Home » understand » Leave the mind as it is. Let it be what it is within. How then can one be without a mind? Explain.
வேறு எங்கே போகவேண்டிய கேள்வி என்று நினைக்கிறேன். ஆம். இது குறித்து, மற்றொரு யோகம் அல்லாத, மனம் விடுதலை குறித்து பேசும் அன்பர்களின் காணொளி சில கண்டேன். குறிப்பாக அது யார்? என்று அடையாளப்படுத்துவது வேண்டியதில்லை. எனினும் சில விளக்கங்களை காண்போம்.
பொதுவாகவே, மனம் ஒரு குரங்கு. அது இயல்பில் அடங்காது. உன்னை சும்மா இருக்கவிடாது. கண் போன போக்கில், கால் போகமுடியுமா? அது போல மனம் போன போக்கில், மனிதன் போகமுடியுமா? என்று பாடல்களும், கருத்துகளும் இருக்கின்றன. அவை விவரித்தால், இந்த கட்டுரையின் நீளமும் அதிகமாகிவிடும். மனம் இயல்பில் ஆற்றல் உடையது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் ரகசியங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்பதும் உண்மை.
இன்னும் ஒருபடி மேலாக, ‘மனதின் அடித்தளமே நிலைபொருள்’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தை நினைவுகொள்க. அப்படியான மனதை, புறம்தள்ளி பழகுவதும், வாழ்வதும் சரியாகுமா? உங்கள் கேள்வியின்படி மனதை அகம், புறம் என்ற இரண்டாக பிரித்துக்கொண்டாலும், புறமனதை கவனி, அக மனதை விட்டுவிடு என்பதாக சொல்லப்படுகிறது.
மனமே மனிதனாகவும், மனிதனே மனமாகவும் இருக்கிறான் என்பது சித்தர்களின் கருத்தாகும். அதுவே வேதாத்திரியத்திலும் உள்ளது. எனவே புதிதாக எந்த திணிப்பும் இங்கே இல்லை. மேலும் மனதின் உயர்வுதான் மனிதனின் உயர்வு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த பழக்கத்திற்காகவும் ‘அக மனதை புறந்தள்ளுங்கள்’ என்பது சரியாக இருக்காது. இது விளக்கமே தவிர, அறிவுரை அல்ல. வேதாத்திரியத்தில் சொல்லப்பட்டது போல வேறு எங்குமே, ‘மனம்’ குறித்து விளக்கம் தரப்பட்டது இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த அளவிற்கு மிக தெளிவாக, உண்மையாக, வேதாத்திரி மகரிஷி தன் விளக்கங்களை தந்திருக்கிறார்.
மேலும் எண்ணமோ, மனமோ, அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். மனம் தன் உணர்வுகளை எண்ணமாகவே பிரதி பலிக்கிறது. அவை எல்லாம் எது? என்று கேட்டால். ‘எல்லாம் நாம் போட்டு வைத்தவைதான்’ என்றே விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி.
மனதை பிரித்து, மனதை தவிர்த்து, மனதை ஒதுக்கிவைத்து, மனதை சும்மா விட்டுவிட்டு ஆகப்போவது ஒன்றுமே இல்லை. மனம் என்பது என்ன? என்று புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாடே ஆகும். எனவே மனதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பது ஏற்பில்லாதது. அதை உங்கள் மனமே முதலில் ஏற்றுக்கொள்ளாது.
இந்த விளக்கம் குறித்தான காணொளி, மேலும் உங்களுக்கு புரிதலை கொடுக்கும் என்று நம்பலாம்.
மனம் என்பது என்ன? மனதை ஒதுக்கி வைத்து வாழமுடியுமா? What is the mind? Is it possible to live apart?
-
வாழ்க வளமுடன்
-