வாய்ந்த, எல்லாவற்றிக்கும் மூலமான, தெய்வீகத்தை உணர்ந்து அறியலாம் என்பதுதான், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முன்னோர்களின் வாக்கும், வழிமுறைகளும் ஆகும்.
ஒரு பொருள் என்பதைக் கடந்து, எப்போதும் இருக்கும் பொருள், என்பதை மெய்ப்பொருள் என்று சொல்லுவது வழக்கு. ஏனென்றால், நாம் இந்த உலகில் காணும் எல்லாமே, பொருள் நிலையில் இருந்தாலும், மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் கூட, சிறு அணுவாக இருந்து சிசுவாக, குழந்தையாக, சிறுவராக, இளைஞராக, மனிதராக மாறிக்கொண்டே இருக்கிறோம் அல்லவா? இந்த வளர்ச்சியில், ஒருகட்டத்தில் இல்லாமலும் போகிறோம். ஆனால், இந்த உண்மை உணரா மயக்கத்தில், நாமும், மற்ற எல்லாமும், எப்போதும் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம்.
ஆனால், மெய்ப்பொருள் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தன்மையை கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பம், நிலை, முடிவு அறியாதும் இருக்கிறோம். அதனால்தான் அத்தன்மையை, இறை என்று உயர்ந்த மதிப்பு கொடுத்து வணங்குகிறோம். அந்த உண்மைதான், பல்வேறு மனிதர்களிடத்தில், சிக்கிவிட்டது.
சிவம் என்பது உலக உயிர்களுக்கு பொதுவான வார்த்தையாகும். இதில் எந்தவிட பாகுபாடும் வருவதற்கில்லை. சிவம் என்பதுதான் பின்னாளில் பல்வேறு மாற்றங்களை கொண்டது. அந்த மாற்றங்களின் வழியாக, உண்மை மறைந்து அதில் பொய்யும் கலந்துவிட்டது. சிவத்திற்கு பதிலாக வேறு என்னென்னமோ வந்து மக்களை குழப்பியும்விட்டது, பிரித்தும்விட்டது.
உலகில் உள்ள எல்லா மனிதர்களும், யோகத்தின் வழியாக, தன்னையறிந்தால், இந்த உண்மை விளங்கிவிடும். வேறெதையும் எங்கே? எங்கே? என்று தேடவேண்டியதில்லை. ஆனால் அவர்களை ஏதோ தடுக்கிறது.
மெய்பொருள் என்பது என்ன? என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள், இங்கே விளக்குகிறார். அறிந்து கொள்வோம்.
மெய்ப்பொருளே சிவம் என்பதை உணர்வோம்! Let's Perceive the Absolute Matter is Shivam!
வாழ்க வளமுடன்
-