The truth and answer, who raising the question 'where is the God?'
கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
'கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான். ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வேறுவேறாக இல்லை, இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான்.'
'ஆனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக, இச்சையின் காரணமாக, பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது.'
'இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.'
'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா? எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.'
'பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ, அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும். ஆகவே, ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால், இறைவனைக் காணலாம்.'
'ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால், அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக் கொண்டு தான் இருப்போம். அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.'
'ஆனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால், ஒரு பளுவும் இல்லை. ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும். அங்கே இறைவன் இருப்பான்.'
'ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்படுத்தப்பட்டால் நிறைமனம்.'
'மனிதன் தன்முனைப்பு அறுத்தாலே போதும்; அவன்
இறைநிலை என்கின்ற பெரிய ஆற்றலோடு தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்.'
'தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று - இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது.'
-
இந்த கவிகள் கூடுதலாக விளக்கங்களை தரும்.
'ஓர்மை நிலைப்பயிற்சி'
நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள்
அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே,
ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது
நின்ற நிலையே அது. நீயறி., நினைவை நிறுத்தி.
(ஞானக்களஞ்சியம் கவி: 1486)
'நிறை நிலையில் அமைதி'
எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்
இரவு பகல், சிறிது பெரிது, ஆண்பெண், கீழ் மேல்,
நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,
நட்டம்லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;
வல்லமையும் அதன்முழுமை நிலையாய் உள்ள
வரைகடந்த மெய்ப்பொருளாம்., அகத்துணர்ந்தால்
அல்லலற்று அறிவு விழித்தும், விரிந்தும்,
அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 661)
-
'வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!'