Why Vethathiri maharishi not form as a Jeevasamati? Answer for the unwise question
வேதாத்திரி மகரிஷி ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? கேட்கும் பாமரனுக்கு பதிலும் விளக்கமும்.
உலகம் தோன்றி, ஜீவ பரிணாம எழுச்சியில், கடைசியாக பூத்த மலர்தான் ‘மனிதன் ' என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். என்றாலும் கூட, மனிதன் இப்போதைய மனிதனாக வாழ்ந்திருக்கவில்லை. சக ஜீவராசிகளைப் போல, மிருகங்களின் நடவடிக்கை போல, அதன் செயல்களை பார்த்துத்தான் வாழ்ந்திருந்து வந்தான். ஐந்தறிவு மிருகங்கள் செய்கின்ற, 1) பிற உயிரை கொலை செய்தல், 2) பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை பறித்தல், 3) பிற ஜீவனின் உடலை உணவாக்கிக் கொள்ளுதல் ஆகிய, மனித இனத்திற்கு ஒவ்வாத குற்றங்களை செய்துவந்தான்.
எனினும், அவனுக்குள் இருக்கின்ற, தெய்வீகம், ‘இது உனக்கானது அல்ல’ என்ற விளக்கத்தை, தந்துகொண்டேதான் இருந்தது. அவனுக்குள் அறிவாக நிறைந்திருந்த, அந்த தெய்வீகம், மனித செயல்களின் விளைவுகளால், திருத்திக்கொண்டே வந்தது. அந்த விளக்கத்தை உணர்ந்த மனிதர்களில் சிலர், சிந்திக்கலானர்கள். தன் சிந்தனையில், எண்ணத்தில், சொல்லில், செயலில் திருத்தம் கொண்டு, நன்மையான, இன்பமான விளைவுகளில் மகிழ்ந்தார்கள். இயற்கையில் உள்ள, எங்குமே, எப்போதுமே நிறைந்திருக்கும் இன்பத்தையும், அதனோடு கலந்திருக்கும் தெய்வீகத்தையும் கண்டு, பிறருக்கும் வாழ வழிகாட்டினார்கள். தெய்வம் என்ற உண்மையையும் அறிந்து உணர்ந்தார்கள். அத்தகையோர், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் என்றானார்கள்.
நாம் வாழும் இத்தகைய நவீன விஞ்ஞான உலகிலும் கூட, ஆறாம் அறிவில் உயர்ந்ததாக கருதி வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனத்தினோடு, உண்மையான திருத்தம் வழங்கிட, இன்றும் இத்தகைய சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாகிக் கொண்டும், நல்ல வழிகளை அம்மனிதர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அக்காலம் முதல், இக்காலம் வரை, பாமரர் என்ற நிலைபாடுகொண்ட மனிதர்கள் உண்டு. இவர்களை பொதுவாக அறிவிலி என்று சொல்லுவது, பொருத்தமாகாது. அறிவு எல்லோருக்கும் உண்டு. அதில் மாற்றுகருத்து இல்லை. எனவே அறிவு இல்லாதவர் என்று சொல்லுவது தவறு. அந்த அறிவை பயன்படுத்த தெரியாதவர், பயன்படுத்த வழிகள் கற்றுக்கொள்ளாதவர். அந்த மாற்றத்திற்கு ஆர்வமில்லாதவர் என்று சொல்லலாம். எனவே இவர்களை பொதுவாக ‘பாமரன்’ என்று சொல்லுவது சிறப்பு.
இத்தகைய பாமரன் அன்றும் இருந்தான், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் உங்களோடும் உண்டு. இவர்களை எப்படி அடையாளம் கொள்வது? அவனின், அறிவார்ந்த நிலை என்று நினைத்துக்கொண்டு, நம்மிடம் கேட்கும் கேள்விகளால் அடையாளம் காணலாம். உங்களிடமும் அப்படி சில கேள்விகளை கேட்பவர்களை அடையாளம் காண்பது எளிதுதான். இந்த பாமரர்கள் மேல் அக்கறை கொண்டு, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகியோர், பாமரர்களுக்கு விளக்கங்கள் சொல்லி, தெய்வீகத்தையும், மனித பிறப்பின் மூலத்தையும் பாடம் நடத்தினார்கள். என்றாலும் அது சிலவகையில்தான் உதவியது. அதனால், சித்தர்கள், ஞானிகள், மகான்கள் தங்களுடைய, வாழ்நாளுக்குப் பிறகும், இவர்களுக்கு உதவலாம் என்று, தன் உயிரை தன் உடலிலேயே சுவரவிட்டு, உடலை விட்டு உயிர்பிரியாத நிலையில், தன் மூச்சை, வாழ்நாளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் உடலை சமாதியாக அமைத்து, அதன் மேலாக, ஆலயங்கள் எழுப்பி, ஜீவசமாதி என்றாக்கினார்கள்.
இத்தகைய ஜீவசமாதி, குடமுழுக்கு தேவையில்லாத, சக்தியாற்றல் நிரம்பியது ஆகும். வந்து வணங்கிச் செல்லும் அன்பர்களுக்கு, குறிப்பாக ‘பாமரர்களுக்கு’ உதவிடும். ஆனால் காலம் மாறியது. மக்களின் தரம் உயர்ந்தது. கல்வி எல்லோருக்கும் கிடைத்தது. ஆறாம் அறிவின் அற்புதம் விளங்கியது. மருத்துவம், விஞ்ஞானம், வானியல் மிக உயர்ந்தது. மனிதனின் வாழ்நாளும் உயர்ந்தது. ஆனால் பாமரன் பாமரனாகவே வந்துகொண்டு இருக்கிறானே?! ஒரு குரங்கிடம், ஒரு நிலக்கடலையை கொடுத்தால், வாங்கிக்கொண்டு, அதை இரண்டாக உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை உண்ணும் அனுபவ அறிவு அதற்கு இருக்கிறது தெரியுமா? ஆனால் இந்த பாமரன்?!
இக்காலத்திலும், உண்மை அறியாமலும், விளங்கிக் கொள்ளாமலும், அதை ஆராயாமலும், சிந்திக்காமலும், இன்னமும் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? உங்களை உயர்த்திடத்தான், வேதாத்திரியத்தின் வழியாக, மனவளக்கலை பயிற்சிகளை, முழுமையாக தந்துவிட்டாரே? அதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா? அதற்கு மேலும் உங்களுக்கு என்ன பாடமும் பயிற்சியும் வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
மனவளக்கலை பாடங்களை புரியாதவர், அதை கற்றும் செய்திட ஆர்வமில்லாதவர், தன்னை உயர்த்திக்கொள்ள விருப்பமில்லாதவர், சுலபமாக தன்னை, பிறரால் உயர்த்திக்கொள்ள பேராசை கொண்டவர், குறுக்குவழியை தேடக்கூடிய இவர்கள்தான், தன்னை ‘பாமரன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு சித்தராக, மகானாக, ஞானியாக உங்களை நீங்களே உயர்த்திட, வழிகளை தந்த வேதாத்திரி மகரிஷியையே, ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை?’ என்று கேட்டால் எப்படி? அப்படியானால் நீங்கள் பாமரன் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
உங்களுக்காகவே, உங்களின் உயர்வுக்காகவே தன் வாழ்நாளெல்லாம் செயல்பட்டு, தன்னை வான்காந்தத்தில் நிரப்பிக்கொண்டு, இன்னமும் நம்மோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் ‘குரு மகானை’ ஒரு சமாதிக்குள் அடைத்துவைக்க நினைக்கிறீர்களே? நியாயம் தானா பாமரனே?!
வாழ்க வளமுடன்.
-