CJ for You: kayakalpa yoga

kayakalpa yoga

Showing posts with label kayakalpa yoga. Show all posts
Showing posts with label kayakalpa yoga. Show all posts

Truth and Secret Explanation of Vethathiriya Kayakalpa Yoga Exercise by Vethathiri Maharishi


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?


பதில்: 

இதோ, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமில்லாமல், உலகில் உள்ள எந்த மனிதருக்கும், வளரும் பருவம் வந்த அனைவருமே கற்று பயன்பெற்று, உலகில் நிறைவாக, தன்னையறிந்து, முழுமைபெற, வாழ்நாளை சிறப்பிக்க, இப்பயிற்சியின் விளக்கம் தருகிறார். முற்றிலும், நோக்கம் திசைமாறி, சிதறிக்கிடந்த, சித்தர்களின் ‘காயகல்ப யோக கலையை’ ஒருங்கிணைத்து, திருத்தி அமைத்து, எல்லோருக்கும் பயனுள்ள வகையில் நமக்குத் தந்த, வேதாத்திரி மகரிஷிக்கு நம் வணக்கத்தை செலுத்துவோம். வாழ்க வளமுடன்.

        வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ’மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி - கற்றுணர்ந்து பயன் கொள்வீர்! விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும்.

அது நாம் உண்ணும் உணவு.

1. ரசம்

2. ரத்தம்

3. சதை

4. கொழுப்பு 

5. எலும்பு

6. மஜ்ஜை மற்றும்

7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். 

இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. 

        மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். 

இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்.  எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக,

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் (வேதாத்திரி மகரிஷியின் வார்த்தையில்) ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. 

இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.’ என்பதாக விரிவான விளக்கங்களை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்.

வாழ்க வளமுடன்.

-

How to correct the disturbances while practicing Kayakalpa Yoga?


காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?


பதில்:

வேதாத்திரிய காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகள், அதை புரிந்துகொள்ளாமல் செய்வதால்தான் வருகிறது. முக்கியமாக, இந்த பயிற்சியை யாரும் யாருக்கும் செய்துகாட்டி விளக்கமுடியாது. உள்முகமாக, உள்ளுணர்வாக செய்யக்கூடியது. ஒருவர் இந்த பயிற்சியை செய்கிறார் என்பதை, வெளிப்படையாக அறிந்துகொள்ளவும் முடியாது. பயிற்சியாளர், ஓஜஸ் மூச்சு வெளியிடும் பொழுதுதான், இவர் ஏதோ செய்கிறார் என்று பிறர் தெரிந்து கொள்வார்.

இதன் காரணமாகவே, ஒரு ஆசிரியர் சொல்லித்தருவதை புரிந்துகொள்வது, பயிற்சி கற்றுக்கொள்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், பயிற்சி எங்கே கற்றுக்கொள்கிறீர்களோ, அந்த இடத்திலேயே, அந்த ஆசிரியரிடமே, உங்கள் சந்தேகத்தை கேட்டு தெளிவு செய்துகொள்வதுதான் மிகச்சிறந்த வழி ஆகும். ஏதோ சொன்னார், எனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்றபடி கடந்துவிட்டால், நாம் வீட்டில் தனியாக செய்யும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்துவிடும். அதனால்தான் அந்த விளைவுகள் தவறாகிறது, நமக்கு தொந்தரவாகவும் இருக்கிறது. என்னதான் நீங்கள் பயிற்சியின் பொழுது குறிப்பு எடுத்துக்கொண்டு வந்தாலும், நேரடியாக கேள்வியில் கிடைக்கின்ற பதில்தான் சிறப்பாகும்.

முக்கியமாக, உங்களோடு பயிற்சி எடுத்த சிலரிடமோ, ஏற்கனவே பயிற்சி எடுத்து வந்திருக்கும் மற்றவரிடமோ உங்கள் சந்தேகத்தை கேட்டுக்கொள்ளக் கூடாது. அது உங்கள் குழப்பத்தை அதிகப்படுத்திவிடும் என்பதை அறிக. தகுந்த ஆசிரியரிடம் மட்டுமே உங்கள் குழப்பத்தை, சந்தேகத்தை, கேள்வியை கேட்க வேண்டியது அவசியம்.

பொதுவெளியில், இணையதளத்தில் எந்த சந்தேகத்தையும் யாரிடமும் கேட்க்கக்கூடாது. சிலர், நாம் படிப்பதற்கே அருவருப்பு அடைகிறவகையில், அப்படி, இப்படி என்று கேள்விகள் கேட்பதும் உண்டு. சிலர் பயிற்சியை கிண்டல் செய்யும் விதமாகவும் கேள்வி கேட்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம், அவர்கள் நல்லபடியாக வாழ்க என வாழ்த்தியும் விடுவோம். பொதுவெளியில் கேள்வி கேட்டால், பலவிதமான திசை திருப்பலுக்கு ஆளாகுவீர்கள். உங்களுக்கு அருகில் உள்ள, பயிற்சி மையத்தை அணுகி, அங்கே ஆசிரியரை கண்டு, நீங்கள் கற்றுக்கொண்ட காயகல்ப யோகப் பயிற்சி விபரங்களைச் சொல்லி, சந்தேகத்தை தெளிவு செய்துகொள்ளலாம். அதற்கான சான்றிதழையும் கையில் வைத்துக்கொண்டு போனால் நல்லதுதான்.

ஒருவேளை உங்களுக்கு அருகில், எந்த ஒரு பயிற்சி மையமும் இல்லை, நீங்களும் வெகுதூரத்தில் இருக்கிறீர்கள் என்றால், முக்கியமாக நீங்கள் கற்றுக்கொண்ட குழப்பம் தீரும் வரை, சந்தேகம் தெளிவு பெறும்வரை, காயகல்ப யோகப் பயிற்சியை செய்யாதீர்கள். அது ஒருவாரம், பத்துநாட்கள், ஒரு மாதம் ஆனாலும் பரவாயில்லை. கைபேசி, தொலைபேசி வழியாகவும் ஆசிரியரிடம் கேட்கலாம் எனினும் நேரில் கேட்டறிவதே நல்லது. சமீபகால ஜூம் வழியான சந்திப்பில் கேட்டாலும் பலன் உண்டுதான். எனவே அதற்குறிய வழியை, பயிற்சி மைய இணையம் வழியாகவும், அதுவழங்கும் சமூக வலைதள அறிக்கை மூலமாகவும் அறிக. பலன் பெறுக.

வாழ்க வளமுடன்.

-

Why Kayakalpa yoga morning exercise has 2 stages on level 3?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சியில், காலை மூன்று பயிற்சிகளில், நான்காவதாக ஆண்களுக்கு மட்டும் தனி நிலை என்பது ஏன்?


பதில்:

சித்தர்கள் வழியான, உடலை உறுதி செய்து, வித்துநாதம் காக்கும் அற்புத பயிற்சியே காயகல்பயோக பயிற்சி ஆகும். இந்த புராதனமான இக்கலையை, முழுமைசெய்து வடிவமைத்தவர், குரு மகான வேதாத்திரி மகரிசி அவர்களே. காலையில் செய்தும் பயிற்சி மூன்று, அதில் மூன்றாவது பயிற்சியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி நிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஆண்களுக்கு கூடுதலாக ஒரு நிலை உண்டு. இதற்கான காரணம், பெண்களுக்கு உள்ளமைந்த கர்பப்பை, மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் அழுத்தம் வரக்கூடாது என்பதற்காகவும், அதனால் வேறுவிதமான பாதிப்புக்களும், தொந்தரவுகளும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் மூன்றாவது பயிற்சி நிலையிலேயே பத்து அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சும் செய்துவந்தால் போதுமானது ஆகும்.

ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு உடலை விட்டு வெளிப்புறமாக அமைந்திருப்பதால், மூன்றாவது பயிற்சியின் முதல் நிலையில் 10 அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சு செய்வதற்குமுன் உடலை வளைக்கும் விதமாக, கால்களுக்குள் கைகளை கோர்த்த நிலையில் வந்தபிறகு ஓஜ்ஸ் மூச்சு வெளியிட வேண்டும் என்று பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான உண்மை விளக்கம், நீங்கள் இந்த காயகல்ப யோகப் பயிற்சியை கற்கும் பொழுதே சொல்லித்தரப்பட்டிருந்தாலும், நீங்கள் அதில் கவனமின்றி மறந்திருக்க வாய்ப்பு உண்டு எனினும் இப்பொழுது அறிந்துகொண்டது நன்மைதானே.

வாழ்க வளமுடன்.  

Why we need to join on mass meditation in campus or center?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய பயிற்சி முடித்த பிறகும், அங்கே சென்று கூட்டுத்தவம் செய்தால்தான் தன்னையறிய வழிபிறக்குமா?


பதில்:

அப்படியில்லை, மேலும் அது கட்டாயமும் இல்லை. ஆனால் கூட்டுத்தவம் இயற்றும் பொழுது, எல்லோருக்கும் பொதுவான, நல்ல ஆழ்ந்த தவ நிலை அமைய வாய்ப்பு அதிகம் ஏற்படும். அதுதான் கூட்டுத்தவத்தின் சிறப்பாகும். இதற்காகவேதான் அடிக்கடி மன்றத்தொடர்பு அவசியம் என்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

பெரும்பாலும் நாம் பரபரப்பான உலகில் வாழ்கிறோம். விழித்தெழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை, நமக்கான உலக கடமைகள் வரிசையாக இருக்கிறது. இதையெல்லாம் முடிப்பதற்கே நேரம் இல்லாமை. அதோடு நாம், உடலை வலுப்படுத்த காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி முடித்து தவமும் செய்யவேண்டும். இதற்கு அதிகபட்சமாக 1:30 முதல் 2:00 மணி நேரம் வரை செலவிட வேண்டும். முக்கியமாக மனம் அதில் ஈடுபடவேண்டும், விருப்பத்தோடும், முயற்சிக்க வேண்டும். அதுதானே முக்கியம்?! ஏதோ கற்றோம், செய்தோம், அடுத்த வேலைகளை பார்ப்போம் என்று கடந்துபோக முடியாது அல்லவா? 

இப்படி நேரத்தை தந்து செய்ய முடியாதவர்கள், கூட்டுத்தவம் செய்துவந்தால், அவர்களுக்கு உயர்வும் கிடைக்கும். தானாக அதை செய்வதற்கு ஆர்வமும், வழியும் கூட கிடைக்கும். ஏதோ வாரம் ஒருநாள் கூட்டுத்தவம் செய்துவந்தாலும் கூட அது உதவிடும் என்பது உண்மை.

என்றாலும், நீங்கள் உங்கள் வீட்டிலே, இருக்கும் இடத்திலேயே வேதாத்திரிய பயிற்சிகளை செய்துவருவதே நல்லது. அதுதான் உங்கள் மனதை, உடலை வெகு சீக்கிரமாக பழக்கப்படுத்தும் வழியாகும். ஒரு செய்யமுடியாமல் போனாலும்கூட, இனிமேல் இப்படி தவற மாட்டேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு, தினக்கடமையாக ‘அதிகாலை, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவமும் செய்து முடித்துத்தான் அடுத்த வேலைகளை தொடர்வேன்’ என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாற்றம் தானாக நிகழும். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தால், கூட்டுத்தவத்தில் கலந்து கொள்ள மறவாதீர்கள்!

வாழ்க வளமுடன்!

Can we practice kundalini yoga meditation, exercise, kayakalpa in open places?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, திறந்த வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்யலாம் என்றும் நல்ல சக்தி ஊட்டம் கிடைக்கும் என்றும் சொல்லுகிறார்களே? இது சரியா?


பதில்:

திறந்த வெளியில், எல்லோரும் கூடி உடற்பயிற்சி செய்வதையும், சிலர் கூடி வழிபாடு செய்வதையும் கண்டு அப்படியான முடிவுக்கு வந்திருக்கலாம். ஏதாவது ஒருநாள், ஒரு சிறப்பு விழா, கொண்டாட்ட, நிகழ்வுகளில் பலர் கூடி அப்படி செய்து, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுவதே அந்தமாதிரியான நிகழ்ச்சியாகும். இந்த உண்மையை, அதை நிகழ்த்தியோரும், அமைப்பும் தெரிந்தேதான் செய்வார்கள்.

ஆனால், யோகத்தில், அதுவும் மனவளக்கலை யோகத்தில் இணைந்திருக்கிற நாம், திறந்தவெளியில் காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு நேரத்திலும், அது அதிகாலையோ, பகலோ, மாலை நேரமோ செய்யவேண்டாம் என்பதே கருத்தாக இருக்கிறது. பெரும்பாலும், கூரை, சுவர்களற்ற திறந்த வெளியில், காற்றின் போக்கு அதிகம் இருக்கும். வெப்பதட்ப தாக்குதல் அதிகம் இருக்கும். அந்த இடங்களை சுற்றி எழும் ஒலிமாசு உங்கள் காதுகளை பாதிக்கும். ஏதேனும் சில பூச்சி, பறவை, விலங்கு இனங்கள் தாக்கம் இருக்கும். அவைகள் உங்களை தொந்தரவு தருபவராக நினைக்கவும் கூடும். இவை எல்லாமே உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத சூழலை தருவதாக அமைந்திருக்கும். அங்கே எழும் தூசி, அதன் தன்மை, கெடுதியான வாசனை ஆகியனவும் பாதிப்பு தரும்.

மேலும் முக்கியமாக, உடல், மனம் இவற்றின் இயல்பான சக்தியை உறிஞ்சி எடுக்கும் தன்மை அங்கே இருக்கக்காணலாம். இது வெகு சீக்கிரமாக உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். சக்தி இழப்பை ஏற்படுத்தும். தவத்தில் தடைகளை உண்டாக்கும். திறந்தவெளி என்பதால், பலவித தேவையில்லாத சக்தி இழப்பு உடனடியாக தாக்கும். இவை உங்கள் உடலை மட்டுமல்ல, மனதையும் பலவகையில் பாதிக்கும், குழப்பத்தை உருவாக்கும். என்னதான் இடத்தூய்மை, மனத்தூய்மை, அருட்காப்பு இட்டுக்கொண்டாலும் கூட, நன்மை தராது என்பதே உண்மை.

எனவே நிச்சயமாகவே, வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்த்து விடுங்கள். மேற்கூரை, தடுப்பு சுவர்கள் கொண்ட இடம், அறை தேவை என்பதில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் மனவளக்கலை யோக பயணத்தில் தடையின்றி பயணம் செய்து உயருங்கள்.

வாழ்க வளமுடன்.

If Kayakalpa yoga helps to lifetime120 years, why we live long?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் செய்தால் 120 ஆண்டுகள் மனிதன் வாழமுடியும் என்பது உண்மையா?! எதற்காக 120 ஆண்டுகள் வாழனும்?


பதில்:

ஆம், உண்மைதான். ஆனால் இதற்கு சில விதிகள் உள்ளன. அதன்படி கற்றுத்தேர்ந்து, பயன்படுத்தி, வாழ்ந்து வந்தால் நிச்சயமாக, மனிதனுக்கு இயற்கை அளித்த 120 ஆண்டுகள் வாழமுடியும் என்பது உறுதி. அவை என்னென்ன?

காயகல்பம் என்பது சித்தர்களின் அற்புதக் கலை. இந்தக்கலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆராய்ச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டு, மனவளக்கலை வழியாக கற்றுத் தரப்படுகிறது. இப்பயிற்சியை ஒருவர், பருவம் வந்த நிலையில், அதாவது 14 வயது நிறைவில் இருந்தே கற்றுக் கொள்ளவேண்டும். நாள் தவறாது பயிற்சியை செய்துவரவும் வேண்டும். மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவ்வைந்தில் அளாவு முறையோடும் வாழ்ந்துவர பழகவேண்டும்.

ஒரு மனிதனின் ஆயுள் பூமியின் சுழற்சியாலும், அதன் மையத்தில் உண்டாகும் ஆற்றலாலும் தான் நிர்ணயிக்கப்படுவதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். உயிருக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு, தொடர்பு தினமும் விலகிக் கொண்டே இருக்கிறது என்றும் சொல்லுவார். முன்னதாக, ஆசான் திருவள்ளுவர், ஒரு நாள் என்பது உயிரை அறுக்கும் வாள் என்று பொருள்பட ஆயுள் குறைவது குறித்து தன் குறளில் சொல்லுகிறார்.

சித்தர்களின் காயகல்பபயிற்சியை தொடர்ந்து செய்வதால், ஓவ்வொருநாளும், நம் உடலில் இருந்து வெளியேறக்கூடிய உயிர்த்துகள்கள் நிறுத்தி, பாதுகாக்கப்படுகின்றன. காயகல்ப பயிற்சியில், வித்துவின் நீர்த்தன்மையை கெட்டிப்படுத்தி வருவதால், அந்த வித்துவே, உயிர்த்துகள்களை காக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வித்து மற்றும் உயிர்த்துகள்களின் கூட்டு, மனிதனின் ஆயுளை, இயற்கையின் சராசரியான 120 ஆண்டுகள் காக்கும் தன்மையை பெற்றுக்கொள்கிறது. இது வெறும் நம்பிக்கையல்ல. தினமும் பயிற்சி செய்துவருபவர்கள் உணர்ந்த உண்மையாகும்.

சரி, ஏன் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என்று கேட்கிறீர்கள். வேடிக்கையான கேள்வி, எதை எப்படி அனுபவித்து வாழ்ந்து மடிந்தால் போதும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் இந்த கேள்வியில், எது வாழ்க்கை உண்மை? பிறவிக்கடமை? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் இயற்கைக்கும் என்ன தொடர்பு? மனம் என்பது என்ன? உயிர் என்பது என்ன? இறை என்பது என்ன? ஏன் பிறந்தேன்? ஏன் இறக்கிறேன்? பிறக்கும் முன் என் நிலை என்ன? இறந்த பிறகு என் நிலை என்ன? என்ற கேள்விக்கெல்லாம் உங்களுக்கு நேரமும், அவகாசமும், உண்மை அறியும் ஆர்வமும் இல்லை என்பதை சொல்லிவிடுகிறீர்கள். இந்த உண்மைகளை அறிந்துகொள்ளவும், அந்த உண்மைகளை பிறருக்கு பகிர்ந்து, அவர்களையும் உயர்த்தவும் வாழ்நாள் உதவிடுமே?! எனினும், இந்த உலகில் எப்படி வாழ்வது, எதை தேடுவது, அனுபவிப்பது என்பது உங்கள் விருப்பமே! இதில் மாற்றுக்கருத்தில்லை!

வாழ்க வளமுடன்

Explain the someone says, kayakalpa yoga will reduce the happiness of life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா?


பதில்:

காயகல்பம் கற்றுக்கொண்டவர்கள் அப்படி சொன்னார்களா? காயகல்ப யோகபயிற்சியின் உண்மை அறியாதவர்கள், அதை கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள், அதை விரும்பாதவர்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைதான் அது. லட்டு இனிப்பானது என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள். இல்லவே இல்லை இனிப்பு என்று நிச்சயமாக சொல்லுவீர்கள். ஏன்? எப்படி? ஏற்கனவே லட்டு சாப்பிட்டு இனிப்பை சுவைத்த அனுபவம் இருக்கிறது அல்லவா? அதன் வழியாக அந்த பதிலை சொல்லுவீர்கள். யாரேனும் ஒருவர், உங்களிடம் ‘லட்டு சாப்பிடாதே கசக்கும்’ என்று சொல்லியிருந்தால், இன்று நீங்கள் லட்டின் சுவையை சொல்லமுடியுமா?

காயகல்ப யோகக்கலை, வேண்டாத, முரண்பாடான, காம இன்ப நினைவுகளை, அந்த ஊக்குவித்தலை தடுக்கிறது. சரி செய்கிறது. ஆனால் இயற்கையாக இருக்கின்ற, எழுகின்ற காம இன்பத்தை குறைக்கிறது என்று உங்களை ஏமாற்றுகிறார்களே, அதற்குப் பதிலாக, இன்னமும் நிறைவாக, முழுமையாக அனுபவிக்க துணை செய்கிறது என்பதுதான் உண்மை. எனவே கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

காம இன்பதை அதிகப்படுத்தினாலும் நோய்வரும், இயற்கைக்கு முரணாக குறைத்தாலும் நோய்வரும் என்பதை நீங்கள் அற்வீர்களா? அப்படி இயற்கையாக உள்ளபோது எப்படி, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை, தானும் பெறாமல், உங்களையும் பெற விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு இடமளிக்காமல், நீங்களே நேரில் மனவளக்கலை மன்றம் சென்று, வேதாத்திரிய காயகல்ப யோகப்பயிற்சியின் உண்மை அறிந்து, உடனே கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.

Vethathiriya Kayakalpa Practice Makes body heat or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முறையாக காயகல்பம் கற்றேன். ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தேன். உடல் சூடு ஆனதாலும் அதனால் உடல் நலமும் கெட்டுவிட்டது. எனவே நிறுத்திவிட்டேன். இன்னும் சூடு குறையவில்லை. என்ன செய்யலாம்?


பதில்:

முறையாக காயகல்பம் கற்றேன் என்று சொல்லுகிறீர்கள். அதன்படியே செய்தீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், கற்கும்பொழுது இருக்கும் கவனம், அதை நாம் தொடர்ந்து செய்யும் பொழுதும் வரவேண்டியது அவசியம்.

குரு மகான் வேதாத்திரி மகரிசி, பல ஆண்டுக்காலம் ஆராய்ச்சியாகவே, காயகல்ப பயிற்சியை செய்து பார்த்து, அதன் விளைவு, மாற்றங்கள், ஏற்பு இவற்றை கணித்து, தவறுகளையும், குழப்பங்களையும் மாற்றி அமைத்துத்தான், மனவளக்கலை வழியாக பாடமாக நமக்கு தந்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே மேம்போக்காக, காயகல்பத்தில் தவறு என்று நாம் சொல்லிவிட முடியாது. அதற்கு வழியும் இல்லை!

காயகல்ப பயிற்சியில், கால்களின் நிலை, கைகள் வைக்கும் நிலை, அங்கே தரப்படும் லேசான அழுத்தம், முறையான அஸ்வினி முத்திரை அளவுகள், அதற்கான கால அளவு, ஓஜஸ் மூச்சு வெளிவிடும் நிலையில் நாக்கின் நிலைபாடு, ஓஜஸ் மூச்சின் அழுத்தம் மற்றும் வெளியிடும் முறை என்பதாக பலவற்றில் நாம் செய்யும் தவறுகளை, அப்படியே விட்டுவிடுகிறோம். அங்கேதான் நீங்கள் குறிப்பிட்ட உடல் உஷ்ணம் அல்லது உடல் சூடு ஏற்பட்டுவிடுகிறது என்பதை கவனத்தில் கொள்க.

அதனால்தான், காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ளும் பொழுதே, தனியாகவும் செய்து காண்பித்து, குறைகளை திருத்திக் கொள்வது நல்லது. கற்றுக்கொண்டேன், இனி வீட்டில் செய்து கொள்ளலாம் என்று உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. அதுபோல குழப்பம் என்றால், ஆசிரியரிடமே நேரடியாக சந்தித்துக் கேட்பதே நல்லது.

சரி, இனி தீர்வு என்ன என்றால், தற்பொழுது நிறுத்திவிட்டீர்கள் என்பதால், உடனடியாக, கற்றுக்கொண்ட மன்றத்தின் வழியாகவோ, வேறு மன்றத்திலும் கூட, உங்கள் நிலையை சொல்லி, திருத்தங்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவரையுல் தவறாக செய்ததால்தான் உடல் உஷ்ணம் / உடல் சூடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்க. நிச்சயமாக உங்களின் இந்த பிரச்சனை தீரும், கவலை வேண்டாம்.

வாழ்க வளமுடன்.

What is the meaning of Aswini Mudra and Ojas Breath?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்பத்தில் அஸ்வினி முத்திரை, ஓஜஸ் மூச்சு என்பதை எங்களுக்கு விளக்கம் முடியுமா?


பதில்:

புரிந்துகொள்ளும் வகையில் பதில் தரமுடியும் எனினும், மிக விளக்கமாக தர வழியில்லை. ஏனென்றால், இதன் பெரும் உண்மை விளக்கத்தை, நேரடியாக, மனவளக்கலை மன்றத்தில் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்,. அதுபோல கேட்டுக்கொள்ளவும் முடியும். நாம் இங்கே முகம்பாராமல், வார்த்தைகளால் விளக்கிக் கொள்வதில் பயனில்லை. மேலும் அது தவறாகவும் விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம்.

முதலில், சித்தர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ந்து, முழுமையாக செய்துவந்த, இந்த காயகல்பக்கலை ஏறக்குறைய அழிந்துவிட்டது எனலாம். ஆனால் அதன் பகுதிகள், இந்த உலகெங்கும் பலப்பல மனிதர்களிடம் சென்று சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. நம் நாட்டில், காயகல்பம் எதோ சாப்பிடும் லேகியமாகவும், உணவுப்பொருளாகவும் மாறிவிட்டது சோகம். ஆனால் காயகல்பம் யோகபயிற்சி முறைமட்டுமே!

அப்படி கலைந்து கிடந்த, காயகல்ப யோகக்கலையை ஒன்றுசேர்த்து, குறைகளை நீக்கி, முழுமை செய்து நமக்கு தந்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆகும். தான் வாழும் காலம் வரையும் கூட, அவ்வப்போது சில மாற்றங்களை கவனித்தும் வந்தார் என்பதே உண்மை.

அஸ்வினி என்றால் குதிரை என்ற கருத்தாகும். விலங்கிங்களில், குதிரை ஒன்றுதான், இந்த முத்திரையை, இயல்பாக, இயற்கையின் வழியில் செய்துவருகிறது என்பதை சித்தர்கள் கண்டார்கள். அதனால் அதற்கான பெயரை, அஸ்வினி முத்திரை என்றே வைத்தார்கள். ஓஜஸ் மூச்சு என்பது, நம்முடைய பாலுறவு சுரப்பியில் தங்கி நிற்கும், வித்துநாதத்தில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய ஒரு சக்தி, இதை நம் மூச்சோடு கலந்து மேலேற்றுகிறோம். இதற்கு ஓஜ்ஸ் மூச்சு என்று சித்தர்கள் பெயரிட்டு அழைத்தார்.

வாழ்க வளமுடன்.


How can come to know the mistake and correction in Kayakalpa yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சிகளில் ஏற்படும் தவறுகளை எப்படி அறிந்திடலாம்? நாமாக திருத்திக் கொள்ளலாமா?


பதில்:

காயகல்ப பயிற்சி என்பது, மனித வாழ்வோடு துணை செய்வதும், மனிதனின் ஆயுட்காலத்தையும் உயர்த்திட வழி செய்வதும் ஆகும். மேலும் முதுமையிலும் இளமை என்ற மாற்றத்தை காப்பதும் ஆகும். சித்தர்களின் காயகலப கலையை, முழுமைப்படுத்தித் தந்த, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை போற்றி வணங்குவோம்.

அன்பர்கள், காயகல்ப பயிற்சியை, மனவளக்கலை மன்றங்களில், ஆசிரியரின் நேரடி பார்வையில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி என்ற நிலையில் கூட, அவர்களுக்கு அவர்களே கற்றுக்கொள்வதில் முழுமை கிடைத்திடாது. ஆனால் விபரமும், அதன் தத்துவ விளக்கவும், தகுந்த ஆசிரியரிடம், அனுபவம் பெற்ற மனவளக்கலை அன்பரிடம் பெற்றுகொள்ளலாம். ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டியது அவசியம்.

காயகல்ப பயிற்சி உங்களுக்கு, ஆசிரியரால் கற்றுக்கொடுக்கும் பொழுதே, கவனமாக அதன் தத்துவ விளக்கங்களை கேட்டு, நிலை மற்றும் பயிற்சி முறைகளை செய்துபார்த்து திருத்தம் பெற்றுக்கொள்வது நல்லது. பயிற்சியை நாம் தனியாக, வீட்டில் செய்யும் பொழுது ஏற்படும் தவறுகளை அறியலாம் என்றாலும், நாமாக திருத்திக்கொள்ள முடியாது. அது அந்த தவறை மேலும் அதிகப்படுத்திவிடும் என்று அறிக. 

என்னென்ன தவறுகள் என்று சுருக்கமாக பார்த்தால், உடல் நிலையை சரியாக வைக்காமல் பயிற்சி செய்வது, அஸ்வினி முத்திரையை வேகமாகவோ, மிக மெதுவாகவோ செய்வது, ஓஜஸ் மூச்சு வெளியிடுவதில் புரிதல் இல்லாமை, அதை தவறாக வெளியிடுதல் ஆகியன எனலாம். மேலும் காலை, மாலை, இரவு பயிற்சிகளை கலந்தோ, மாற்றியும் செய்வது தவறே. அதுப்போல இந்த காலம் தவிர, அடிக்கடி செய்வதும் தவறே. இந்த தவறுகளை கணக்கில் கொண்டு, நீங்கள் எந்த தவறை செய்கிறீர்களோ அதை கவனித்து, நேரடியாக உங்களுக்கு, கற்றுக்கொடுத்த, மனவளக்கலை மன்ற ஆசிரியரிடம் அல்லது பொறுப்பான மற்றொரு ஆசிரியரிடம் கேட்டுத்தான் தெளிவு செய்துகொள்ள வேண்டும். நீங்களாகவோ, அனுபவம் இல்லாத வேறு யாரோ ஒருவர் சொல்லுவதை கேட்டு திருத்தம் பெறக்கூடாது.

எனவே தவறு நேர்ந்தால், அதில் உடல்நலம் பாதிப்பு உண்டாவதை அறிந்து, காயகல்ப பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த நாளோ, மறுநாளோ உடனே மனவளக்கலை மன்றத்தை தொடர்புகொண்டு சந்தேகம் தெளிக.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

How anyone can start a day based on Vethathiriya Yoga Way?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய வழியில் ஒருநாளை எப்படி ஆரம்பிக்கலாம்? நீண்டநாளாக குழப்பமாக இருக்கிறது!


பதில்:

தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை, நள்ளிரவு வரை நீடிக்கிறது என்று சொல்லமுடியும். வாழ்க்கை சூழல்களும், கைபேசியின் வரவும், இணைய பயன்பாடும் அப்படியான மாற்றத்தை தந்துவிட்டது. இது இயல்புதான். ஆனால் இதனால் எழுகின்ற விளைவுகளை கவனித்து, மாற்றங்களை அமைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், நாம் நன்றாக இருக்க, வாழ இந்த உடலும், மனமும் நல்லபடியாக இருக்கவேண்டுமே? அப்படி இருந்தால்தானே, அது யோக வாழ்வுக்கும் உதவிடும்.

ஒரு நாளை ஆரம்பிக்க, அதிகாலை எழுந்துவிட பழக வேண்டும். அதற்காக. 3.30 மணிக்கோ 4.30 மணிக்கோ உடனடியாக எழ வேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு நான் தூங்கப்போவேன் என்ற முடிவை வைத்துக்கொண்டு, அதை செயல்படுத்துக. ஒருவார காலத்திற்குள் அதிகாலை எழுந்து விடலாம். எழுகின்ற அந்த நேரம் 5.30 முதல் 6.30 வரை கூட போதுமானதுதான்.

எழுந்த உடனே, சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, காலைக்கடனை முடித்துவிடுங்கள். வேதாத்திரிய மனவளக்கலை பயிற்சியில் கற்ற ‘காயகல்ப பயிற்சி’ முதல் தேர்வாக இருக்கட்டும். பிறகு ‘எளியமுறை உடற்பயிற்சி’ இரண்டாவது தேர்வு. சிறிது நேர இளைபாறலுக்குப் பிறகு, ‘தவம்’ மூன்றாவதாக அமைத்துக்கொள்க.  இந்த மூன்றும் போதுமானதுதான். மொத்தமாக 10+45+25=1.20 ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் அல்லது கூடுதலாக ஆகலாம். நாம் வீணாக கழிக்கின்ற நேரத்தை விட இது ஒன்றும் பெரியவிசயமில்லை அல்லவா? எனவே அவசரமில்லாமல், பொறுமையாக செய்துவரலாம். இந்த பயிற்சிகளுக்கு இடையே, முன்னே, உங்களின் வழக்கமான ‘காஃபி, தேநீர்’ அருந்துவதை விட்டுவிடுங்கள். எல்லா பயிற்சிகளையும் முடித்த பிறகு, சிறுது நேர அமைதிக்குப் பிறகு, அருந்திக் கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், ஆனால் பழகப்பழக, ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால் செய்யமுடியாமல் போனால், வருத்தப்படும் அளவிற்கு உங்கள் மனமும், உடலும் பழகிவிடும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இந்த மாற்றத்திற்குள் இல்லை என்றால், இனிமேலாவது, நாளைமுதல் நான் மாற்றிக்கொள்வேன் என்ற மன உறுதியோடு, சங்கல்பமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்திப்பாருங்கள். வெற்றியில் திளைப்பீர்கள்!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!