Moving towards fulfill or standing on fulfill. Which one is better?
நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது என்பதும், ஏன் என்பதும் விளக்கம் தருக.
மனிதர்களாகிய நாம், எப்போதும் குறை என்ற நிலையிலேயே இருப்போம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு கொடுத்தாலும், இன்னும் கொடு என்று கேட்குமே, அந்தக் குழந்தைபோலவே, நாம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த குறையை நிறையாக்க, ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிறை கிடைத்தபாடில்லை. இப்படியாக, குறை என்பது என்ன? நிறை என்பது என்ன? நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது, ஏன் என்பதும் விளக்கம் தெரிந்து கொள்வோமா? .
ஒரு மனிதனுக்கு நிறை என்பது எதன் அடிப்படையில் என்று பிரித்தால், இந்த வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும், ஒரு கடற்கரையில் எத்தனை மணல்துளிகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும் நீண்டுகொண்டே இருக்கும். இந்தியாவை பொறுத்தமட்டில், நூற்றி நாற்பது கோடி மக்கள் இருப்பதாக சமீபத்திய, மக்கள் தொகை கணக்கு சொல்லப்படுகிறது. இந்த நூற்றி நாற்பது கோடி மக்களுக்கும், பல நூறு குறைகள் இருக்கும். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய அவர்கள், பயணித்துக்கொண்டே இருப்பார்கள். எதுவரை? அதை பிறகு பார்க்கலாம்.
எனவே எதுவெல்லாம் நிறை? என்று பட்டியலிட்டால், இந்த கட்டுரையையும், உங்களுக்கான பதிலையும் இன்றைக்கு தரமுடியாது. என்றைக்கு தருவேன் என்று என்னாலும் உறுதிபட சொல்லமுடியாது. ஆனால் நிறை என்பது என்ன? குறை என்பது என்ன? என்ற விளக்கம் ஓரளவு உதவியாக இருக்கும். ஒரு முக்கியமான விசயத்தையும், இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழில், ஒரு சிந்தனையும், தத்துவ உண்மையையும் ஒருவர் தந்தால், அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். இவரெல்லாம் இப்படி சொல்லுமளவுக்கு பெரிய ஆளா? என்று கடந்துவிடுவார்கள். ஆனால், இந்தியா கடந்த, மற்ற மொழியில், யாரேனும் ஒற்றைவரியை சொன்னால், ஆகா, ஓஹோ என்பார்கள். எல்லோருக்கும் பகிர்வார்கள்.
இந்தியா நாடும், நம் தமிழகமும் ஆயிரக்கணக்கான, மெய்யான உண்மைகளை பொதிந்து வைத்திருக்கிறது. அந்த சிந்தனையாளர்களும், சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் சொன்னதை படிக்கவும், பொருள் உண்மை அறியவும், தனிமனிடனுடைய வாழ்நாள் போதாது. ஆனால் நாம்தான் அதையெல்லாம், தொட்டுப்பார்ப்பதும் இல்லை, கண்ணால் பார்ப்பதும் இல்லை. கிட்டப்பார்வை குறையுள்ளவருக்கு, அருகில் இருப்பது தெரியாது என்பதுபோல, நாம் தூரப்பார்வைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நிறை என்றால் என்ன? குறை என்றால் என்ன? இந்த இரண்டுக்குமே பொதுவான விடை எங்கே இருக்கிறது தெரியுமா? ஒவ்வொருவருடைய மனதில் இருக்கிறது. ஆங்கிலத்தில், முன்னோர் சொன்னதை, வழிமொழிந்து மட்டுமே நகர்வார்கள். சொந்த அறிவுக்கும், சிந்தனைக்கும் அங்கே இடமில்லை. அதை தமிழில், அதே போல, ‘இன்னொருவனின் முன்னெடுப்பில்’ சொன்னால், ‘நீ ஏன் அவர் புகழ்பாடுகிறாய்?’ அவரை வைத்து பிழைக்கிறாயா?’ என்று கேட்பார்கள். ‘சொந்த புத்தி இல்லையா?’ என்று கூடுதலாகவும் கேள்வி கேட்பார்கள். சரி, சொந்த புத்தியில் சொல்ல ஆரம்பித்தால், சொல்லுபவரின், சொல்லையும், கருத்தையும் விட்டுவிட்டு, சொல்லுபவரை, ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் நம் மக்களின் நடைமுறை வழக்கமும், பழக்கமும். இதனாலேயே, விளக்கமான கட்டுரை எழுதவே தயக்கமாகவும் இருக்கிறது. ஆனால், எனக்குப்பின் இச்சமூகத்திற்கு தரக்கூடிய பதிவுகள் தேவை என்பதால், ஒவ்வொருவரும், தங்கள் அனுபவத்தை, விளக்கத்தை, உண்மையை, பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான், நாம் பல சங்ககால கல்வெட்டு எழுத்துக்களையும், ஓலைச்சுவடிகளையும் பெற்றோம்.
தமிழகத்தின் வாழ்வியல் சொல்லும், சங்க கால படைப்புக்கள், தன் அனுபவத்தின்படியே வந்தவை. இவர் இப்படிச் சொன்னார் என்று எவருமே தொகுப்பாக தந்ததில்லை. அதுபோலவே, என்னுடைய எழுத்துகளும் அமைகின்றன. என்றாலும் தேவைப்படும்பொழுது, முன்மொழிவு, வேதாத்திரியம் தான்.
இந்த நிறை, குறை கேள்விக்கு, கூடுதல் உண்மையை, வேதாத்திரி மகரிஷி இப்படிச் சொல்லுகிறார். ‘மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.’
இந்த நிலையில், நிறையும், குறையும் எங்கே? எதனிடத்தில்? எப்படி? என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்த நிறையும், குறையும் எங்கே சம நிலை அடைகிறது? எங்கே மறைகிறது? முழுமை அடைகிறது? என்ற கேள்வியை முன்வைத்தால், அது ‘மெய்ப்பொருள் உண்மையை அறியும்பொழுது’ என்பதுதான் பதிலாகும்.
ஆனால், வாழ்கின்ற, இந்த பொருள்முதல்வாத உலகில், குறைதான் இருக்கும் என்பது உறுதி, அதுவரை, நிறைவை நோக்கி நகர்கின்ற வாழ்க்கைதான் சரியானது. நிறைவில் நின்றால், மற்றொரு குறையில் சிக்கி இருப்பதை உணர்வீர்கள். ஆனால், எது நிறை? என்ற கேள்வியோடு நகருங்கள். அனுபவம், காலம், அதைத்தரும் இயற்கை ஆகிய மூன்றும், உங்களை வழிநடத்தும்.
வாழ்க வளமுடன்
-