CJ for You: upgrade

upgrade

Showing posts with label upgrade. Show all posts
Showing posts with label upgrade. Show all posts

Is health important to a man? Is mental resourcefulness important? Explain this dilemma.


ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? இந்த குழப்பமான நிலையையை விளக்குக.


இந்த கேள்விக்கு பதில் தரும் முன்பாக, கேள்வி கேட்டவரின் சூழல், வாழும் நிலை, தகுதி, இப்போதிருக்கும் வாய்ப்பு, எதிர்பார்ப்பு அல்லது நிறைவு என்ற அளவுகளைக் கொண்டு சொல்லவேண்டியதாக இருக்கிறது. 

நீங்கள் உலகவாழ்வில், ஒரு நல்ல உயர்வான நிலைக்கு, பொருள் செல்வாக்கோடு நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மன வளம் முக்கியம். அந்த மன வளத்தினால், உடலை நலமாக்கி, இந்த பொருள்முதல்வாத உலகில் வென்று உயரலாம். மனம் சோர்வாகவும், குழப்பமாகவும், தடுமாற்றமாகவும் இயங்குமானால், அது உங்கள் உடலை, உடலுறுப்புக்களை கெடுக்கும். வேலை, வியாபாரம், தொழில் என்று எதனையும் செய்யவிடாது. முயற்சியில் தோல்வியை தரும். விளைவு, நட்டமாகும். இதனால் மனம் உற்சாகமாக இருக்க என்ன வேண்டும்? என்ற நோக்கத்தில் மன வளம் முக்கியம். இதற்கு யோகம் உதவுமா? நிச்சயமாக உதவும். ஆனால், யோகம் வாழ்க்கை இன்பத்தையும், பொருளாதாரத்தையும், இல்லறத்தையும் சிதைக்கிறது என்றுதானே, பெரும்பாலோர் நினைக்கிறார்கள்? சரிதானே?!

இரண்டாவது வகை மனிதராக பார்த்தால், ஏதோ ஓரளவில் நிலையான பொருள் கிடைக்கிறது. அன்றாட வாழ்வு நகர்கிறது என்ற நிலையில் இருக்கும் மனிதரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, பொருளில் நிறைவு பெற்று, இருப்பது போதும் என்ற அளவில், அன்றாட வரவில், கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மற்றதை சேவையாக உலகுக்கு திருப்பித்தரும் மனிதர்களையும், இங்கே இணைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இப்போது, உடல் நலம்தான் முக்கியம். ஏனென்றால், இதுநாள் வரை, அந்த உடலைக்கொண்டு, பலவிதங்களில் தூக்கம் கெட்டு, உடல் பலம் கெட்டு, தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்திருப்பார்கள். உடலில் பலவித நோய்கள் தலைதூக்கி நிற்கும். சில உடல் உறுப்புக்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலர் ஏதேனும் அறுவைசிகிச்சையும் செய்திருப்பார்கள். உணவே மருந்து என்பதற்கு பதிலாக, மருந்தே உணவாக சாப்பிடம் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். இதனால் இவர்கள், உடலை காத்திட வேண்டும், உடல் நலமே இவர்களுக்கு முக்கியம். பிறகு அதன் வழியாக மன நலன் காக்கப்பெறலாம்.

மூன்றாவது வகை மனிதர், உலக வாழ்க்கையில் இருந்தாலும், உள்முகமாகவே, தன்னைக்குறித்த ஒரு தேடுதலைக் கொண்டிருப்பார். ஒருவகையில் அது, அவருடைய முன்னோர்களின் விருப்பமாகவும், அதை நிறைவேற்றிட பிறந்தவராகவும் இருப்பார். இவருக்கு, நேரடியான யோகம் தேவை. அப்படியானால் பொருள் பணம் அவசியமில்லையா? என்ற கேள்வி எழும்தானே? இவர், இயல்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்படுபவராக இருப்பார். வேண்டுதலும் எதிர்பார்த்தலும் இருக்காது. இருந்தாலும் அமைதி, இல்லையென்றாலும் அமைதி என்ற நிலையில் இருப்பார். உங்களில் கூட அப்படியாக சிலர் இருக்கலாம். இந்த மனிதர் யோகத்தில் உயர, உடல் நலமும் வேண்டும், மன வளமும் வேண்டும். ஆனால், முதன்மையாக, உடல் நலம் சீர் செய்துவிட்டால், அடுத்து மன வளம் நோக்கி தானாக நகர்ந்துவிடுவார்.

இப்படியாக, ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? என்ற கேள்விக்கான விடையை கண்டுவிட முடியும். இதை நீங்கள் மிகச்சரியாக எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து அதன்படி நீங்கள், பயிற்சியை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

-


Did you know? Kundalini energy and yogic sadhana are the true explanation.


உங்களுக்குத் தெரியுமா? குண்டலினி சக்தியாற்றலும் யோக சாதனையும் உண்மை விளக்கம். 

    
        குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், பல்லாண்டு காலமாக, கடின முறைகளால் சிக்கி இருந்த, குண்டலினி யோகத்தை, தான் கற்றுத் தேர்ந்து, உண்மை உணர்ந்து, அதை விஞ்ஞானத்தோடு உதாரணங்களால், விளக்கி, புரியவைக்கும் வழியில், திருத்தி அமைத்தார், எளியமுறை குண்டலினி யோகமாக, இல்லறத்தை விட்டு விலகிடாமல், பருவம் வந்த அனைவருமே, ஆண், பெண் பேதமின்றி கற்று, நான் யார்? என்ற கேள்விக்கான பதிலைப் பெற்று, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தை பெற வழிவகை செய்தவர். குண்டலினி சக்தியாற்றல் குறித்தும், யோகசாதனை குறித்தும் சொல்லும் விளக்கம், இதோ, 

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல், கீழ்நோக்கி போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.  

  மனிதன் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம்.  

  இந்த உயிர்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும். 

  ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும்.  

  இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும். 

        இந்த குண்டலினி உயர்த்துதல், தேர்ந்த குருவின் வழியாக, தீட்சையாக மட்டுமே பெற வேண்டியது அவசியம். சுயமாகவோ, தானாகவோ, அனுபவம் இல்லாதோரிடமோ, குறுக்குவழியிலோ, மந்திட உச்சாடன பூஜை வழியாகவோ செய்துவிடக்கூடாது. இதைக்குறித்த விளக்கம் அறிய, இந்த காணொளி தொகுப்பு உங்களுக்கு உதவலாம்.

-

குண்டலினி உயர்த்துதலும் ஆபத்து காரணிகளும் - Kundalini Raising and Risk Factors

https://www.youtube.com/playlist?list=PLQQJZk6S322lsF-zw6W4w-dLqJeJx2pyb

வாழ்க வளமுடன்.

-

மூலவடிவம்: அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள்.

-


Please guide me for make the best Pooja Room at my home with yoga concepts!


வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


பதில்:

வீட்டில் பூஜை அறை அமைக்கவேண்டும் என்று விரும்புவது மிக நல்லதே! வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பக்தியிலும், யோகத்திலும் விருப்பம் கொண்டு, உயர்வதற்கும் உதவும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்களோடு அறநெறியில் வாழ்ந்து, தன் பிறப்பின் நோக்கமும் உண்மையும் அறிந்திட உதவும் அல்லவா? உங்கள் விருப்பம் நிறைவேற இறையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு இதெல்லாம் சொல்லுகிறாரே? என்று எதிர்கேள்வி கேட்க நிறைய அன்பர்கள் நினைப்பார்கள். தங்கள் அறிவால், என்னை மட்டம் தட்டிட துடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள், வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாறை நன்கு படித்திருந்தால் உண்மை விளங்கும். பக்தி இல்லாமல் யோகம் இல்லை. மேலும் பக்தி கனிந்தால் அதுவே யோகம் ஆகும்.

உங்கள் வீட்டில் பூஜை அமைப்பதற்கு இதுவரை உங்களுக்கு கிடைத்த எல்லா அறிவுரைகளையும் விட்டுவிட வேண்டாம். ஆனால் இங்கே தரப்படும் ஆலோசனைகளையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள். முடிவு உங்கள் வசமே தவிர கட்டாயமில்லை. வீட்டில் பூஜை அறை என்பதை, இருவர் உள்ளே நின்றால் போதும் என்ற ரீதியில் அமைக்காமல், நான்கு முதல் பத்து நபர்கள் நன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் இடிக்காமல் வந்து போகும்படி அமைத்துக்கொள்க. அதிக வெளிச்சமும் வேண்டாம். இருட்டாகவும் இருக்கவேண்டாம். காற்று நன்கு உட்சென்று வரும்படி அமைத்தல் நன்று. பெரும்பாலும் இப்போதைய வீட்டு பூஜை அறையில், ஜன்னல்கள் இல்லவே இல்லை. ஆனால் விளக்குகளும், அதன் ஒளிவெள்ளமும் கண்ணைப் பறிக்கிறது. காற்று வந்துபோக ஜன்னல் அவசியம். அதுபோல் எளிமையான விளக்குகள் போதும். வண்ண ஒளி தரும் அலங்கார விளக்குகள் அவசியமில்லை.

சிலை வைத்து வழிபடுவது தவறில்லை. ஒரு அடி, 12 இன்ச் அளவிற்குள்ளான விக்ரகங்களை வைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அதற்கு மேல் என்றால், அதற்கான ஆகம விதிகளை கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்திகிறார்கள். எனவே, இறை படங்களும், ஓவியங்களும் வைத்துக் கொள்ளலாம். தீப விளக்குகள், அதில் விளக்கெண்ணை, நெய் இட்டு தீபம் எரிதல் நன்று. நல்லெண்ணை, கடலையெண்ணை வேண்டியதில்லை. எந்த சிலை, எந்த உருவம் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. சில வீடுகளில் பரம்பரையாகவும் சிலைகள், படங்கள் இருப்பதுண்டு. உங்கள் முன்னோர்களும் அதை வழிபட்டு வந்தார்கள் என்பதால், நிச்சயமாக அதில் சிறப்புண்டு.

மந்திரங்கள் சொல்லலாம், மாலை, மலர்கள் அலங்காரம் செய்யலாம். சாம்பிராணி, ஊதுபத்தி, வாசனைதிரவியங்கள் பயன்படுத்தலாம். ருத்ராட்சம், படிக மாலைகளும் பயன்படுத்தலாம். எனினும் அவைகள் சுத்தமாக இருந்திட வேண்டும். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்தலும், ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது பூஜை செய்தல் நன்று. மணி ஒலிப்பதும், தீபாராதனை காட்டுவதும் சிறப்பு.

    பூஜை அறையை, அதுவேண்டும், இதுவேண்டும் என்று வேண்டுதல் அறையாக மாற்றாமல், இறைக்கு நன்றி செலுத்தும் விதமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வழியிலே, பூஜை அறையில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும், இல்லத்திலும் தெய்வீகம் கமழும்.

ஒவ்வொரு பூஜையிலும், உங்கள் குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். அவர்களை அதில் ஆர்வம் கொள்ள பழக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த இறை உண்மையை மட்டும் சொல்லுங்கள். கதைகள் வேண்டியதில்லை. பக்தியின் உண்மை விளக்கம் யோகத்தில் தெரியும் என்பதையும் சொல்லுங்கள். அதே பூஜை அறையில், ஞானிகள், மகான்கள் சிலைகளும், படங்களும் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை.

பூஜை வழிபாடு முடித்து, அங்கேயே ஏதேனும் ஒரு தவம் செய்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளலாம். எப்போதும் அமைதியாக, நிறைவாக இருக்குபடி, பூஜை அறையை வைத்துக்கொள்க. அதிக ஒலி, ஒளி தேவையில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களையும், பூஜையில் கலந்துகொள்ளச்செய்யுங்கள். எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிறைவான பூஜை அறை உண்டு என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் பூஜை அறை குறித்த உயர்ந்த எண்ணங்களை எப்போதும் மனதிற்குள் வைத்திருங்கள். கண்களை மூடி எப்போது நினைத்தாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீகத்தை உணர்த்துவதாக இருக்கட்டும். அது உங்களுக்கு என்றும் உதவும். இதனோடு யோகத்திலும் நான் உயர்வேன், பக்தியின் முழுமையை யோகத்தில் அறிந்துகொள்வேன் என்பதில் திடமாக இருங்கள்.

வாழ்க வளமுடன்

-

Why some of Vethathiriyans continues their temple worships?


வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?

பதில்:
இந்த கேள்வியில், உங்கள் ஆதங்கம் தெரிகிறது. நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும், உங்களுக்கு உண்மை தெரியுமா? இந்த கோவில், ஆலய வழிபாடுகளின் உண்மையை அறியவதற்குத்தான், வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றார்கள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், கோவிலும், ஆலயமும், அவர்களின் அந்த் வழிபாடும்தான் இந்த அளவுக்கு உயர்த்தியது அல்லவா? உங்களை உயர்த்திய ஏணியை உடனே எட்டி உதைத்து தள்ளிவிடுவீர்களா? அது நியாயம் ஆகுமா? அந்த ஏணியையும், அதன் படிகளையும் நினைத்துப்பார்ப்பது தவறாகுமா?

வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றவர்கள், உடனடியாக அந்த வழக்கத்தையும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டுமா? ஏன்? மற்றவர்களின் பார்வைக்காக ‘சும்மா’ வந்து போவதாகவும் இருக்கலாம் அல்லவா? அது மற்றவர்களுக்கு உண்மையான ஊக்கம் தருவதாக அமையலாமே? அங்கே வருபவர்களிடம் அந்த உண்மையை சொல்லுவதற்காகவும் இருக்கலாம்தானே? 

வேதாத்திரியமோ, குரு மகான் வேதாத்திரி மகரிஷியோ, பிரம்மஞானம் கற்ற பிறகு, மற்ற எல்லா வழக்க பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும் என்று, எப்போதாவது சொல்லப்படுகிறதா? சொல்லி இருக்கிறாரா? உண்மையாகவே, அவர் ‘யோகத்தில் உண்மை அறிந்தவர்கள் கோவிலுக்கு போகலாமா என்ற ஒர் கேள்வி எழுகிறது, என்னைக்கேட்டால், அவர்கள் கோவிலுக்கு போவதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் போகலாம் என்றுதான் சொல்லுவேன்’ என்றும் பதில் அளித்திருக்கிறார். ஏன்? கோவில் வழிபாட்டின் உண்மை அறிந்த பிறகு, அந்த பழைய வழிபாடு அவரிடம் இல்லை, மேலும் அங்கே வரும் மற்றவர்களுக்கு அவர், உண்மை விளக்கமும், ஊக்கமும் தரமுடியுமே!

ஞானிகளும், மகான்களும் கூட கோவில் கும்பாபிஷேகம் நாளிலும், யாகம் வளர்க்கும் நாளிலும் அங்கே தங்கி இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதன் காரணம் என்ன? தாங்கள் உணர்ந்த உண்மையை அங்கே வெளிப்படுத்துகிறார்கள். அங்கே இருக்கும் ஆற்றலில் தன்பங்கையும் அளிக்கிறார்கள். ஆனால் இது மறைமுகமாகவே நிகழும், எவரும் அறியமாட்டார்.

உண்மையில் கோவில், ஆலய வழிபாட்டின் உள்ளார்ந்த கருத்தை அறியாமல்தான் இந்த கேள்வியே பிறந்திருக்கிறது என்று தோன்றவும் இடமுள்ளது, கோவில் ஆலயத்தில், கடவுளை கருத்தாக பார்ப்பவர்தான் பக்தர். பிரம்மஞானம் உணர்ந்தவர் பார்க்கும் பார்வை வேறு என்பது நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, இனிவரும் காலங்களில், நீங்கள் மற்றவர்கள்மேல் அக்கறை கொண்டு, வருந்துவதை, கவலைப்படுவதை, பதட்டப்படுவதை, திருத்தவேண்டும் என்பதை விட்டுவிடுங்கள். அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் உங்களுக்காக, உங்கள் வழியில் ஆராய்ந்து உயருங்கள், மற்றவர்களை குறித்த எண்ணமெல்லாம் உங்களுக்கு, உங்கள் முன்னேற்றத்தில் தடை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

        மேலும், பிரம்மஞானம் என்ற உண்மையில் எல்லாமே இறை என்ற முழுமை உணர்வு வந்துவிடுவதால் அங்கே விழிப்பு நிலையும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் கேள்விக்கு பதில் மட்டுமல்ல, கேள்வியின் குறைகளை வெளிப்படுத்தி உங்களுக்கான விளக்கம் தருவதுமே இந்தப்பதிவாகும். 

வாழ்க வளமுடன்
-

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

How long we need to travel with the Guru, the master in Yoga?


யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.





கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

பதில்:
மிகச்சிறந்த கேள்வி என்று கருதுகிறேன். பெரும்பாலான அன்பர்கள் குருவின் மீது பெரும்மதிப்பு கொண்டு, அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதுமே குருவோடு பயணிப்பார்கள் என்பது பொதுவானது. அது உண்மையும், இயல்பானதும் ஆகும். இத்தகைய மதிப்பு உலகில் உள்ள மற்ற எந்த தலைவருக்கும், பிற சிறப்பான மனிதருக்கும் ஈடு ஆகாத சிறப்பு பெற்றிருக்கும் என்பதும் உண்மை. என்றாலும் ஏறக்குறைய ஒன்றுபோல தோன்றும். மனிதர்களுக்கு என்றுமே தன்னை வழிநடத்தும் உயர்ந்த மனிதருக்கு, மதிப்பு தந்து, ஒழுங்குதல் இயல்பானது. அது யோகத்தில் இன்னமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வாழ்நாளில் நம்மை உயர்த்தி, பிறவிக்கடன் தீர்த்து, தன்னையறிதலையும், இறையுணர்வையும் பெற்றுத்தருபவர் ஆயிற்றே!

நாம் ஏதேனும் சுற்றுலாவிற்கு சென்றால் அங்கே ஒருவழிகாட்டி இருப்பார், அவர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் இருப்பார். தனியாக படிப்பறிவு இல்லாவிட்டாலும், பலமொழிகள் பேசி எல்லாமக்களுக்கும் வழிகாட்டியாக துணைசெய்து வருவார். இப்போது அதுவும் ஒரு கல்லூரி பாடமாகவும் உள்ளது. அந்த வழிகாட்டி, நாம் எங்கே ஆரம்பித்தோமோ, அங்கே வந்து முடிக்கும் வரை துணையாக இருப்பார், அதன்பிறகு அவர் பணி முடிந்துவிடும். அடுத்த நபர்களை நோக்கி அவர், நகர்ந்துவிடுவார். வேறு சில உலகியல், வாழ்வியல், மனித முன்னேற்ற தலைவர்களும் அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் மேலாக அவரின் துணை நகர்ந்து, வேறு சில புதியவர்களுக்கு நகர்ந்துவிடும்.

ஆனால் யோகசாதனையில், குருவின் துணை என்றுமே நகர்ந்தும் விடாது, அகன்றும் விடாது. ஒருவேளை நாம் குருவை கைவிட்டால் கூட, அவரின் வார்த்தைகளும், அக்கறைகளும் நம்மைவிட்டு பிரியாது என்பதே உண்மை. இதை நீங்கள் அனுபவமாகவும் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இதில், இந்த துணையிருப்பில், குருவும், மற்ற எந்த தலைவர்களும் நம்முடைய எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்னோடு இரு என்று கட்டாயப்படுத்தவும் மாட்டார்கள். அங்கே ஒரு தனிமனித சுதந்திரமும் இருக்கும். சில உலகியல், வாழ்வியல் தலைவர்கள் விதிவிலக்கு.

அந்தக்கால யோகசாதனையில், குருவோடு பயணித்தல் என்பது, குருவின் காலம் முதல், அவருக்குப் பின்னாலும், அதை ஏற்று வழிநடத்தும் வகையில் இருந்தது. குரு என்ற உயர்ந்த தன்மை என்ற இடம், அடுத்து அடுத்து என்ற நிலையில் மட்டுமே இருந்துவந்தது. எனினும் காலமாற்றத்தில், ஒரு யோகசாதனையில் ஒரு குருவே தன் சீடரை தனக்கு நிகரான குரு அளவிற்கு உயர்த்தியும் வந்தார். இன்றோ, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, தன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு அன்பரையுமே தன்னைப்போல குருவாக உயர்த்தி மகிழ்கிறார். அதுவே அவருடைய நோக்கமாகவும் இருந்தது. அவர் தன்னை பிரபஞ்ச வான்காந்தத்தில் கலந்துகொண்ட பிறகும் அது தொடர்கிறது.

இந்த நிலையில், யோகசாதனையில், நம் உயிரோடு கலந்து நிற்கும் குருவானவரின் துணை, நம்முடைய வாழ்நாள் முழுவதுமே துணையாக வருகிறார் என்பதே உண்மை. நாம் குருவிடம், குருவோடு பயணிப்பது என்பது நம்முடைய நோக்கம், ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, அனுபவம் என்பதை கொண்டுதான் அமையும். எனவே யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

வாழ்க வளமுடன்
-

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-

How do I know that I have made progress in my penance?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய தவத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை எப்படி அறிவது?!


பதில்:

உங்களுடைய அன்றாட நடவடிக்கை என்ற வரிசையில், முதலில் தவம் இருக்கவேண்டியது முக்கியம். ஒரு நாளை தொடங்கினால் அதில் தவம் இல்லை என்பதற்கே இடமில்லை. தவம் செய்து முடிக்காமல், அந்த நாள் தொடராது என்ற முடிவில் நீங்கள் இருக்கவேண்டும். அந்த நிலைக்கு இயல்பாக நீங்கள் வர வேண்டும். கட்டாயத்திற்காகவோ, சூழலுக்காகவோ, யாரோ ஒருவருடைய வற்புறுத்தலுக்காகவோ செய்யக்கூடாது. முக்கியமாக அவசர நோக்கமும் கூடாதுதான். வழக்கமான கடமையாக அதை ஏற்று, இயல்பாக செய்துமுடிக்க பழக்கிக்கொள்வதே சிறப்பாகும். இதுதான் உங்களுடைய தவ பயணத்தில் சிறப்பான முதல் முன்னேற்றமாகும்.

இன்றைக்கு தவம் செய்யாமல் விட்டுவிட்டேனே என்ற வருத்தம் ஏற்படும்படியான கடமையும், ஆர்வமும் இருத்தல் நன்று. ஒரு பொதுவான, இயற்கையான முன்னேற்றம் என்பதை, அடையாளமிட்டு சொல்ல முடிந்தால், உங்களுக்குள் ஒரு உற்சாகம் எப்போதும் இருப்பதை உணரலாம். இதன் காரணம் என்னவென்றால், வழக்கமாக, அதாவது, தவம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, பலவிதங்களில் பலவித எண்ணங்கள் வழியாக அலைபாய்ந்து கொண்டே இருந்த மனம், கொஞ்சமாவது அமைதியாக இருப்பதை உணரலாம். இந்த நிலை, உங்களுக்கு கிடைத்த இரண்டாவது முன்னேற்றம் என்று சொல்லலாம்.

இது எப்படி அமைகிறது என்றால், தவத்தின் வழியாக மனம், சிறிது சிறிதாக தன் விரிந்த இயக்கத்தையும், ஒன்றிலிருந்து ஒன்றாக மாறிக்கொண்டே இருந்த இயக்கத்தில் இருந்தும் ஒடுங்குகிறது. அதன் வழியாக உங்களுக்கு மன அமைதியும் கிடைக்கிறது எனலாம். இந்த இரண்டு முன்னேற்றங்களை நீங்கள் உறுதி செய்துகொண்டால், அதற்குப்பிறகு நானோ, வேறு யாரோ எடுத்துச் சொல்லும் முன்பாகவே, நீங்களே அந்த முன்னேற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் உங்களால், இந்த இரண்டு முன்னேற்றங்களையும் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அதற்கு நீங்கள் மாற்றுவழி கண்டாகவேண்டும். தினமும் ஒருவேளை தவம், வாய்ப்பு இருந்தால் காலையும் மாலையும் தவம் என்பதை தொடர்வேண்டும். வாரம் ஒருநாள் அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவர வேண்டும். இதனோடு, வழக்கமான தினசரி எளியமுறை உடற்பயிற்சியும், காயகல்ப யோகபயிற்சியும் செய்துவந்தால், உங்கள் தவம் நன்கு சிறக்க உதவிடும். ஏனென்றால், நன்கு தவம் முழுவதும், இயல்பாக உட்கார்ந்து தவம் செய்யவும், நல்ல உணர்வு கிடைக்கவும் துணையாக இருக்கும். மேலும் வாய்ப்பு கிடைத்தால், உங்கள் வேதாத்திரிய ஆசிரியரோடு கலந்துரையாடுங்கள். 

வாழ்க வளமுடன்.

Why do I feel like suffering from yoga and not being as happy as others?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!


பதில்:

நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.

தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள். 

யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.

யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே!  தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.

மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!

வாழ்க வளமுடன். 

Can we change the level on the simplified exercise by up or down?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும்பொழுது, அந்த வரிசைப்படிதான் செய்ய வேண்டுமா? நாமாக மாற்றிக் கொள்ளலாமா? விளக்கம் தேவை.


பதில்:

நம்முடைய குருமகான் வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை வழியாக, எளியமுறை உடற்பயிற்சியை பாடமாக அமைத்தபொழுதே, அறிஞர் குழு, மருத்துவர் குழு ஆகியரோடு இணைந்தே வரிசைப்படி அமைத்துக்கொண்டார். மேலும் அவ்வப்பொழுது, பயிற்சியில் கிடைக்கும் மாற்றங்களையும் குறித்து ஆராய்ந்து திருத்தமும் கொண்டார்.

மேலும் எளியமுறை உடற்பயிற்சி செய்யும் யாவருமே, அந்த வரிசையை, ஓவ்வொன்றாக புரிந்துகொள்ளவும் முடியும். முதலில் உடலின் நேர்த்தன்மை, கைகள், கால்கள், இடுப்பு, உள்ளுறுப்புக்கள் என்றபடியே வரிசையாக, படிபடியாக அமைந்திருப்பதை அறியலாம். இதன்படி, உடனடியாக, உடலின் குறிப்பிட்ட பகுதியை, உறுப்பை ஊக்குவிக்கும் முறை இங்கே இல்லை. இதனால் தீடீரென எழும் வலியோ, பிரச்சனையோ உண்டாவதில்லை. ஓவ்வொரு நிலையாக உடல் பழகி தன்னை ஊக்கம் செய்துகொள்ளும்படி, வரிசயாக நிலைகள் அமைந்திருக்கிறது.

ஆனாலும் ஏற்கனவே உடல் தொந்தரவு, பிரச்சனைகள், நோய்தொற்று ஏதேனும் இருக்குமானால் அவர்கள் இந்த நிலைகளை தொடர்ச்சியாக, படிப்படியாக செய்வதில் தடுமாறலாம். அவர்களைப் பொறுத்தவரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று மாற்றம் செய்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் சோம்பலில், பயிற்சி செய்ய ஆர்வமின்றி, ஒன்றை விட்டு அடுத்த நிலைக்கு போய்விட்டு, சீக்கிரமாக பயிற்சியை முடித்துவிடுவது தவறு ஆகும்.

மேலும் சூழ்நிலை கருதி, அதாவது தீடீரென்று எற்பட்ட பயணத்தில், புதிய இடங்கள், நேரமின்மை, அருகில் இருக்கும் அன்பர்கள் என்று இருக்குமானல், ஏதோ ஒருநாள், உங்கள் உடலுக்கும் ,மனதிற்கும் இதமளிக்கும் உடற்பயிற்சி நிலைகள் மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் இதை தொடர்ந்து செய்யக்கூடாது, எளியமுறை உடற்பயிற்சியை முழுமையாக செய்வதில்தான் அதன் பலனை தக்கவைக்க முடியும். மாற்றமும் நிலைக்கும் என்ற உண்மையை புரிந்துகொள்க,

வாழ்க வளமுடன்.

-

Family lifestyle is obstructs to the yoga?


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்ப வாழ்க்கையில் இருப்பதுதான் யோகத்திற்கு தடை என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?


பதில்:

இல்லவே இல்லை. அப்படி சொல்லப்பட்டது ஒருகாலம். அது எப்போதோ கடந்துபோய்விட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மாற்றம் வேண்டும் என்று, நம் வாழ்க்கை மிக உயர்ந்த நிலையில், உலகமே சுருங்கிய அளவிற்கு மாற்றத்தை பெற்று வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறோம். இது இன்னமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது அல்லவா? அப்படியான மாற்றம், யோகத்திற்கு மட்டும் வராது என்று நினைக்கிறீர்களா? அல்லது வந்துவிடாது என்று முடிவு செய்கிறீர்களா?

யோகத்திற்கும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் பழங்கால, அந்தக்கால நிலைகளையே மனதில் பதித்து, அதையே பேசிப்பேசி மயக்கத்தில் இருக்கிறார்கள். முதலில் யோகம் என்றால் என்ன? இதற்கு உடனே நமக்கு கிடைக்கும் பொதுவான பதில் என்ன தெரியுமா? இறைவனை அறியும் அடையும் வழி, இதற்கு துறவு ஏற்கொள்ளவேண்டும். வீட்டை, குடும்பத்தை விட்டு விலகி, காட்டில் சென்று தவம் செய்ய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள்.

ஆனால், யோகம் என்றால் தன்னை அறிந்து வாழும் நெறி ஆகும். அந்த தன்னை அறிதலில், இறை எனும் மாபெரும் உணர்வையும் புரிந்து கொள்கிறோம். எப்படி நமக்குள்ளாக நிறைந்து இருக்கிறது என்பதையும், இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் நம் கடமை என்ன என்று புரிந்து, எது உண்மையான இன்பமோ அதை மட்டுமே அனுபவித்து, பிறரையும் மகிழ்வித்து வாழப் பழகுகிறோம் என்பதுதான் யோகத்தின் உண்மை விளக்கம் ஆகும்.

தற்காலத்தில் எத்தனையோ யோகம் உலகில் உள்ளன, எனினும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை என்பது எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் ஆகும். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமின்றி, கற்றுத் தேரலாம். இன்னமும் பழங்கதை பேசி காலத்தை வீணாக்கிட வேண்டாம். வாழும் காலத்திற்குள்ளாக, நம் பிறவிக்கடனான, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்த்து, துன்பங்கள் நீக்கிய இன்பமான் வாழ்வில், நான் யார்? என்ற தன்னையறிதலில் உயர்ந்து, யோகவாழ்வில் முழுமைபெறுவோம்.

வாழ்க வளமுடன்.

Detailed information about the Manonmaniya Thavam


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனோன்மணிய தவம் குறித்து உண்மை விளக்கம் தருக!


பதில்:

மனோன்மணிய தவம், இப்பொழுது தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுப்போல பல தவங்கள், அதன் அடிப்படை நிலை கருதி நிக்கப்பட்டது. காரணம், நாம் நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுவிடுகிறோம். எனவே அத்தகைய உயர்நிலை தவங்கள் கற்கும் நிலையில், அதற்கு மாறான நிலைகொண்ட தவங்கள் தேவை குறைந்துவிடுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில், கற்றுக்கொடுக்கப்பட்டது. 

ஏனென்றால், அன்பர்கள் படிப்படியாக உயர்நிலைக்கு வரவும், அவர்கள் தவங்களை, குண்டலினி சக்தி நிறையும் ஆதார, சக்கர நிலைகளை புரிந்து கொள்ளவும் தேவைப்பட்டது. ஆனால் காலமாற்றத்தில், அன்பர்களின் ஆர்வம், முயற்சி இவற்றை கருத்தில் கொண்டும், அவர்களின் தினசரி வாழ்வியல் சூழல் தன்மையைக் கொண்டும், நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அன்பர்களின் நோக்கம் நிறைவேற, கற்ற தவங்களை, தடையில்லாமல் தொடர்ந்து செய்துவருவதில்தான் இருக்கிறது.

எனவே, தவிர்க்கப்பட்ட தவங்களை நாம் மீண்டும் கற்று செய்துவருவது நல்லதுதான் எனினும், அது தேவையில்லை என்பதே கருத்தாக நிற்கிறது.

இதை இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால். மனோன்மணியம் என்பது, பீனீயல் சுரப்பி என்று விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் ஒரு சக்கரம், ஆதாரமாகும். இந்த மனோன்மணி என்பதை துரிய சக்கரத்தின், அடிப்புற நிலை, மூலை நிலை எனலாம். நாம் இந்த இடத்தில் மனம் செலுத்தி தியானித்து பழக, மனோன்மணிய தவம் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மனோன்மணிய இடத்தை, இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள, ஆக்கினை வழியாக உள்முகமாகவும், தலை உச்சியிலிருந்து கீழாகவும் ஒரு கோடு வரைந்தால், இரண்டு கோடுகளும் இணையும் புள்ளி எனலாம். சிலர் இரு காதுகளின் மேல்புறத்தின் வழியாக கோடுவரைந்தால், அக்கோட்டின் மையப்புள்ளி என்றும் கூறுவார்கள்.

மனோன்மணிய தவம், இணையத்தில் காணக்கிடைப்பதால், அதன்வழியாக நீங்கள் தவம் இயற்றலாம். தவறில்லை.

வாழ்க வளமுடன்.