Why need important of exercise before the practice Kundalini Yoga Part 02 | CJ

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 02

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 02


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 02


        வாழ்க வளமுடன். மனிதனாக இவ்வுலகில் பிறந்தவனுக்கு, வாழும்வரை உடல் சொந்தம், அந்த உடல் இருக்கும்வரைதான், அவனும் இந்த உலகில் இன்பங்களை அனுபவித்து மகிழவும் முடியும். இந்த உண்மையின்படி, மனிதன் என்பவன் உடலா? என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் தருவீர்கள். உடல் என்பது மனிதன் இல்லையானால், மனிதனாக இருக்கும் நீ யார்? என்ற கேள்வியை கேட்டால், அந்த கேள்வியை உங்களுக்குள்ளாக திருப்பிவிட்டு, நான் யார்? என்று கேட்க வேண்டும். அப்படி இந்த கேள்விக்கு பதில் அறியவேண்டுமானால், நீங்கள் யோகத்திற்கு வரவேண்டும்.

        நான் யார்? என்ற கேள்விக்கான பதில், எப்போது கிடைக்கும்? என்று உறுதியாக சொல்ல முடியாது. வேறு யாரும் கணித்து சொல்லவும் முடியாது. உங்களுக்கு தீட்சை வழங்கிடும், ஆசானும், குருவும் கூட, இதை சொல்லமுடியாது. உங்களை அந்த நிலைக்கு உயர்த்தித் தருவது அவர்களின் வேலை. விடையை, பயிற்சியாலும், முயற்சியாலும், ஆராய்ச்சியாலும் கண்டுபிடிப்பது உங்களின் வேலைதான். சந்தேகமில்லை. இந்த பதில் கிடைக்கும் வரை, நீங்களும், உடலும் நலமாக இருக்கவேண்டுமே? அதற்கு உடலும் துணையாக இருக்கவேண்டும் அல்லவா? இல்லையேல், நோக்கம் நிறைவேறாது.

        இந்த உண்மையை அறிந்த சித்தர்களும், ஞானியர்களும், குண்டலினி எனும் தீட்சைக்கு முன்னால், உடலை வளப்படுத்தி தக்கவைக்கும், பயிற்சிகளை கண்டறிந்தார்கள். அதுதான் உடற்பயிற்சியாகவும், யோக ஆசனங்களாகவும், காயகல்ப யோக கலையாகவும் மலர்ந்திருக்கிறது. அப்படியும் கூட, சிலருக்கு, வாழ்நாள் போதாமல் கவலைப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம், பதஞ்சலி முனிவர், அஷ்டாங்க யோகம் என்ற எட்டு படி நிலைகளாக அமைத்துத் தந்தார். இயமம், நியமம், ஆசனம், பிரணாயமம், தாரணா, பிரத்தியாகாரா, தியானம், சமாதி ஆகினவே அந்த எட்டு படி நிலைகள் ஆகும்.

        இந்த இயமம், ஏற்கனவே இருக்கும் வழக்கங்களை விட்டொழிப்பது ஆகும். நியமம், புதிய வழங்கங்களை பற்றிக்கொள்வது ஆகும், இதன் பிறகுதான், உடலை, மனதை, உயிரை வலுப்படுத்தி, உரமூட்டும் ஆசனம் கிடைக்கிறது. வடமொழியில் ஆசனம் என்றால், தமிழில் அது உடற்பயிற்சிதான். அத்தகைய பயிற்சியே யோகத்தில் பலவாறாக வழங்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய அன்பர்களின் மேல், அக்கறை கொண்டு, உடற்பயிற்சிகளை கற்று, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, விளைவுகளுக்கு ஏற்றபடி மாற்றமும் செய்து கொண்டார். மேலும் புதிய முறைகளும் தந்தார்.

        வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஹோமியோபதி சிகிச்சை முறையில், மருத்துவர் என்பதால், அதற்கு ஏற்றபடியும், உடற்பயிற்சியை திருத்தி அமைத்தார். உலக நாடுகள் பலவற்றுக்கும், ஆன்மீக வகுப்பு காலங்களில், மக்களின் கலாச்சாரங்களையும், அதனோடு கலந்த உடற்பயிற்சிகளை அறிந்து, உலகமக்கள் எல்லோருக்கும் பொதுவான, எளியமுறை பயிற்சியாக, அதை வடிவமைத்தார். இந்த வகையில்தான், குண்டலினி யோகம் கற்கும் முன்பாக, உடலை வளப்படுத்தியாக வேண்டும் என்ற நிலைபாடுகளில்தான், உடற்பயிற்சி கட்டாயம் என்பதாக மாற்றம் பெற்றது. அதுவே இன்றும் தொடர்கிறது.

 வாழ்க வளமுடன். 

-