கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.
பதில்:
யோகத்தில் இணைந்து தீட்சை பெறாவிட்டாலும் கூட, தனிநபராகவே இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து நன்மையை பெறலாம் என்பது, இத்தவத்தின் சிறப்பாகும். இந்த பிரபஞ்சமும் உலகமும் உண்டாவதற்கு காரணமான பஞ்ச பூத தோற்றங்களை வணங்குவதும், அதன் அருளைப் பெறுவதும், நாம் வாழும் இந்த பூமி உட்பட, சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும், நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றையும் வணங்கி அருளைப்பெறுவதும்தான் இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகும்.
பரிகாரம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருந்தாலும், அந்த பரிகாரம் செய்வதால் எதும் மாறிவிடுவதில்லை. அது அகன்றுவிடுவதும் இல்லை. தீர்மானிக்கப்பட்ட ஒன்று, நிச்சயிக்கப்பட்ட ஒன்று நிகழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வில்லில் ஏற்றப்பட்ட அம்பு, பின்னோக்கி இழுக்கப்பட்டால், அது பாய்ந்துதானே தீரும்?! அதை நாம் நிறுத்திட முடியுமா? எனவே பரிகாரம் செய்தாலும்கூட, அது நிகழந்தே தீரும் என்பது உறுதி. எனினும் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய திடம் கிடைத்துவிடும்.
ஒரு கோவிலுக்குச் சென்று, பூஜை, பரிகாரம், வழிபாடு, நவகிரகங்களை சுற்றிவருதல் ஆகியன எப்படி உங்களுக்கு திருப்தியும், பலனும் அளிக்குமோ, அதைவிடவும் நிறைவான முழுமையான திருப்தியை, பலனை, ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ செய்வதால் பெறலாம். ஆனால், ஏதோ ஒருநாள் செய்துவிட்டால் போதும் என்று நினைத்துவிட முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து செய்துவர வேண்டும். பொதுவாக வாரத்தில் மூன்று நாள் காலையிலோ, மாலையிலோ செய்துவரலாம்.
அவசர கோலத்தில் இல்லாமல், பொறுமையாக, அதற்குரிய நேரம் கொடுத்து, தவம் இயற்றிவருதல் சிறப்பு. நீங்களே வார்த்தைகளாக சொல்லியும் தவம் இயற்றலாம். காணொளி, ஒலி வழியாகவும் கேட்டு தவம் இயற்றலாம். எப்படியாயினும், தவத்தில் நல்ல ஓர்மை நிலை இருக்கவேண்டும். மனம் அதில் ஒன்றி இருப்பது அவசியம்.
இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ வழியாக, விண், காற்று, வெப்பம், நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களோடு மனதை இணைத்து அதன் நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். அதுபோலவே, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் மீது மனதை ஒன்றிணைத்து, நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ நம் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் சிறப்பை தரக்கூடியதவம். நிச்சயமாகவே நம் ஜாதகத்தில் காணப்படுகின்ற ‘கோளாறுகளுக்கு’ தீர்வாகவே அமையும் என்பது உறுதி. யோகத்தில் தீட்சை பெற்று, இத்தவம் இயற்றும்பொழுது, கூடுதலான ஒரு விளக்கமும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதும் உண்மை.
வாழ்க வளமுடன்
-