Is Simplified Exercise Suitable for You? Truth Explanation
எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? உண்மை விளக்கம்.
ஒரு மனிதன் என்று எடுத்து ஆராய்ந்தால், எல்லோரும் ஒரே மாதியான அமைப்பு என்று பொதுவாக கருதினாலும், உடலின் இயக்கம், உடலுறுப்பின் இயக்கம், மனம் செயல்பாடு, உயிரின் தன்மை ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் கொண்டிருக்கிறான். மேலும், ஆண், பெண் என்ற பேதமும், அவர்களுக்குள் இருக்கும் உடறுலுறுப்பு மாறுபாடுகளும் அவர்களை பாதிக்கின்றன. இதில் மூன்றாம் பாலினமும் உண்டுதான்.
இதனாலேயே, ஒரே ஒரு பயிற்சி எல்லோருக்கும் பொருந்துமா? என்ற கேள்வி எழுவது உண்மைதான். ஆனால், தற்போதைய உலகம், எல்லோருக்கும் பொதுவான உடலமைப்பையும், உடலுறுப்பும் கொண்டதாகவே கருதி, எந்த உடல் நல குறைபாடு வந்தாலும், இதுதான் தீர்வு என்று பயிற்சிகளும், சிகிச்சைகளும், மருந்துகளும் வழங்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில், ஏதோ சரியாகிவிடுவது போல இருந்தாலும், பலவிதமான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் பழைய அதே நிலைக்கோ, அதைவிட மோசமான நிலைக்கோ போய்விடக்கூடும். இதை நாம், நம்முடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறோம். உண்மைதானே?
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர், தன் திருக்குறளில், ‘நோய் நாடி, நோய் முதல்நாடி’ என்று ஆராய்ந்து தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தானே? ஆனால் அக்கால மருத்துவ முறைகளும், கைவிடப்பட்டுவிட்டன. ஒரு நோயுற்ற மனிதனின் நாடி பார்த்தே, குறித்த மருந்து தரும், மருத்துவர்களும், மருந்துகளும் இப்போதில்லை, இருந்தாலும்கூட ஏதோ ஒரு சிலர்தான். அதில் நம் மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை. வீட்டிலேயே வருமுன் காக்கும் ‘பாட்டி வைத்தியமும்’ இப்போதில்லை. சொல்லப்போனால் பாட்டியே வீட்டில் இல்லை.
இதை எழுபதாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த, வேதாத்திரி மகரிஷி அவர்கள், திருத்தமான வாழ்வியலுக்கு உதவ எண்ணம் கொண்டிருந்தார் எனலாம். தன்னுடைய குரு, வைத்திய பூபதி கிருஷ்ணாராவ் வழியில், ஹோமியோபதி கற்றுத்தேர்ந்து, அதில் பட்டயமும் பெற்று உயர்ந்தார். மருந்துகளும் தயாரித்து வழங்கி சேவை செய்துவந்தார். தன் தொடர்ச்சியாகவே, தவமும் கற்று, அதன் முறையான பயிற்சியை, பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுக்கொண்டார். தன் ஆராய்ச்சியின் வழியாகவும், பிறரின் அனுபவத்தின் வழியாகவும், உலக மக்கள் சமுதாய வாழ்வில் கலந்திருக்கும் செயல்கள் வழியாகவும், ஒரு முழுமையான, உடற்பயிற்சியாகவே, தன்னுடைய வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்தார்.
உலகில் இருக்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது என்றில்லாமல், உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும் வளம் தருகின்ற, ஊக்கமும், ஊட்டமும் தருகின்ற பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடலை எந்தவகையிலும், வருத்தாமல், வலி உண்டாக்காமல், மிக எளிமையாக, பதிநான்கு வயதுமுதல் உடல் அசைவுள்ள எந்த வயதினரும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சிகளை செய்து பயன்பெறலாம். இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், வருமுன் காப்பதும், இருப்பதை சரி செய்து குறைப்பதும் ஆகும். நோய் தீர்வு என்பது தொடர் பயிற்சிகளாலும், மருந்துகளாலும் மட்டுமே அமையும்.
இப்போது கேள்வியின் முக்கிய பகுதிக்கு வருவோம். எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? என்று கேட்டால், நம்முடைய பெரும்பாலான அன்பர்களின் பதில் ஆம் என்பதுதான். கற்றுக்கொண்டேன், தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் பலனை அனுபவிக்கிறேன் என்றுதான் கருத்திடுகிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான, உடலமைப்பும், காற்றோட்டமும், வெப்ப ஓட்டமும், ரத்த வோட்டமும் இருக்கிறது அல்லவா? வயது வித்தியாசமும், உடலுறுப்பின் இயல்பு, இயக்க வித்தியாசமும் இருக்கிறது. உறுப்புக்களின் இயற்கை நிலை மாறாதிருப்பதும், நோய் தாக்கம் பெற்றிருப்பதும் உண்டுதானே? இந்த அடிப்படையில், ஒரே தீர்வு என்று, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது சரிதானா?
இதற்கு வழி என்ன? வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொள்வது நல்லதுதான் எனினும், உங்கள் உடல் எப்படி? எந்த நிலையில் இருக்கிறது? நோய் தாக்கம் உள்ளதா? பயிற்சியால் குணமாகுமா? மருந்துகள், சிகிச்சை அவசியமா? என்ற ஆய்வும் அதன் முடிவும் அவசியமாகிறது. உடலில் ஏற்கனவே உள்ள தொந்தரவோடு, எந்த பயிற்சியை செய்தாலும். அது உடலுக்கு பொருந்தாது. இதையும் நீங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம். எனவே, உங்களுக்கு தேவை, நல்ல ஆலோசனை. அதை தகுந்த மருத்துவரிடமோ, ஆசிரியரிடமோ பெற்றுக்கொண்டு, அதற்கான தீர்வையும் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது மிகுந்த பலன் அளிக்கும் என்பது என்னுடைய முடிவாகும். உடனே இதற்கு மாற்றுக்கருத்து, உங்களுக்குள் எழலாம். ஆனால், சில அனுபவம் மற்றும் ஆய்வுகளின் வழியாகவே இந்த விளக்கங்களை தருகிறேன் என்பதே உண்மை.
வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொண்டு செய்து வாருங்கள், அதில் எந்த குறையுமே இல்லை. ஆனால். உங்கள் உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தை கவனியுங்கள். அதில் பிரச்சனை எழுந்தால், உடல் தொந்தரவு எழுந்தால், நீங்கள் செய்கின்ற ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி’ குறை கொண்டது என்று தீர்மானித்து விடக்கூடாது அல்லவா? ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி செய்தும் கூட, எனக்கு இந்த உடல் பிரச்சனை, மன பிரச்சனை தீரவில்லையே’ என்று நீங்கள் புலம்பத்தயாரானால், அது சரியான நிலைபாடு ஆகுமா? இப்போது நீங்கள் எதை தொடருவீர்கள்? எதை கைவிடுவீர்கள்? கேள்விகள் சரியானது தானா? உங்கள் அனுபவம் என்ன? என்பதை பின்னூட்டத்தில் தரலாம், வரவேற்கிறேன்.
வாழ்க வளமுடன்.
-