Shall we learn kundalini yoga self from old notes or books?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி
வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பர் ஒருவர், சித்தர்களின் நூல்களை படித்தே குண்டலினி சக்தியை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார். அது சரியா?
பதில்:
குரு இல்லாத வித்தை பாழ் என்று ஒரு பழமொழி உண்டு. அதை அந்த நண்பருக்கு சொல்லுங்கள். அந்தக்காலங்களில் வழிவழியாக குருகுலம் என்ற வகையில், குருவின் நேரடி பார்வையில்தான் யோகம் கற்றுத்தரப்பட்டது. யோகத்தில் விருப்பமில்லாதவர்களுக்கு, பக்தியும், வழிபாடுகளும் போதும் என்றும் சொல்லப்பட்டது. இன்றைக்கு அந்த குருகுலம் இல்லை. பக்தியும் வேறுமாதிரி திரிந்து விட்டது.
சித்தர்களின் நூல்களில் இலைமறைகாயாக யோக பயிற்சி முறைகள் சொல்லப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதெல்லாம், பரிசோதனைக்கும், ஒப்பிட்டுப்பார்க்கவும் தான் உதவுமே தவிர, நேரடியாக இந்தமாதிரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படவில்லை. அதாவது பயிற்சி முறைகளாக, படிப்படியாக சொல்லவில்லை. ஆனால் உண்மை இருக்கிறது அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யோகம், தகுந்த ஒரு குருவின் வழியாகவே பெறவேண்டும். தீட்சையும் அவர் கண்காணிப்பில்தான் பெறப்பட வேண்டும். இன்றுதான் காலம் மாறிவிட்டதே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை இருக்கிறதே? மேலும் அது தொட்டுத்தரும் தீட்சையாகவும் மலர்ந்துவிட்டது. அந்தக்காலம் மாதிரியான கடின முறைகளும் கிடையாதே!
மேலும், யோகத்தை கற்றுக்கொள்ள வேறு பல யோக மையங்களும் இங்கே உருவாகிவிட்டன. யாரும் எங்கு வேண்டுமானலும், யோகம் கற்றுக்கொள்ள வாய்ப்பும் கிடைக்கிறது. இனிமேலும், நூல்களை படித்து தானாகவே கற்றுக்கொள்வேன் என்பது அவசியமில்லை. இதனால், காலவிரயம் மட்டுமல்ல, அறிவுத் தடங்கலும் ஆகிவிடும்.
முக்கியமாக, தானாக பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் படித்து யோகம் கற்க ஆரம்பித்தால், அந்தக்காலம் மாதிரியே, குண்டலினி சக்தி பாதையில் தடை வந்தால் என்ன செய்வீர்கள்? எப்படி அதை போக்குவீர்கள்? மூலாதாரத்தில் இருந்து ஆக்கினை செலுத்துவதற்கு முயற்சிக்கையில், அதற்கு இடையிலான மற்ற ஆதாரங்களில் நின்றுவிட்டால், அது உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும் சிக்கலை உருவாக்கிவிடுமே? வாழ்நாளையும் சிதைக்கும் அளவுக்கு மாறிவிடவும் கூடும். அவற்றை, அந்த தடைகளை நீக்கிடவும், பாதிப்பில்லாமல் மேல்நோக்கி நகர்த்தவும் அறிவாரா? இப்படி இன்னும் நிறைய பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால். அவரை, உங்கள் நண்பரை ஏதேனும், யோக மையங்களில் இணையச்சொல்லி அறிவுரை சொல்லுங்கள்!
இன்னும் தெளிவாக சொல்லப்போனால், உடல் நலம் சீர்கெடும், நிற்க நடக்க முடியாமல் போகலாம், பேச்சில் குழப்பம், சிந்தனையில் பதட்டம், புத்தி தடுமாற்றம் பெறும், மன நலம் பாதிக்கும், பிற ஆவி, ஆன்மாக்களின் தொந்தரவும் வரும் என்பதை அவருக்கு தெளிவுபடுத்துக!
வாழ்க வளமுடன்.