CJ for You: answer

answer

Showing posts with label answer. Show all posts
Showing posts with label answer. Show all posts

The truth and answer, who raising the question 'where is the God?'


கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

'கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக்  கொண்டிருக்கிறார்கள்.  அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான்.  ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.   வேறுவேறாக இல்லை,  இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான்.'  

'ஆனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக,  இச்சையின் காரணமாக,  பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது.'  

'இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.'  

'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா?  எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.'

'பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ,  அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும்.  ஆகவே,  ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால்,  இறைவனைக் காணலாம்.'

'ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால்,  அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக்  கொண்டு தான் இருப்போம்.  அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.'  

'ஆனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால்,  ஒரு பளுவும் இல்லை.  ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும்.  அங்கே இறைவன் இருப்பான்.'

'ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்படுத்தப்பட்டால் நிறைமனம்.'

'மனிதன் தன்முனைப்பு அறுத்தாலே போதும்; அவன் 

        இறைநிலை என்கின்ற பெரிய ஆற்றலோடு தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்.'

        'தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று - இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது.'

-

இந்த கவிகள் கூடுதலாக விளக்கங்களை தரும்.

'ஓர்மை நிலைப்பயிற்சி'

நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள் 

   அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே, 

ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது

   நின்ற நிலையே அது.  நீயறி., நினைவை நிறுத்தி.

(ஞானக்களஞ்சியம் கவி: 1486)


'நிறை நிலையில் அமைதி'

எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம் 

   இரவு பகல், சிறிது பெரிது,  ஆண்பெண், கீழ் மேல்,

நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,

   நட்டம்லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;

வல்லமையும் அதன்முழுமை நிலையாய் உள்ள 

   வரைகடந்த மெய்ப்பொருளாம்., அகத்துணர்ந்தால் 

அல்லலற்று அறிவு விழித்தும், விரிந்தும், 

   அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.

(ஞானக்களஞ்சியம் கவி: 661)

-

'வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!'

Why they always replied as practice meditation it is the solution


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யாரிடம் எந்த சந்தேகம் கேட்டாலும், பொதுவான பதிலாக ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்கிறார்களே? 


பதில்:

அந்த பதிலிலும் ஓர் உண்மை இருக்கிறதுதானே?! என்றாலும் கூட, கேட்கிற அன்பரின் சந்தேகம் எத்தகையது என்பதை, கேட்பவருடைய பார்வையிலேயே பார்க்க வேண்டியதும் அவசியம். ஒரு சிலருக்கு, மூன்றாம் பார்வைகோணம் கிடைப்பதில்லை அல்லது பழகுவதில்லை. இதெல்லாம் எதற்கு என்று தள்ளி வைத்துவிடுவார்கள். தனக்கு புரிந்ததுபோலவே, இன்னொரு நபருக்கும் புரிந்திருக்கும் என்பதும், புரியவேண்டும் என்பதும் நிகழ்வதில்லையே!?

கருமையம், மனம் என்பது எல்லா மனிதருக்கும் பொதுவானது என்றாலும், அதில் இருக்கின்ற களங்களும், பதிவுகளும், அனுபவங்களும் வேறுவேறானவை தானே? அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதனால், அவரவர் தனித்தனியான எண்ணம், சொல், செயல்பாடு என்றுதானே இருப்பார்கள்?! இதுபொதுவானது!

ஆனால், ஏன் தவம் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது என்றால், மனம் இயல்பு நடவடிக்கைகளில் இருந்தும், வாழ்க்கைச்சூழலுகான பரபரப்பில் இருந்தும் கொஞ்சமாக விலகி, தன்னுடைய மூலம் நோக்கி நகரத்துவங்கும். மனதின் அலைச்சுழல் ஆல்பா என்ற தூக்கத்திலும் விழிப்பு நிலை என்ற அலைநீளத்தில், இயங்கிட ஆரம்பமாகும். அந்த நிலையில், மனமே தன்னுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, காட்சிவடிவமாக காணத்துவங்க நல்ல வாய்ப்பு கிடைத்திடும். அதனால்தான், ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

அதாவது, உங்களுக்கான தீர்வு உங்களிடமே இருக்கிறது என்பதுதான் இதன் நோக்கமாக இருக்கிறதே தவிர வேறெந்த காரணமும் இதில் இல்லை! வேதாத்திரியத்தில் அப்படியான குறை காணவும் அவசியமில்லை.

வாழ்க வளமுடன்.

How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.