CJ for You: the world

the world

Showing posts with label the world. Show all posts
Showing posts with label the world. Show all posts

In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

The best way and solution for the perfect and complete life!


உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறப்பதும், வாழ்வதும், மறைவதும் எந்த ஜீவனுக்கும் மாற்றமில்லை. ஆனால் மனிதனின் வாழ்வு மட்டும் பல்வேறு வாழ்க்கை சிக்கல்களிலும், மன குழப்பங்களிலும், இல்லம், சமூகம், உலகம் என்று சீர்கெட்டு இருக்கிறதே? தனிமனிதனுக்கும் நிம்மதி, அமைதி இல்லையே காரணம் என்ன?


பதில்:

ஆழ்ந்த சிந்தனையை தூண்டும் கேள்வியை வரவேற்கிறேன். இந்த உலகம், ஒவ்வொரு தலைமுறையிலும், தன்னளவிலும், வருங்கால சந்ததிக்கு உதவும் வகையிலுமான முன்னேற்றங்களை உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு மெய்ஞானம் பெருமளவில் உதவியது. முழுமையான அந்த மெய்ஞானம் இன்றும் ‘பொலிவோடு’ திகழ்ந்துகொண்டும் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சூரியன் என்று ஒளிர்ந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் பலகோடி ஆண்டுகளாக, பூமிக்கு ஒளிவீசிக்கொண்டு இருக்கிறதே, அதுபோலவே ‘மெய்ஞானமும்’ ஒளிவீசிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய உலகில், விஞ்ஞானம் அணுவியல், வானியல், மண்ணியல் என்று பலவகைகளிலும் விரிந்து நின்று, மனித வாழ்வின் நிலையை, கற்பனைக்கும் அப்பாற்பட்டு உயர்த்திருக்கிறது. நாம் எல்லோருமே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  நம் தலைமுறையினரும் அனுபவிக்கிறார்கள். இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்க போகிறார்கள். ஆனால், இங்கே மெய்ஞானத்தை அப்படியே விட்டுவிட்டார்களே?

ஒரு ஜீவனின் பிறப்பும், ஒரு மனிதனின் பிறப்பும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு மனிதனின் நோக்கம் வேறானதாகிற்றே? அம்மனிதனுக்கான ஆறாவது அறிவின் முழுமையை அவன் உணர மறுக்கிறான். அவனுக்குள்ளாக அதற்கு ஓர் எல்லை கட்டி, இந்த அளவுகளின் நான் இயங்கினால் போதும் என்றும் முடிவு செய்துவிடுகிறானே?! அது சரியானது தானா?

மனிதனின் வாழ்வு இதுதான், இப்படித்தான் வாழவேண்டும் என்பது இரண்டு நிலைகளில் நாம் எடுத்துகொள்ள முடியும். முதலாவது, பெயர், புகழ், செல்வாக்கு, இன்பம் துய்த்தல் என்ற் வகையில், வெளிப்பார்வையாக, உலகியலில் வாழ்கிற வாழ்க்கை ஆகும். இரண்டாவது, உள்முகமாக, மனதையும், நம்மையும், இந்த இயற்கையையும், தெய்வீகம் என்று போற்றப்படுகின்ற பேராற்றலையும் உணர்ந்து அறியதக்க வாழ்க்கை என்பதாகும். இதில் முதலாவது வாழ்க்கை முறையைமட்டுமே நாம் ‘கெட்டியாக’ பிடித்துக்கொண்டோம். அதையே நம் தாத்தா தொடர்ந்தார், தந்தை தொடர்ந்தார். நாம் தொடர்கிறோம். நம் பிள்ளையும், பேரப்பிள்ளைகளும் தொடர்வார்கள். அதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

ஆனால் இந்த ‘மெய்ஞான’வாழ்க்கை மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. என்றாலும், மெய்ஞான வாழ்க்கைதான், இந்த மண்ணில், தமிழகத்தில் நிலைத்திருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. உலகுக்கே வழிகாட்டியாக இன்னமும், தமிழக சித்தர்களின் மெய்ஞானம் இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அவை எல்லாமே, கால மாற்றத்தில், அந்நியர்களின் படையெடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் அங்காங்கே சிதறிப்போனது. என்றாலும் கூட உலகெங்கும் அது பரந்து நிலைத்தது. இந்த மண்ணிலும் அவ்வப்பொழுது, ஞானிகளும், மகான்களும், யோகியர்களும் வந்து, ‘மெய்ஞானத்தை’ விளங்கச்செய்கிறார்கள். வாழும் மக்களாகிய நாம்தான், அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறோம். தேவையில்லை என்று உதறுகிறோம். உண்மைதானே?

உண்மையாகவே, நீங்கள் கேட்ட கேள்வியை தனக்குள்ளாக, கேட்டு, உண்மை அறிய நினைத்தவர்களின் தாக்கம், அவர்களின் வாரீசுகளின் வழியாக ‘மெய்ஞானம்’ நோக்கி நகரவைத்தது. ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு விடை பெற தூண்டியது. குருவை தேடும் சீடனும், சீடனைத்தேடும் குருவும் இவ்வுலகில் இருந்துகொண்டுதான் உள்ளார்கள். அப்படியாக, ஒவ்வொரு தனிமனிதனும், தன் பிறவியின் நோக்கத்தையும், தன்னைக்குறித்த உண்மையையும் உணர்ந்து அறிந்துவிட்டால், தன்னிலையில் ‘விடுதலை’பெறுவான். இந்த உலகில், இயற்கையோடு இணைந்த, எங்கும் இன்பமே நிறைந்திக்கும் வாழ்வில், நிறைவாக வாழ்ந்து வருவான். அவனைக்கடந்து வரும் அவனின் தலைமுறைகளும் அதை, கடைபிடிக்கும். தனிமனிதன், குடும்பம், சமூகம், ஊர், நாடு, உலகம் என்று எல்லாமும் முழுமையாகும் என்பது உறுதி. இந்த நோக்கம் நிறைவேறிட, தனிமனிதனுக்கு உதவிட வந்ததே, இவ்வுலகில், யோக சேவையாக பல்வேறு மையங்களும், அதன் செயல்பாடுகளும் ஆகும். 

மாற்றத்தை தன்னளவில் பெற விரும்புவோர், தங்களை அங்கே இணைத்துக்கொண்டு உயரலாம். உண்மை விளக்கம் பெறலாம். அப்படியான மையங்களில் ஒன்றுதான், வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷியின் செயல்பாடும் ஆகும். அதுவே மனவளக்கலையாக, எளியமுறை குண்டலினி யோகமாகவும் மலர்ந்திருக்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

Why unable to complete and get the obstacles on action based on thought?


நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?

பதில்:

நினைத்த ஒன்றை செய்வது என்றால், தனி மனிதனாக இருக்கும் பொழுது, தனக்காக ஏதேனும் செய்து கொள்வது நிகழும், எனக்கு பிடிக்கும் அதனால் இப்படி செய்கிறேன் என்று சொல்லவும் முடியும். ஆனால் அது, உங்களுடைய அளவுக்குள் இருப்பதாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரையறை, வரம்பிற்குள் இருப்பதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதனாகிய நீங்கள், சமூகத்தின் அங்கம். உங்களுடைய எந்த ஒரு செயலும், நடவடிக்கையும் இந்த சமூகத்தின் வழியாக பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அதுதான் இயற்கையாகவும் உள்ளது.

உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள்ளே நீங்கள் எப்போதும், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். உங்கள் தாய், தந்தை, உடன்பிறந்தோர் அதை அனுமதிக்கலாம், சிலவேளை அவர்களும் கூட, உங்களிடம் ‘இப்படியெல்லாம் செய்யாதே, இது தவறு, திருத்திக்கொள்’ என்பார்கள். சில விருந்தினர்கள், சொந்தபந்தம் உங்கள் இல்லத்தில் வந்திருந்தால் கூட, உங்கள் நடவடிக்கைகள் பார்த்து, ‘இவன்(ள்) ஏன் இப்படி?’ என்று நினைத்துக் கொள்வார்கள். உங்கள் குடும்பத்தோடு உரிமை உள்ளவர்கள், உங்களைப்பற்றி மற்றவர்களிடம், திருத்தச் சொல்லி அக்கறை கொள்வார்கள். சிலர் நேரடியாக உங்களிடமே சொல்லவும் கூடும்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும், சொல்வதும், செய்வதும் சிறப்பு’ என்று சொல்லுகிறார். உங்களுடைய எந்தஒரு சிந்தனை, செயல், வார்த்தை ஆகியன, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்துக் கொண்டால், எந்த தடையும் நேரப்போவதில்லை. நீங்கள் நினைத்ததை செய்வதற்கு சாதகமாக அமையும், மேலும் பிறரும்கூட இதில் துணையாக இருப்பார்கள்.

இதற்கு சரியான தீர்வு, முன்கூட்டியே விளைவு என்ன? என்று தீர்மானித்துக் கொள்வதுதான் நல்லது. இதை செய்தால் எனக்கு என்ன நிகழும்? இதனால் எனக்கோ, மற்ற யாருக்காவதோ தொந்தரவும், பிரச்சனைகளும் எழுமா? அது உடனடியாகவா? நீண்டநாள் கழித்து வருமா? இதில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா? இதன் தேவையும் அவசியமும் உண்மைதானா? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை தெளிவு செய்து கொள்ளலாம்.

ஒரு அலுவலகத்திலும், அரசு நிர்வாகங்களிலும் எந்த ஒரு முடிவும் உடனடியாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒருவேளை அப்படி செயல்படுத்துவதாக இருந்தால், ஏற்கனவே சில நிபுணர்கள் குழு அதை ஆராய்ந்து முடிவு செய்திருக்கும் என்பதே உண்மை. திடீரென்று ஒன்றை பிறர் நமக்கு சொன்னால் கூட, திணித்தால் கூட நாம் அதை ஏற்க மறுப்போம் தானே? அதுபோலவே நீங்கள் சொன்னதை நினைத்ததை சொல்லமுடியாமலும், செய்யமுடியாமலும் போகலாம். 

இன்னொரு முக்கியமான காரணம், நீங்கள் நினைத்ததை செய்வதற்கு தகுந்த காலமா? என்பதை முதலில் ஆராயவேண்டும். சூழ்நிலையும் பொருத்தமாக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். இப்படி எல்லாவற்றையும், திட்டமிட்டு அலசி, ஆராய்ந்து பிறகு செயலாக்கம் செய்தால், நினைத்த ஒன்றை செய்வதில் வெற்றி உண்டு.

வாழ்க வளமுடன்.

-

Will anyone give up domesticity, the world, and the earnings in order to know the duty of birth?


பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?


பதில்:

பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா? ஆமாம், சரியான கேள்விதான். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் கேட்கிறார். எதற்காக விடவேண்டும்? உங்கள் இல்லறத்தை, உலகை, சம்பாத்தியதை விட்டு விலக வேண்டிய அவசியம் என்ன? அப்படி விட்டுவிட்டால் எப்படி இந்த உலகில் வாழ்வீர்கள்? யாரையாவது அண்டிப்பிழைத்தால் அது மிக கடினம் அல்லவா? அப்படியாக யாரேனும் நமக்கு வாழ்நாள் முழுதும் உதவமுடியுமா? என்று தான் கேள்விகளை அடுக்குகிறார்.

முதலில், உங்களை இதையெல்லாம் விட்டுவிட்டுத்தான், பிறவிக் கடமையை அறியவேண்டும் என்று சொன்னவர் யார்? அப்படி அறிவுரை சொல்லி உங்களை திசை திருப்பிவிட்டது யார்? மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? உங்களுக்கும் யோகசாதனைக்கும் உள்ள தூரத்தை அதிகப்படுத்தியது யார்? இப்படியாக சொல்லி, உங்களின் இந்த பிறப்பை, உலகவாழ்வை வீண் செய்ய முயற்சித்தது யார்?

பிறவிக் கடமை என்பது, ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டு, அதற்கான உண்மையை அறிந்து கொண்டு வாழ்வதுதான். இந்த ஆராய்ச்சிக்கும், அறிதலுக்கும் தடையாக, இல்லறம், உலகம், சம்பாத்தியம் தடையாக இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் இனியாவது விளக்கம் பெற்றவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

யோகம் என்பது, ஓர் வழி ஆகும். அறம் என்ற இயற்கைக்கு முரண்படாத நிலையில், விளக்கத்தில், விழிப்புணர்வில் வாழ்வதற்கான கற்றுத்தேர்தல், ஒரு பாடமும், பயிற்சி முறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு வெறுமனே பயிற்சி என்பது இல்லாமல், குண்டலினி எனும் உயிராற்றலை அறிந்து உணர்ந்து கொள்வது அவசியமாகிறது. இதில் எந்த குழப்பமோ, தடையோ, பிரச்சனையோ இல்லவே இல்லை.

நாம் வாழும் இந்த உலகில், பெரும்பாலோர் இன்பத்தை நுகர்வதற்கு பதிலாக, இன்பத்தோடு துன்பத்தையும், இன்னும் பலப்பல பிரச்சனைகளையும்தான் சுமந்துகொண்டு, தீர்க்க வழியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியான மனிதர்களுக்கு உதவுவதுதான் யோகம் ஆகும். எப்படியும், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையிலேயே வாழ்ந்து வாருங்கள். காலம் உங்களுக்கு உதவும்.

வாழ்க வளமுடன்.

-

NE YOU WS


உன்னை நெருக்கும் செய்தி


பொறுப்புத்துறப்பு

படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும். 


உலகம் சுருங்கிவிட்டது

உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.


தானியங்கி?!

இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. 



காலையில் காஃபியும் செய்தியும்

சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.

உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.


NEWS

இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து.  ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.


ஓசிபேப்பர்

அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!

இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும்.  இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள். 


கொக்கி போடும் தலைப்பு

இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம். 




ஆர்வத்தை முறைகேடாக்குதல்

இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.  மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள். 

சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.


மக்களின் செய்திகள்

தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன. 

சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.

பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல். 



உங்களை நெருக்கும் செய்திகள் 

நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார். 


மனமும் நிம்மதியும்

ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது. 

உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.

இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.



செய்திகளை தேர்ந்தெடுங்கள்

அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.

இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன். 

------

Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google





The path and ride on opposite directions




எதிரெதிர் திசைகளில் பாதையும் பயணமும்.

ஒரு படைப்பாளி தான் கற்றுத்தேர்ந்த திறமைய வெளிக்காட்டவும், அதன் மூலமாக தன்னை முன்னிறுத்தி, தன் பெயர் நிலைக்கவும், கலையின் தரம் உயர்த்தி, வகைப்படுத்தவும், பிறரையும் அதில் ஆர்வம் வரச்செய்யவும் நினைத்துத்தான் செயல்படுகிறான்.

கூடவே இந்தக்காலங்களின் பொருளாதார தேவைகளை முன்னிட்டு, தனக்காக என்றில்லாமல், பிறர் கேட்டுக்கொண்டபடி, அவர்களுக்கு தேவையான கலைப்பொருளை வடித்துக்கொடுத்து, தன் வயிற்றுப்பாட்டையும் சமப்படுத்திக்கொள்கிறான்.

ஆனாலும், இந்த படைப்பாளிகளில் ஓவியனுக்கு இருக்கிற மரியாதையும், மதிப்பும்; மக்களைச்சார்ந்து, அவர்களின் தேவை கேட்டு வழங்கும் ஓவியங்களில் இல்லை என்றே சொல்லலாம். சில விதிவிலக்காக, இவர்களில் நல்ல மக்களையும், அவர்கள் ஓவியத்தின் மேலும், ஓவியரின் மேலும் மதிப்பும், மரியாதையும் தருவதை எண்ணி வியந்திருக்கிறேன்.

தான் நினைத்ததை மட்டுமே தரும் படைப்பாளியாக, எழுத்தாளனும், சிற்பியும், மரபு ஓவியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்காகவும் தன்னை, தன் படைப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை. இதுதான் என் படைப்பு, உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் எனக்கு குறையில்லை என்ற ரீதியில் இயங்குவார்கள். இவர்களில் சிலர், சமூகத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பெரும்பாடு. சிலர் வறிய நிலையிலும் இருக்க காணலாம். 

இந்த பொருளாதார சமூகத்தில், படைப்புக்கான மதிப்பும், கிடைக்ககூடிய பணமும் ஒரு படைப்பாளி சமரசம் செய்துகொள்ளும் பொழுதுதான் கிடைக்கிறது என்பது சோகம். இந்நிலை மாறவேண்டும். 

படைப்பாளி, இந்த உலகை வழிநடத்தும் திறமைகொண்டவன். அவன் இந்த உலகை, சமூகத்தை, உங்களை, என்னை பதிவுசெய்கிறான். அடுத்த பரம்பரைக்கும், வருங்கால சமூகத்திற்கு செய்தியை எடுத்துச்செல்கிறான். புதிய சமுகமே, உங்களுக்கு முன் இருந்த சமூகம் இப்படி இருந்தது என்று வெளிக்காட்டுகிறான். அது பாடமாகவும், அறிவுரையாகவும், பெருமையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கமுடியும்.

ஒரு படைப்பாளி, இறந்தபிறகும், காலம் கடந்தபிறகும் போற்றப்படுவதுதான் அவனுக்கு கிடைத்த விதியாக இருக்கலாம். ஆனால் மன்னர்களும், புரவலர்களும், அரசுகளும் படைப்பாளிகளை போற்றிய காலங்கள் கடந்து, அவன் இந்த சமூகத்தை நோக்கி நகர்ந்துவந்துவிட்டான். இதனால், மக்களில் தேவையறிந்து, கேட்பதை தரும் நிலைக்கு சமரசம் செய்துகொண்டிருக்கிறான். 

அந்த படைப்பாளியையும், படைப்பையும், பணத்துக்கு நிகராக மதிப்பளிக்கும் வரை சரியானதுதான். ஆனால், அந்த பணத்திற்காக தன் இசைவுக்கு ஏற்ப வாலாட்டு என்று நினைப்பது தவறான நிலை. இதற்கு அந்த படைப்பாளியே ஒருகாரணமாகவும் அமைந்துவிடுவது சோகம்.

படைப்பாளி கிழக்கே போனால் இந்த சமூகம் மேற்கே போகிறது.  இரண்டுபேரும் சந்திக்கும் காலம்வரும். காத்திருப்போம்.

--------------------

Thanks to image: Kelli McClintock @kelli_mcclintock