Vethathiriya Kayakalpa Practice Makes body heat or not?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, முறையாக காயகல்பம் கற்றேன். ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தேன். உடல் சூடு ஆனதாலும் அதனால் உடல் நலமும் கெட்டுவிட்டது. எனவே நிறுத்திவிட்டேன். இன்னும் சூடு குறையவில்லை. என்ன செய்யலாம்?
பதில்:
முறையாக காயகல்பம் கற்றேன் என்று சொல்லுகிறீர்கள். அதன்படியே செய்தீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், கற்கும்பொழுது இருக்கும் கவனம், அதை நாம் தொடர்ந்து செய்யும் பொழுதும் வரவேண்டியது அவசியம்.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, பல ஆண்டுக்காலம் ஆராய்ச்சியாகவே, காயகல்ப பயிற்சியை செய்து பார்த்து, அதன் விளைவு, மாற்றங்கள், ஏற்பு இவற்றை கணித்து, தவறுகளையும், குழப்பங்களையும் மாற்றி அமைத்துத்தான், மனவளக்கலை வழியாக பாடமாக நமக்கு தந்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே மேம்போக்காக, காயகல்பத்தில் தவறு என்று நாம் சொல்லிவிட முடியாது. அதற்கு வழியும் இல்லை!
காயகல்ப பயிற்சியில், கால்களின் நிலை, கைகள் வைக்கும் நிலை, அங்கே தரப்படும் லேசான அழுத்தம், முறையான அஸ்வினி முத்திரை அளவுகள், அதற்கான கால அளவு, ஓஜஸ் மூச்சு வெளிவிடும் நிலையில் நாக்கின் நிலைபாடு, ஓஜஸ் மூச்சின் அழுத்தம் மற்றும் வெளியிடும் முறை என்பதாக பலவற்றில் நாம் செய்யும் தவறுகளை, அப்படியே விட்டுவிடுகிறோம். அங்கேதான் நீங்கள் குறிப்பிட்ட உடல் உஷ்ணம் அல்லது உடல் சூடு ஏற்பட்டுவிடுகிறது என்பதை கவனத்தில் கொள்க.
அதனால்தான், காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ளும் பொழுதே, தனியாகவும் செய்து காண்பித்து, குறைகளை திருத்திக் கொள்வது நல்லது. கற்றுக்கொண்டேன், இனி வீட்டில் செய்து கொள்ளலாம் என்று உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. அதுபோல குழப்பம் என்றால், ஆசிரியரிடமே நேரடியாக சந்தித்துக் கேட்பதே நல்லது.
சரி, இனி தீர்வு என்ன என்றால், தற்பொழுது நிறுத்திவிட்டீர்கள் என்பதால், உடனடியாக, கற்றுக்கொண்ட மன்றத்தின் வழியாகவோ, வேறு மன்றத்திலும் கூட, உங்கள் நிலையை சொல்லி, திருத்தங்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவரையுல் தவறாக செய்ததால்தான் உடல் உஷ்ணம் / உடல் சூடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்க. நிச்சயமாக உங்களின் இந்த பிரச்சனை தீரும், கவலை வேண்டாம்.
வாழ்க வளமுடன்.