Why do I feel like suffering from yoga and not being as happy as others?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!
பதில்:
நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.
தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள்.
யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.
யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே! தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.
மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!
வாழ்க வளமுடன்.