Always we are suffering to find happiness in life, then how will help yoga on that?
வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?
பதில்:
அப்படியானால், உங்கள் யோகப்பயணத்தின் நோக்கம் என்னவென்றால், தேடுகின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது அல்லவா? உண்மையாக இப்படி யாரேனும் உங்களுக்குச் சொன்னார்களா? நீங்களாகவே அப்படியாக நினைத்துக் கொண்டீர்களா? என்பதை யோசிக்கிறேன். பெரும்பாலான யோக அமைப்புக்கள், யோகம் செய்தால் உண்மை விளக்கம் பெறலாம் என்றுதான் சொல்லுவார்கள். அந்த உண்மை விளக்கம், பலபடிகளில் உயர்வை அளித்து, ‘நான் யார்?’ என்ற கேள்விக்கான விடையை அளித்து, நம்முடைய பிறவி நோக்கத்தையும், இதுநாள்வரை நாம் பெற்றுவந்த பிறவிக்கடனையும் தீர்த்து நம்மை முழுமையாக்கும் என்பதுதான் உண்மை.
இந்த யோகபயணத்தில், அவரவர்களின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, விளக்கம் என்ற வகையில்தான் முன்னேற்றமும் கிடைக்கும். அந்த கால அளவு முறை என்பதை நாம், தீர்மானிக்க முடியாது. ஒருவருக்கு உடனே கிடைக்கலாம், இன்னொருவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். மற்றொருவருக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், யோகத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உண்மை எப்படியாவது கிடைத்துவிடுகிறது என்பதுதான் நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
யோகத்தில் இணைந்து அதன்வழியாக, விளக்கம்பெற்று பயிற்சியும், தியானமும் செய்துவந்தால், மகிழ்ச்சியும் சந்தோஷமும் எப்படி கிடைக்கும்? என்ற கேள்வியும், இதுவரை யோகம் செய்து வந்தும், அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கவில்லையே? என்ற மற்றொரு கேள்வியும், உங்களுடைய கேள்வியில் இருக்கிறது எனலாம்.
ஒரு உண்மை விளக்கத்தை, இன்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? மகிழ்ச்சியும் சந்தோஷமும் வாழ்க்கையில் தேடிப்பெற வேண்டிய அவசியமே இல்லை. அது ஏற்கனவே நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நம்மிடம் ஏற்கனவே நிலைபெற்று இருக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் பலவித தடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த தடைகளை அகற்றி, நமக்குள்ளும், நம்மைச்சுற்றிலும், இந்த உலகிலும், இந்த பிரபஞ்ச அளவிலும், எங்கும் நிறைந்துள்ள ‘மகிழ்ச்சியும் சந்தோஷமும்’ இருக்கும் இடத்திலிருந்தே பெறுவதுதான் யோகத்தின் முக்கிய நோக்கமும் ஆகும்.
‘அதுதானய்யா, கிடைக்கவில்லையே?’ என்று புலம்புவதில் அர்த்தமில்லை. உங்கள் யோகப்பயணத்தை, எந்த தேடுதலும், நோக்கமும் இன்றி இயல்பாக தொடருங்கள். உங்களுக்கான வெற்றி இலக்கு நிச்சயமாக கிடைக்கும். அதில் சந்தேகமில்லை. வாய்ப்புக் கிடைத்தால், என்னை நேரில் சந்தித்து உண்மையறியுங்கள். உங்கள் ஆசிரியடமும் கேட்டுப் பெறுங்கள்.
வாழ்க வளமுடன்
-