How anyone can start a day based on Vethathiriya Yoga Way? | CJ

How anyone can start a day based on Vethathiriya Yoga Way?

How anyone can start a day based on Vethathiriya Yoga Way?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய வழியில் ஒருநாளை எப்படி ஆரம்பிக்கலாம்? நீண்டநாளாக குழப்பமாக இருக்கிறது!


பதில்:

தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை, நள்ளிரவு வரை நீடிக்கிறது என்று சொல்லமுடியும். வாழ்க்கை சூழல்களும், கைபேசியின் வரவும், இணைய பயன்பாடும் அப்படியான மாற்றத்தை தந்துவிட்டது. இது இயல்புதான். ஆனால் இதனால் எழுகின்ற விளைவுகளை கவனித்து, மாற்றங்களை அமைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், நாம் நன்றாக இருக்க, வாழ இந்த உடலும், மனமும் நல்லபடியாக இருக்கவேண்டுமே? அப்படி இருந்தால்தானே, அது யோக வாழ்வுக்கும் உதவிடும்.

ஒரு நாளை ஆரம்பிக்க, அதிகாலை எழுந்துவிட பழக வேண்டும். அதற்காக. 3.30 மணிக்கோ 4.30 மணிக்கோ உடனடியாக எழ வேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு நான் தூங்கப்போவேன் என்ற முடிவை வைத்துக்கொண்டு, அதை செயல்படுத்துக. ஒருவார காலத்திற்குள் அதிகாலை எழுந்து விடலாம். எழுகின்ற அந்த நேரம் 5.30 முதல் 6.30 வரை கூட போதுமானதுதான்.

எழுந்த உடனே, சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, காலைக்கடனை முடித்துவிடுங்கள். வேதாத்திரிய மனவளக்கலை பயிற்சியில் கற்ற ‘காயகல்ப பயிற்சி’ முதல் தேர்வாக இருக்கட்டும். பிறகு ‘எளியமுறை உடற்பயிற்சி’ இரண்டாவது தேர்வு. சிறிது நேர இளைபாறலுக்குப் பிறகு, ‘தவம்’ மூன்றாவதாக அமைத்துக்கொள்க.  இந்த மூன்றும் போதுமானதுதான். மொத்தமாக 10+45+25=1.20 ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் அல்லது கூடுதலாக ஆகலாம். நாம் வீணாக கழிக்கின்ற நேரத்தை விட இது ஒன்றும் பெரியவிசயமில்லை அல்லவா? எனவே அவசரமில்லாமல், பொறுமையாக செய்துவரலாம். இந்த பயிற்சிகளுக்கு இடையே, முன்னே, உங்களின் வழக்கமான ‘காஃபி, தேநீர்’ அருந்துவதை விட்டுவிடுங்கள். எல்லா பயிற்சிகளையும் முடித்த பிறகு, சிறுது நேர அமைதிக்குப் பிறகு, அருந்திக் கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், ஆனால் பழகப்பழக, ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால் செய்யமுடியாமல் போனால், வருத்தப்படும் அளவிற்கு உங்கள் மனமும், உடலும் பழகிவிடும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இந்த மாற்றத்திற்குள் இல்லை என்றால், இனிமேலாவது, நாளைமுதல் நான் மாற்றிக்கொள்வேன் என்ற மன உறுதியோடு, சங்கல்பமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்திப்பாருங்கள். வெற்றியில் திளைப்பீர்கள்!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!