Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02 | CJ

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 02


இயக்கம் என்பது, இந்த பிரபஞ்சத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோலவே, அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே, அதனுள் அடங்கிய எல்லாமே, இயங்கிக் கொண்டிருக்கிறது. கல் மண் உலோகம் போன்ற ஜடப்பொருளும் அணுக்கூட்டங்களால் இயங்குகிறது. அதுபோலவே, மரமும், புழுவும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்படவும் அணுக்களின் கூட்டே. அவ்வணுக்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதை இயற்கை. அந்த வகையிலேதான், ஜீவன்களின் உடலுறுப்பும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. மனிதனைத்தவிர, மற்றெல்லா உயிரினங்களும், தன் இயற்கை இயல்பை விட்டுவிடவில்லை. இன்னும் மாறாமல், இயற்கையோடு உறவாடிக்கொண்டு, அந்த இயற்கை நீதிக்கு பொருத்தமாகவே வாழ்கின்றன.

மனிதன், ஆறாவது அறிவின், சிந்தனை எழுச்சியால், பலவகைகளில் உந்துதல் பெற்று, இயற்கையின் எல்லைகளை மீறிவிடுகிறான். இதனால், தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறான். பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒருபகுதி நான் என்பதை அறியாமல், தானே உயர்வானவன் என்ற தன்முனைப்பு கருத்துக்கு வந்துவிடுகிறான். இக்கருதாக்கம், அவனை, இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் விரோதமாக செயல்பட வைக்கிறது எனலாம். மனிதனின் ஆறாம் அறிவின் எழுச்சி, மனித பரிணாமத்தின், வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு நாளும், விஞ்ஞானமும், மருத்துவமும், வானியலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடல் நீர் சூழ்ந்த நிலப்பரப்பில், எல்லா உயிரினங்களும், எல்லைகளற்று இருக்கையில், மனிதன், தான் வாழும் நிலப்பரப்பிலும், தன் மனதிலும் எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்நிலை மாறிடவே, சித்தர்களும், யோகியரும், மகான்களும் முயன்றார்கள். பக்தியிலும், யோகத்திலும் மனிதனை உயர்த்திட வழி காட்டினார்கள், இன்னும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, தன் வாழ்நாளில், உலக சமாதனமும், ஓர் உலக கூட்டாட்சியும் அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து, அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் வகுத்துத் தந்தார். இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகளில் நிழந்திடும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மனிதனின், இயற்கையை மீறிவிட்ட வாழ்க்கை முறைதான், அவனுக்கு பலவித தொல்லைகளை உருவாக்குகிறது. மனம் இதனான மனிதன், அந்த இதம் என்ற அமைதி, பொருத்தம், நிலைபாடு, சமநிலை ஆகியவற்றை இழந்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால், மனிதனை மனிதனே இப்படி சொல்லிக் கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாக, ஒரு மனிதன், தன்னுடைய உடல், மனம், உயிர் இயக்கத்தால்தான் வாழ்கிறான். ஆனால் உடல் இயக்கம் ஏதுமில்லாமல், வெறுமனே வாழ தயாராகிறான். மனமும், உயிரும் இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல்சார்ந்த உறுப்புக்களும்  இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல் இயக்கம் இல்லாது தடுமாறுகிறான். இதனால் உடலும் கெட்டு, உடலுறுப்பும் கெட்டு, வாழ்நாளை சுருக்கிக் கொள்கிறான்.

அக்கால மருத்துவ முறைகளும், இயற்கை மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் உதவினாலும்கூட, மனிதனுக்கு முழுமையான தீர்வு இல்லை. உடலையும், உடலுறுப்பையும் தானாகவே சரி செய்திடும் அமைப்பும், சிறப்பும், இயற்கையாகவே உண்டுதான் எனினும், அதற்கான வாய்ப்பை மனிதன் இழக்கிறான். இயற்கையின் வினை விளைவு நீதி தெரியாமல், தானாகவே வலிந்து போய், சிக்கிக் கொள்கிறான். முக்கியமாக, மனிதனான, தன்னுடைய பிறப்பின் உண்மையை, அதிசயத்தை, பெருமையை, சிறப்பை, மகத்துவத்தை அறியாமலேயே, என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே, அதை உணராமலேயே இறந்தும் விடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், பிறந்தவர் இறப்பார் என்று தத்துவத்தை அவனே சொல்லிக்கொள்வான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கும், வாழ்நாளையும், வாழ்க்கையையும் ஆராய்ந்திட மாட்டான்.

இதனால், மருந்துகள் அவனுக்கு உதவாத நிலையை அடைந்துவிடுகிறான். எதாவது பிரச்சனை என்றால், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை அகற்று என்பது, வழக்கமான மருத்துவ முறையாக வந்து நிற்கிறது. மருந்துகளால் சரி செய்யப்படுகின்ற, ஆரம்பகால கவனிப்பும், அக்கறையும் மனிதனுக்கு தெரியவில்லை. அதை மறந்தும் விட்டான்.  இயற்கையாக சரி செய்துகொள்ளும் வழக்கமும், பழக்கமும் கூட அவனுக்கு இல்லை. இந்த நிலையில்தான், யோகம் அவனுக்கு உதவ துணை நிற்கிறது எனலாம்.

யோகம் என்பது, மனதை செம்மைபடுத்தும் ஓர் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி மிகப் பொருத்தமாக, மனவளக்கலை என்ற தமிழாக்கத்தை அதற்கு தந்திருக்கிறார். இதுவரை மனிதன் விட்டு விலகிய பாதையில், அவனை அழைத்துச் செல்வதற்கு, யோகம் மட்டுமே உதவும். ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருக்கும்’என்று, உண்மை விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இன்னொரு உதாரணமாக, தேவையற்ற பகுதிகளை, ஒரு பாறையில் இருந்து, அகற்றும் பொழுதுதான், அந்த பாறையின் உள்ளாக, மறைந்திருந்த சிலை, வெளிப்படுகிறது. அதுபோல, தவறுகளை திருத்திவிட்டால், இயல்பு அங்கே இருப்பதை அறியலாம். அதை காத்தும் வரலாம்.

மனவளக்கலை யோகமும், அதன் வழியாக தரும் எளியமுறை உடற்பயிற்சியும், இருக்கும் நோய்க்கும், பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்கும் தீர்வு அல்ல. ஆனால் வருமுன் காப்பதில், அதற்கு நிகர் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள், அன்றாட வாழ்வுக்கு வாங்கும் பொருளை, கவனமாக கையாண்டால், வாழும் நாள்வரை உபயோகிக்கலாம் அல்லவா? அதுபோலவே, உங்கள் உடலையும், உடலுறுப்பையும் காத்துவந்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிறைவாக வாழலாம். இதனாலேயே, பருவம் வந்த அனைவருமே, மனவளக்கலை யோகம் மற்றும் எளியமுறை உடற்பயிற்சி கூடுதலாக காயகல்பம் கற்ற வேண்டும் என்று, வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார்.

வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கையை, பெரும்பாலும் ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். காயகல்ப யோகம் எனும் பயிற்சியை, அவர் முழுமையாக்கிய பொழுது, ‘இதன் முழுமை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, முன்னமே கிடைத்திருந்தால், நானும் அப்பொழுதே கற்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி கிடைத்த அற்புதமான பயிற்சியை, நாம் கைவிடுகிறோம். செய்ய நேரமில்லை என்று ஒதுக்கி தள்ளுகிறோம். 

இனியும் வருத்தம் தேவையின்றி, ஒரே முடிவாக, நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், யோகத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகளை தொடருங்கள். உங்களுக்கும், இயற்கைக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யுங்கள். முரண்படாத வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். சிலநாட்களில் விளக்கமும், உறுதியும் பெறலாம். உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுகிறது என்ற உண்மையை, நீங்களே அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.