Isn't it wrong to grow a body? Is Siddhar Thirumoolar right? What is the truth?
ஐயா, உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் சித்தர் சொல்லுகிறாரே. அப்படியாக உடலை வளர்ப்பது தவறுதானே? சித்தர் திருமூலர் சொல்லுவது சரியா? உண்மை என்ன?
சித்தர் பெருமகான், திருமூலரின் திருமந்திரம் நூலில், அந்த பாடலின் ஒரு வரியை எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்த அளவில், இந்த கேள்வியை கேட்கிறீர்கள். உண்மையில் உங்கள் முடிவு தவறு. அந்த பாடல் முழுமையாக என்ன என்பதை, இதோ இங்கே பார்க்கலாமா?
‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!’
என்ற இந்த கவியில், உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று தான் சொல்லுகிறார். ஆனால், எதற்காக அப்படி சொல்லுகிறார் என்பதையும் விளக்குகிறார் அல்லவா? மிக எளிய தமிழில் இருப்பதால், தனியாக விளக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். எனினும் சுருக்கமாக சொல்லுகிறேன். நாம் வாழும் வரை உடலும், உயிரும் இணைந்திருக்க வேண்டும். எந்த ஒன்று பாதிக்கப்பட்டாலும், பிரிந்தாலும் எல்லாம் முடிந்தது. இதற்கிடையில், நான் யார்? என்று தன்னை அறியவேண்டும். பிறவிக்கடனான கர்ம வினைப்பதிவுகளை நீக்க வேண்டும் அல்லவா?
அதற்காக வாழ்வையும் வளமாக்கிட வேண்டுமே! என்பதையே இந்த திருமந்திர கவிதையில் விளக்குகிறார். பொதுவாக, சித்தர்கள் இந்த உடலை, ஒரு பொருட்டாக கண்டுகொண்டதில்லை. அப்படித்தான் அவர்கள் கருதி, பல கவிகள் தந்திருக்கிறார்கள். திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், ‘இந்த உடல் எனக்கு ஒரு தடையாக இருக்கிறது’ என்று சொல்லுகிறார். இறை உண்மையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுக்கு, அப்படித்தான் தோன்றும். ஆனால், மகான் திருமூலர், நமக்காகவே இந்த கவிவழியாக உண்மை சொல்லுகிறார்.
சராசரி வாழ்வில் இருக்கும் மக்களுக்கு உண்மை விளக்கம் தரும் வகையில்தான் இந்த கவிதை உதவுகிறது. உடலை கெடுத்துக்கொண்டு, ஆன்மீகத்திற்கும், யோகத்திற்கும் பயணிக்க வேண்டியதில்லை. உடலும் வேண்டும், உடலும் வேண்டும், உண்மைப்பொருள் தேடுதலும் வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரைதான் சொல்லுகிறார். மேலும் இந்த உண்மை விளக்கத்தை, இந்த காணொளி வழியாகவும் அறியலாம்.
வாழ்க வளமுடன்.
-