How can come to know the mistake and correction in Kayakalpa yoga?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சிகளில் ஏற்படும் தவறுகளை எப்படி அறிந்திடலாம்? நாமாக திருத்திக் கொள்ளலாமா?
பதில்:
காயகல்ப பயிற்சி என்பது, மனித வாழ்வோடு துணை செய்வதும், மனிதனின் ஆயுட்காலத்தையும் உயர்த்திட வழி செய்வதும் ஆகும். மேலும் முதுமையிலும் இளமை என்ற மாற்றத்தை காப்பதும் ஆகும். சித்தர்களின் காயகலப கலையை, முழுமைப்படுத்தித் தந்த, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை போற்றி வணங்குவோம்.
அன்பர்கள், காயகல்ப பயிற்சியை, மனவளக்கலை மன்றங்களில், ஆசிரியரின் நேரடி பார்வையில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி என்ற நிலையில் கூட, அவர்களுக்கு அவர்களே கற்றுக்கொள்வதில் முழுமை கிடைத்திடாது. ஆனால் விபரமும், அதன் தத்துவ விளக்கவும், தகுந்த ஆசிரியரிடம், அனுபவம் பெற்ற மனவளக்கலை அன்பரிடம் பெற்றுகொள்ளலாம். ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டியது அவசியம்.
காயகல்ப பயிற்சி உங்களுக்கு, ஆசிரியரால் கற்றுக்கொடுக்கும் பொழுதே, கவனமாக அதன் தத்துவ விளக்கங்களை கேட்டு, நிலை மற்றும் பயிற்சி முறைகளை செய்துபார்த்து திருத்தம் பெற்றுக்கொள்வது நல்லது. பயிற்சியை நாம் தனியாக, வீட்டில் செய்யும் பொழுது ஏற்படும் தவறுகளை அறியலாம் என்றாலும், நாமாக திருத்திக்கொள்ள முடியாது. அது அந்த தவறை மேலும் அதிகப்படுத்திவிடும் என்று அறிக.
என்னென்ன தவறுகள் என்று சுருக்கமாக பார்த்தால், உடல் நிலையை சரியாக வைக்காமல் பயிற்சி செய்வது, அஸ்வினி முத்திரையை வேகமாகவோ, மிக மெதுவாகவோ செய்வது, ஓஜஸ் மூச்சு வெளியிடுவதில் புரிதல் இல்லாமை, அதை தவறாக வெளியிடுதல் ஆகியன எனலாம். மேலும் காலை, மாலை, இரவு பயிற்சிகளை கலந்தோ, மாற்றியும் செய்வது தவறே. அதுப்போல இந்த காலம் தவிர, அடிக்கடி செய்வதும் தவறே. இந்த தவறுகளை கணக்கில் கொண்டு, நீங்கள் எந்த தவறை செய்கிறீர்களோ அதை கவனித்து, நேரடியாக உங்களுக்கு, கற்றுக்கொடுத்த, மனவளக்கலை மன்ற ஆசிரியரிடம் அல்லது பொறுப்பான மற்றொரு ஆசிரியரிடம் கேட்டுத்தான் தெளிவு செய்துகொள்ள வேண்டும். நீங்களாகவோ, அனுபவம் இல்லாத வேறு யாரோ ஒருவர் சொல்லுவதை கேட்டு திருத்தம் பெறக்கூடாது.
எனவே தவறு நேர்ந்தால், அதில் உடல்நலம் பாதிப்பு உண்டாவதை அறிந்து, காயகல்ப பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த நாளோ, மறுநாளோ உடனே மனவளக்கலை மன்றத்தை தொடர்புகொண்டு சந்தேகம் தெளிக.
வாழ்க வளமுடன்.
வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!