CJ for You: possible

possible

Showing posts with label possible. Show all posts
Showing posts with label possible. Show all posts

Always we are suffering to find happiness in life, then how will help yoga on that?


வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


பதில்:

அப்படியானால், உங்கள் யோகப்பயணத்தின் நோக்கம் என்னவென்றால், தேடுகின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது அல்லவா? உண்மையாக இப்படி யாரேனும் உங்களுக்குச் சொன்னார்களா? நீங்களாகவே அப்படியாக நினைத்துக் கொண்டீர்களா? என்பதை யோசிக்கிறேன். பெரும்பாலான யோக அமைப்புக்கள், யோகம் செய்தால் உண்மை விளக்கம் பெறலாம் என்றுதான் சொல்லுவார்கள். அந்த உண்மை விளக்கம், பலபடிகளில் உயர்வை அளித்து, ‘நான் யார்?’ என்ற கேள்விக்கான விடையை அளித்து, நம்முடைய பிறவி நோக்கத்தையும், இதுநாள்வரை நாம் பெற்றுவந்த பிறவிக்கடனையும் தீர்த்து நம்மை முழுமையாக்கும் என்பதுதான் உண்மை.

இந்த யோகபயணத்தில், அவரவர்களின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, விளக்கம் என்ற வகையில்தான் முன்னேற்றமும் கிடைக்கும். அந்த கால அளவு முறை என்பதை நாம், தீர்மானிக்க முடியாது. ஒருவருக்கு உடனே கிடைக்கலாம், இன்னொருவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். மற்றொருவருக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால், யோகத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உண்மை எப்படியாவது கிடைத்துவிடுகிறது என்பதுதான் நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

யோகத்தில் இணைந்து அதன்வழியாக, விளக்கம்பெற்று பயிற்சியும், தியானமும் செய்துவந்தால், மகிழ்ச்சியும் சந்தோஷமும் எப்படி கிடைக்கும்? என்ற கேள்வியும், இதுவரை யோகம் செய்து வந்தும், அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கவில்லையே? என்ற மற்றொரு கேள்வியும், உங்களுடைய கேள்வியில் இருக்கிறது எனலாம்.

ஒரு உண்மை விளக்கத்தை, இன்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? மகிழ்ச்சியும் சந்தோஷமும் வாழ்க்கையில் தேடிப்பெற வேண்டிய அவசியமே இல்லை. அது ஏற்கனவே நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நம்மிடம் ஏற்கனவே நிலைபெற்று இருக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் பலவித தடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த தடைகளை அகற்றி, நமக்குள்ளும், நம்மைச்சுற்றிலும், இந்த உலகிலும், இந்த பிரபஞ்ச அளவிலும், எங்கும் நிறைந்துள்ள ‘மகிழ்ச்சியும் சந்தோஷமும்’ இருக்கும் இடத்திலிருந்தே பெறுவதுதான் யோகத்தின் முக்கிய நோக்கமும் ஆகும்.

‘அதுதானய்யா, கிடைக்கவில்லையே?’ என்று புலம்புவதில் அர்த்தமில்லை. உங்கள் யோகப்பயணத்தை, எந்த தேடுதலும், நோக்கமும் இன்றி இயல்பாக தொடருங்கள். உங்களுக்கான வெற்றி இலக்கு நிச்சயமாக கிடைக்கும். அதில் சந்தேகமில்லை. வாய்ப்புக் கிடைத்தால், என்னை நேரில் சந்தித்து உண்மையறியுங்கள். உங்கள் ஆசிரியடமும் கேட்டுப் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்

-


Why do I feel like suffering from yoga and not being as happy as others?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!


பதில்:

நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.

தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள். 

யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.

யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே!  தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.

மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!

வாழ்க வளமுடன்.